முகவுரை
முந்தய பதிவுகளில் நான் யார், அவன் (இறைவன்) யார், இறைவன் உறைவிடம், இறைவனும் உலகும் என்ற வேதாந்த தத்துவங்களை, பாமரனான என் நிலையிலிருந்து நீங்கள் கண்டீர்கள். என் நிலைக்கு இறங்கி வந்து என்னுடன் பயணித்த உங்களுக்கு என் நன்றி.
இப்பதிவுகளின் முடிவில், பாமரனுக்கு குழப்பங்கள் அதிகரித்து, கேள்விகள் பல எழுகின்றன.
இறைவன் உலகாக இருக்கின்றானா?
உலகுக்குள் இருக்கின்றானா?
இறைவனைக் கண்டால் உலகம் காணவில்லை. உலகை கண்டால் இறைவனைக் காணவில்லையென்றால், நாம் வாழும் இவ்வுலகம் பொய்யா? வெறும் கதையா ? கனவா இல்லை நிஜமா?
நமது பொறி புலன்கள் அறிந்து, நுகர்ந்து, நமது அன்றாட அனுபவங்களாகும் எல்லாம் உண்மைதானே, பின் எப்படி அவைகளனைத்தும் இல்லாமல் போகும்?
எல்லையற்ற, முழுமையான இறைவன், எவ்வாறு வரையறுக்கப்பட்டான்? (How has Absolute become Finite?)
தூய இருப்பாக, தூய உணர்வாக, தூய ஆனந்த நிலையிலிருக்கும் இறைவன் எப்படி தாவரமெனும் அசைவிலா ஜீவராசிகளாய், ஜங்கமெனும் அசையும் ஜீவராசிகளாய் எழுவகைப் பிறப்பாய் நால் வகைத் தோற்றம்வழி உருவெடுக்க முடியும்?
அத்வைத தத்துவத்தைப் புரிந்துகொள்வதில் மிகவும் கடினமான இக்கேள்விகள் மீண்டும் மீண்டும் என்னைத் துளைக்கின்றன. என் செய்வது ?
காலம் செய்த கோலம்
எல்லையற்ற, முழுமையான இறைவன், எவ்வாறு வரையறுக்கப்பட்டான்? (How has Absolute become Finite?) காலம், இடம், காரணம் இவைகளால். இதுதான் அத்வைத தத்துவத்தின் மையக் கருத்து என சுவாமி விவேகானந்தர் எடுத்துரைக்கிறார்.
இவை மூன்றினை இப்பொழுது சிறிது ஆராய்வோம்.
நேரம்/காலம் என்பது நம் மனதினால்/எண்ணத்தால் வரையறுக்கப்பட்டது. “ஒரு வருஷம்ன்னு நினச்சு நிதானமாக இருக்காதே; ஒரு நிமிஷத்ல பறந்து போயிடும், பரீட்சை வந்திடும். படி” நாம் அன்றாடம் கேட்கும் தந்தை-மகன் உரையாடல். ஒருவருக்கு ஒரு வருஷம்; இன்னொருவருக்கு ஒரு நிமிஷம்”.
இடம் என்பது பொறி/புலன்களால் வரையறுக்கப்பட்டது. “என்னோட அறையும் 10’*12’ தான். ஆனால் அந்த அறையைப் பாரத்தால் இது ரொம்ப சின்னதா தெரியுதே”
ஏன் என்ற கேள்வியை நாம் கேட்காத நாளில்லை அல்லவா! இந்த கேள்வி, காரணமில்லாமல் எந்த காரியமும் இல்லை என்ற அடிப்படை அனுமானத்தால் எழுவது. ஏனென்றால் ஏன் என்று நாம் கேட்கும் போதெல்லாம், நடக்கும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும், அதாவது, அதற்கு முன்னால் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேறு ஏதாவது ஒன்று அதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் எடுத்துக்கொள்கிறோம். ஆக, காரணம்-விளைவு எனும் சங்கிலிப் பிணைப்பினை காரண விதி (theory of causation) என்று அழைக்கிறோம். அதாவது, நம்மை சுற்றியுள்ள அனைத்தும் முன்பு வேறொன்றாகவும், பின்பு மற்றொன்றாகவும் இருக்கும் என்ற உட்கருத்தே ஏன் என்ற கேள்வியின் அடிப்படை.
இவை மூன்றையும் முலாமாக பூசிய கண்ணாடி வழியாக நாம் முழுமையான இறைவனைப் பார்க்க முயலும் போது நாம் காண்பது இந்த பிரபஞ்சம்.
