முகவுரை
பித்தா பிறை சூடி பெருமானே, மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே என்றெல்லாம் அழைக்கப்படும் சிவபெருமானுக்கு சந்திர சேகரன், சோமசுந்தரன், நீலகண்டன் என்ற பெயர்களும் உண்டு.
சிவ ரூபத்தை வர்ணிக்க இயலாது. எனினும் நம் மனதில் நிலைத்திட புராணங்கள் சில அடையாளங்களை வர்ணிக்கின்றன. சடையில் பிறைச் சந்திரன் அணிந்திருக்கும் சிவனின் கழுத்துப்பகுதி நீல நிறமாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டிற்கும் புராண ரீதியில் காரணங்கள் உண்டு. அப்புராணங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளக்கூடிய தத்துவங்கள் பல உள்ளன. முதலில் இந்த இரண்டு அடையாளங்களின் பிண்ணனியை அறியலாம்.
புராண பிண்ணனி
சிகையில் பிறை சந்திரன்
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு நட்சத்திரங்களும், சந்திரனின் மனைவிமார்களாவர். இவர்கள் அனைவருமே தட்சனின் புதல்விகள், சந்திரனை விரும்பி தவமிருந்து தட்சனின் ஆசியுடன் சந்திரனை திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களில் ரோகிணி மிகவும் அழகானவள் என்பதால் அவளுடன் காலம் கழிப்பதையே சந்திரன் விரும்பினார். மற்றவர்களுக்கு இது குறித்து கவலையுற்று அனைவரும் சேர்ந்து தட்சனிடம் சந்திரனின் இந்த போக்கினை கண்டிக்குமாறு கூறினார்கள். இறுபத்தி ஆறு குழந்தைகளையும் சந்திரன் கவலை கொள்ள செய்துவிட்டானென தட்சனுக்கு கோபம் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு அழகு குறைந்து சந்திரன் மறையுமாறு சாபமிட்டார். பதினான்கு அழகு குறைந்த நிலையில் சிவனை நோக்கி தவமிருந்தார் சந்திரன். தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனை காக்க சிவபெருமான் தன் சடாமுடியில் சூடிக்கொண்டார். இதனால் சந்திரன் தேய்வதும், வளர்வதுமாக இருக்கிறார். சந்திரனுக்கு சோமன் என்ற பெயருண்டு, எனவே சிவபெருமான் சோமசுந்தரன் என்று அழைக்கப்படுகிறார்.
சிவன் கழுத்தின் நீல நிறம்
அமரர்களும், அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது! தீவினைகளின் மொத்த உருவமான அசுரர்கள், சளைக்காமல் சண்டை போட்டதால், சமாளிக்க முடியாமல் தவித்தனர் தேவர்கள். குறையாத பலமும் குன்றாத ஆரோக்யமும் பெற வேண்டுமானால், பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலைக் கடைந்து, வெளிப்படும் அமுதத்தை அருந்த வேண்டும் என்று ஆலோசனை சொன்னார், பிரம்மா. மந்தர மலையே மத்தாகியது. அட்ட நாகங்களுள் ஒன்றான வாசுகி, கடைய உதவும் தாம்புக் கயிறாகியது. வாசுகியின் வால்புறம் தேவர்களும் தலைப்புறம் அசுரர்களும் பிடித்துக் கடைய, மத்து கடலினுள் அமிழ்ந்து விடாதிருக்க, மகா விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, மலையின் அடியையும் முடியையும் தன் முதுகினாலும், கைகளாலும் பற்றிக் கொண்டார். பாற்கடலுள் மத்து அமிழ்ந்து கடைதல் ஆரம்பமாகியது. அலைமகள், சந்திரன் உட்பட பதினான்கு ரத்தினங்கள் பாற்கடலிலருந்து வெளிவந்தன. அமுது வருவதற்குமுன் அகிலத்தையே அச்சுறுத்தும் ஆலம் (விஷம்) வெளிப்பட்டது. உலகம் இருண்டது. தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடினார்கள். உலக உயிர்கள் எல்லாம், ஊழிக் காலம் உதித்து விட்டதோ என்று பயந்து அலறின. ஆலாலம் வாட்டிய அந்த சமயத்தில் கயிலையங்கிரியை நோக்கி ஓடினார்கள். அஞ்சிட வேண்டாம் என்று அபயம் அளித்த அரன், உலகை உய்விக்க, தானே அந்தக் கொடிய நஞ்சை விழுங்கினார். அருகில் அமர்ந்திருந்த உமை நடுக்க முற்றாள். இக்கொடிய நஞ்சு தன் பதிக்கு எக்கெடுதல் புரியுமோ என்று பதைபதைத்து நஞ்சு உள்ளே புகாவண்ணம், பார்வதி தன் கரங்களால் சிவபெருமானின் கழுத்தில் அமுக்க, அவ்விஷம் அங்கேயே தங்கிவிட்டது. காளம் தங்கியதால் ஈசனின் கழுத்து நீலநிறமாக மாறியது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் ஏற்பட்டது.
சிவபெருமானின் இவ்விரு திருவிளையாடல்களின் கருப்பொருள்
புராணங்களில் நடந்த நிகழ்வுகள் கூறும் கருப்பொருளை ஆய்ந்து, அந்த ஆய்வினை, நமது வாழ்விற்கு அறிவுரைகளாக ஏற்பதே நமது முன்னேற்றத்திற்கு உதவும். சோமசுந்தர நீலகண்டனின் புராணம் கூறும் கருப்பொருளை ஆய்வோம்.
சோமசுந்தரன் கூறும் தத்துவம்
சிவபெருமானின் தலையில் உள்ள பிறை நிலவு, பல தத்துவ அறிவுரைகளை நமக்கு வழங்குகிறது.
சந்திரன் வளர்வதும் தேய்வதும் கால தத்துவத்தை வெளிப்படுத்துவது. அதனை தன்னிடம் வைத்திருப்பது, இறைவன் காலத்தைக் கடந்தவன் என்பதைக் குறிப்பது.
கால தத்துவம் என்பது பிறப்பு, இறப்புச் சுழல் என்பதால், இறைவன் இவைகளுக்கப்பாற்பட்டவன், இவைகளை நடத்துபவன் என்பது தெளிவாகிறது.
நமது மறைகள், சந்திரனை எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் நம் மனதிற்கு ஒப்பிடுகிறது. மனதை அடக்க வழி அறிந்திலேன் நான் எனும் மானிடருக்கு, மனதைக் கடந்தவனாக வழிகாட்டுவது பரம்பொருள்.
சந்திரனின் மென்மையான ஒளி, சிவனின் உக்கிரமான தன்மையுடன் முரண்படுகிறது. இது பிரபஞ்சத்தில் அழிவு மற்றும் ஆக்கபூர்வமான சக்திகளுக்கு இடையிலான இறைநிலையின் சமநிலையை எடுத்துக்காட்டுகிறது.
மூன்றாம் பிறை, புலப்படுவதற்கு அரிது. சிரத்தையுடன் மனமொருமித்துத் தேடினால் கிட்டும். பரம்பொருளும் அப்படியே. அறிவதற்கரிதாய் இருப்பவன் அவன் என்பதை உணர்த்துகிறது.
நீலகண்டன் கூறும் தத்துவம்
உலகம் என்பது ஒரு பாற்கடல். அதில் வாழ்வது, பாற்கடலை கடைவதற்கு ஒப்பு. மனம் எனும் மந்தர மலையை மத்தாக்கி முக்குணங்களே தேவர், அசுரர்களாகி இந்த வாழ்க்கையெனும் பாற்கடலைக் கடைந்தவண்ணம் இருக்கிறோம். எனவே முயற்சி இல்லாமல் எதுவும் கிட்டாது என்பது முதல் படிப்பினை. முயற்சி திருவினையாக்கும் என்று முன்னோர் கூறுவதும் இதனையே.
அமுதம் வேண்டும் என்ற உயர்நிலைநோக்கு அதாவது துன்பம் கலவாத, நிறைவான தூய இன்பம் (உண்மையான இன்பம்) கிட்டுமா என, வாழும்வரை கடைந்துகொண்டே இருக்கிறோம். வாழ்வில் நம் முயற்சிகளனைத்தும் உயர்நிலை குறிக்கோளை நோக்கியே இருக்க வேண்டும் என்ற படிப்பினை இது.
பாற்கடலைக் கடையும்போது கிட்டிய பதினான்கில் பதிமூன்று நல்வகையானவை. விஷமொன்றே பிரச்சனை. அதுபோல வாழ்வில், நாம் முயற்சி செய்யும்போது, ஓரிரு துன்பங்கள் கிட்டினும் நல்வகைகளே அதிகம் கிட்டும். நல்லவை நாடிடக் கற்றிடவேண்டும்.
நமக்கு கிட்டுவதோ வேண்டியதும், வேண்டாதும். அதனால் நாம் பெறுவது இன்பமும், துன்பமும். இரண்டுமே உண்மையான இன்பம் பெறத்தடைகளே. ஆகையினாலேதான், நம் பெரியோர்கள் இன்பத்தில் திளைக்காதே, துன்பத்தில் துவண்டிடாதே, நல்லதையும், கெட்டதையும் சமமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்து என்கிறார்கள். இது அடுத்த படிப்பினை
வாழ்க்கை (இன்ப துன்ப) அனுபவங்கள் அனைத்துமே வெண் திரையில் நடக்கும் காட்சிகள் போல என்று புரிந்துகொள்வதே அமுது. இவ்வாறு புரிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்வதே ஞானம். அந்த ஞானம் கிட்டும் அவரை முயற்சியை கைவிடக்கூடாது. இது முக்கியமான படிப்பினை நமக்கு.
உலகமே துக்கம் எனும்போது, அந்த துக்கத்தை (விஷத்தை) ஏற்றுக்கொண்டது (உண்டது), விஷயானந்தம் (புலப்பொருளின்பங்கள்) அனைத்துமே துக்கம்தான் என்றும், அந்த துக்கத்திற்கு நிவ்ருத்தி சிவம் என்பதை எடுத்துக்காட்டுவது நீலகண்ட தத்துவம். நமக்குத் தேவை ஸிவானந்தம். சிவ வழிபாடு என்பது துன்பத்தினைத் தாங்கும் சக்தியை வழிபடுவது எனப்பொருள்படும்.
தன்னை அழித்துக்கொண்டாவது, சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பது உச்ச கட்ட படிப்பினை.
மனிதவள மேம்பாடு (முடிவுரை)
சிவபெருமானின் இந்த இரண்டு செயல்கள் மிகவும் முக்கியமான அறிவுரை ஒன்றை உள்ளடக்கியவை. மனித வள மேம்பாடு (Human Resources Development ), மேலாண்மை மேம்பாடு (management development) என்றெல்லாம் இன்று பெருவகையில் கூறப்படுவதின் நடைமுறை செயலிலக்கணம், சிவபெருமானின் இவ்விரு செயல்களில் அடங்கியுள்ளது.
குணதோஷோ புதோ3 க்ருஹ்நன் இந்துக்ஷ்வேடா விவேஷ்வரஹ !
ஷி2ரஸா ஸ்லாகமே பூர்வம் ப்ரம் கண்டே4 நியச்யதி !!
சிவன் சந்திரனைத் தலையில் வைத்தது போல்,
பிறரிடத்தில் உள்ள சிறிய நற்பண்பையும் பெரிதாகச் செல்ல வேண்டும். பெரிய குறையையும் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். பிறரை நன்கு ஊக்குவிக்க வேண்டும். பிறரது ஒரு சிறு நல்ல குணத்தையும் தலையில் வைத்து கொண்டாட வேண்டும்
சிவன், விஷத்தைக் கழுத்தில் (தொண்டையில்) வைத்து நிறுத்திக்கொண்டது போல்,பிறருடைய குறைகளை நமக்குள்ளும் வைத்துக்கொள்ளக்கூடாது, வெளியிலும் சொல்லக்கூடாது; கழுத்தில் வைத்து கருக்கிட வேண்டும். நம்மிடமுள்ள குறைகளை சரிசெய்யவே இப்பிறவி போதாது.
நடைமுறை விவகாரத்தில், மற்றவரை நல்லவர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாத மனம், கெட்டவர் என்று சொன்னவுடன், உடனே ஏற்றுக்கொள்கிறதே, அது ஏன் என்று ஆராய்தல் இன்றியமையாதது.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
என்று குறள் (190) கூறுவது போல, நம் குறைகளை திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும்.
இதுவே சோமசுந்தர நீலகண்டனின் மனிதவள மேம்பாட்டிற்கான அறிவுரை
பின்குறிப்பு - இந்த கருத்துரை பூஜ்யஶ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து அடியேன் அறிய முயன்றது.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க!
Enjoyed Reading