முகவுரை - காரண கார்ய விளக்கம்
ஒரு செயல், நிகழ்வு அல்லது நிபந்தனையைத் தோற்றுவிக்கும் ஒரு நபர், விஷயம் அல்லது பொருளை “காரண”என்றும், அதன் விளைவுதனை “கார்ய” என்றும் அழைப்பர் சமஸ்க்ருத மொழியில்.
சில சந்தர்ப்பங்களில், ஒரு “கார்யா” விற்கு பல “காரணா” தோன்றும். அவற்றில் சில சரியாகவும் இருக்கலாம், ஆனால் செயலின் ஆரம்பம்வரை எது இருந்ததோ, அது தான் உண்மையான காரணமாக கருதப்படுகிறது. காரணம் என்பதை எதிர்வரும் படைப்பின் முன்னோடி என்று எடுத்துக் கொள்ளலாம்.
காரணம் என்பதை மூவகையாக பிரிக்கலாம்:
பொருட் காரணம் - “கார்ய” அல்லது விளைவு என்பது காரணத்துடன் நெருக்கமாகவோ அல்லது இயல்பாகவோ தொடர்புடையது; நித்தியமானது; விளைவிலிருந்து பிரிக்க முடியாது. இதனை உபாதனகாரணம் என்பர்.
அறிவு காரணம் - விளைவினை வெளிக்கொணரும் நபர் அல்லது சக்தி. இதனை நிமித்த காரணம் என்பர்.
கருவி காரணம் - பொருட் காரணத்தின் வழியாக/பொருட் காரணத்திற்கு உதவியாக இருந்து விளைவை வெளிக்கொணர்வது. இதனை சாதாரண காரணம் எனக் கூறலாம்.
நமது தர்மத்தில், இந்த காரிய-காரண உறவிற்கு பல வேறு தத்துவ விளக்கங்கள் உள்ளன. காரிய காரண பேதங்கள் என்ற இருமை இல்லை என அத்வைத வேதாந்தம் தெளிவாகக் கூறுகிறது. காரணத்தில் விளைவு (கார்யா) இருப்பதை இது குறிப்பிடுகிறது. எனவே படைக்கப்படும் (உற்பத்தியாகும்) எதுவும் காரண செயல்பாட்டின் விளைவாகும். மேலும் இந்த காரணங்கள்அவற்றின் விளைவுகளால் (கார்ய) மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. அதாவது, “கார்ய”த்தை வைத்து “காரண”த்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
காரணத்தினால்தான் விளைவுகள் என்பதினால் அதாவது காரணமில்லையென்றால் விளைவுகள் இல்லை என்பதனால் மட்டுமே, விளைவுகள் இருப்பற்றவை எனக் கூறமுடியாது. விளைவுகளும் அவைகளின் வெளிப்பாட்டுக்கு முன் காரணங்களில் இருப்பாக இருந்தன என்கிறது அத்வைத வேதாந்தம். மரம் விதையெனும் காரணத்தின் கார்யம் (விளைவு). அந்த மரம் முளைப்பதற்கு முன் எங்கிருந்தது? விதைக்குள்ளேதான், அதாவது விதையாகத்தான் இருந்தது, மரமாக வெளிப்பட்டது அவ்வளவுதான். பெயர், வடிவம், இடம், காலம் இவைகளால் வேறுவிதமாக புலன்களுக்குகாட்சியளிக்கிறது. விதைக்குள் இருந்தால் அது விதை எனப்படுகிறது; முளைத்து வெளிவந்தால் கன்று, மரம் என்றெல்லாம் கூறப்படுகிறது.
ஆக, பொருட் காரணமெனும் உபாதான காரணமானது வெளிப்பாட்டிற்குப்பிறகு விளைவுகளில் இருப்பு. அதே நேரத்தில் அறிவுக்காரணமான நிமித்தகாரணமானது விளைவுகளை வெளிப்படுத்திய பின் விளைவுகளிலிருந்து தன்னைப் பிரிக்கிறது.
இந்த அடிப்படை விளக்கத்தை நாம் மனதில் நிலைத்திட்டு, இந்த ஸ்லோகத்தைஆய்வோம்.
