முகவுரை
நான்கு முக்கிய சொற்களை அடங்கிய இந்த ஸ்லோகத்தில், முதற் சொல்லான தளை என்பதின் விரிவான விளக்கத்தை, தெய்வத்தின் குரலாய் முந்தைய பதிவில் கண்டோம். இப்போது, வீடு, மாயை எனும் மருட்சி, என்பதனை ஆய்வோம்.
ஸ்லோகம்
ந மே ப³ந்தோ⁴(அ)ஸ்தி மோக்ஷோ வா ப்⁴ராந்தி꞉ ஶாந்தோ நிராஶ்ரயா ।
அஹோ மயி ஸ்தி²தம்ʼ விஶ்வம்ʼ வஸ்துதோ ந மயி ஸ்தி²தம் ॥ 2-18 ॥
தமிழாக்கம்
தளையென்றும் வீடென்னும் இல்லை எனக்கு!
ஆதாரம் ஏதுமின்றி மருட்சியும் கலைந்தது!
நிலைத்திருப்பது அன்றோ என்னில் உலகம்!
நிஜமாகவே என்னிடம் இல்லை அவ்வுலகம்!! 2.18
விளக்கம் - தொடர்ச்சி
வீடு - மோக்ஷம்
வீடு - மோக்ஷம் என்றெல்லாம் கூறுகிறோமே. அது என்ன?
பூதலயமாகின்ற மாயை முதலென்பர் சிலர்
பொறிபுலன் அடங்குமிடமே பொருளென்பர் சிலர்……..
பார்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே…சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலுமெனக் காசை பராபரமே. …சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்
றெம்மா லறிதற் கெளிதோ பராபரமே…எம்மால் அறிவதற எம்பெருமான் யாதுமின்றிச்
சும்மா இருக்கஒரு சூத்திரந்தான் இல்லையோ…
சூதொன்று மின்றியென்னைச் சும்மா இருக்கவைத்தாய்
ஈதொன்றும் போதாதோ இன்பம் பராபரமே.130.சிந்தையற நில்லென்று சும்மா இருத்திமேல
சின்மயா னந்தவெள்ளந் தேக்கித் திளைத்துநான்அதுவா யிருக்கநீ செய்சித்ர மிகநன்றுகாண்….
என்று தாயுமானவர் முக்தி நிலையை வர்ணிப்பது, எண்ணங்களற்ற நீக்கமற நிறை நிலையான முக்தியை விளக்குகிறது. மனம் அழிந்த நிலை (மனோ நாசம்) என்று முந்தைய ஸ்லோகத்தில் ஜனகர் கூறிய நிலை இதுதான்.
“மோக்ஷம்" என்பது ஒரு உன்னதமான பேரின்ப நிலை, இதற்கு மேல் எந்த தேடலும் இல்லை. இதுதான் நம் வீடு. நாம் செல்லும் இலக்கு நம் வீடு. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம்.
அறியாமை நோயால் ஊனுடல்தன்னில் சிறைபட்ட சிறுஉயிரோம், தன்னிலையும் அறியாத சிறுமதியோம் நாம் நம் உடலில் சிறைப்பட்டு இருப்பதால், நாமே உடல் என்று நம்பி மாபெரும் தவறைச் செய்கிறோம். உடல் என்பது நாம் இருக்கும் சிறை. நாம் நமது உடலாகிய சிறையில் இருந்து விடுதலை பெற்று நமது உண்மையான வீட்டில் வாழ வேண்டும். அப்படி வாழும் நிலையே மோக்ஷம்”
என்று நமக்கு புரியும்படி எளிமையாக, தெய்வத்தின் குரலாக ஒலிக்கிறார் காஞ்சி மாமுனி.
மருட்சி - மாயை
மாயை என்பது புரிந்து கொள்ள இயலாமை (non apprehension), தவறாகபுரிந்துகொள்ளும் தன்மை (mis apprehension) என்ற இரண்டு தத்துவங்களைஉள்ளடக்கியது. அதாவது மறைப்பு, வெளிப்படுத்துதல் என்ற இரண்டுசக்திகளுடையது மாயை. (The AvaraNa shakti is called the power of concealment and the vikShepa-shakti the power of projection). இருப்புஇலாத தன்மை போன்று தோன்றினாலும், உடல் மன வளாகமான நம்உள்ளுணர்வில் வடிவங்களை உருவாக்கும் சக்தியுடையது மாயை.
