ஸ்லோகம்
யதை²வேக்ஷுரஸே க்ல்ருʼப்தா தேன வ்யாப்தைவ ஶர்கரா ।
ததா² விஶ்வம்ʼ மயி க்ல்ருʼப்தம்ʼ மயா வ்யாப்தம்ʼ நிரந்தரம் ॥ 2-6 ॥
தமிழாக்கம்
கரும்புச்சாறு பண்டமனைத்திலும் கரும்பின் இனிமை எங்கும்
என்னால் விளையும் அனுத்துலகிலும் கடவுளும் நானே எங்கும் !!
விளக்கம்
கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையைத் தருகிறது. கரும்பென்றால் இனிப்பு, இன்பம் எனப் பொருள்படும். அதன் பொருளுக்கேற்றாற் போலவே உடலில் இன்பத்தை விளைவிக்கும் பண்புகளை உடைய கரும்பைத் தின்னக் கூலி வேண்டுமா?
“தேனீக்கள் இல்லாமலே தேனைச் சேகரித்து வைக்கும் புல்” எனும் கரும்பின் சாற்ற்றினைச் சார்ந்து ஒரு வேதாந்த தத்துவம் அடங்கியுள்ளது இந்த ஸ்லோகத்தில்.
“கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் (வெளிப்படும்) அனைத்துபொருட்களிலும் அந்த சாறு எனும் இனிமை பரவியுள்ளது. அதே போல, ஆத்மா என்று அழைக்கப்படும் தூய இருப்புணர்வான என்னால் வெளிப்பட்ட அனைத்துபொருட்களின் உள்ளும், அவைகளைக் கடந்தும் நான் பரவி இருக்கிறேன்”.
கரும்புச் சாற்றின் இயல்பு இனிமை என்பது. அது சுயமாகவே, இயல்பாகவே இருப்பது. கரும்புச்சாறு எங்கும் எந்நேரமும் கசக்காது. அது நுண்நிலையாக இருந்து, தயாரிக்கப்படும் சர்க்கரை, அச்சு, வெல்லம், கற்கண்டு என்று அந்த சாற்றிலிருந்து வெளிப்படும் (உருவாக்கப்படும்) பல பொருட்களின் இயல்பாகவே அனைத்திலும் பரவி இருப்பது.
அது போல, அனைத்து “நுண்நிலைகளுக்கும் நுண்நிலையான” (சாந்தோக்யஉபநிஷத் 6-9-4), என் இயல்பாக இருக்கும் ஆன்மா எனும் நான், தூயஉணர்வாய் என்னால் வெளிப்படும் அனைத்துள்ளும் அவைகளை கடந்தும் வியாபித்திருக்கிறேன். தூய உணர்வாக அனைத்துள்ளும், தூய இருப்பாக வெளியிலும் வியாபித்திருக்கிறேன்.
நான்காவது ஸ்லோகத்தில் கடல்-அலை உதாரணம் காட்டி எங்கும் வியாபித்திருக்கும் ஆத்ம லக்ஷணத்தையும், ஐந்தாவது ஸ்லோகத்தில் ஆடை- நூல் உதாரணத்தினால் அனைத்துள்ளும் ஊடுருவி இருக்கும் ஆத்ம லக்ஷணத்தையும், இந்த ஆறாவது ஸ்லோகத்தில் கரும்புச் சாற்றினில்இருக்கும் இனிப்பை எடுத்துக்காட்டி, நாம-ருபங்கள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்துள்ளும் இடைவெளி இன்றி பரவி நிறைந்திருக்கும் ஆத்ம லக்ஷணத்தையும் கோடிட்டுக்காட்டி, பன்மைத்தன்மை உடைய உலகம் என்பது, நீக்கமற நிறை, எல்லையற்ற தூய இருப்புணர்வைத் தவிர வேறில்லை என்பதை ஆசானிடம் எடுத்துரைக்கிறார் ஜனகர்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !