முகவுரை
கடற்கரை காற்றும் கடலும் இணைந்து வழங்கும் கடல் அலைகளைக் கண்டால், உலகம் முழுவதும் உள்ள கவிஞர்களுக்குள் கவிதைகள் ஊற்றெடுக்கும் என்றால் அது மிகையாது.
காற்று மட்டும் கடலின் மேல்
கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தது
கடலின் கவிதைகள் அலைகளின் மேல் பயணித்து
கரைகளை சென்றடைந்தன
என்கிறான் ஒரு கவி. அது போல பாமர மக்களும் கடற்கரையில் அமர்ந்து, நீள்வானும் நீலக்கடலும் சந்திக்கும் இடத்திலிருந்து, தாம் இருக்கும் கரை கண்டால், மனதில் அமைதி நிலவும் என்பதும் உண்மையே.
கடலும், அலையும், மனமும் சொந்தங்களோ? கடலைப் பிரியா அலையும், மனதைப் பிரியா நினைவும், என்றும் இயற்கையின் விளையாட்டோ, யார் அறிவார்?
அஷ்டாவக்ர கீதையில், தான் யார் என்பதை அறிந்துணர்ந்த ராஜரிஷி ஜனகர், புதுப்பொலிவு கலந்த விந்தையடன் கடல், அலை, மனமெனும் மூன்றையும் இணைத்து மூன்று ஸ்லோகங்கள் வழியாக தனது நிலையை எடுத்துரைக்கிறார். அந்த மூன்று ஸ்லோகங்களை இப்போது காண்போம்.
ஸ்லோகங்கள்
அஹோ பு⁴வனகல்லோலைர்விசித்ரைர்த்³ராக் ஸமுத்தி²தம் ।
மய்யனந்தமஹாம்போ⁴தௌ⁴ சித்தவாதே ஸமுத்³யதே ॥ 2-23 ॥
மய்யனந்தமஹாம்போ⁴தௌ⁴ சித்தவாதே ப்ரஶாம்யதி ।
அபா⁴க்³யாஜ்ஜீவவணிஜோ ஜக³த்போதோ வினஶ்வர꞉ ॥ 2-24 ॥
மய்யனந்தமஹாம்போ⁴தா⁴வாஶ்சர்யம்ʼ ஜீவவீசய꞉ ।
உத்³யந்தி க்⁴னந்தி கே²லந்தி ப்ரவிஶந்தி ஸ்வபா⁴வத꞉ ॥ 2-25 ॥
தமிழாக்கம்
எல்லையிலா பெருங் கடலாம் என்னுள்ளே,
மனக்காற்று வீசுகையில் படைப்பு பல்வேறு
கணப்பொழுதில் அலைகளென தோன்றுதன்றோ II 2-23
எல்லையிலா பெருங் கடலாம் என்னுள்ளே,
மனக்காற்று அடங்கிட, துரதிஷ்டமாக சீவ
வணிகனின் உடலெனும் கப்பல் கவிழ்ந்து மூழ்கியதே II 2-24
எல்லையிலா பெருங் கடலாம் என்னுள்ளே,
பல்வேறு சீவர்கள் இயல்புடனே அலைகளென
உதித்ததெழுந்து விளையாடி மறைந்தனவே II 2-25
விளக்கம்
ஸ்லோகம் 2.23
இந்த ஸ்லோகத்தில், எல்லையற்ற தூய உணர்வான ஆன்மா கடலுக்கும், உலகம் போன்ற படைப்புகளை (உயிரினங்கள் உட்பட) அலைகளுக்கும் ஒப்பிடப்படுகிறது.
அந்த படைப்புகளின் அடிப்படை மன உணர்வு அல்லது இயக்க உணர்வு (சித்தம்) ஆகும், இதில் எண்ணங்கள் அலைகள் போல எழுகின்றன மற்றும் தணிகின்றன. இதனால், கனவுகள் போன்ற பல்வேறு இருப்புகளை (உலகம், தாவர ஜங்கமம் எனும் அசையும் அசையாத பொருட்களையும் உயிரினங்களையும் (ஜீவர்கள்)) உருவாகி அழிகின்றன என்கிறது இந்த ஸ்லோகம்.
நிலையற்றவைகளை நிலையான இருப்புகளாக மாற்றுவதே அந்தகரணத்தின் வேலை. அறியாமைக் காற்று அடித்திடும்போது, பெயர்-வடிவம் எனும் படைப்புகளை அலைகளாக வெளிப்படுத்துகிறது. எனது மனமே இவைகளுக்கு இருப்பினை கொடுக்கிறது. நான் எனும் ஆன்மாவாகிய கடலுக்கு இந்த அலைகளால் எந்த பாதிப்பும் இல்லை. என்னிலிருந்தே உருவானவைகள் இவைகள்; நானே இவைகளுக்கு அடிப்படை ஆதாரம் என்கிறார் சுவாமி பரமார்த்தானந்தா. தோற்றம், மறைவு அனைத்தும் என்னுள்ளே தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் மனம் மௌனமாக இருக்கும் போது, எதுவும் நடக்காத போது, பெயர், வடிவம், அடையாளம், உறவுகள், உடைமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத போது, எல்லையே இல்லை, அவற்றைக் கடந்து எல்லையற்ற பெருங்கடலாக மாறி, என் அடையாளத்தைக் கலைத்துவிட்டேன் என்னைச் சுற்றியுள்ள எல்லையற்ற வெளியில் (பரம்பொருளில்).
என்னை நானே வரையறுத்து, என்ன ஒரு தனிநபராகக் கருதும் போது எல்லைகள் எழுகின்றன; இது எனது விழிப்புநிலை உணர்வு. நனவில் இருமை, வேற்றுமை, பன்மை என்று உருவாகி, உலகத்தை என்னிலிருந்து வேறுபட்டு காண்கிறேன்.
ஸ்லோகம் 2.24
இந்த ஸ்லோகத்தில், எல்லையற்ற தூய உணர்வான ஆன்மா கடலுக்கும், ஜீவா தனது உடலை கப்பலாக பாவித்து உலகத்துடன் வர்த்தகம் செய்யும் வியாபாரிக்கும், உடலை கப்பலுக்கும் ஒப்பிடுகிறார் ஜனகர்.
கப்பலில் பயணம் செய்து, புலன்கள் மற்றும் உலக இன்பங்களுக்கு ஈடாக ஜீவர் தனது சுதந்திரத்தைப் பண்டமாற்று செய்கிறது, மேலும் செயல்பாட்டில், பாவ கர்மாவைக் குவிக்கிறது. அவர் ஒரு துரதிர்ஷ்டவசமானவர், ஏனென்றால் அவர் எப்போதும் அந்த வணிகத்திலிருந்து நஷ்டத்தை அடைகிறார்; ஏனெனில் ஆசை நிறைந்த செயல்கள் அல்லது உலக உடைமைகளால் உண்மையான லாபம் ஏதும் இல்லை.
மனக்காற்று வீச்சிலே உலகம் போன்ற படைப்புகள் அலையென தோற்றமென்று முதலில் கூறிய ஐனகர், இப்போது அந்த மனக்காற்று அடங்கி மன அமைதியான நிலையிலிருப்பதை கூறுகிறார். கடலில் கப்பல் மூழ்குவது காற்று, நீரின் சீற்றத்தால். ஆனால் இங்கு ஜனகர் கூறுவது, மனக்காற்று அடங்கியவுடன் படைப்பு எனும் கப்பல் மூழ்கியது என்கிறார். இதுவும் துரதிருஷ்டமே.
எனினும், கப்பல் கவிழ்ந்தாலும், மன அமைதி, நிலையற்ற படைப்பெனும் உலகத்தின் மறைவு என்பன அந்த கப்பலின் சொந்தக்காரனான ஜீவனுக்கு கிடைத்த பெரிய அதிருஷ்டமே என்பதை உணர்ந்த ஜனகர் பன்மையும் வேற்றுமையும் நிறைந்த உலகமெனும் கப்பல் கவிழ்ந்து, அனைத்தும் (சீவன் உட்பட) ஆன்மக்கடலுடன் ஒன்றாகின என்கிறார்.
ஸ்லோகம் 2.25
ஜனகரின் இந்த ஸ்லோகங்களைப்புரிந்து கொள்ள, அவர் ஆன்மா மற்றும் படைப்பின் தன்மையை விவரிக்கப் பயன்படுத்திய குறியீட்டை அறிந்து கொள்வது அவசியம். தனிப்பட்ட ஜீவாக்களில், எல்லையற்ற தூய இருப்புணர்வான ஆன்மா கடல்; மனமும் உடலும் படைப்பைக் குறிக்கிறது. அவற்றில் எழும் மாற்றங்கள், எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் பிற நிகழ்வுகள் அனைத்தும் உயிரினங்கள் மற்றும் பொருள்களின் பன்முகத்தன்மையைக் குறிக்கின்றன (ஜீவவீச்சயஹ்). அவை கடல்சார் அலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. விழித்திருக்கும் நிலையில் மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஆழ்ந்த உறக்கத்தில், சுயம் மட்டுமே பிரகாசிக்கும்போது அவை மறைந்துவிடும். எனவே, அவை நிலையற்றவை. அவர்களின் ஆதரவு ஆன்மாவே. அவைகளின் நோக்கம் ஆன்மாவை மகிழ்விப்பதாகும்.
இப்படி ஆன்மக்கடலுக்குள்ஒன்றாகிய ஜீவர்கள் அனைத்தும், அவரவர்களின் இயற்கையான இயல்புகளுடன் பிறந்து, வாழ்ந்து, மடிந்து விளையாடுகிறர்கள் என்னுள்ளே என்கிறார் ஜனகர்.
முடிவுரை
ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான உயிர்களாக வாழ, ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான உடல்களில் இருக்க முடியுமா என்று கற்பனை செய்வோம். அந்த அனுபவங்களை எப்படி வர்ணிப்பது. வார்த்தைகளால் இயலுமா? எந்த மின்னணுக் கணிணிகளால் இதை விளக்கமுடியும்.
முதல் ஸ்லோகத்தில் படைப்பின் காரணமே (ஸ்ருஷ்டி காரணம்) நான் என்ற ஜனகர், இரண்டாவது ஸ்லோகத்தில் அவைகளின் நிலைப்பிற்கு காரணமே நான் (ஸ்திதி காரணம்) என்று கூறி
அனைத்திற்கும் ஆதாரம் நானே என்கிறார் மூன்றாவது ஸ்லோகத்தில். அந்த எல்லையற்ற தூய உணர்வாக இருக்கும் ஆன்மா எப்போதும் பேரின்பத்திலேயேதான் இருக்கும். படைப்பில் உள்ள எல்லாவற்றின் சாட்சியாக, படைப்பிற்குள்ளும் வெளியும் பரவி இருக்கும் தூய உணர்வே ஆன்மா; அது தான் சத் சித் ஆனந்தம். அந்த சச்சிதானந்த நிலையை அறிந்துணர்ந்த ராஐரிஷி ஜனகரின் இவ்வுரைகள், பேரின்பத்தின் எல்லை நிலையை அழகாக படம்பிடித்து காட்டுகிறது.
வீடுபேறு நோக்கிச் செல்லும் ஆன்மீகவாதியின் ஆழ்ந்த தியானத்தில் இத்தருணம் இறுதி நிலை அருகில் இருப்பதைக் குறிக்கிறது . இந்த அனுபவ நிலையில், தன்முனைப்பும், தன்னுணர்வும் கிட்டத்தட்ட மறைந்து, பயண இலக்கின் அருகில் நிற்கும் நிலை. இந்த நிலை வரை, தன்னைக் காண்பவன் என்றும், காண்பது காட்சி என்றும் இருமை நிலைப்படுத்திய ஜனகர், அந்த இருமையே, அறியாமையால் உருவான கற்பனையாக உணரும் நிலை இது. கடவுள் ஒருவரே, கடவுளைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதால், அங்கு எந்த இருமையும் இல்லை.
காண்பவன், காட்சி என்ற இருமைக்குள், காண்பது சாத்தியம் என்று பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வேதாந்தத்தில் காண்பவன், காட்சி என்ற இருமையிலிருந்து விடுபட்ட அறிவே தரிசனம். அந்த சுய தரிசனம் என்பது “நான் தான் தூய்மையான இருப்பு” என்ற நேரடி அனுபவத்தின் மூலம் வரும் அறிவு/உணர்வு. இந்த தருணம், வீடுபேறு நோக்கிச் செல்லும் ஆன்மீகவாதியின் அறிவு முதிர்ச்சியின் உச்ச நிலையைக் குறிக்கிறது.
எனவே, ஆன்மீகப் பயணத்தின் இறுதிக் கட்டத்தலிருந்து கூறப்படும் இம்மந்திரங்களின் சொற்களின் தாத்பர்யத்தை அதிஉயர் நிலையிலிருந்து அறிய முற்படவேண்டும். அதாவது கர்ம-உபாசன இணைந்த (சமுச்சய) நிலையைத் தாண்டி, ஆத்ம ஞான நிலையிலிருந்து கூறப்படும் சொற்களாக அறிந்து, அவைகள் கூறும் கருப்பொருளை அறிய வேண்டும். ஜனகரின் உரைகள், ஒரு கர்ம யோகியின் நிலையோ அல்லது ஒரு உபாஸகனின் பிரார்த்தனையோ அல்ல. அவைகள் அனைத்தும் அபரோக்ஷ ஞான அனுபவ வாக்கியங்கள்.
பின் குறிப்பு
இருபது அத்தியாயங்கள் உடைய அஷ்டாவக்ர கீதையிலிருந்து, முதல் இரண்டு அத்தியாயங்களைக் கண்டோம். இவைகளில் கூறப்பட்ட அத்வைத வேதாந்த தத்துவங்களின் விளக்கங்களே மற்ற அத்தியாயங்கள். இவை, அத்வைத வேதாந்தத்தின் அதி உயர் நிலை கருத்துப் பரிமாற்றங்கள், அஷ்டாவக்ர முனிவருக்கும் ராஜ ரிஷி ஜனகருக்கும் இடையே.
இந்த தொடர் இத்துடன் நிறைவு. மற்ற அத்தியாயங்களிலிருந்து, ஏதேனும் அறிய வேண்டுமானால், அடியேனுக்கு மின்அஞ்சல் வழியாக வினவ வேண்டுகிறேன். யான் அறிந்தவைகளை பதிலாக அளிக்கின்றேன்.
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவில் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
இருபது அத்தியாயங்கள் அடங்கிய அஷ்டாவக்ர கீதையின் இரண்டு அத்தியாயங்களை, வலைதளத்தில் இதுவரை என்னுடன் சேர்ந்து ஆராய்ந்து அறிந்ததற்கு நன்றி. மற்ற அத்தியாயங்களை அறிய தயை கூர்ந்து புத்தகப் பிரதியில் காணவும்.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! This post is public so feel free to share it.

