முகவுரை
அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்ற ஔவையின் கூற்றின்படி, ஏழுபத்தொன்று வருடங்களுக்குமுன் அரிதான பிறவியை எடுத்த இந்நாளில், அடியேன் இதுவரை கடந்து வந்த பாதையையும் அந்த பாதையின் அடிப்படையையும் அறிய முயன்றேன்.
அந்த முயற்சியின் முடிவில் கிடைத்த அறிவின் தொகுப்பை எனது மழலையில் மொழிகிறேன் கீழ்வருமாறு:
1. சாதாரண நடுத்தர குடும்பத்திலிருப்பவன் நடந்து வரும் பாதையெனும் ஆறிலிருந்து அறுபது வரை வாழ்வு,
இளமையில் கல்வி,
அறவழியில் பொருளீட்டுதல்,
மனைமாட்சி
என்ற மூன்று படலங்களத் தழுவியது. என் பாதையும்கூட அதுதான்.
2.“காயேன வாசா மனஸா” என்று உடல், வாக்கு, மனம் வழி ஆண்டவனைச் சார்ந்திருந்து, உலகியல் பலன்களை விரும்பாமல், கல்வி புகட்டி மனத்தூய்மையுடன் அறச்செயல்கள் புரிந்திட்ட அன்னை தந்தையின் அறிவுரைகளால், இளவயதிலிருந்தே எனக்கு கிட்டியது அறநெறிப்படி திட்டமிட்டு ஸமபுத்தி மனப்பான்மையுடன் வாழும் ஒழுக்கமிகு வாழ்க்கை. பெற்றோரின் வடிவில் இறையருள் கிட்ட, என்ன பெருந்தவம் செய்தேன் என்று இன்றும் அறியேன் அடியேன்.
3. இளமையில் கல்வி, பொருளீட்டுதல், மனைமாட்சி என்ற மூன்று படலங்களில், தர்மத்தை கடைப்பிடிக்கும்போது கொள்ள வேண்டிய மனோபாவனையை அடைந்திட, பெற்றோரின் அன்றாட எளிய வாழ்க்கையே எனக்கு இலவசமாகக் கிடைத்த பயிற்சிக்கூடம்.
4. இன்பம் “அவன்” கொடுத்தது, துன்பம் எனது முன்வினைப் பயனாலே; ஆகவே இன்பத்தில் களித்திடாமலும், துன்பத்தில் துவண்டிடாமலும் அவர்கள் வாழ்ந்த எளிமையான அனுதின வாழ்வே இன்றும் எனக்கு வழிகாட்டி.
இப்படி, அறிவின் துணை கொண்டு இருமைகளில் சமமான மனப்பான்மைதான் எனது அறுபது கடந்த ஆன்மீகம் தழுவிய வாழ்வின் அடிப்படை.
சரி, நீ என்ன பெரிய மனிதனா? என்ன சாதித்தாய் இவ்வுலகில்? உன் சுய சரிதையால் எங்களுக்கு என்ன? என்று நீங்கள் வினவுவது எனக்குத் தெளிவாக கேட்கிறது. நான் பெரியவனல்ல; நான் சாதனையாளன் அல்ல. நான் ஒரு சாமான்யனே! எனினும், இன்று நான் அறிந்திடும் பகவத் கீதையின் ஸ்லோகத்திற்கு இது முகவுரையாகும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததனால்தான் இந்த சுயசரிதை.
இப்போது கீதையின் ஸ்லோகத்தைக் காண்போம்.
ஸமஸ்க்ருத ஸ்லோகம்
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन |
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि || 2.47 ||
தமிழில் எழுத்துப் பெயர்ப்பு
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ஃபலேஷு கதாசனா |
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோத்யஸ்த்வகர்மணி || 2.47 ||
தமிழாக்கம்
1. உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு உண்டு.
2. அவற்றின் பயன்களில் ஒருகாலும் உரிமையில்லை.
3. ஆகவே நீ கர்மங்களின் பயன்களைக் கோருவதற்கு காரணமாக ஆகாதே.
4. மேலும் உனக்கு கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்று இருக்கக்கூடாது”
என்று நான்கு அறிவுரைகள் வழங்குகிறான் கண்ணன். அதாவது,
1. செயலின்மையில் நாட்டம் வேண்டாம்.
2. செயலின் பலனிலும் நாட்டம் வேண்டாம்.
3. செயலில் மட்டுமே உன் நாட்டம் இருக்கட்டும்.
4. செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு தகுதி இருக்கிறது.
5. செயலைத் (கடமையைத்)துறப்பதற்கு உனக்கு தகுதி வரவில்லை.
6. செயலைத் துறக்க வேண்டுமானால், செயலின் பலனை விரும்பாமல் சில காலம் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் செயலைத் துறக்க தகுதி ஏற்படும்.
என்று கண்ணன் பார்த்தனுக்கு விளக்குகிறான்.
கர்ம யோகம் புரியாமல், கர்ம சந்யாஸம் செய்ய முடியாது. அதைமீறி கர்ம சந்யாஸம் செய்தால் அதனால் துக்கம் விளையும்.
விளக்கவுரை
வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றிற்கு ஏற்றவாறு மனிதனுக்கு கர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கர்மங்களை “கர்மணி” என்ற சொல் குறிக்கிறது. மறைகளில் செய்யக்கூடாது என்று கூறப்பட்ட பாவச்செயல்களை “கர்மணி” என்ற சொல் குறிக்காது. ஏனெனில், பாவ கர்மங்களைச் செய்ய அவசியமோ, பொறுப்போ மனிதனுக்கு கிடையாது. விருப்பு-வெறுப்புகளினால் உந்தப்பட்டு அவற்றில் ஈடுபடுகிறான். அது அவனுடைய பொறுப்பிலா செய்கை. அதனால் அத்தகைய செயல்கள் புரிபவனுக்கு, துன்பங்களை அனுபவிக்கக்கூடிய தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அறம் வழி நடந்து புரியும் வினைகளே “கர்மணி”.
உனக்கு கர்மங்களை ஆற்றுவதில்தான் பொறுப்பு
உனக்கு செயல் புரிய மட்டுமே தகுதி உள்ளது என்ற இந்தக் கூற்றில்:
1. மனித உடலில்தான் ஜீவனுக்குப் புதிய கர்மங்கள் செய்ய சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அவன் தன் பொறுப்பிற்கு ஏற்றவாறு இறைவனுடைய கட்டளையை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அந்த கர்மங்களில் “நான் செய்கிறேன்” என்ற ஒட்டுதல்/பற்று இருக்கக்கூடாது. அந்த கர்மங்களை ஆற்றுவதை இறைவனை அடைவதற்கு ஸாதனமாக கருதவேண்டும். அரிதான மானிடப்பிறவி கிட்டியிருப்பது பரம்பொருளை அறிந்துணரவே என்று வினைகள் புரிந்திட வேண்டும்.
2. மனிதனுக்கு கர்மங்களை ஆற்ற மட்டுமே பொறுப்பு உண்டு. அவற்றைச் செய்யாமல் விடுவதற்கு அவனுக்கு சுதந்திரம் கிடையாது. தன்முனைப்பால், பிடிவாதமாக கர்மங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம் என்றாலும்கூட அவனால் விட்டுவிட முடியாது. ஏனெனில் அவனது ஸ்வபாவம் (இயல்பு) வலுக்கட்டாயமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கச் செய்யும். இந்த நிலையில் அவனுடைய பொறுப்பை நிறைவேற்றாமல், தனக்கு கொடுக்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தினால், விதிக்கப்பட்ட கர்மங்களை விட்டுவிடுவதால்,மறைகள் விதித்த விதிகளை மீறியதற்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும். எனவே நீ ஆற்றவேண்டிய கர்மங்களை ஆற்றத்தான் வேண்டும், தவிர்க்கக்கூடாது.
3. பிறப்பு-இறப்பு (ஜனன-மரணம்) என்ற பிறவிப்பிணியிலிருந்து (ஸம்ஸார பந்தத்திலிருந்து) விடுதலை பெறுவதற்காகவும், பிறருக்கு நன்மை செய்வதற்காகவும், ஜீவனுக்கு மனம், புத்தி, புலன்களுடன் கூடிய இந்த மனித உடலை (ஸரீரத்தை) அளித்து, அதன்மூலம் செயல்கள் செய்ய விஷேஷ சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த சலுகையை நல்விதத்தில் பயன்படுத்தினால் கர்மபந்தத்திலிருந்து விடுதலை பெற்று பரம்பொருளை அறிந்துணர இயலும். தவறாகப் பயன்படுத்தினால் தண்டனையுடன், அந்தப் பொறுப்பும் பிடுங்கப்படும். அதாவது மறபடி மனிதப்பிறவி பெறுவதற்கான தகுதியை இழக்கிறான். இதனை உணர்ந்து தன் பொறுப்பை நல்முறையில் நிறைவேற்ற வேண்டும்.
என்ற மூன்று முக்கிய உட்கருத்துக்கள் அடங்கியுள்ளன.
கர்ம பயன்களில் ஒருகாலும் உனக்கு உரிமையில்லை
எந்த கர்மத்திற்கு என்ன பயன்? அந்தப் பயன் எப்பிறவியில் கிடைக்கும்? எந்த முறையில் கிடைக்கும்? என்று மனிதன் அறிய மாட்டான்.
தன் விருப்பப்படி தான் வாழும் காலத்தில் அவற்றைப் பெறவும் முடியாது; விரும்பி முயன்றாலும் அவற்றிலிருந்து தப்பவும் முடியாது. அவன் விரும்புவது ஒன்று; அவனுக்கு கிடைப்பது ஒன்று. அவன் விரும்புவதை அடையும் சந்தர்ப்பம் அவன் கையில் இல்லை. கர்மங்களின் பயனை விதிப்பது இறையருள் (அத்வைத வேதாந்தத்தில் முன்வினைப் பயன் எனும் ப்ராரப்தம் என்பதே இறையருள் என்ற விளக்கம் உள்ளது). விருப்பு, வெறுப்பு, ஆசை இவையெல்லாம் அறியாமையே. இவைகளால் இவ்வாழ்வில் விளைவதனைத்தும் (இன்பம், துன்பம்) நிரந்தரமல்ல. அவைகள் உண்மையான ஸுகத்தை அளிக்காது.
“ஆசை அறுமின், ஆசை அறுமின்,
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்”
என்று திருமூலர் கூறுவதும் இதுவே.
கர்ம பயன்கள் கோருவதற்கு காரணம் ஆகாதே
மனம், புத்தி, புலன்கள் மூலமாக நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும்
1. தான் செய்வதாக கருதும் எண்ணம் (“மமதை”)
2. பற்று (“ஆஸக்தி”)
3. அச்செயல்களில் உள்ள நுண்ணிய விருப்பம் (“வாஸனா”)
4. எதிர்பார்ப்புகள்
ஆகிய இவைகள்தான் கர்மங்களின் பயன்களுக்கு காரணம் ஆகும்.
கர்மத்திலும், கர்மபலனிலும் பற்றுள்ளவனுக்கு இவைகள்தான் கிட்டும்.
அறிவின் துணைகொண்டு, இருமைகளை சமமான மனதால் எதிர்கொண்டு “வினை புரிபவன் நானல்ல, வினைப் பயனும் எனதல்ல, அனைத்தும் அவன் செயல்” என்ற மனப்பான்மை உடையவனை, புரியும் கர்மங்களும், கர்ம பயன்களும் ஒட்டாது. அவன் புதிதாக பாபச் செயல்களேதும் புரியவே மாட்டான்.
முன்னால் செய்யப்பட்ட பாவங்களும், இப்பொழுது செய்கின்ற பற்றற்ற கர்மங்களின் ப்ரபாவத்தினால் சாம்பலாகி விடுகின்றன. இக்காரணத்தினால் அவன் பாவச்செயல்களின் பயன்களுக்கு காரணம் ஆகமாட்டான். இவ்விதம் கர்மங்களை ஆற்றுபவனுடைய எல்லாக் கர்மங்களும் மறைந்துவிடுகின்றன. அவன் மாறுதலற்ற உயர்ந்த பதவியை அடைவான் என்கிறான் கண்ணன்.
கர்மங்களை ஆற்றாமல் இருப்பதிலும் பற்றுஇருக்கக்கூடாது
மறைகளில் நமக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைப் புரிவதற்கு மாறாக, தடை செய்யப்பட்ட கார்யங்களைச் செய்வது, செயலாற்றும் உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். அது போல, வர்ணம், ஆசிரமம், இயல்பு, சூழ்நிலை இவற்றுக்கு ஏற்றவாறு எவனுக்கு எந்த கர்மம் விதிக்கப்பட்டிருக்கிறதோ, அதைச் செய்யாமல் இருப்பதுகூட உரிமையைத் தவறாக உபயோகப்படுத்துவதாகும். விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் இருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை.
விதிக்கப்பட்ட கர்மங்களை மோஹத்தினால் தியாகம் செய்வது “தாமஸ த்யாகம்”; உடல் நோகும் என்று பயந்து தியாகம் செய்வது “ராஜஸ த்யாகம்”. விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் மனிதன் கர்ம யோகத்தில் ஸித்தி பெற முடியாது. ஆகவே, எக்காரணம் கொண்டும் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றாமல் விடுவதற்கு நீ விரும்பக்கூடாது என்பது கண்ணன் கூறும் அறிவுரை.
முடிவில் ஒரு கேள்வி
ஆறிலிருந்து அறுபதுவரை இந்த ஸ்லோகத்தை அறிந்திராமல் வாழ்ந்திடினும், இதன் சாரத்தின்படி அமைந்ததே என் வாழ்வு என்பது இப்போது என் கருத்து. அதனால்தான் என்னவோ, இறையருளால், அன்றும் இன்றும் படுத்தவுடன் உறங்குகிறேன் கவலைகளேதுமின்றி.
1. அன்றாட வாழ்வில் இந்த ஸ்லோகம் உதவுமா?
2. முகவுரையாக கூறப்பட்ட சிறுவனின் சுய சரிதைக்கும் இந்த ஸ்லோகத்திற்கும் சம்பந்தம் உண்டா? ………..
பதிலும், முடிவும் உங்களுடையது.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!