அறியாமைக் காட்டதனில் தனியாகத் திரிந்தலைந்த என்னை,
நெறியுடன் வாழ வல்லமைதந்திட்ட என் தாய் தந்தையரின்
பெருந்தவத்தால் புவிதனில் பொருள் புகழ் பெருமை பெற்றிடினும்,
சிறியோன் என் சிந்தனையில் சிறிதேனுமில்லை மறைஞானம்!!
திரையதனில் தோன்றும் வண்ணமாயையே வாழ்வென அறிந்து,
நரைமுடியும் விழுதருணம் விழைகிறேன் நான்மறை கூறும்
சச்சிதானந்த மெய்ப்பொருளை அறியும் வேதாந்த வழிதனை!
நடவினையின் ஆட்சிதனை தடை செய்ய இயலுமோ தரணியிலே!!
தூயஇருப்பெனும் அறிவான அனந்தமே அறுதி உண்மையென
மருவேதுமின்றி எதிர்மறை மொழியில் உரைத்தன நான்மறைகள்!
இருப்பெனும் அறிவானந்தமே அறுதி உண்மையெனின், இந்த
இறைவன் எங்கிருந்து வந்தான் இடைச்சாதி நானென்று ?
பொறிபுலன்களை புறம் நோக்கிப் படைத்து, கண்ணிமைக்கும்
நொடிப் பொழுதில் காதம்பல கடந்திடும் மனம் கொடுத்து,
பொருள் நிறை அண்டம்தனை சார்ந்திராதே பற்றுடனே என
சாரதியாய் அவன் வந்து சாத்திரம் சொல்வது சரிதானோ ?
சிறியோன் என் சிந்தையுதி இச்சிதறல்களைச் சீரழித்து, என்
மனதினிலந்த உண்மைதனை உணர்த்திட, அண்ட பிண்டத்தில்
மாயக்காட்சிகள் நடத்திடும் மாயோனான அந்த இறையே,
ஆத்மா எனும் நான் என்ற மறை மொழியை உள்ளாய்ந்தால்,
சிறுவித்து ஒன்றில் பெருந்தருவை மறைத்துப் பின் சிறப்பித்து,
சிலந்தி வலை வழியே அண்டப் பரிமாண தத்துவத்தை விவரித்து
அலங்கலில் தோன்றும் அரவு கொண்டு ஐம்பெரும் பூதம் விளக்கி
அலங்காரப் பொன் நகைகளில் அடிப்படைக் காரணம் சொல்லி,
கார் இருள் நிறை கருவறை கிழித்து தாய்க்கு வலிதந்து
பாரினில் எனை இறக்கிப் பின் காலன் வரும் நேரமதில்
பாசஉறவுகளுக்கு வலிதந்து காலிலா கட்டிலில் செலுத்தி
நாடகமிப்படி நடத்திடும் மாயோனே அந்த நான் அன்றோ!!
அலங்கலான அந்த நான் யாரென்றறியா அரவே இந்த நான்!
நிழலை நிஜமென இறுகப் பற்றிடும் மருவுநாயகன் இந்த நான்!
பற்றுதல் பலவிதம் ஒவ்வொன்றும் தனிப்பட்ட அமைச்சகம்! அப்
பற்று அமைச்சரவையின் பிரதமரே அறியாமையாம் இந்த நான்!!
நீரினைப் இறுகப்பற்றினால் குளத்திலே நீந்த இயலாது - எனினும்
பிறவிப் பெருங்கடல் நீந்திட இறுகப்பற்றுவது இவ்வுடலையன்றோ !
சிறுவித்து ஒன்றைப் பெருந்தருவாய் சிறப்பிக்கும் அந்த நான்
சிரித்திட்டேன் விந்தையுடன் இந்த நான்தனின் மடமை கண்டு!!
ஆதிஅந்தமிலா பரமனுரையாம் மறையோதும் வேதவிற்பன்னரும்
காயமே பொய்யதனால் காண்பாய் உனையெனும் ஞானியும்
கருமமே கண்ணென மெய்வருத்தி வாழ்ந்திடும் யோகியும் கூறிடும்
காலத்தால் அழியா வாழ்வியல் உண்மையன்றோ அந்த நான்!!
அந்த நாளும் வந்திடாதோ அந்த நானை இந்த நான் அறிந்திட!!