முன்னுரை
முந்தைய, முதல் பதிவில் “நான் யார்” என்று நம்மை நாமே வினவி, விடைதனை ஆய்ந்து, “நான்” நான் நினைக்கும் “இவன்” இல்லை; “நான் அவன் தான்” என்றும், முடிவில் எல்லாம் தலைவனான அவன் செயல் என்றுமறிந்தோம்.
இப்பொழுது அவன் யார், அந்த தலைவன் யார் என்பதை அறிய முற்படுவோம்.
முதலில் இந்த திரைப்பட பாடலைக் கேளுங்கள்.
அனுபவ ரீதியான விளக்கங்கள்
திரை இசைப் பாடல் தரும் விளக்கம்
கேட்டீர்களா? உள்ளே-வெளியே, இருப்பு-இல்லை, ஒன்று-பல, எதிலும்-இதிலும் என முறைபாடான செயற்படு சொற்கள் பல பல (contradictory predicates).
அப்பாடா! என்ன ஒரே தத்துவமாக உள்ளது இந்த திரையிசையில்! அல்லவா?
ஆமாம் - இந்தப் பாடல் ஒரே தத்துவத்தைத் தான் விளக்கியது. அது தான் பரம்பொருள்.
தெய்வத்தின் குரல்
இந்த தத்துவத்தை என் போன்ற பாமரனும் அறிந்து கொள்ள வேண்டும், என்பதற்காகவே, காஞ்சிப் பெரியவர்
“எத்தனையோ ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தைச் செய்தவனாக ஒருவன் இருக்கத்தானே வேண்டும்? எத்தனையோ வேறு வேறு விதமான வஸ்துக்களைப் பலவிதங்களில் சேர்த்து வைத்து, பலவிதமான பிரயோஜனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிற இயற்கையை, லோக வாழ்க்கையைப் பார்க்கிறபோது, இவைகளை எல்லாம் இந்த உத்தேசத்துக்காகவே உண்டாக்கி, இவற்றை நடத்தி வருகிற ஒரு மகா பெரிய சக்தி இருக்கத்தான் வேண்டும் என்று தெரிகிறது”
என்று “ஸ்வாமி” என்ற தலைப்பில் அருளுரை வழங்கியுள்ளார். அந்ததெய்வத்தின் அருள்வாக்கினை படித்திட கீழ்கானும் வளைதளப் பகுதியைவிஜயம் செய்யவும்.
வாருங்கள், இப்பொழுது மற்ற விளக்கங்களைப் படிக்கலாம்.
உளவியல் விளக்கம் (God - A psychology perspective)
நாம் எதிர்கொள்வது எதுவும் நம்மின் ஒரு பகுதியாகக்கூட இருந்தாலும், நாம் அது இல்லை; நாம் அதைவிட பெரிது என உணர்கிறோம் அல்லவா?
ஆக நாம் எதிர்கொள்ளும் அனைத்தும், நமது அனுபவங்களேயன்றி (experience) நாம் அல்ல என்று உணர்கிறோம். அதாவது நம்மையும் நாம் எதிர்கொள்ளும் பொருட்களையும் இணைப்பது, நம் அனுபவம் என்று அறிவோம்.
“நான்”, என் உலகம் இரண்டும் என்அனுபவ நாணயத்தின் இரு பக்கங்கள்.
எனினும் என்னுடைய அனுபவம் வேறொரு பெரிய அனுபவத்தின் ஒரு பகுதியாக(அம்சம்) (sub set) இருந்தால், அந்தப் பெரிய அனுபவத்தின் மறுபக்கமாக என் அனுபவம் போல ஒரு “நான்” மற்றும் ஒரு “உலகம்” என்று இரண்டும் இருக்க வேண்டும்.
அந்த பெரிய “நானில்” “என்“நான்”ஒரு அம்சம், அந்த பெரிய “உலகில்” என் “உலகம்” ஒரு அம்சம் என்பதில் மறுப்பில்லை. இந்த வாதத்தை இப்படியே நீட்டிக்கொண்டு போனால், இந்த அனைத்து “நான்”களையும் உள்ளடக்கிய “நான்”, அதாவது அந்த
“நான் எனும் பரந்த தன்மை” தான் பரமாத்மா; என்னுடைய “நான்” ஜீவாத்மா;
அதேபோலத்தான், என்னுடைய “அனுபவ உலகம்”, நீக்கமற நிறைந்த உலகம் இவை இரண்டிற்கும் இடையே ஆன உறவும். அந்த நீக்கமற நிறைந்த உலகமும் தான் பரமாத்மா.
இவை இரண்டும் தான் பரமாத்மாவின் இரு பக்கம். ஆக,
“ஜீவாத்மாவான நானும்”, “பரமாத்மாவான நான் எனும் பரந்த தன்மையும்” ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றால் அது மிகையாகாது.
எப்படி நம் அனுபவ உலகம் பரந்த உலகத்தின் வெளிப்பாடோ அப்படி அந்த பரமாத்மனின் வெளிப்பாடே இந்த ஜீவாத்மா. இதையே, எப்படி ஜீவாத்மா பரமாத்மாவின் வெளிப்பாடோ அப்படியே அனுபவ உலகம் பரந்த உலகத்தின் வெளிப்பாடு என்றும் கூறலாம்.
இங்கே உலகமென்றால் நமது பூமி என்று அர்த்தமில்லை. பூமி உட்பட அண்டங்கள் அனைத்துமடங்கிய இந்த வெளிப்பாடு என்ற உயர்நிலைப் பொருள்.
பூமி என்பது விரிவடையும் விண்மீன் மண்டலத் திரள்களில் (constellations of galaxies) ஒரு சிறிய விண்மீன் மண்டலத்தின் (galaxy) ஒரு அங்கமான ஒருகோள நெருப்பைச் (sun) சுற்றி சுழலும் ஒரு சிறிய பாறைப்பந்து (earth) மட்டுமே.
கீழ்கானும் காணொளியைப் பாருங்கள். நாம் யாரென்றும், பரம்பொருளான பிரம்மன் யாரென்றும் நமக்கே புரியும்.
இப்போது புரிந்ததா, எவ்வளவு சிறியவர் நாமனைவரும். இதில் “நான், என்” என்ற மமதை வேறு !
அதே சமயம், அந்த
சிறிய பாறைப்பந்தின் மேலமர்ந்து , மகப்பேறு மனை தொடங்கி சுடுகாடு செல்லும் வரை இடையே உள்ள காலத்தை வாழ்க்கை என்றழைத்து, அவ்வாழ்க்கையில் தன் உடலின் ஒரு பகுதியில் உள்ள விசித்திரமான நரம்பியல் பொறியை (மூளை - brain) உபயோகித்து அந்த விண்மீன் மண்டலத் திரள்கள் வரை விரைவில் சென்று அனைத்தையும் பொறிபுலன்களால் நுகர்ந்து அனுபவம் கொள்ளும்
மனிதனும் ஒரு அசாதாரண விந்தையான படைப்பன்றோ!
ஆக, நான் எனும் பரந்த தன்மை, பரந்த உலகமெனும் வெளிப்பாடு இவை இரண்டுமே பரமாத்ம அனுபவம்தான்.
அனுபவிப்பனையும் அனுபவிக்கப்படுவதையும் அனுபவத்தால் ஒருங்கிணைத்த ஒரே தத்துவம் பரமாத்மா அல்லது பிரம்மன் என்கிறோம். (The experiencer and the experienced are one and the same and this experience is Brahman)
வரம்பிலா அந்த தத்துவமே அனைத்தும், அனைத்தின் மூலமும் ஆதாரமும்.
வேதாந்த ரீதியில் விளக்கம்
பரம்பொருள்/பிரம்மன் என்றால் என்ன?
நமது சனாதன தர்மத்தில் பிரம்மன் (Brahman) என்ற தத்துவத்திற்கு பரமாத்மா, பரம்பொருள், இறைவன், கடவுள், ஆதிபகவன் என பல பெயர்கள் உள்ளன.
முண்டக உபநிஷதம் "பிரம்மன்" அல்லது பரம்பொருள் என்று அழைக்கப்படும்இறுதி யதார்த்தத்தை இங்கனம் வரையறுக்கிறது.
