இதுவரை
பரம்பொருள் எனும் பிரம்மன் ஒரு தூய இருப்பு (Pure Existence), அழிவிலா நிரந்தர உண்மை அல்லது சத்தியம். அது தான் நம்முள் சுய ஞான ஒளியாய் (ஸ்வயம் பிரகாசம்) உறைந்திடும் ஆத்மா எனப்படும் நமது தூய உணர்வு (Pure Consciousness). இந்த தூய உணர்வினை அறியும் நிலையே பேரின்ப நிலையெனும் தூய ஆனந்தம் (Bliss). தூய சத்தியம்+ஞானம்+ஆனந்தமான அந்த நிலையையே நாம் பரம்பொருள் என்கிறோம் என்று முந்தைய பதிவுகளிலிருந்து நாம் அறிந்தோம்.
இந்த அறிவு நிலையை, வேதாந்தம் பரமார்த்திக நிலை என்கிறது. அதாவது பரம நிலை; இந்நிலைதான் உயர்ந்தநிலை. இதற்கு மேல் வேறு நிலையேதுமில்லை.
அப்படியென்றால் நாம் அனைவரும் அவன் வடிவே; இவ்வுலகும் அவன் படைப்பே; ஆதலினால் நாம் அனைவரும் எந்நேரமும் நலமுடன் மகிழ்வுடனே இருக்க வேண்டும் அல்லவா? அப்படியாகவா உலகத்தில் உள்ளோர் இருக்கின்றனர்?
அனுபவ நிலை
இந்த இடத்தில், திரை இசைப் பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு மனிதன், வாழ்வில் இனிமை என்றான், ஒரு மனிதன், அதுவே கொடுமை என்றான். படைத்தவனோ உடனே சிரித்து விட்டு, கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது, காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது என்றான். இவ்வாறு கடவுளும் மனிதனும் பரிமாறிக் கொண்ட உரையாடல், நமது நிலையை அந்தப் பாடல் பிரதிபலிக்கிறது.
நிழல் நிஜமாகிறது
“சரி, நமது உண்மையான இயல்பு தெய்வீகமானது என்றால், நாம் ஒவ்வொருவரும் ஏன் உலகத்தை, வாழ்வை ஒவ்வொரு விதமாக காண்கிறோம், நுகர்கிறோம். பரம நிலையில் நாமனைவரும் இறைவனே என்றால், ஏன் இந்த வேறுபாடுகள்? வேறுபாடுகள் நிறைந்த இந்த நிலை என்ன மாயமா? இல்லவே, ஏனெனில் அந்த வேறுபாடுகள் நிஜமல்லவா?” என்று நாம் யோசிக்கிறோம், அல்லவா!
நிழலை நிஜமென நம்பும் அறிவின்மை நிறை நமது இந்த நிலையை, வேதாந்தம் வ்யவகாரிக நிலை என்றழைக்கிறது. இது என்ன நிலை? வாருங்கள் ஆராயலாம்.
உங்கள் உருவத்தை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்? இது என்ன கேள்வி? நிலைக்கண்ணாடி முன் நின்று தான் என அனைவரும் பதில் அளிப்போம். அது என்ன நிலைக் கண்ணாடி ? ஏன் வெறும் கண்ணாடி என்று கூறக்கூடாது? சிந்தித்தீர்களா?
நாம் ஒரு கண்ணாடியின் முன் நிற்கும்போது, நமது பிரதிபலிப்பைப் பார்க்கிறோம். நாம் வெளியேறும்போது, பிரதிபலிப்பு மறைந்துவிடும். எனவே, பிரதிபலிப்பு அசலைச் சார்ந்துள்ளது. அசல் இருக்கும்போது மட்டுமே, பிரதிபலிப்பு. இங்கே அடிப்படை அசல். அது இல்லாமல், பிரதிபலிப்பு இல்லை. அசலின் இருப்பை, நாம் நமது அனுபவமாக காணும் பிரதிபலிப்பு நிலையை காட்வடுதால் அது நிலைக் கண்ணாடி.
கண்ணாடியைப் பற்றி பேசுகையில், இந்த கட்டிடத்தைப் பாருங்கள், அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உள்ள தற்கால கலைகளின் அருங்காட்சியகம் (Museum of Contemporary Arts, MOCA, Cleveland, Ohio).
உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி
என்ன ஒரு ஈர்க்கக்கூடிய கட்டிடக்கலை! தெரு, போக்குவரத்து, கட்டிடங்கள் போன்றவற்றை கண்ணாடியில் பார்க்கலாம் - வடமொழியில் கூறினால், "தர்ப்பண நகரி". தர்ப்பணம் என்றால் கண்ணாடி; நகரி என்றால் நகரம் / தெரு என்று நாம் சமஸ்கிருதத்தில் அழைக்கிறோம். கண்ணாடியில் தெரிவதை இன்னும் கொஞ்சம் பார்த்துக் கொண்டே இருப்போம், நாம் என்ன பார்க்கிறோம் என்று சிந்திப்போம்.
நான்கு வித்தியாசமான அம்சங்களைக் காணலாம்.
1. பிரதிபலிக்கப்பட்ட அந்த நகரம்/தெருவிற்கு அடிப்படை ஆதாரம் (अधिष्टानं ஆதிஷ்ட்டானம்) கண்ணாடி. அவை இரண்டிற்கும் உள்ள உறவு ஆதாரம்-ஆதரவு எனும் உறவு (ஆதிஷ்ட்டான ஆதேய சம்பந்தஹ).
2. பிறகு இரண்டாவது அம்சம் என்னவென்றால், எனக்கு அனுபவமாக இருந்தாலும், பிரதிபலிப்புக்கு என்று சொந்தமாக ஒரு இருப்பு இல்லை. தெரு, நகரும் கார்கள், கட்டிடங்கள் மற்றும் அனைத்தையும் நாம் அனுபவித்தாலும், அவை அனைத்தும் கனவுகளொப்ப இருப்பிலா நிகழ்வுகள். அவைகளின் இருப்பு கண்ணாடியிலிருந்து கடன் வாங்கப்பட்டவை. எனவே பிரதிபலித்த தெரு இருப்பை கடன் வாங்கியது; கண்ணாடிக்கு அதன் சொந்த இருப்பு உள்ளது. அதாவது, பிரதிபலிப்பு இருக்கிறதோ இல்லையோ, கண்ணாடி இருக்கிறது; அது உண்மை. கண்ணாடி இல்லாமல் பிரதிபலிப்பு இருக்க முடியாது. எனவே, கண்ணாடியானது சுதந்திரமான இருப்பைக் கொண்டுள்ளது (சத்யம்), அதே சமயம் பிரதிபலிப்பு சார்பு இருப்பைக் கொண்டுள்ளது (மித்யம்).
3. பிரதிபலித்த தெருவில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் கண்ணாடியை பாதிக்காது. பிரதிபலிப்பில் ஒரு கார் விபத்துக்கு ஆளானால், அந்த விபத்தால் கண்ணாடியில் விரிசல் ஏற்படாது. பிரதிபலித்த சாலையில் நீர் கசிந்தால் அது கண்ணாடியை நனைக்காது. கண்ணாடியின் இந்த "பாதிக்கப்படாத" நிலை असंगत्त्वम् அசம்கத்வம் எனும் மூன்றாவது அம்சமாகும்.
4. பிரதிபலித்த பொருள்கள் சார்புள்ள இருப்பை (மித்யா) கொண்டிருப்பதால், அதாவது அவற்றின் சொந்த இருப்பு இல்லாததால், அவை இல்லாதவைகளே. அவைகளை கண்ணாடியுடன் சேர்த்து கணக்கிட முடியாது. எனவே, இருப்பு என்று எண்ணக்கூடியது ஒன்று மட்டுமே; நூற்றுக்கணக்கான பிரதிபலித்த பொருள்கள் இருந்தாலும், அவைகளனைத்தையும் கண்ணாடியுடன் சேர்க்க முடியாது. எனவே இந்த இருமை அல்லாத ஒருமை (அத்வையத்வம்) கண்ணாடியின் நான்காவது அம்சமாகும்.
ஆக, “அத்வைத்த அசம்கத்வ சத்ய ஆதிஷ்ட்டானம்” தான் அந்த கண்ணாடி. அதாவது, ஒன்றேயான, பற்றிலா, உண்மையான ஆதாரமெனும் கண்ணாடியில் நாம் பலவேறு வகையான, நிலையற்ற (சார்பு இருப்புடைய) உண்மையிலா ஆதரவுகளான பிரதிபலிப்புகளை காண்கிறோம்.
இயற்கையெனும் மாயம்
அப்படி நாம் அவைகளை காணும் நேரம் (அதாவது நமது உடல் மன வளாக புலன்களால் அந்த காட்சிகளை அனுபவிக்கும் போது) அந்த அத்வைத்த அசம்கத்வ சத்ய ஆதிஷ்ட்டானமான அந்த கண்ணாடியை காண்பதில்லை/அறிவதில்லை. அதாவது, அனுபவ நிலையில், நாம் பரம நிலையை அறிவதில்லை.
இந்த ஆதிஷட்டான அஞ்ஞானம் தான் மாயை. இது தான் இயற்கை.
திருமூலரின் திருமந்திரம் நினைவுக்கு வருகிறது.
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்துள் மறைந்தது பார்முதற் பூதம்
கிராமங்களில் இதனையே
“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்”
என்று கூறுவர். சிறுவர்களாய், நாம் அந்த வாரத்தையின் உள்ளர்த்தம் அறியாமல், நாயை கல்லால் அடிப்பதைப் பற்றிய சொற்தொடர் என்று எண்ணுவோம்.
இதுவே இறைவனும், உலகும். இறைவனைக் கண்டால் உலகம் காணவில்லை. உலகை கண்டால் இறைவனைக் காணவில்லை. இறைவன் உலகாக இருக்கின்றானா, உலகுக்குள் இருக்கின்றானா என்ற கேள்விகள்.
முடிவுரை
அப்படியென்றால் நாம் வாழும் இவ்வுலகம் பொய்யா? வெறும் கதையா ? கனவா இல்லை நிஜமா?
நமது பொறி புலன்கள் அறிந்து, நுகர்ந்து, நமது அன்றாட அனுபவங்களாகும் எல்லாம் உண்மைதானே, பின் எப்படி அவைகளனைத்தும் இல்லாமல் போகும்?
விடைகளை அறிய முற்படுவோம் வரும் பதிவுகளில்.
அதுவரை……..
ஆத்மா ஒரு கண்ணாடி போன்றது என்பது அற்புதமான விளக்கம். . ஆத்மாவே பரம்பொருளின் ஒரு பாகம் என்றால் ஏன் உலகில் அதர்ம காரியங்கள் நடக்கின்றன. என்ற கேள்வி எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏன் அதர்மம் நடப்பதற்கு முன் தடுத்து நிறுத்தப்படுவதில்லை. இன்னும் புரியவில்லை......!!!