ஸ்லோகம்
யதா² ந தோயதோ பி⁴ன்னாஸ்தரங்கா³꞉ பே²னபு³த்³பு³தா³꞉ ।
ஆத்மனோ ந ததா² பி⁴ன்னம்ʼ விஶ்வமாத்மவிநிர்க³தம் ॥ 2-4 ॥
தமிழாக்கம்
அலைகளும் நுரைகளும் நீர்க்குமிழிகளும்
நீரொன்றே வேறல்ல - அதுபோல
ஆன்மாவினால் வெளிப்படும்
அண்டங்களும் ஆன்மாவும் வேறல்ல
விளக்கம்
முந்தைய ஸ்லோகத்தில் பரம்பொருளெனும் எல்லையற்ற தூய இருப்புணர்வனை அறிந்துணர்ந்த ஜனகரின் அற்புதமான அனுபவத்திலே, அண்டங்கள், உலகம், படைப்புகள் இவைகளின் நிலையென்ன என்பதை குருவிடம் கூறுகிறார் ஜனகர் இந்த ஸ்லோகத்தில்.
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் மங்களாசரண மந்திரமாகவும், ஈஸாவாஸ்யஉபநிஷத்தின் சாந்தி மந்திரமுமான “ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத்பூர்ணமுதச்யதே………ஓம் ஸாந்தி:” எனும் மந்திரத்தைத் தழுவியது ஜனகரின்இந்த ஸ்லோகம்.
கடலும் அலையும் அடிப்படையில் ஒன்றே. ஏன்? பெருங்கடலும் நீர்தான். அலையும் நீரே. இரண்டும் ஒன்றுதான். ஆனால், கடலில் இருந்து அலைஉருவாகிறது என்று நாம் கூறுகிறோம். அப்படிக் கூறுவது நீரின் நிலைப்பாட்டிலிருந்து அல்ல. ஏனென்றால் இயற்கையால் (ஸ்வரூபத்தால்) அவை இரண்டும் நீர் மட்டுமே. நீரின் நிலைப்பாட்டில் இருமை இல்லை, ஒருமையே. அவற்றின் இயல்பு நிலைப்பாட்டில் இருந்து, கடல், அலை என்ற இரண்டும் ஒன்றுதான், அதாவது ஸ்வரூப த்ருஷ்டியில் இரண்டும் ஒன்றே. இந்த கண்ணோட்டத்தில் காரணமும், கார்யமும் (அதாவது விளைவும்) இயல்பினால் ஒன்றே. இரண்டுமே முழுமையான நீரே, வேறொன்றுமில்லை.
அலை வேறு, கடல் வேறு என்ற இருமை, பெயர் மற்றும் வடிவத்தின் நிலைப்பாட்டில் இருந்து (நாம -ரூப - த்ருஷ்டி) காண்பது. அப்படிக் காணும்போது, இரண்டுமே நீர் என்ற ஒருமை காணப்படுவதில்லை. இங்கே கடல் காரணமாகவும், அலை விளைவாகவும் (கார்ய) காணப்படுகிறது. முழுமையான ஒருமையான நீர்தான், காரண-கார்ய சம்பந்தத்தினால், வரையறுக்கப்பட்ட கடலாகவும், அலையாகவும் காட்சி அளிக்கிறது.
இதே போல,ஸ்வரூப த்ருஷ்டியில், முழுமையான நீக்கமற நிறை ஆத்மா ஒன்றேஅனைத்திலும். நாம-ரூப த்ருஷ்டியில் உடலில் உறையும் ஆத்மா என்றும் உலகம் என்றும் இருமைகளின் தோற்றம்.
தொழில்நுட்ப ரீதியாக, பெயர் மற்றும் வடிவ நிலையை, ஒரு இணை நிலைஅல்லது ஒரு கருவி/வாகனம் அல்லது ஒரு பண்பு என்று அழைக்கப்படுகிறது. இதை உபாதி என்று கூறுகிறார்கள். அந்த உபாதி திருஷ்டியில், அதாவது, பெயர் மற்றும் வடிவம, எனும் உபாதியின் பார்வையில், உலகம் என்பது ஒரு விளைவு (காரியம்); மற்றும் ஆத்மா என்பது காரணம் ஆகும். இந்த உறவு ஒருகாரண - விளைவு உறவு (காரண கார்ய சம்பந்தம்) மட்டுமே.
திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட ஒரு மந்திரத்தை நினைவு கூறுவோம்:
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்துள் மறைந்தது பார்முதற் பூதம்
நாம் பொம்மை யானையைப் பார்த்தால், பொம்மை செய்யப்பட்ட மரத்தைப் பார்ப்பதில்லை. அதைப் படைத்தவனின் திறமை அதனை ஒரு யானை என்று நம்ப வைக்கிறது, மரத்தின் துண்டு அல்ல. அது ஒரு மரக்கட்டையைத் தவிரவேறில்லை என்பதை ஒருவர் உணரும்போது, யானை கண்ணில் படாமல் மறைந்துவிடும்.
அதேபோல, இந்த உலகத்தை உருவாக்கும் உலகக் கூறுகளை மட்டுமே ஒருவர் பார்க்கும்போது, ஒருவர் தெய்வீகத்தை உணரவில்லை. கூறுகள் மட்டுமே உண்மையானவை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் ஒருவன் தெய்வீகத்தை உணரும்போது, தெய்வீகத்தில் உள்ள கூறுகள் மறைந்துவிடும்.
அதாவது, அலை மற்றும் கடலுக்குச் சொந்தமான இன்றியமையாத தன்மை(நீர்). அலை மற்றும் கடலில் இருந்து தண்ணீரைப் பிரித்தால், அப்புறம் என்ன மிச்சம்? தண்ணீரைத் தவிர வேறு எதுவும் மிச்சமிருக்காது. ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவிலிருந்து பூர்ண ஸ்வரூபம் பிரிக்கப்பட்டால், எஞ்சியிருப்பது என்ன? பூர்ண - ஸ்வரூபம் மட்டும் எஞ்சியுள்ளது. பூர்ண - ஸ்வரூபம் மட்டும்எஞ்சியிருக்கிறது என்று சொல்வதன் மூலம் என்ன அர்த்தம்? வேறுபடுத்தும்பெயர் மற்றும் வடிவம் உண்மையில் இல்லை என்று அர்த்தம்.
மெய்யான (சத்யமான) ஸ்வரூபத்தை மட்டும் தனித்துப் பார்த்தால், வேறுபடுத்தும்உபாதி (பெயர் & வடிவம்) உண்மையில் இல்லை. ஆக,
“நான் முதலில் நிறைவை புறத்தே, பொருளனைத்தும் பொறி ஐந்து வழிஅனுபவித்து தேடி அலைந்தேன் - ஆனால் அவையனைத்தில் துன்பம்மிகு எனஅறிந்து வைராக்கியம் பெற்றேன் - அச்சமயம் நிறைபொருள் உள என மறைகூறி என் உள் நோக்கினேன். குறையொன்று ஏதுமில்லை குறையிலா நிறையான மெய்ப் பொருளே அனைத்தும் என மறை உறைத்து உணர்ந்தேன். நானும் நிறை/முழுமை; அனைத்தும் நிறை/முழுமை என நான் உணர்ந்தேன்”
என்பதை ஜனகர் அழகாக கோடிட்டுக் காட்டுகிறார்.
முடிவுரை
மாயை வசப்பட்டுழலும் காயமுறை சீவன், கனவிலும் நனவிலும்
காரிய காரண தன்மை கொண்டு, உடையான் உடமை
ஆசான் சீடன் , அருமை தந்தை மகன் என, பேதம் பல ஈண்டு
பாடிடுமே பல உறவு கொண்டு!
மோடம் போட்ட அப்பேதம் நீக்கி, காயமுறை பற்றிலா அச்சீவனே
மாசிலா முழுநிறை இறையென உரை, மோனநிலை ஆசானாம்
அந்த அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி பொற்பாதம் பணிவோம்!!
என்ற தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரமும்,
அன்பு சிவமிரண் டென்ப ரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே
என்ற திருமந்திரப் பண்ணும் இக்கருத்தினைப் பிரதிபலிக்கிறது.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)