(மாயை எனும் தத்துவத்தை, எனது மூட மனதிற்கு எட்டிய வரை
என்ற வலைதளப்பதிவில்விவரித்துள்ளேன். நேரம் கிடைத்தால் காணவும். இப்பகுதியில், இந்த மாயையை பற்றிய ஒரு கண்ணோட்டம்.
மாயை என்பது அத்வைத வேதாந்தத்தில் ஒரு முக்கியமான தத்துவம். இன்றம் விவாதிக்கப்பட்டுகொண்டிருக்கும் ஒரு தலைப்பு. எளிதில் புரிந்துகொள்ளமுடியாத ஒரு கருத்து. இதனை என் போன்ற எளியோருக்கு நமது காஞ்சி மாமுனியைவிட வேறு யாருக்கு இயலும்?
இதோ அந்த “தெய்வத்தின் குரலில்” மாயை எனும் தத்துவம்.
‘பிரபஞ்சமெல்லாம் மாயைதான்; ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது’ என்கிறது அத்வைதம்.
“உலகத்தை மாயை என்று சொல்கிறீர்களே, இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி மாயை என்று சொல்லலாம்?” என்று கேட்கிறார்கள்.
மாயை என்றால் அடியோடு இல்லாத வஸ்து என்று நினைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (“அத்யந்த அஸத்”) அல்ல. ம்பு அல்லது மலடி மகன் என்று சொன்னால் உடனே அது அடியோடு இல்லாத வஸ்து என்று தள்ளி விடுகிறோம். மாயை அப்படி இல்லை. அது இருப்பதாக நினைக்கிற மட்டில் இருப்பதாகவே தோன்றும். அது முயல் கொம்பு மாதிரி இல்லை. கானல் நீர் மாதிரியானது. கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் ஜலம் இல்லை. அதைக் குடித்து நாம் தாக சாந்தி செய்து கொள்ள முடியாது. கானல் நீர் உண்மையான ஜலம் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்கிறது. அவ்விதமே உலகை மாயம் என உணர்த்த ஞானிகளுக்குக் கூட லோகம் தெரியத்தான் செய்கிறது என்று சொல்வதுண்டு. ஆனால் அது நிரந்தர சத்தியமல்ல என்று அவர்கள் அறிவார்கள்.
ஒரு பழுதைப் பாம்பென்று தவறாக எண்ணுகிறோம். பழுதில் பாம்பு இல்லை என்பது உண்மை. இருந்தாலும்கூட அதைப் பாம்பாக எண்ணியமட்டும், வாஸ்தவத்தில் இல்லாத பாம்பே நிஜமான பாம்பு உண்டாக்குகிற அத்தனை பயத்தையும், பதற்றத்தையும் நம்மிடம் உண்டாக்கி விடுகிறது. பாம்பு மெய்யாக இல்லாத போதிலும் நமக்கு வியர்த்து விறுவிறுத்ததும், நாம் பயப்பிராந்தி அடைந்ததும் உண்மையே. உலகம் உண்மையில் நிரந்தர சத்தியமாக இல்லாத போதிலும் அதையே நாம் சத்தியமாக எண்ணுகிற மட்டில் இவ்விதமே சகல காரியங்களும் நடக்கின்றன. பழுதைப் பழுது என்று தெரிந்து கொண்டவுடன் பயம் ஓடிப்போவதுபோல், உலகமும் பிரம்மத்தைச் சார்ந்த ஒரு தோற்றமே, அதற்கும் ஆதாரமான பிரம்மம் ஒன்றே நிரந்தர உண்மை என்று அறிகிறபோது, காரியங்கள் எல்லாம் நின்றுபோகின்றன.
