முகவுரை
முந்தைய பதிவில், “நான்” உடல் அல்ல, உடலும் எனதல்ல. ஒவ்வொரு உடலிலும் ஜீவன், பிரம்மன் என்று இரண்டு இருப்பு தெரிகிறது; ஒன்றை உணர முடிகிறது. மற்றொன்றை உணர இயலவில்லை. அனுபவத்தால் அறிந்துணரும் இறுதி உண்மை என்பது ஒன்றே, இரண்டு அல்ல என்று அத்வைத வேதாந்தம் மிகத்தெளிவாக கூறுகிறது. ஆக, உற்ற தேஹத்திலிருக்கும் உயிரும் நானல்ல என்றும் கண்டோம். அப்படியென்றால் நான் யார்? இந்த கேள்வியை ஜனகர் எவ்வாறு கையாளுகிறார் என இந்த பகுதியில் காண்போம்.
வேதாந்தம் கூறுவது
அனுபவத்தால் அறிந்துணரும் இறுதி உண்மை என்பது ஒன்றே, இரண்டு அல்ல என்று அத்வைத வேதாந்தம் மிகத்தெளிவாக கூறுகிறது. இந்த ஒருமை தத்துவத்தை நடைமுறையில் (வ்யாவஹாரிக நிலை) விளக்க, உடலில் உள்ள உணர்வை, (அதாவது ஜீவன் என்று அழைக்கப்படுவதை) “ப்ரதிபிம்ப சைத்தன்யம்” அல்லது “நிழல் உணர்வு” என்றும், பிம்பமாக இருக்கும் “தூய உணர்வை” “சுத்த சைத்தன்யம்” என்றும் கூறுகிறது. சரி, சுத்த சைதன்யத்தை பிரதிபலிப்பது எது? அது அந்தகரணம் எனும் மனம்.
இதனை “க்ஷேத்ரா, க்ஷேத்ரஞம்” என்பர் மறைகளில். அதாவது உடல், மனம், புத்தி, அஹங்காரம், சித்த வளாகம் என்பது க்ஷேத்ரா, தூய இருப்புணர்வான ஆன்மா க்ஷேத்ரஞம்.
அண்டத்திலிருப்பது (ஸமஷ்டி) பிண்டத்திலும் (வ்யஷ்டி) இருக்கிறது என்பது நமது மறைகள் சொல்லும் உண்மை. ஷேத்ரா என்பது இயற்கையின் தத்துவங்களால் (பஞ்சபூதங்களின் பரிணாமத்தால் வரையறுக்கப்பட்ட உண்மைகளின்) ஒரு தொகுப்பாகும். இது மாயையெனும் இயற்கையின் முக்குணங்களால் வரையறுக்கப்பட்டது. இந்த பரிணாமங்கள், மாற்றங்கள், குணங்களால்தான் நமது அந்தகரணமெனும் ஷேத்ராவின் மாசு. இதனை தூசு படிந்த நிலக்கண்ணாடிக்கு ஒப்பிடலாம். அதே சமயம் க்ஷேத்ரஜ்ஞம் என்பது இயற்கையின் மாற்றங்கள் மற்றும் அசுத்தங்கள் இல்லாத தூய்மையான உணர்வு.
மாசுபட்ட க்ஷேத்ரா எனும் இயற்கையால் உருவகப்படுத்தப்பட்டதால் (பிரதிபலிக்கப்பட்டதால்), ஜீவா என்பது ஒரு ஆன்மாவின் இருப்பில் ஒரு தற்காலிக பிறழ்வு. பிரதிபலிப்பின் தரம், பிரதிபலிக்கும் பொருளின் தரத்தை சாரந்தது. மாசு படிந்த கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளி, மாசிலா கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளியைவிட மங்கலாக இருக்கும்.
நம் உணர்வை (ஜீவனை) க்ஷேத்ராவின அசுத்தங்களிலிருந்து பிரிக்க முடிந்தால், ஆன்மாவின் தூய்மையான இருப்புணர்வை அறிந்துணரலாம். “மனத்துக்கண் மாசிலனாதல்” என்பது இதுவே.
மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு
மனத்தில் மாசு இல்லா நிலையை அடைந்த உடம்பே ஈசனாகத் தோன்றும் என்கிறார் ஔவையார்.
அந்த நிலையை அடைந்த ஜனகர், தூய உணர்வே நான் என்கிறார். அவரது கூற்றில் அடங்கிய கருப்பொருளை ஆய்வோம்.
தூய உணர்வே நான்
“அஹம் பரம்மாஸ்மி”, நானே பிரம்மன்; அதாவது நானே அந்த பிம்பமான சுத்த சைதன்யம்; இந்த பிம்பத்தின் இருப்பு ஒரு குறிப்பிட்ட இடம் என்று கூறமுடியாது. எங்கும் எதிலும் எப்பொழுதும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருள் - “ஸர்வம் பரம்ம மயம்”. ஒரு குடுவைக்குள் உள்ள வெளியும், ஆகாயத்தில் பரவியிருக்கும் வெளியையும் ஜீவன், ப்ரம்மன் எனும் சைத்தன்யங்களையும் ஒப்பிடலாம். இரண்டும் ஒன்றே.
