முகவுரை
ஆத்ம ஞானம், வாலறிவு, மெய்பொருள் அறிவு என்றெல்லாம் அழைக்கப்படுவது “நான் யார்” என்று அறிந்துணர்வதனைக் குறிக்கும். அதாவது, அறிவையும், அறியாமையையும் அறிகின்ற அறிவாக இருக்கும் நிலையை அறிந்து உணர்வது என்கிறார் ஸ்வாமி ஓம்காரானந்தா தனது விளக்கத்தில். அந்த நிலை, மாணிக்கவாசகர் கூறும் “நோக்கறிய நோக்கு, நுணுக்கறிய நுண் உணர்வு”.
அஷ்டாவக்ர முனிவரின் அருளுரையால் இந்த நிலையை அறிந்துணரும் ராஜரிஷி ஜனகர், அந்த மூன்று முக்கிய சொற்களான அறிவு, அறிதல், அறியாமை என்ற மூன்றுக்கும் உள்ள உறவை விளக்க வேதாந்தம் கூறும் கயிறில் பாம்பு என்ற உதாரணத்தை கோடிட்டு காட்டுகிறார் இந்த ஸ்லோகத்தில்.
ஸ்லோகம்
ஆத்மஜ்ஞானாஜ்ஜக³த்³ பா⁴தி ஆத்மஜ்ஞானான்ன பா⁴ஸதே ।
ரஜ்ஜ்வஜ்ஞாநாத³ஹிர்பா⁴தி தஜ்ஜ்ஞாநாத்³ பா⁴ஸதே ந ஹி ॥ 2-7 ॥
தமிழாக்கம்
கயிற்றின் காட்சி இல்லையதனால் அரவின் தோற்றம்
கயிற்றின் காட்சி கிட்டினில் அரவின் மறைவு போல,
ஆத்ம அறியாமையால் உலகத்தின் அறிதல்,
ஆத்ம அறிவால் அறிந்தால் உலகத்தின் அழிதல்!! 2.8
விளக்கம்
அறியாமையால் உலகினை அறிதல்
அறியாமை என்பது அத்வைத வேதாந்த அமைப்பில் உள்ள ஒரு முக்கிய கருத்து. அறியாமையின் இலக்கணம் ஆறு பண்புகளை அடங்கியது.
தொடக்கமற்றது (அனாதி).
சரியான அறிவால் அகற்றப்படுகிறது (ஞான நிவர்த்யா);
ஒரு இருப்பின் (பாவ ரூபா) இயல்பான நேர்மறை பொருள்;
விவரிக்க முடியாதது (அநிர்வசநீயா);
மறைத்தல் மற்றும் வெளிப்பாடு (ஆவரணா மற்றும் விக்ஷேபா) ஆகிய இரண்டு சக்திகளைக் கொண்டுள்ளது.அவை முறையே உண்மையை குறிக்கின்றன மற்றும் பொய்யைப் பரிந்துரைக்கின்றன;
இதன் இருப்பிடம் தூய உணர்வான பிரம்மத்தில் அல்லது தன்னுணர்வான ஜீவாவில் உள்ளது.
கயிற்றில் பாம்பு என்ற உருவகத்தின் விளக்கத்தை முதல் அத்தியாயத்தில் பத்தாவது ஸ்லோகத்தின் விளக்கத்தில் கண்டோம்.
அரையிருளில் ஏதோ 'விஷயம்' ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அது என்ன என்பதைப் பற்றிய அறிவில் தெளிவில்லை. இதனை ஆங்கிலத்தில் non-apprehension என்பர். அந்தப் பொருள் உண்மையில் கயிறுதான் என்பதை அறிய முடியவில்லை. கயிறு மறைக்கப்படது. உடனே மனம் சொந்தமாக பாம்பு எனும் மாற்றுப்பொருளை அதுவாய் பதிலிடுகிறது (substitutes by itself). இதனை misapprehension என்பர்.
ஆக அறியாமை என்பது அரையிருளுக்கு ஒப்பு. அது மறைப்பது (veiling power), வெளிப்படுத்துவது (projecting power) என்ற இரு சக்திகள்அடங்கியது. இதனை மாயா என்றும், அவித்யா என்றும் கூறுகிறு நமதுசாத்திரங்கள்.
இந்த அறியாமைதான், “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி” இருக்கும் ஆன்மா என்ற தூய தன்னுணர்வினை,
“அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிபுறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில்குடிலை மலங்கப் புலன் ஐந்தால் வஞ்சனையைச் செய்து”,
தன்னுணர்வாகவெளிப்படுத்துகிறது. அதன் விளைவே “என், எது, அவன்,அது, உன் உனது என்ற வேற்றுமை.
நம்மை நாம் அறியாததால் நாம் உலகத்தை அறிகிறோம். ஆக அறியாமையால் உலகினை அறிதல் என்பது இதுவே.
அறிவால் அறிந்தால் உலகத்தின் அழிதல்
அறிவு என்பதின் விளக்கத்தை, முதல் அத்தியாயத்தில் ஒன்பதாவது ஸ்லோகத்தின் விளக்கத்தில் கண்டோம்.
“எது தானே (ஸ்வயம்) தன்னை விளக்கிக் கொள்கிறதோ, அதனால் தான்தோன்றியாக (தன்னைத்தானே வெளிப்படுத்துவது) இருக்கிறதோ, தன் ஸ்ரூவபமாகமே இருப்பதனால் மிக நெருக்கமாக இருக்கிறதோ அதுவே பிரம்மன். இந்த பிரம்மனில் அனைத்தும் (ஸர்வம்) கற்பிக்கப்பட்டுள்ளது(கல்பிதம்) என்ற அறிவானது “போதா” என கூறப்படுகிறது”
என்ற மறையின் உரைக்கேற்ப, புலனறிவு, பகுத்தறிவு, மெய்யறிவு இவைகளைக் கடந்த மெய்ப்பொருளறிவு எனும் வாலறிவினை அஷ்டாவக்ர முனிவரின் அருளுரைகளால் அறிந்துணரந்த ஜனகருக்கு அறியாமையெனும் வேற்றுமை மறைகிறது.
நான் யார் என்று அறிந்துணர்ந்தால், அனைத்தை ஆன்மாவிலும் ஆன்மாவை அனைத்திலும் காணலாம். அறிவால் அறிந்தால் அறியாமை அழிதல் என்பது இதுவே.
முடிவுரை
காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பாரத்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா கண் குளிரப் பாரேனோ
என்று ஒரு சித்தர் அருமையான கவியில் விளக்குகிறார். காட்டான் என்றால் தன் இருப்பை உணரக் காட்டிக் கொள்ளாதவன், உருவமற்றவன் என்று ஒரு பொருள். இத்தகைய காட்டான் எனும் உருவமற்ற நிலை, பேரியக்க மண்டலம் முழுவதும் நிறைந்து இறைவனாகவும், ஒவ்வொறு சீவனிலும் அறிவாகவும் (உணர்வாகவும்) உள்ளது. எனவே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும்.
காட்டான் எனும் அறிவு, காட்டான் எனும் பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும் போது, நாம் நாடி பற்று கொண்டு அனுபவித்த வினைப்பதிவுகள் எல்லாம் நாட்டாரென (அறியாமை வடிவில்) நமை மறித்து நகையும். அந்நாட்டாரை நாம், வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிவிட்டு காட்டானை (அறிவு) ஏறி, காட்டானை (இறைதனை) அறிந்துணர்வதே (கண்குளிரப் பார்ப்பதே) பேரின்ப நிலை.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !