முகவுரை
தியானத்தின் முக்கிய நடைமுறைகளில் ஒன்று ஆத்ம ஸ்மரணம் எனும் உள்ளுணர்வு தியானம். உன்னையே நீ அறிவாய் எனும் உயர்ந்த தத்துவத்தின்அடிப்படையில் நேரம், காலம், வினைகளை கடந்து நமது உள்ளார்ந்த சாராம்சத்தில் நாம் யார் என்பதை உணர வேண்டும் என்ற முயற்சி.
ஆத்ம ஸ்மரணம் என்பது ஒரு மனப் பயிற்சியல்ல; கடந்த காலத்தின் சிலநினைவுகள் அல்லது நிகழ்வுகளை நினைவுபடுத்துவது, கெட்ட நினைவுகளைஅகற்றி நல்லவற்றை வலுப்படுத்த முயற்சிப்பது போன்றவை அல்ல.
உடல், மன வளாகத்திலிருந்து பின்வாங்கி, உள்நோக்கி, நமது உள்ளுணர்வை, நிபந்தனையற்ற, சுதந்திரமான, அமைதியான, மனதுக்கும் புலன்களுக்கும் விழிப்புணர்வு எனும் ஒளியை வழங்கிடும் தூய இருப்புணர்வு என்று அறியும் முயற்சி. அந்த ஒளியை (ஒளிரும் வடிவங்களை அல்ல) அறிந்துணரும் முயற்சி இது.
இதனை ஜனகருக்கு உபதேசிக்கின்றார் அஷ்டாவக்ர முனிவர்.
ஸ்லோகம்
அஹம் கர்தேத்யஹம்மாநமஹாக்ருஷ்ணாஹித3ம்ஷித:
நாஹம் கர்தேத்தி விஸ்வாஸாம்ருதம் பீத்வா சுகீ3 பவ!
தமிழாக்கம்.
வினையன் நானெனும் கருராஜநாக கடியுண்டோனே!
நானில்லை வினையனெனும் நம்பிக்கை மூலிகையாம்
அமிழ்தருந்தி அடைந்திடுவாய் பேரின்பம்!!
(வினையன் - வினை புரிபவன்)
விளக்கம்
அஹி என்றால் நாகம். க்ருஷ்ணாஹி என்றால் கரு நாகம். கருநாகம் கொடிய விஷமுடையது. அதனால் கொத்துண்டால், கொடிய விஷம் உடல் முழுவதும்பரவும். விஷத்தை இறக்க மூலிகைச்சாறு தேவை.
இங்கே முனிவர், “புரிபவன் நான்” எனும் தன்முனைப்பு (Ego) தான் கொடிய விஷம் என்றும், “புரிபவன் நான் இல்லை” என்ற உள்ளுணர்வே பிறவா வரம் தரும் அமுது எனும் மூலிகைச்சாறு என்றும் கூறுகிறார். ஏன் அப்படி கூறுகிறார்? இதனுள் அடங்கிய தத்துவம் என்ன? விளக்கத்தை காணலாம்.
நான் - உடல், மன வளாகம்
மனம் என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று . மனதை அந்தக்கரணம் எனக்கூறுகின்றனர் . அந்தக்கரணம் என்பது மனம் , புத்தி , சித்தம் , அகங்காரம் என நான்கு பகுதியாகப் பிரிக்கப்படுகிறது . இந்த நான்கையும் சேர்த்து அந்தக்கரணம் என்றும் , மனம் என்றும் பொதுவாக கூறகின்றனர் . மனம் , புத்தி , சித்தம் , அகங்காரம் என்பது எதனை குறிக்கின்றது ?
இதில் முதல் பகுதி மனம். இந்த மனம் என்றால் என்ன என்பதை எவருக்கும் விவரிக்கத் தேவையில்லை . இதைப்பற்றி அனைவருக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரியும் . அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறுகிறோம் . அது ஒருஇடத்தில் அமைதியாக இருக்காது. அங்குமிங்கும் தாவிக்கொண்டிருக்கும் . இப்படி அலைபாயும் இயல்புடைய (தன்மையுடைய) பகுதியை மனம் எனும் பெயரிட்டு அழைக்கிறோம் .
இப்படி பன்மையை நோக்கும் தன்மை உடைய இந்த மனது (மனதின் பகுதிக்கு) ஒன்றை மட்டும் நோக்கினால், அதில் நாம் ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடும். பன்மை நோக்கும் மனம் தேவை. அந்த பன்மையைக் கண்டு, தரம் பிரித்து நமக்குத் தேவையான ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதுதான் புத்தி . மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்பது முதுமொழி . மனம் காட்டியதை எல்லாம் புத்தி அங்கீகரிக்க ஆரம்பித்தால் , புத்தியும் மனதின் தகுதிக்கு வந்துவிடும். பலவற்றையும்காட்டுவது மனது . தீர்மானம் செய்வது புத்தி.
சித்தம் என்பது என்ன ? சித்தம் என்பது நமது இயல்பு . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இயல்பு உண்டு . இயல்புக்கேற்ற அனுபவங்கள்தான் ஒருவருக்கு ஏற்படும் . நம்முடைய இயல்புகள் அனைத்தும் தங்கியிருக்கும் பகுதிதான் நமது சித்தம் . நமது சித்தம் என்பது ஒரு சேமிப்புக் கிடங்கு . நமது இயல்புகள் அனைத்தும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டு விடுவதில்லை . ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் , ஒவ்வொரு விதமான இயல்பு வெளிப்படுகிறது ; ஒவ்வொருவித அனுபவமாக வெளிப்படுகிறது . நம்முடைய சித்தம் நேரடியாகச் செயலில் ஈடுபடுவதில்லை . சித்தத்தின் மூலம் செயல்படுவது , நமது மனமும் புத்தியும் மட்டுமே . சித்தத்தின் தன்மையுடன் நாம் செயல்பட்டாலும் நாம் செயல்படுவது , நமது மனது மற்றும் புத்தியின் உதவியினால் மட்டுமே
அடுத்த பகுதிதான் அகங்காரம். உண்மையில் அகங்காரம் என்பது தான் நமது உணர்வுநிலை . அதுதான் - தன்னுணர்வு. அதுதான் நமது அந்தக்கரணத்தின் உயிர்த்தன்மை. மனம் , புத்தி , சித்தம் ஆகியவற்றுக்கு உயிர்கொடுப்பதுதான் இந்த அகங்காரம் . நமது சுத்தமான உணர்வு நிலைதான்அகங்காரம் எனும் தன்னுணர்வு.
ஒரு புல்லாங்குழலில் ஐந்து, ஆறு, எட்டு என பல துளைகள் உள்ளன. அந்த துளைகளை தாறுமாறாக விரல்கள் கொண்டு அழுத்தி மறைத்து ஊதினால்வருவது ஓசை. முறையாக அழுத்தினால் , மறைத்தால், முறையான இசைஏற்படும். எப்படி வேண்டுமானலும் , இங்கும் அங்கும் அழுத்துவது மனதின் செயல்பாடு. முறையாக துளைகளை மறைத்து அழுத்துவதுதான் புத்தியின்செயல்பாடு . குழல் தான் நமது சித்தம். அதுதான் நமது இயல்பு. குழலிருந்து வீணை இசையோ, நாதஸ்வர இசையோ வராது . இசைக் கருவிக்கு ஏற்ற இசைதான் ஏற்படும். இசை என்பதுதான் அகங்காரம் . இசை ஏற்படவில்லையென்றால், இசைக்கருவி பயனற்றது; துளைகளை மறைத்துஅழுத்துவதும் பயனற்றது. இசைதான் உயிர்த்தன்மை . இசைதான் உணர்வுத்தன்மை; இசைதான் அனுபவம். எல்லா அனுபவங்களுமே அகங்காரத்தின் வெளிப்பாடுகள் தாம்.
அகங்காரம் என்பது ஒரு சுத்தமான உணர்வுநிலை . அகங்காரத்தின் உயிர்த்தன்மையை எடுத்துக்கொண்டுதான் , மனம் , புத்தி , ஆகியவை உயிர்பெறுகின்றன ; செயல்படுகின்றன . நமது சித்தத்திலிருந்து வெளிப்படும்அத்தனை அனுபவங்களும் , இந்த அகங்காரத்தின் மூலமாகவே அனுபவமாகின்றன . இருப்புத்தன்மை என்பது உணர்வுநிலை , ஒரு Conscious நிலை. அதுதான் இந்த அகங்காரம் .
தன்முணைப்பு (ஆணவம்) - இந்த அகங்காரம் என்பது , பலராலும் பழிக்கப்படுகிறது. அகங்காரம் என்பது ஒரு திமிர்பிடித்த மனோபாவமாகக் கருதப்படுகிறது. அகங்காரம் என்பது ஆணவம் எனக்கருதப்படுகிறது. அப்படிக் கருதுவதனால், நாம் அதன்அடிப்படை உண்மையைத் காணத்தவறுகிறோம். ஆணவம் என்பது வேறு, அகங்காரம் எனக் குறிப்பிடுவது வேறு. ஆணவம் என்பது தன்முனைப்பு.
இந்த ஆணவம் எப்போது உருவாகுகிறது? - நம் உண்மையான இயல்பை நாம் மதிப்பிடத் தவறுவது மட்டுமல்லாமல், வரையறுக்கப்பட்ட உடல், மனம் மற்றும் புத்தியுடன் நம்மை அடையாளப்படுத்தும்போது.
இந்த அறியாமை என்பது நம்மை நாம் புரிந்து கொள்ள இயலாமையும், தவறாகப் புரிந்து கொள்வது ஆகியவற்றின் கலவையாகும். நாம் புரிபவர்; புரிவது அல்ல, இரண்டையும் குழப்புகிறோம். மாறிவரும் உடலையும் மனதையும் மாறாத தன்னுணர்வின் மீது சுமத்துகிறோம். இந்த செயல்முறை “அத்யாசா அல்லது அத்யாரோபா” என்றுஅழைக்கப்படுகிறது.
விஷமும் அமுதமும்
ஆக, மனம் (எனும் ஒரு பகுதி), வெறும் நினைவே. அது செயலோடு தொடர்புடையதன்று . புத்தி செயலோடு தொடர்புடையது, மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உடலோடு, செயலோடு, மனதோடு நம்மை புத்தி இணைப்பதனால் தான் தன்னுணர்விற்கு பிரச்சனை ஆரம்பம்.
இந்த புத்தியின் ஒரு இயக்கம் விசுவாசம். அது என்ன? முடிவுக்கு வந்து, முடிவைக் கொண்டு செயல்பட்டு, நம்முடைய முடிவில் நாமே நம்பிக்கையுடன், தெளிவுடன் இருப்பது. இதனை Confirmation என்பர் - தான் புரிந்ததை உறுதி செய்வது; தெளிவு முடிச்சு. இது தான் புத்தியின் இயக்கம் . இந்த முடிச்சை அவிழ்த்தால்தான் -பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம். இந்த முடிச்சு இருக்கும்வரை, கருநாகம் கொத்திய விஷத்தால் துன்புறும் மனிதர் நாம்.
நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று நம் மனம் கூறினாலும் அதுவும் மனதின் இயக்கமே. அந்தக் கேள்வியை, நமது புத்தி (மனதின் மற்றொரு பகுதி) கேட்டு, நம்மை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
அதாவது சித்தம் மற்றும் அகங்காரம் என்பவை நமது அந்தக்கரணத்தின்அடித்தளமாக இருந்தாலும் , அவற்றைக் குறித்து , நாம் எதுவும் செய்யத்தேவையில்லை. பிரச்சனை நான் “நானாக” இல்லை. நான் “நானாக” மாறவேண்டும் என்ற முடிவினை, புத்தி எடுக்க வேண்டும்.
மனம் - புத்தி இவற்றை நாம் சரிவரப் புரிந்து கொண்ட நிலையில் , நமது புரிதலில் - முடிவில் உறுதி பெற்றநிலையில் நமது இயல்பிலுங்கூட , தேவையான மாற்றங்கள் தாமாக ஏற்படுகின்றன . குழலிலிருந்து இன்னிசை ஒலிக்க ஆரம்பம். பாம்புகடி விஷத்தை இறக்கும் அமிழ்தே இந்த முடிவு.
முடிவுரை
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றோருவருடையதாகிறது;
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதி
என்ற கண்ணன் உரைத்த கீதையின் சாரத்தை அடிப்படையாக கொண்டதே முனிவரின் இந்த அறிவுரை.
அடுத்த ஸ்லோகத்தை அடுத்த பதிவில் காணலாம். அதுவரை………
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!