அதாவது நம்முள்ளே உறை முழுமையான சுய ஒளியாம் (ஸ்வயம் பிரகாஷ) ஆன்மா, மூலாம் பூசிய கண்ணாடியில் பிரதிபலித்து, காட்சி கொடுக்கும் பிம்பங்களே இந்த பிரபஞ்சமும் அதனுள் உறை தாவர ஜங்கமும்.
இந்த முன்றின் கூட்டுத் தொகை, அதாவது அந்த முலாமின் மறு பெயர் மாயை அல்லது மாயம். ஆக, இப்பொழுது பரம்பொருளைத் தவிர இரண்டாவதாக நாம் மாயை எனும் தத்துவத்தைக் காண்கிறோம்.
இது என்ன புது குழப்பம்? அனைத்தும் அவனே என்று கூறிய அத்வைத தத்துவத்தில், இருமையா? மாயை எங்கிருந்து வந்தது? அதன் இருப்பு என்ன? அதாவது காலம், இடம், காரணம் இவை மூன்றிற்கும தன்னிச்சையான இருப்பு உளதா? பார்க்கலாம்.
முதலில் ஆராய்ந்தபடி, இம்மூன்றிற்கும் தன்னிச்சையான இருப்புகள் இல்லை. முன்பு கூறியபடி, உடல் மன வளாகம் சாரந்தவை அவை. இவை மூன்றுக்குமே இருப்பு மற்றவைகளச் சாரந்தே. உதாரணமாக, காலம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கு இடைப்பட்டது; அது போல இடமதனின் இருப்பு எல்லைகளுக்குள் அல்லது பொருள்களுக்கு இடையில். காரணம்-விளைவு என்பது காலம், இடம் சார்ந்தது; ஆகையினால் அதற்கும் தன்னிச்சையான இருப்பு இல்லை. நாம் பிடிக்க முடியாத நிழல்கள் போல் அவை மூன்றும்.
எனினும் இந்த மூன்றும் இல்லை என்றும் கூறமுடியாது, ஏனென்றால் அவைகள் வழியாகத்தான் இவ்வலகும அனைத்தும் வெளிப்படுகின்றன. கடலில் தோன்றும் அலைகள் ஒப்பன அவை. இருக்கும் வரை இருப்பு; இல்லையெனில் மறைவு.
இருப்பு இலாத தன்மை போன்று தோன்றினாலும், உடல் மன வளாகமான நம் உள்ளுணர்வில் வடிவங்களை உருவாக்கும் சக்தியுடையது மாயை. ஆக, ஒரு உடல் மன வளாகத்தில் உறையும் ஆன்மா, மற்றுமொரு உடல் மன வளாகத்தில் உறையும் ஆன்மாவைக் காணும் பொழுது, உண்மை நிலை மறந்து (ஆதிஷ்ட்டான அஞ்ஞானம்), அதனை தன்னிலிருந்து வேறாகா பார்க்கிறது.
இது தான் மாயை.
வாருங்கள், தெய்வத்தின் குரலில் மாயை அறியலாம்.
தெய்வத்தின் குரல்
முடிவுரை
எனவே, இந்தப் பிரபஞ்சம் முழுவதும், கடல் போலவே, ஒரு விசித்திரமான வடிவம்; நீங்களும் நானும், சூரியன், நட்சத்திரங்கள் மற்றும் மற்ற அனைத்தும் அந்தக் கடலின் பல்வேறு அலைகள். அலைகளை வேறுபடுத்துவது எது? வடிவம் மட்டுமே, அந்த வடிவமே காலம், இடம் மற்றும் காரணம். இவை அனைத்தும் அலையைச் சார்ந்தது. அலை அடித்து ஒயும் போது, அவை மறைந்துவிடும்.
தனிமனிதன் இந்த மாயாவைக் கைவிட்டவுடனேயே, அது அவனுக்கு மறைந்து அவன் சுதந்திரமாகிறான்.
நமது பாதையில் எப்போதும் தடையாக இருக்கும் காலம், இடம், காரண காரியங்களின் மீதுள்ள இந்தப் பற்றினை அகற்றுவதே வாழ்க்கை எனும் முழுப் போராட்டமும் ஆகும்.
சரி, மன உடல் வளாகத்தால் தான் மாயை என்றால், மாயையை எப்படி கைவிடுவது? அது இயற்கையாகவே உள்ளது என்று பார்த்தோமே. அத்வைத வேதாந்தம் என்ன அனுமனின் வால் போல் தொடர்கிறதே! மாயையை அகற்ற வழிகளேதும் உண்டா? வேதாந்தம் என்ன சொல்கிறது?
அவசியம், வழிகள் உண்டு. மாயையின் முதல் நண்பன் மனம். நண்பனை சமாளித்தால், மாயையை அடக்கலாம். அது எப்படி? அடுத்த பதிவில் பாரக்கலாம். அதுவரை……
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!