ஸ்லோகம்
தந்துமாத்ரோ ப⁴வேத்³ ஏவ படோ யத்³வத்³ விசாரித꞉ ।
ஆத்மதன்மாத்ரமேவேத³ம்ʼ தத்³வத்³ விஶ்வம்ʼ விசாரிதம் ॥ 2-5 ॥
தமிழாக்கம்
ஆடையை ஆய்ந்தால், அது நூலொன்றே வேறில்லை !
அண்டத்தை ஆய்ந்தால், அது ஆன்மாவே வேறில்லை !! 2.5
விளக்கம்
நம் அனைவரின் வாழ்க்கையிலும், அன்றாடம் இடைவிடாது முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை,
உயிர்,
உலகம்(படைப்பு),
இறைவன்.
இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில் “நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத்தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து,” என்றெல்லாம் பிதற்றுகிறோமே! இது தானே நடப்பு.
இத்தகைய உழல்களிலருந்து விடுபட்ட ஜனகர், இந்த ஸ்லோகத்தில், நெய்தல் தொழிலை உருவகம் காட்டி, தான் அறிந்துணர்ந்ததை உரைக்கிறார்.
நெய்தல் என்பது பண்டைய காலத்திலிருந்து மனிதன் அறிந்து புரிகின்ற ஒரு தொழில். பருத்தியினைச் சுத்தம் செய்து, பஞ்செடுத்து, நூல் நூற்று, பாவோட்டி, சாயமேற்றி, நூலும் இழையும் கொண்டு வித விதமாக பின்னி (நெய்து) ஆடையென படைப்பதுதான் இந்த தொழில். ஆடை எனும் பொருளைப் பகுத்தாயந்தால், நமக்கு கிடைப்பது நூல். எனினும் ஆடையின் கண்ணோக்கத்தில் நூலின் இருப்பினை பொதுவாக அடையாளம் கண்டு கொள்வதில்லை. ஒரு ஜவுளிக்கடையில் சென்று 2 கிலோ நூல் கேட்டால், அந்த கடைக்காரன் “இது ஜவுளிக்கடை, இங்கு நூல் இல்லை” என்பானே தவிர எட்டுமுழ வேட்டிகளை 2 கிலோவிற்கு எடைபோட்டு, “இதற்குள்ளே நூல் உண்டு எடுத்துக்கொள்” என்று கூறுவதில்லை; நாமும் அதனை எதிர்பார்க்கவுமில்லை, அல்லவா. எனினும் நூலின் பார்வையில், அனைத்து ஆடைகளும் நூல்தான். ஆடை என்பது வெறும் நாம, ரூப பேதம் எனும் வேற்றுமை, அவ்வளவுதான்.
அதுபோல, அனுபவிக்கின்றவனை அறியாமல், அனுபவப் பொருட்களை அனுபவிக்க முயலும் அறிவிலிகளாக அலையாமல், தனித்தனியாக இருப்பதெல்லாம் ஒரு தோற்றம், இந்தத் தோற்றம் யாருக்குத் தோன்றுகிறது, இந்த காட்சிகளின் சாட்சி யார் என்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால்,
“நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன்நான்,
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குதற் சோதி நான்” - பாரதி
என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி கூறிய “நான்” புலப்படும். இந்தஅண்டத்திலிருக்கும் அனைத்தையும் ஆய்ந்தால் அனைத்துமே ஆன்மாதான் என்பதும் புலப்படும்.
அனைத்தை ஆன்மாவிலும்
ஆன்மாவை அனைத்திலும்
எவனொருவன் காண்பனோ
அவனே மும்மல பயமிலான் - ஈஸாவாஸ்ய உபநிஷத்
என்ற ஈஸாவாஸ்ய உபநிஷத்தின் கருத்தினை பிரதிபலிக்கும் ஜனகரின் இந்த ஸ்லோகத்தின் சாரம் இதுதான்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !