ஸ்லோகம்
ப்ரகாஶோ மே நிஜம்ʼ ரூபம்ʼ நாதிரிக்தோ(அ)ஸ்ம்யஹம்ʼ தத꞉ ।
யதா³ ப்ரகாஶதே விஶ்வம்ʼ ததா³ஹம்ʼ பா⁴ஸ ஏவ ஹி ॥ 2-8
தமிழாக்கம்
ஒளியே என் இயல்பாகும்
ஒளியின்றி நான் வேறில்லை
உலகம் ஒளிர்விடும் தருணம்
ஒளிர்வது நானின்றி வேறில்லை
விளக்கம்
ஒளிமிகுந்த அறைக்குள் நுழைந்தவுடன் ஒரு பொருளைக் கண்ட நான், “இந்த அறையில் அந்த மேசை “இருக்கிறது” என்று கூறுகிறேன். மேசை என் கண்ணுக்கு புலப்பட்டது. அதனால் “இருக்கிறது” என்றேன்.
பின்னர் மற்றொரு இருட்டு அறைக்குள் சென்றவுடன், அந்த அறையில் இருக்கும் ஒருவர் என்னை “முந்தைய அறைக்கு சென்றிருந்தாயா?” எனக்கேட்கிறார். உடனே நான் “ஆம். சென்றிருந்தேன். அங்கே ஒரு மேசை“இருக்கிறது” என்று பதில் கூறுகிறேன்.
இரண்டு அறைகளில் நான் கூறிய இரண்டு உரைகளிலும் “மேசை இருக்கிறது” என்ற சொற்றொடர் உள்ளது. ஆக, நான் கூறிய இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லை. மேசை இருக்கிறதுஅல்லவா.
முதலில் முதல் அறையில் நான் கண்ட மேசைக் காட்சியை ஆய்வோம்.
மேசை கண்ணால் உணரப்படுகிறது (காணப்படுகிறது). ஆக மேசை உணரப்படு பொருள், கண் உணர்வாளர் (உணர்பவர்). இங்கே மேசை என்பது, பெயர், வடிவம் (நாம ரூபம்) கொண்டு புலன்களால் உணரப்படும் பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். அதுபோல கண் என்பது, மூக்கு, காது, தோல், நாக்கு போன்ற அனைத்து உணர்வின் உறுப்புகளையும் குறிக்கிறது.
இங்கே கண்தான் உணர்வாளர் என்று கூறுவது வெறும் ஒப்பீட்டு (relative) அர்த்தத்தில்தான். ஏனெனில் உணர்வு உறுப்புகளுடன் மனம் இணைந்தாலொழிய, அவைகளால் தங்கள் பொருட்களைத் தாமாகவே உணர முடியாது. அவைகளின் வடிவமைப்பே அப்படித்தான். ஆழ்ந்த உறக்கத்தில், புலன் உறுப்புகள் எதையும் உணராது, ஏனெனில் அந்தநேரத்தில் மனம் செயல்படாது.
ஆக, இப்போது மேசையின் உணர்வாளர் யார்? கண் அல்ல; மனம். இன்னும் சற்று ஆழ்ந்து ஆய்வோம். சில சமயங்களில் “மனம் எங்கோ இருந்தது; சரியாக கவனிக்கவில்லை” என்றும், “இன்று முடிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தேன், ஆனால் புத்தியே ஓடவில்லை” என்றும் கூறுகிறோமே, அதன் பொருள் என்ன? புத்தி, சித்தம், அஹம்காரம் போன்ற மாற்றங்களைக் கொண்ட மனம் உணர்வாளர் அல்ல. ஆக பொறிபுலன்களும், மனதும், மனதின் மாற்றங்களும் வெறும் பொருட்களே தவிரஅவைகள் உணர்வாளராக ஆகமுடியாது. மனதின் உணர்வாளார் யார்?
மேற்கூறிய அனைத்துப் பொருட்களுக்கும் (மனம் உட்பட) அதனினும் நுண்ணிய நிலையில் உள்ள ஒன்றுதான். அதனை விசாரிக்க வேண்டும். இந்த விசாரனையின் முடிவு, முடியிலியான ஆன்மாவைவிட்டு வேறேது உணர்வாளர்கள் இல்லை என்பது.
வெவ்வேறு பொருள்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்பதில் சந்தேகமில்லை; அவைகளை அவைகளின் மாற்றங்களுடன்தான் புலன்கள் உணருகின்றன. எனினும் அப்பொருட்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே தனித்தன்மை நிலையற்றது/மாறக்கூடியது என்பதே. “பெயர் வடிவமுடைய(நாம ரூப) அனைத்து பொருட்களும் நிலையற்றவைகளே, அவைகளெல்லாம் நிகழ்வுகள்”. அவைகள் உணர்வாளர் அல்ல. ஆன்மாஒன்றே அனைத்தையும் உணரும்.
இப்பொழுது இரண்டாவது அறையில் நான் கூறிய “மேசை இருக்கிறது” என்ற உரையினை ஆய்வோம்.
முதல் அறையில் மேசை என் கண்ணுக்கு புலப்பட்டது. அதனால் “இருக்கிறது” என்றேன். அதாவது என் புலன்களால் உணர்ந்து, மேசையின் விளக்கத்தை அறிவாகப் பெற்றேன். இரண்டாவது அறையில் என் புலன்களுக்கு எட்டாத மேசையை, முதல் அறையில் அடைந்த அறிவினால் உணர்ந்து கூறினேன். ஆக, ஒரு பொருளாக இருந்தால், அந்த பொருளைப்பற்றிய உணர்வு, அறிவாகிறது. இல்லாத பொருளைப் பற்றிய அறிவு, அந்தப்பொருளை உணர உதவுகிறது. அதாவது இந்த உதாரணத்தில், “இருப்பு” என்பது முதலில் உணர்வால் அறிவு; பின் அது அறிவால் உணர்வு.
முதல் அறையில் மேசையை கண்களால் காண நமக்கு ஒளி உதவியது. ஒளி இருந்ததால் விழியில் மேசையின் காட்சி. இரண்டாவது அறையோ இருட்டறை. எங்கிருந்து “உறுதி கொண்ட நெஞ்சினால்,” மேசை இருக்கிறது என்று கூறினேன் நான்? ஒளி படைத்த கண்ணினாலா? அல்லவே அது இருட்டறையன்றோ! எங்கிருந்து ஒளி வந்தது? யோசிக்கவேண்டிய விஷயம். ஆன்மாவே அவனுடைய ஒளியாகச் செயல்படுகிறது. இந்த ஸ்வயம் பிரகாஸ தத்துவத்தை முந்தைய பகுதிகளில் கண்டோம்.
இப்படி அனத்திலும், அனைத்திற்கும் உணர்வாக, அறிவாக உள்ள ஆன்மாவை ஒளி/ஜோதி என்று கூறுவர் நமது முன்னோர்கள். உணர்வால் அறிந்து, அறிவால் உணர்ந்து விளக்கம் தரும் ஆன்மா என்ற உணர்வாளரை, விளக்கு தரும் ஒளிக்கு ஒப்புவதில் தவறேனும் இல்லை. எனவே உலகத்தின் தோற்றம் என்னுள் ஒளிரும் அறியும் அனுபவங்களே. அந்த அனைத்து அனுபவங்களிலும், அறிவிலும் நான் எனும் உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.
“ஒளி என் இயல்பு; நான் அந்த ஒளியைத் தவிர வேறொன்றுமில்லை. பிரபஞ்சம் வெளிப்படும் போது, நான் மட்டுமே பிரகாசிக்கிறேன்”
என்கிறார் ஜனகர். ஐனகனின் இக்கூற்று, பகவத் கீதையில் (13.33) கண்ணன்கூறிய அறிவுரையுத் தழுவியது.
“நான்” எனும் ஆத்மாவிற்கு வெளியே உள்ள அனைத்தும் (பொருள்கள் + உயிர்கள்) + நம் புலன்கள் (கண், காது, மூக்கு போன்றன) + புலன்கள் நமக்குத்தரும் உணர்வுகள் (சுவை, ஓசை, ஊறு , நாற்றம் என்பன) + இந்த புலன்கள்தரும் செய்திகளை பகுத்து அறியும் அறிவு இவை அனைத்தும் க்ஷேத்ரம் (இடம்அல்லது field) எனப்படும். இவை அனைத்தும் நிலையிலா ஜடப்பொருட்களே; ஏனெனில் அவை மின்கணினி போன்றவை; அதுவாக எதையும் செய்ய முடியாது; செயல்முறைகளை யாரேனும் வகுத்துக்கொடுக்க வேண்டும்.
அந்த நபர் யார்? அவர்தான் க்ஷேத்ரக்ஞன் என்ற என்னுள் இருக்கும் அந்த ஞான ஒளி. ஞானஒளி ஒன்றே இந்த உலகை எனக்குத் தெளிவு பெறச் செய்கிறது. அந்த ஒளிச்சுடரின் முன்னால் எல்லாம் தெளிவு பெறுகிறது, எல்லாம் நடக்கிறது. ஒளிவந்தவுடன் இருள் மறையும். அஞ்ஞானம் மறையும் போது உண்மை தானேதெரியும். "அந்த சூரியனைப் போல க்ஷேத்ரம், க்ஷேத்ரத்தை அறிபவன் அல்லதுஅறிந்து , கொண்டவன் க்ஷேத்ரத்தை ஒளியுறச் செய்கிறான்"
என்று கூறுகிறது பகவத் கீதை.
கண்ணனின் இந்த அறிவுரையின் பின்னால், சில ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியுள்ளன:
உலகுக்கு ஒளி தருவது சூரியனின் பணியோ அல்லது நிகழ்வோ அல்ல. அது அதன் இயல்பு. இயல்பாக ஒளிப் பிழம்பாய் இருப்பதால் அதன் முன்னால் எல்லாம் ஒளி பெறுகின்றன. வேலை/நிகழ்ச்சி என்றால் அதற்கு ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கும். சூரியனுக்கு அப்படி அல்ல. அது தன் இருப்பின் மூலமே அனைத்தையும் ஒளி பெறச் செய்கிறது. ஆத்மாவும் அப்படியே.
சூரியனின் முன்னால் அனைத்தும் ஒளி பெறுகின்றன. நல்லதும், நல்லது அல்லாததும் ஒளியூட்டப் படுகின்றன. சூரியனுக்கு பேதம் இல்லை. பாரபட்சங்கள் ஏதும் சூரியனுக்கு இல்லை. எல்லோருக்கும் பொது. ஆத்மாவிற்கும் பேதம் இல்லை.
நல்ல செயலும், தீய செயலும் சூரிய ஒளியிலே நடக்கலாம். ஆனால், அந்த சூரியன் அதற்கு பொறுப்பு இல்லை. யாரும் அதை பொறுப்பாக்குவதும் இல்லை. அது அதன் நிலையில் இருக்கிறது. மக்கள் புரியும் நல்வினை, தீவினைகள் சூரியனில் ஒட்டாது; சூரியன் களங்கப்படுத்தப்படாதது. ஆத்மா வெறும் சாட்சி மட்டுமே.
நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதன் பலன்கள் சூரியனைப்போய் அடைவது இல்லை. அது கேட்பதும் இல்லை, நாம் கொடுப்பதும்இல்லை. அது தன் இயற்கையில் இருக்கிறது. ஆத்மாவும் அப்படியே
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவும் அறியில் உருவாம்
ஒளியின் உருவும் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந்தானே
என்கிறது திருமந்திரம்.
சீவனின் உயிரானது உடம்பாகிய உருவத்துக்குள் ஒளிந்துள்ளது. உடம்பிலுள்ள கண்களின் வழியாக சீவன் உலகத்துப் பொருட்களைக் காண்கிறது. உடம்பினுள் உள் ஒளியாக விளங்கும் ஆன்மா சிவ ஒளி பெற்று சிவனுடன் கலக்கும் என்கிறார் திருமூலர்.
“ஒரு திரைப்பட அரங்கில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன், இயந்திரஅறையிலிருந்து பரிதி விளக்கின் வெண்மை ஒளி வெள்ளித் திரையின் மீது விழுகிறது. பின்னர் படம், பரிதி விளக்கு ஒளியின் முன் ஓடத் தொடங்கியவுடன், திரையில் காட்சிகளாக ஒளிபரப்பப்படுகிறது; பெயர்கள், வடிவங்கள், அவைகளின் அசைவுகள், உரைகள், உணர்ச்சிகளென்று படம் பார்ப்போர்க்கு படத்தின் கதை வெளிப்படுத்துப்படுகிறது.
அதுபோல, அண்டங்களனைத்தற்கும் மூலக்கூறாகி இருக்கும் ஆன்மாவை, உடல்மன புத்தி வளாகத்தின் வழியாக உலகமெனும் காட்சியாக ஒளிபரப்படுவதை, நம்முள் உறை ஆன்மா திரைப்படமாக காண்கிறது” என்று விளக்குகிறார் சுவாமி சின்மயானந்தா.
எளிமையான ஸ்லோகம், ஆழ்ந்த தத்துவங்கள்!
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !