முகவுரை
சுமார் 15 வருடங்களுக்கு முன், விடுமுறைக்காக இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளுக்கு சென்றிருந்தேன். தீவின் அழகை ஆராய்ந்துகொண்டிருந்த போது, வயது அறுபதைத் தாண்டிய என் மனதில், ஒரு வினோதமான எண்ணம் தோன்றியது; நான் என் அந்த சிந்தனையை உறுதிப்படுத்தும் முன், முக்குளிப்புக்கு (ஸ்கூபா டைவிங்கிற்கு) தயாராக இருந்தேன்.
விடுமுறைக்கு சென்ற ஒரு தீவில், ஸ்கூபா டைவிங் அசாதாரணமானது அல்ல. ஆனால் அது எனக்கு முற்றிலும் அசாதாரணமானது. ஏனெனில் எனக்கு நீச்சல்பற்றி எந்த அறிவும் இல்லை. எனக்கு நீச்சல் தெரியாது, மூக்குக்கு மேல் ஒருஅங்குலம் தண்ணீர் இருந்தாலும் ஒரே துன்பம், உயிர் மேல் பயம். இருப்பினும் இதோ, நான் தயார். வேண்டிய உடை, தேவையான உபகரணம் (பிராணவாயுத்தொட்டி) இத்தியாதிகளுடன் நீரில் இறங்கினேன், முன்பின் தெரியாத இருபது வயதிற்கும் குறைவான ஒரு ஆசானின் கையைப்பிடித்துக்கொண்டு.
எனக்கு நீச்சல் தெரியாது என்பதை நன்கு அறிந்தும், முக்குளிக்க முடிவெடுத்தேன். டைவ் செய்வதற்கு முன், டைவ் செய்வதால் ஏற்படும் அவசரநிலைகள் மற்றும் அபாயங்கள் குறித்து எனக்கு தெளிவாக விளக்கப்பட்டது, ஆனாலும் நான் மூழ்க முடிவு செய்தேன். பயிற்றுவிப்பாளர், நான் இதுவரை சந்தித்திராத, முன்பின் அறியாத இருபது வயது இளைஞர். அறியாததை அறியும் துடிப்பு என்னிடம். தனது திறமையை வெளிப்படுத்தத் துடிக்கும் இளைஞன் என் ஆசான்.
முதல் முழுக்கு ஒரு பரிசோதனை முயற்சி எனக்கு. நீருக்குள் எனக்கும், ஆசானுக்கும் இடையே நடக்கும் தகவல் தொடர்பு; விதிமுறைகள், கட்டளைகள், சைகைகள், அடையாளக்குறிகள், செய்யக்கூடாதவைகள், செய்யவேண்டியவைகள் முதலியவற்றை நான் புரிந்து கொண்டேனா என்பதை அறியும் முயற்சி இருவருக்கும். பரிசோதனை முழுக்கை முடித்து நீருக்கு மேல் தலையை வெளிக்காட்டிய உடன் என் மனம் போதும் அய்யா, நம்மால் ஆகாது என்று கூற, ஏதோ ஒரு சக்தி அந்த இளைஞன் வடிவில் என்னை ஊக்குவித்து தொடர உந்தியது. இன்று பின்னோக்கிப் பார்த்தால், அந்த ஆசானின் மீது எனக்குள்ள முழுமையான நம்பிக்கை, நான் செய்யக்கூடிய தவறுகளை அவர் சரிசெய்வார் என்ற மன உறதி மற்றும் டைவ் செய்யும் போது அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் தோல்வியின்றி செயல்பட இறைவன் அருள்வான் என்ற பிராரத்தனை, இவைகள்தான் என்னை உந்திய அந்த சக்தியென தெரிகிறது.
அறியாமை என்ற பயத்துடன், ஆசான் காட்டிய வழிப்படி முழுக்கு தொடங்கியது. அறியாமை எனும் பயம் தெளியத் தெளிய என்ன ஒரு மகிழ்ச்சி. ஆஹா, wow, ஓஹோ, amazing, out of the world experience …பேரின்பமும் ஆச்சரியமும் கலந்த வாரத்தைகளின் வெள்ளமென மனதில். முதல் முழுக்கிலேயே, மேலும் அதிக ஆழத்திற்கு செல்ல வேண்டி சைகை செய்தேன், ஆசானிடம்.
சரி, என் முதல் முழுக்கிற்கும் அத்வைத வேதாந்த விளக்கமான இந்தஅஷ்டாவக்ர கீதைக்கும் என்ன சம்பந்தம்? வேதாந்தத்தில் அறியாமை அடர்வனத்தில் அலையும் பாமரனான அறிவிலி நான். எனக்கே இளம் ஆசானின்அறிவுரைகளை கேட்டறிந்து நடந்து, அறியாத ஒன்றை அறிந்து நான் பெற்றமகிழ்ச்சியை, பேரின்பமும் ஆச்சரியமும் கலந்த வார்த்தைகளின் வெள்ளமாக உணர முடிந்தது என்றால், ஆன்மா என்ற நான் யார் என்பதை அஷ்டாவக்ரமுனிவரின் அறிவுரைகளை கேட்டறிந்துணர்ந்த ஞான யோகத்தில் பயிற்சிபெரும் ராஜரிஷி ஜனகருக்கு அவரது அனுபவத்தை உணர்ந்து அதனை வெளிப்படுத்துவது வெகு சுலபம். வாருங்கள், அவரின் இந்த ஸ்லோகத்தை அறிந்து அந்த அனுபவத்தை அறிய முற்படுவோம்.
ஸ்லோகம்
ஸ ஶரீரமஹோ விஶ்வம்ʼ பரித்யஜ்ய மயாது⁴னா ।
குதஶ்சித் கௌஶலாத்³ ஏவ பரமாத்மா விலோக்யதே ॥ 2-3 ॥
தமிழாக்கம்
உடலையும் உலகையும் விடுத்த
உடன், ஏதோ ஒரு திறமையால்
உணர்கிறேன் பரம்பொருளை, ஆஹா!! 2.3
விளக்கம்
“ஆஹா! இதுவரையில் இத்தனை காலம் மருவினால் குழம்பியிருந்த நான் இப்பொழுது, உடல் மன வளாகம் கடந்த, அமைதியான, தூய உணர்வே நான் என்றும், உடலும் உலகும் ஒளிர்வது என்னாலே அதனால் உலகும் அனைத்தும் என் வசமே அல்லது எதுவும் இல்லை என்னிடமே என்றும் அறிந்துணர்ந்துஉலகையும் உடலையும் விடுத்த உடனேயே, ஏதோ ஒரு திறமையால் (குருவின்அருளால்) பரம்பொருளை உணர்கிறேன்”.
ஜனகரின் இந்த கூற்றினை இப்போது ஆய்வதற்கு முன், ஆன்மாவைப் பற்றி நாம் இதுவரை அறிந்ததை தொகுப்போம்.
முதல் அத்தியாயத்தில் 19 ஸ்லோகங்கள் வழியாக பரம்பொருளானஆன்மாவேதான் நீ என்று அஷ்டாவக்ர முனிவர் ஜனகருக்கு எடுத்துரைத்தார். அனைத்தும் நீ, அனைத்திலும் நீ. வரையிலா, மாறா, முழுமையான, நீக்கமறநிறைந்து, உனக்குள்ளும் உனைக்கடந்தும் அமைதியுடன் கலக்கமேதுமிலா தூய இருப்புணர்வே நீ என்றும், உடல், மன, புத்தி வளாகம் நீ அல்ல, உடலும் உலகும் ஒளிர்வது உன்னாலே என்ற பேரறிவு கொண்டு பேரின்பம் பெற்றிடுவாய் என்று விவரமாக விளக்கினார்.
எனினும் இந்த அனைத்து விளக்கங்களும், அந்த ஆன்மாவின், பிரதிபலிக்கப்பட்ட (குருவின் உபதேசம் மூலம்) மகிமைகள், விவரங்கள், தன்மைகள் மட்டுமே. அதிகபட்சம், நமக்குள் சச்சிதானந்தமாக இருக்கும் ஆன்மாவை புரிந்து கொள்ள உதவும் இந்த அறிவுரைகள். "ஆன்மா என்பது இது தான்" என்று குரு நமக்கு நேருக்கு நேர் அறிமுகம் செய்ய முடியாது, அறிமுகப்படுத்தவும் மாட்டார். அந்தகரணம் எனும் மனம், புத்தி, தன்னுணர்வு, பொறி புலன்கள் இவைகளின் செயல்பாடுகளை எடுத்துக்காட்டி ஆன்மாவின் மகிமைகளை மட்டுமே அவர் எடுத்துக்கூற முடியும்.
எனவே, இதுவரை நாம் முதல் அத்தியாயத்தில் நிபந்தனைக்குட்பட்ட ஆத்மாவை மட்டுமே கையாண்டோம், தூய உண்மையான முழுமையானஆன்மாவை அல்ல. இதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஸ்லோகம் மூன்று முக்கிய சொற்களை உள்ளடக்கியது; உணர்கிறேன், பரம்பொருள், ஏதோ ஒரு திறமையால். இதனை அறிவோம்.
முழுமையானது என்று அறியப்படும் உன்னத தூய உண்மையான ஆன்மாவை, அதன் எல்லையற்ற தன்மையின் காரணமாக, வரையறுக்கப்பட்ட சொற்களின்அடிப்படையில் விவரிக்க முடியாதது. குழலிலிருந்து இடியோசை வராது. அதுபோல வார்த்தைகளால் ஆன்மாவை வர்ணிக்க இயலாது. அதனால்தான் சொல்லாத சொல்லிற்கு விலையேதுமில்லை என்றான் கவிஞன் கண்ணதாசன்.
ஆக, அறிவுபூர்வமான எந்த புரிதலும் நம் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லாது. மனிதனிடம் உள்ள ஆன்மீக தாகம், அவனது வரம்புகளின் தளைகளை உடைத்து, உயர்ந்து உயரும் போது மட்டுமே முடியும்.
அந்த உயர்ந்த தெய்வீக நிலையில் இருப்பதைத்தான், ஜனகர் “உணர்கிறேன்” என்கிறார். இந்த அக நிலை அனுபவமே உணர்வு. இதில் நான்அனுபவிப்பவன்-பரம்பொருள் எனும் அனுபவிக்கப்படும் பொருள் என்று எந்தவித வேற்றுமைகள் கிடையாது. அந்த அகநிலை அனுபவமே ஆன்மா; அந்தஅனுபவமே பரம்பொருள். அந்த நிலையே வார்த்தைகளால் விவரிக்க இயலாத பேரின்பம்.
“குருவின் உபதேசத்தால் உணர்கிறேன்” என்று கூறாமல், “ஏதோ ஒரு திறமையால் உணர்கிறேன்” என்று கூறுகிறாரே ஜனகர். ஏன்? அதன் விளக்கத்தை இப்போது காண்போம்.
இரண்டு கண்ணோட்டத்தில் இதனை ஆய்வோம்.
அனுபவமே நான் என்ற மிகவும் புதுமையான உண்மை நிலையை வியப்புடன் பெரு வெடிப்பென உணரும் மாணவன், தான் இருக்கும் நிலைக்கு காராணமென எந்த ஒரு ஆசிரியரையோ அல்லதுதான் மேற்கொண்ட எந்த ஒரு நடைமுறையையோ சுட்டிக்காட்டுவது நேர்மையானதல்ல, முடியாததும்கூட. முழுப் பிரபஞ்சமும் அதன் அனைத்து நிகழ்வுகளும், யதார்த்தத்தின் இறுதி உணர்தலுக்குப் பயிற்றுவிக்கும் ஒரு பல்கலைக்கழகம். ஆகையினாலே வியப்பில் ஆழ்ந்துவிட்ட மாணவன் ஜனகன், ஏதோ ஒன்றின் சாமர்த்தியத்தால், தன்னுள், தன் உணர்தலுக்கு வந்துவிட்டதாக மட்டுமே அறிவிக்க முடியும்.
கேன உபநிஷதத்தின் விளக்கவுரையில் ஶ்ரீ வித்யாரண்ய சுவாமிகள், “நான் தங்களுடைய கருணையினால், பரம்பொருளை நன்கு அறிகிறேன் என்று கூறுவேயானால், பரம்பொருளை நீ அறியவில்லை என்று பொருள். அறிபவன், அறியப்படுபொருள் என்ற பேதம் உன்னிடத்தில் இன்னமும்உள்ளது. அதனால் பரம்பொருளை முழுமையாக நீ அறியமுடியாது” என்கிறார். எனவே பேதங்களைக் கடந்து பரம்பொருளை உணரந்தவனுக்கு குரு என்று யாரும் இல்லை.
ஆகையினால் ஏதோ ஒரு திறமையால் உணர்கிறேன் என்கிறார் ஜனகர்.
முடிவுரை
முகவுரையில், அந்தமான் தீவுகள் ஒன்றினில், இந்தியப் பெருங்கடலில் ஸ்கூபா முழுக்கு புரியும் போது ஆழ்கடலில் என் உணர்வினை, ஆஹா, wow, ஓஹோ, amazing…பேரின்பமும் ஆச்சரியமும் கலந்த வாரத்தைகளின் வெள்ளம் என்னுள்ளே என்று கூறியிருந்தேன் அல்லவா. ஏன் இந்த ஆனந்த ஊற்று என்னிடத்தில்?
இயற்கையின் ஒரு அம்சமான நீரைப் பற்றிய அனைத்து அறிவும் (ஏட்டறிவு, கேள்வி அறிவு,) எண்ணங்கள், கவலைகள், முன் அனுபவங்கள் அனைத்தும் அடியோடு மறைந்து அந்த நீரே நானாகினேன்.
அநத நீரே நானாகிய பின், என்ன ஒரு உணர்வு!. வார்த்தைகளால் விவரிக்க இயலாது. உணர்ந்தால் தான் புரியும். தண்ணீருக்கு அடியில் எனது பேச்சு (என் நிலையின் வெளிப்பாடு) அடங்கி இருக்கிறது, அதனால் என்னால் அந்த நேரத்தில் எனது நிலையை (மகிழ்ச்சியை) வெளிப்படுத்த முடியாது. வெளியே வந்து, அனுபவித்தவன் என்று நான் எப்படி எடுத்துரைத்தாலும், அவை பேதங்கள் கூடிய விளக்கங்களே தவிர, அவை அனுபவம் அல்ல. ஏனெனில் அந்த அனுபவமே நான் தான் அத்தருணத்தில்.
அதுபோலவே, ஆத்மா, உணரும் தருணத்தில் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது. ஆன்மாவாக மட்டுமே இருக்க முடியும். பேரின்ப நிலையில், அனுபவிப்பவன்-அனுபவிக்கப்படும் பொருள், அறிபவன்-அறியப்படும் பொருள், அறியாமை-அறிவு, குரு-சிஷ்யன் என்ற பேதங்கள் யாவும் இல்லவே இல்லை. அந்த அனுபவமே, அறிவே நான் என்ற நிலை.
இந்த நிலையைத்தான் ஜனகர், ஆன்மீகத்தில் நம் போன்ற அன்றாட நடைமுறை நிலையில் (வ்யாவகாரிக நிலை) இருப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஆஹா! பரம்பொருளை ஏதோ ஒரு திறமையால்உணர்கிறேன் என்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)