வேதாந்தம் நம் உள்நோக்கிய பயணத்தைப் பற்றியது. உலகில் உள்ளஅனைத்தும், அதாவது புலன்கள் மூலம் உணரக்கூடிய அல்லது அறிவியல் வழிமுறைகள் மூலம் அளவிடக்கூடிய அனைத்தையும் உள்ளடக்கியது - உடல்பொருள்கள், உணர்ச்சிகள், சூழ்நிலைகள் அல்லது அனுபவங்கள் முதலியன அனைத்தும், மாற்றத்திற்கு உட்பட்டதுமட்டுமல்லாமல் இறுதியில் முடிவுக்கும் வருகிறது. வாழ்க்கையில் இந்த நிலையற்ற விஷயங்களின் மீதான பற்றுதல், முடிவில் துன்பத்திற்கு வழிவகுக்கும் என்று வேதாந்தம் அறிவுறுத்துகிறது.
நாம் புரிந்து கொண்ட அறிவு, பொறி புலனால் அறியப்பட்ட விஷயங்களின் தகவல் தொகுப்பு என்றே கூறலாம். ஆனால், ஞானம் என்பது வெறும் அறிவு அல்லது தகவல்களுக்கு அப்பாற்பட்ட ஒருஆழமான புரிதல். இது விஷயங்களின் அடிப்படை இயல்பை உணர்ந்து, அந்த இயல்புகளுக்கான அடிப்படை உண்மைகளை அங்கீகரிப்பது. வாழ்க்கை, இருப்பு, மனித நிலை பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை உள்ளடக்கியது இந்தபுரிதல். உயர்நிலை புற நோக்கு, பகுத்தறிவு, கருணை, பணிவு போன்ற நற்குணங்களுடன் தனக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் மற்றும் பரந்த உலகிற்கும் பயனளிக்கும் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் போன்ற குணங்களை உள்ளடக்கியது.
ஒருவரின் உண்மையான இயல்பு, சாராம்சம் மற்றும் அடையாளம் பற்றிய ஆழமான புரிதலே நமக்கு உள்ளும், நம்மைக் கடந்தும் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வு எனும் ஆன்மா. ஆன்மா உடல் மனவளாகத்திற்கு அப்பாற்பட்டது. இந்த தூயணர்வின் ஆழமான புரிதல், ஒருவரின் இருப்பு அனைத்துடனும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை உணர்தல் மற்றும் அறுதி உண்மையின் தன்மை பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிவகுக்கும் என்றும் வேதாந்தம் தெளிவுபட கூறுகிறது.
அஷ்டவக்ர கீதையின் முதல் அத்தியாயம், தூய உணர்வு எனும் ஆன்மாவின் இலக்கணத்தை மையமாகக் கொண்டுள்ளது.
பொறிபுலன் வழியறி பொருட்களை ஒதுக்கி, மன்னித்தல், நேர்மை, கருணை, மகிழ்வு, உண்மை போன்ற குணங்களை நாடி அடைந்து,
முதலில் நீ யாரில்லை என்பதை அறிந்து, கயிற்றில் பாம்பு கற்பிக்கப்பட்டதுபோல உன்னில் உதிப்பதே இவ்வுலகம் என்பதை அறிந்து, பஞ்ச பூதங்களாலான உடல் பற்றை விடுத்து,
நீக்கமற நிறைந்து, முழுமையாக, ஒருமையாக, வினைகளேதுமின்றி, பற்றின்றி, இச்சைகளின்றி, அமைதி காக்கும் சாட்சியான தூய உணர்வுஎனும் ஆத்மாவே நீயென்று அறிந்து அதில் நிலைத்து,
மெய்யறியாமையெனும் அடர்வனத்தை எரித்திட்டு, துன்பம் களைந்து முக்தியெனும் பேரின்பத்தில் இருந்திடு!
என்று ஜனகருக்கு, ஆத்மாவின் இலக்கணங்களை கோடிட்டுக்காட்டி, உன் மதி எப்படியோ உன் கதி அப்படியே எனும் பழமொழியை நினைவு கூறுகிறார் அஷ்டாவக்ர முனிவர் இந்த அத்தியாயத்தில்.
அத்தியாயம் 1 -ஆன்மாவின் இலக்கணம் - ஸ்லோகங்களின் தமிழாக்கம்
ஜனகரின் கேள்வி
அறிவைப் பெறுவது எங்கனம்?
முக்தியை அடைவது எவ்விதம்?
பற்றின்மை பெறுவது எவ்வன்னம்?
கற்பிக்க வேண்டும் ஆசானே!! 1.1
அஷ்டாவக்ர முனிவரின் அறிவுரை
முக்தியை நாடினின், நஞ்சென ஒதுக்கிடு
பொறிபுலன் வழியறி பொருட்கள்தனை!
மன்னித்தல், நேர்மை, கருணை, மகிழ்வு,
உண்மை தனை அமிழ்தென நாடு அப்பனே!! 1.2
பூதம் ஐந்தாம் புவி, நீர், நெருப்பு,
காற்று, வான் இல்லை நீ ! சித்தெனும்
தூய உணர்வு வடிவான ஆத்மாவே
இவைகளின் சாட்சியென, அதனை
அறிந்திடு முக்தியை அடைய நீ!! 1.3
தேகமெனும் உடலிலிருந்து உனை விடுத்திட்டு
சித்தெனும் தூய உணர்வில் நீ நிலைத்திட்டால்
அக்கணமே பெறுவாய் பற்றற்ற பேரின்ப அமைதி!! 1.4
நால்வகை சமூக வகுப்பில்லை நீ!
நால்வகை வாழ்வு நிலையில்லை நீ!
பார்வை போன்ற பொறிபுலனில்லை நீ!
பற்றிலா வடிவமிலா ஒருமையான நீ
பார்தனின் சாட்சியென பேரின்பமாய் இரு!! 1.5
தர்மம் அதர்மம் சுகம் துக்கம் இவையெல்லாம்
மனதின் நிலைகளே அன்றி உனதல்ல என்றும்!
புரிபவனும் நுகர்பவனும் நீ அல்ல, உண்மையிலே
விடுதலையே உனக்கென்றும் நீக்கமற நிறையோனே!! 1.6
அனைத்தையும் காணும் ஒருவன் நீ!
என்றும் சுதந்திரமாய் இருப்பவன் நீ!
அப்படிக் காணும் உனை வேறாக நீ
காண்பது ஒன்றே உனது பந்தம்!! 1.7
வினையன் நானெனும் கருராஜநாகக் கடியுண்டோனே!
நானில்லை வினையனெனும் நம்பிக்கை மூலிகையாம்
அமிழ்தினை அருந்தி அடைந்திடுவாய் பேரின்பம்!! 1.8
அறுதி உண்மையெனும் அருட்பெரும் ஜோதியாம்
ஒருமையெனும் தூய இருப்புணர்வினை இட்டு - மெய்
அறியாமையெனும் அடர்வனத்தை எரித்திட்டு
துன்பம் களைந்திட்டு பேரின்பத்தில் இருந்திடு!! 1.9
கயிற்றில் பாம்பு கற்பிக்கப்பட்டது போல
ஆனந்த பரமானந்த தூயஉணர்வாம் உன்னில்
உதிப்பதே இவ்வுலகமென அறிந்திட்டு - அப்
பேரின்பத் தூய உணர்வதனிலே நிலைத்திடு !! 1.10
முக்தனென தனை எண்ணுவோன் முக்தனே ஆகிறான்!
பந்தனென தனை எண்ணுவோன் பந்தத்தில் மூழ்கிறான்!
உன் மதி எப்படியோ உன் கதி அப்படியே எனும் பழமொழி
உண்மையான கூற்று அன்றோ இங்கே!! 1.11
சாட்சியென நீக்கமற நிறைந்து, முழுமையாக, ஒருமையாக,
சுதந்திர அறிவுணர்வாய், வினைகளேதுமின்றி, பற்றின்றி,
இச்சைகளின்றி, அமைதி காக்கும் ஆன்மா, மருட்சியால்
பிறவிப்பிணியுற்று உலகதனில் ஊறியதெனக் காட்சி!! 1.12
எதிரொளித் தன்னுணர்வே நான் எனும் மருவுடன்
உள்வெளி உணர்வின்அலைகளை விடுத்து, மாறா
ஒருமையாம் மெய்யுணர்வை தியானிப்பாய்!! 1.13
உடற்பற்றெனும் பாசக்கயிற்றால்
கட்டுண்ட அருமை மகனே !
மெய்யறிவெனும் வாள்கொண்டு
துண்டித்து பேரின்பம் பெறு!! 1.14
பற்றற்று வினையற்ற
மாசிலா சுயப்பிரகாசம் நீ!
தியானம் அனுசரிப்பதே
உன் அடிமைத்தனம்!! 1.15
நீக்கமற நிறை உன்னிடமே நெசவு இவ்வுலகம்!
தூய உணர்வே உண்மையில்உன் இயல்பு!
அடைய வேண்டாம் இந்த அற்பத்தனம்!! 1.16
வரையிலா மாறா முழுமையான
அமைதியுடன் பேரறிவு கொண்டு
கலக்க மேதும் இல்லாதவனே!
தூய உணர்வையே விழைந்திடு!! 1.17
வடிவமுள்ளவை பொய்மை,
வடிவமற்றவை மாறா - இத்
தத்துவ உபதேசமறிந்து
தீர்த்திடு பிறவிப்பிணிதனை!! 1.18
உருவமதன் உள்ளும் புறமும்
இருந்திடும் கண்ணாடி போல
நமைக் கடந்தும் நமக்குள்ளும்
இருப்பவனே பரம்பொருள்!! 1.19
குடத்தின் உள்ளும் புறமும் ஒரே
ஒரு வெளி பரவி நிற்பது போல
உடலின் உள்ளும் புறமும் பரவி
உள்ளான் அனைத்திலும் பரமன்!!
அடுத்த அத்தியாயம் விரைவில். அதுவரை
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!!