यत्तदद्रेश्यमग्राह्यमगोत्रमवर्णंमचक्षुःश्रोत्रं तदपाणिपादम् |
नित्यं विभुं सर्वगतं सुसूक्ष्मं तदव्ययं यद्भूतयोनिं परिपश्यन्ति धीराः || 1.1.6 ||
யத்ததத்ரேஷ்யமக்ராஹ்யமகோத்ரமவர்ணம்மசக்ஷுஶ்ரோத்ரம் ததபாணிபாடம் |
நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம் ததவ்யம் யத்பூதயோனின் பரிபஶ்யந்திதீர: || 1.1.6 ||
“கண்ணுக்குத் தெரியாதது, நினைத்துப் பார்க்க முடியாதது, ஆதியும், அந்தமும் இல்லாதது. எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” - அனைத்து உயிரினங்களின் இருப்பு இதுதான் என ஞானியரும், பெருமுனிவர் பலரும் கூறுவர்” என அந்த உபநிடதம் கூறுகிறது.
ஆதி சங்கரர், வேதாந்த சூத்திரத்தின் விளக்கவுரையில்,
மாசிலா நிரந்தரமான தூய்மையுடன், முழு அறிவுடன், தன்னிச்சையான தன்மையுடன், வாக்கு, மனம் இவைகளைக் கடந்து, பொருள் என்ற வரையிலாது எங்கும் எதிலும் நீக்கமற நிறைவாக எது இருக்கிறதோ அதுவே பரம்பொருள்
என்கிறார்.
நித்ய வஸ்து ஏகம் பிரம்மம்
தத் வ்யத்ரிக்தம் ஸர்வம் அநித்யம்
இந்த உலகமும் அதில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை நிலைநிறுத்துவது என்றும் மாறாது. அது எப்பொழுதும் ஒன்றே. அதுதான் கடவுள் - பிரம்மன் - இறைவன் என்று அழைக்கப்படும் யதார்த்தமானஒரே உண்மை என வேத சாஸ்த்திரங்கள் உரைக்கின்றன.
‘நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.’
என்ற திருக்குறளும் இக்கருத்தை பிரதிபலிக்கிறது. இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. “ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம். இதனை மாணிக்கவாசகர்
″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ – என
திருவெம்பாவையில் கூறுகிறார்.
குணமிலா, அமைதி நிலையான பரப்பிரம்மன் என்றும் சத்தியம், ஞானம், அனந்தம்; அதாவது சத் சித் ஆனந்தம் (அச்சொற்கள் மருவி சச்சிதானந்தமாயிற்று தமிழில்). அதாவது,
யாண்டும் உள்ள, மாறா உண்மை என்பது சத்தியம். அது தூய இருப்பு. மெய்ப்பொருள்.
யாண்டும் உள்ள, மாறா அறிவு என்பது ஞானம். அது தூய உணர்வு. மெய்யறிவு.
யாண்டும் உள்ள, மாறா சுகம் என்பது ஆனந்தம். அது தூய இன்பம் . பேரின்பம்.
முடிவுரை
ஆக, இந்தப்பதிவின் முடிவில், நான் நானில்லை அவனே தான், அவன் தான் இருக்கிறான் என்று நான் என் தலைவனை அறிகிறேன். பின்னர் என்ன!
“தன்னையும் தனக்காதாரத் தலைவனையும் கண்டானேல்
பின்னை அத்தலைவன் தானாயப் பிரம்மனாய் பிறப்புதீர்வன்
உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடுமில்லை
என்னைநீ கேட்கையாலே ஈதுபதேசித்தேன்”
என்ற கைவல்ய நவநீத உரை பொய்யாகுமோ? இங்கு கண்டானேல் என்ற சொல் வெறும் காண்பது என்ற பொருள் அல்ல. நான் தான் அவன் என்ற வேதவாக்கின் ஐக்கியத்தைக் கண்டானேல் என்ற பொருள்.
சரி, நான் அவன் தான் என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எனக்கு என் வாழ்க்கையில் அவன் புரிவதுமில்லை, தெரிவதுமில்லை. அது ஏன்?
இந்த வினா நம் அனைவரிலும் எழும். அதற்கு விடை அடுத்த பதிவில்……….
அதுவரை
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!
I have exciting news to share: You can now read A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம் in the new Substack app for iPhone.
With the app, you’ll have a dedicated Inbox for my Substack and any others you subscribe to. New posts will never get lost in your email filters, or stuck in spam. Longer posts will never cut-off by your email app. Comments and rich media will all work seamlessly. Overall, it’s a big upgrade to the reading experience.
The Substack app is currently available for iOS. If you don’t have an Apple device, you can join the Android waitlist here.