அடியோடு இல்லாத வஸ்துவல்ல உலகம். ஞானம் வருகிற வரையில் உள்ள தோற்றம் அது. கனவு காண்கிற வரையில் கனவு மெய்யாக இருந்து, நாம் விழித்துக் கொண்டபின் கனவு நசித்துப்போவது போல், நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற வரையில் உலகம் மெய்யாக இருந்து, நாம் ஞான நிலையில் விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகிறது. இவ்வாறு, அப்பட்டப் பொய்யாக இல்லாமல், தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாக உள்ள உலகத்தை ‘அத்யந்த அஸத்’ என்று சொல்லாமல், ‘பிராதி பாஸிக ஸத்தியம்’ என்பார்கள். கிளிஞ்சலில் வெயில் வெள்ளி மாதிரி மினுமினுப்பதுபோல் பிரம்மத்தில் மாயையால் உலகம் தாற்காலிகமாக மினுமினுக்கிறது!
மாயை என்பது ஞானிக்குப் பூஜியம் (Zero) தான். ஆனால் ஞானம் வராத நிலையில் உள்ள ஜீவன் தன்னை ஒரு தனி எண்ணாக வைத்துக்கொண்டு பக்கத்தில் இந்தப் பூஜ்ஜியத்தைச் சேர்த்துக் கொள்கிறான். ஓர் இலக்கத்துக்குப் பக்கத்தில் வருகிற பூஜ்யம் அதைப் பத்து, இருபது, நூறு, ஆயிரம் என்று ஆக்குவதுபோல் இந்த அஞ்ஞானிக்கு மாயையே பலவாக விரிந்து சத்திய வஸ்துக்களாக—உலகமாக—தோன்றுகிறது.
ஞானியே உள்ளது உள்ள படி பார்க்கிறான்.ஒரே சர்க்கரையினால் பல பொம்மைகள் செய்திருக்கிறதுபோல் ஒரே பிரம்மம் இத்தனையையும் ஆகியிருக்கிறது. சர்க்கரையினால் பாகற்காய் பொம்மை செய்து வைத்திருந்தால், விஷயம் தெரியாத குழந்தை அது கசக்கும் என்று ஓடிப்போயிருக்கும். கசப்பு வஸ்துவாகத் தோன்றுகின்ற அதுவும் உண்மையில் மதுரமான சர்க்கரைதான். உலகம் எல்லாம் ஆனந்த மயமான பிரம்மம் ஒன்றே என்று ஞானி அறிவான். நமக்குக் கசப்பு அவனுக்கு இனிப்பு. ‘நமக்குக் கறுப்பு அவனுக்கு வெளுப்பு; நமக்குப் பகல் அவனுக்கு இருட்டு’ என்று கிருஷ்ண பகவான் சொல்கிறார். பிரம்மம் என்கிற வெளிச்சமே நமக்கு இருட்டாக இருக்கிறது. இருட்டான மாயைதான் நமக்கு வெளிச்சமாக தெரிகிறது. இதெப்படி முடியும் என்று கேட்கலாம். மாயையும் பிரம்மத்தைச் சார்ந்து அதனிடமிருந்து சிறிது பிரதிபலிப்பான ஒளி பெறுகிறது. இந்தக் குறைந்த ஒளிதான் நம் குறைந்த அறிவுக்கு எட்டுகிறது. சுமாரான வெளிச்சத்தில்தான் புஸ்தகத்தின் கறுப்பு எழுத்துக்கள் தெரியும். ஜொலிக்கிற சூரிய வெளிச்சத்தில் நேரே புஸ்தகத்தைப் பிரித்தால் எழுத்தே தெரியாது. நமக்கு மாயையின் அற்பப் பிரகாசத்தில் உலக காரியங்கள் தெரிகின்றன. ஞானியின் ஆத்ம பிரகாசத்தில் அவை மறைந்து போகின்றன. ஞானியின் பகல் நமக்கு இரவு என்பதன் அர்த்தம் இதுவே.
அடுத்த பதிவில் உலகம் என்பது என்ன என்பதனை ஆராய்ந்துவிட்டு, ஜனகரின் உரையைக் காண்போம்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