எங்கும் எதிலும் நீக்கமற நிலையாக இருக்கும் பரம்பொருள்.
தூய உணர்வு என்றால் என்ன? மனத்துக்கண் மாசிலனாகி, இருமையுள் ஒருமை காணும் உணர்வு. மனதின் அசைவுகள் மற்றும் அதன் மாற்றங்கள் இல்லாத உணர்வு அது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உணர்விலிருந்து எண்ணங்கள், உணர்ச்சிகள், உருவங்கள், மனக் கட்டமைப்புகள், நினைவுகள், ஆசைகள், இணைப்புகள், அகங்காரம் போன்றவற்றைப் பிரிக்க முடிந்தால், எஞ்சியிருப்பது தூய உணர்வு. சிலர் அதை தூய நுண்ணறிவு என்று அழைக்கிறார்கள். இதில் இருமை இல்லை. இது தான் பிரம்மன் எனும் ஔவை கூறிய உத்தமன்.
முண்டக உபநிஷதம் “பிரம்மன்” அல்லது பரம்பொருள் என்று அழைக்கப்படும் இறுதி யதார்த்தத்தை இங்கனம் வரையறுக்கிறது.
யத்ததத்ரேஷ்யமக்ராஹ்யமகோத்ரமவர்ணம்மசக்ஷுஶ்ரோத்ரம் ததபாணிபாடம் |
நித்யம் விபும் ஸர்வகதம் ஸுஸூக்ஷ்மம் ததவ்யம் யத்பூதயோனின் பரிபஶ்யந்தி தீர:
முண்டக உபநிஷத் || 1.1.6 ||
“கண்ணுக்குத் தெரியாதது, நினைத்துப் பார்க்க முடியாதது, ஆதியும், அந்தமும் இல்லாதது. எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” - அனைத்து உயிரினங்களின் இருப்பு இதுதான் என ஞானியரும், பெருமுனிவர் பலரும் கூறுவர்” என அந்த உபநிடதம் கூறுகிறது.
ஆதி சங்கரர், வேதாந்த சூத்திரத்தின் விளக்கவுரையில், மாசிலா நிரந்தரமான தூய்மையுடன், முழு அறிவுடன், தன்னிச்சையான தன்மையுடன், வாக்கு, மனம் இவைகளைக் கடந்து, பொருள் என்ற வரையிலாது எங்கும் எதிலும் நீக்கமற நிறைவாக எது இருக்கிறதோ அதுவே பரம்பொருள் என்கிறார்.
நித்ய வஸ்து ஏகம் பிரம்மம்
தத் வ்யத்ரிக்தம் ஸர்வம் அநித்யம்
இந்த உலகமும் அதில் உள்ள அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை நிலைநிறுத்துவது என்றும் மாறாது. அது எப்பொழுதும் ஒன்றே. அதுதான் கடவுள் - பிரம்மன் - இறைவன் என்று அழைக்கப்படும் யதார்த்தமான ஒரே உண்மை என வேத சாஸ்த்திரங்கள் உரைக்கின்றன.
குணமிலா, அமைதி நிலையான பரப்பிரம்மன் என்றும் சத்தியம், ஞானம், அனந்தம்; அதாவது சத் சித் ஆனந்தம் (அச்சொற்கள் மருவி சச்சிதானந்தமாயிற்று தமிழில்). அதாவது,
யாண்டும் உள்ள, மாறா உண்மை என்பது சத்தியம். அது தூய இருப்பு. மெய்ப்பொருள்.
யாண்டும் உள்ள, மாறா அறிவு என்பது ஞானம். அது தூய உணர்வு. மெய்யறிவு.
யாண்டும் உள்ள, மாறா சுகம் என்பது ஆனந்தம். அது தூய இன்பம் . பேரின்பம்.
இந்த நிலையை முதலில் அறிந்துணராமல் உயிர் வாழ நினத்ததனால் உறவெனும் தளையுற்றேன் உறுதியாக என்று கூறுகிறார் ஜனகர்.
முடிவுரை
பகவத் கீதையில் (9.4)
“நான் எனது தோன்றாத உருவின் மூலம் இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன். எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றன்; ஆனால் அவர்களில் நான் இல்லை”
என்று பரம்பொருள் தத்துவத்தை விளக்குகிறான் கண்ணன். இந்த விளக்கத்தை தழுவியது ஜனகரின் “உடல் நானல்ல, உடலும் எனக்கல்ல, உற்ற தேகத்து உணர்வும் நானல்ல, தூய உணர்வே நான்” எனும் இந்த ஸ்லோகம்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! This post is public so feel free to share it.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !


