முன்னுரை:
மன உடல் வளாகத்தில் குடியிருக்கும் நான் யார் , இறைவன் இருக்கின்றானா, அவனை அறிவது எங்கனம், என் அறியாமையை உணர நான் என்ன செய்ய வேண்டும், காலம், இடம், காரணம் எனும் மூன்று கலவைகளை முலாமாகப் பூசிய மாயக் கண்ணாடி வழிதான் நமது உலக அனுபவங்கள் அனைத்தும், மனம் தான் மாயையின் முதல் நண்பன், அவனை சமாளித்தால் போதும் என்றெல்லாம் உளவியல் ரீதியாக, வேதாந்த ரீதியாக, தெய்வத்தின் குரல் வழி அறிந்து கொண்டோம் இதுவரை.
எனினும், “இவ்விடைகளெல்லாம், என் மனத்தில் நிலைக்கவில்லையே, என் செய்வேன்! என் மனத்தில் நிலைத்திருப்பதில்லையே, மனம் அலைந்து கொண்டே இருக்கிறதே” என்று உடல்,மன வளாகத்தில் இருந்து கொண்டு நாம் மனதைப் பற்றிப் புலம்புவது, என் காதில் விழுகிறது.
இந்த திரையிசைப் பாடல் அந்த நம் புலம்பலை பிரதிபலிக்கிறது.
மனக் கட்டுப்பாடு
இந்த பிரச்சனை புதிது ஒன்றும் இல்லை. இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னே போர்க்களத்தில் அர்ஜுனன், கண்ணன் இவர்களுக்கிடையே நடந்த உரையாடலை நாம் அறிவோம்.
“கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே, வீசும் காற்றை அடக்குவதை விட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.” - அர்ஜுனன் (பகவத் கீதை 6.34).
“மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும் மனதை வசப்படுத்தலாம்” - ஆண்டவன் கண்ணன் (பகவத் கீதை 6.35).
இறைவனுக்கென்ன, அறிவுரை கொடுப்பது எளிது. அதுவும் 2500 வருடங்களுக்கு முன். இதெல்லாம் புராணம். மனதை அடக்க வழியொன்றும் அறிந்திலேன் நான். மனதினை அடக்க முடியுமா, ஒரு போதும் ஆகாது என நாம் முடிவெடுக்கும் முன்னர், இன்றைய கால கட்டத்தில், நரம்பியல் நிபுணர்களும், விஞ்ஞானிகளும் (Neurologists and Neuro Scientists) என்ன கூறுகின்றனர் என்பதை ஆய்வோம்.
“ அந்த உரையாடல் எழுதப்பட்ட 2,500 ஆண்டுகளில், மனதைக் கட்டுப்படுத்துவது பற்றி உளவியல் விஞ்ஞானம் தீவிர ஆராய்ச்சிகளுக்குப்பின் மனதினை கட்டுப்படுத்தி கவனத்தை அதிகரித்து உலகத்திற்கு உதவ முடியும் என மிகவும் அறிந்துள்ளது”
என 2015 வருடத்தில் அமெரிக்காவில் நடந்த உளவியல் அறிவியல் சங்க (Association of Psychological Sciences- APS) ஆண்டு மாநாட்டில் பிரெட் காவ்லி உரையின் போது ஓரிகான் பல்கலைக்கழகத்தின் மைக்கேல் ஐ. போஸ்னர் கூறியுள்ளார் (Ref: Mind over Matter - https://www.psychologicalscience.org/observer/mind-over-matter-2).
மனதில் தோன்றும் சிந்தனைகளே வார்த்தைகளாக வெளிப்படுகிறது. வார்த்தைகளே செயல்பாடுகளாக வெளிப்படுகிறது. செயல்பாடுகளே நாளடைவில் பழக்கவழக்கமாக மாறுகிறது. பழக்கவழக்கங்களே ஒருவனது ஒழுக்கமாக வெளிப்படுகிறது. ஒழுக்கமே தலைவிதியை நிர்ணயிக்கிறது. இதன் மூலம் நல்ல சிந்தனைகளே ஒருவரை வாழ்வில் மேம்படுத்துகிறது, தீய சிந்தனைகள் வீழ்ச்சியடையச் செய்கிறது என தெளிவாக நமது வேதங்கள் உரைக்கின்றன.
எனவே மனக்கட்டுப்பாடு நமது வாழ்க்கைப் பயணத்தில் ஒர் இன்றியமையாத அங்கம்.
மனமும் அறுபகையும்
நமது வேதங்களும், உபநிடதங்களும், மனக்கட்டுப்பாட்டின் எதிரிகள் என ஆறு பகைவர்களை அறிவிக்கின்றன. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் (kama — lust, craze, desire; krodha — anger, hatred; lobha — greed, miserliness, narrow minded; moha — delusory emotional attachment; mada — pride, stubborn mindedness; matsarya — envy, jealousy, show or vanity, and pride). இவைகளே அந்த ஆறு பகைவர்கள்.
ஆக, மனக்கட்டுப்பாட்டிற்கு வழி, நம்முள் உறை அருபகைவர்களை அடக்க வேண்டும்.
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில்
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான்
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம்
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ
தசரதனின் மொழியாக கம்பர் பாடும் இந்த இச்செய்யுளில் ஆராய்ந்து அனுபவிக்கவேண்டிய அற்புதமான கவிநயம் ஒன்று அமைந்துள்ளது. வெளியில் உள்ள பகைவர்கள் உயர்திணை. காமம், வெகுளி என உள்ளத்தில் இருக்கும் தீயகுணங்கள் அஃறிணை. ஆனால், கம்பர் வெளிப்பகைவர்களை பகை என்றும், உட்பகையை பகைஞர் என்றும் மாற்றிப் பாடுகிறார். முயன்றால் வெளியில் உள்ள பகைவர்களை அழித்துவிடலாம். ஆனால், உள்ளுக்குள் உள்ள அரக்க குணங்களை முயற்சி செய்தாலும் அழிப்பது மிகக் கடினம் என்னும் அர்த்தம் விளங்கவே அவ்வாறு உயர்திணையில் வைக்கிறார் கவியரசர் கம்பர்.
‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து’
என திருவள்ளுவர் இக்கருத்தினை பிரதிபலிக்கிறார். :
“சும்மா இரு, மனம் அடங்கும்” - இது சரியா ?
“சரி, மனத்தை கட்டுப்படுத்த முடியும், கட்டுப்படுத்த வேண்டும் என்று புரிகிறது. அதற்கு வழி அறுபகைகளை அடக்க வேண்டும் என்றும் மறைகள் உரைக்கின்றன. அவைகளை அடக்குவது என்னால் ஆகாது. அதற்கு பதிலாக, எப்போதும் ஒன்றுமே செய்யாமல், சும்மா இருந்துவிட்டால், மனம் தத்தளிக்காது என ஆசை நம் அனைவருக்கும். இல்லையா?
சும்மா இருப்பதென்ன அவ்வளவு சுலபமா? “காயேன வாசா மனஸா” அதாவது உடல், வாக்கு, மனம் - இந்த மூன்றும் உயிர் உள்ளவரை, இடைவிடாது செயலில் ஈடுபடுகின்றனவே. எப்படி சும்மாகவே நம்மால் இருக்க முடியும்?
சும்மா இருந்தால் என்ன ஆகும் தெரியுமா ? வடிவேலுவின் திரைப்பட நகைச்சுவை நினைவுக்கு வருகிறதா?
மனதை அடக்க, சும்மா இருக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று பாமரனுக்குப் புரியும்படி, இந்த திரை இசை எளிய நடையில் மறைகூறும் சாரத்தை எடுத்துரைக்கிறது. இந்த திரை இசைப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் நமது மறைகள் எடுத்துரைக்கும் “தொழில் தர்மம்” பற்றியதே.
தர்மத்தின் வழி நாம் நமது பணிகளைப் புரிந்தால், மனதுக்கு நிம்மதியும் அதன்வழி அடக்கமும் வரும் என்பது மறுக்க முடியா உண்மை.
மனதை அடக்க வழி - தெய்வத்தின் குரல்
ஆக, மனதை அடக்க என்ன தான் வழி? மனோ தத்துவ நிபுணர்களை சந்திக்க வேண்டுமா? மருத்துவம் ஏதும் உண்டா? வேதங்கள் ஏதாவது வழி காட்டுகின்றனவா? “ என்னற்ற கேள்விகள் நம் மனதினில்.
வேதங்கள் காட்டாத வழிகளா ! வாழ்வியல் இலக்கணம் அல்லவா வேத சாரம்.
இதோ! தெய்வத்தின் குரல் - மனதை அடக்க வழிகள்:
முடிவுரை
ஆக, அன்றாட வாழ்வில், உடல் மன வளாகத்தை சரியாக உபயோகித்து, அவைகளை அறிந்து, மறை கூறும் தர்மங்களைக் கடைப்பிடித்து, வாழ்வினிலே செயல்படுவது நமது கடமை. அதுவே கர்ம யோகம்.
“என்னது! கடமையாம், கர்ம யோகமாம். நாம் தான் தினமும் இடைவிடாது செயல்கள் புரிகின்றோமே. அவைகளுக்கே நேரம் போதவில்லை. இப்போது புதிதாய் கடமை, கர்மயோகம் என்றெல்லாம் எதற்கு?
உங்களின் ஆதங்கம் புரிகிறது. அவைகளுக்கான விடை அடுத்த பதிவுகளில்.
அது வரை…….
Good. Precise and clear. Summa iru sollara. Seyal iyarkaiyin velai. Athan kattalai sorkkal. Ithu samudaya seyalnpaatirkku.