முகவுரை
சுவாமி ஓம்காரானந்தா தனது அறிவுரைகளில் ஒரு சிறுகதையைக் கூறி அதிலடங்கும் தத்துவத்தை விளக்குவார். அதில் ஒன்றினை இப்போது காண்போம்.
ஒரு ஊரில் ஒரு மிகப்பெரிய செல்வந்தன் இருந்தான். செல்வம் சம்பாதிப்பதில் மிக கெட்டிக்காரன். ஆனால் சேர்த்த சொத்திலிருந்து தான தர்மங்கள் எதுவும் செய்யாமாட்டான். ஞானி நீலகண்ட தீட்சிதர் கூறுவது போல “ம்ருத்யோபி அர்தம் ந மோஷ்யாமி” - செத்தாலும் யாருக்கும் என் சொத்தை கொடுக்க மாட்டேன் என்ற மனஉறுதியுடன் செல்வத்தை குவித்தான். பின் தனது “விருப்பு ஆவணம்” (Will) தயாரித்தான். அதில் தான் இறக்கும்போது தன் செல்வமனைத்தும் தன்னுடனேயே சேர்த்து புதைக்க வேண்டும் என்று எழுதி வைத்தான். ஊரில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வந்தது. சில வருடங்களுக்குப்பிறகு அவன் பிணியால் இறந்தான். அவனது இறுதி ஊர்வலத்திற்கு அனைவரும் வந்தனர்; அவனைப்பாரக்க அல்ல; அவனுடன் புதைபடப்போகும் செல்வங்களக்காண. பூமியில் தோண்டப்பட்ட குழியில் சவப்பெட்டியை இறக்கும் முன்பு, ஊர் மக்கள் அவளது மனைவியிடம் செல்வங்கள் எங்கே என்று கேட்டனர்; அவளும் மூடிய ஒரு சிறு பேழையக் கொடுத்தாள். ஆச்சரியத்துடன் ஊர்மக்கள் கேட்டனர் “தானமேதும் செய்யாமல் அவ்வளவு செல்வங்களைக் குவித்தானே உன் கணவன். நீ வெறும் சிறு பேழை மட்டும் தான் அவன் சொத்து என்கிறாயே. இது என்ன நியாயம்?” என்று வினவினர். அவளும் முகத்தில் ஒரு மாறுதலும் இன்றி “அனைத்து செல்வங்களும் ஒரு காசோலையில எழுதி இந்தப் பேழையிலே வைத்துள்ளேன். எங்கு செல்கிறாரோ அவர் அந்த காசோலையை காசாக மாற்றிக் கொள்ளலாம்” என்றாள் அவள்.
நகைச்சுவையை விடுத்து, இந்த கதையினுள் உள்ள சாராம்சத்தை ஆயவேண்டும் நாம். யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமையை அறிந்துணர வேண்டும். அஷ்டாவக்ர கீதையின் இந்த ஸ்லோகம் இந்த இரண்டு கோட்பாடுகளை உள்ளடக்கியது.
ஸ்லோகம்
நாஹம்ʼ தே³ஹோ ந மே தே³ஹோ ஜீவோ நாஹமஹம்ʼ ஹி சித் ।
அயமேவ ஹி மே ப³ந்த⁴ ஆஸீத்³யா ஜீவிதே ஸ்ப்ருʼஹா ॥ 2-22 ॥
தமிழாக்கம்
உடல் நானல்ல, உடலும் எனக்கல்ல,
உற்ற தேகத்து உணர்வும் நானல்ல, தூய
உணர்வே நான்; உயிர் வாழ நினத்ததனால்
உறவெனும் தளையுற்றேன் உறுதியாக
விளக்கம்
ஜனகர் கூறும் “நாஹம் தே³ஹோ ந மே தே³ஹோ ஜீவோ நாஹமஹம்“ உடல் நானல்ல, உடலும் எனக்கல்ல, உற்ற தேஹத்து உணர்வும் நானல்ல என்ற சொற்களை ஆய்வோம், இப்பகுதியில்.
உடல் நானல்ல
மனித உடல் ஒன்றுடனொன்று தொடர்புபட்டு இடைவினையாற்றும் பல உடல் தொகுதிகளைக் கொண்டுள்ளது. வெவ்வேறு உடல் தொகுதிகள், வேறுபட்ட உடற்கூற்று அமைப்புக்களைக் கொண்டிருந்தாலும், மிகவும் நெருங்கிய தொடர்புகொண்டு, ஒன்றுடனொன்று இணைந்து செயலாற்றுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு தொகுதியும் தனக்கான தனிப்பட்ட தொழில்களையும், நோக்கங்களையும் கொண்டு செயல்படுவதற்கேற்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன. இதைப்போல விலங்கினங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உடல் உண்டு. இறந்தபின் விலங்கினங்களின் உடலுக்கு மதிப்பு அதிகம்; மனித உடலுக்கு அல்ல.
அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்;மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;
நமது இதயத்தை சம்மட்டியால் அறைந்து உணர வைக்கும் பட்டினத்தாரின் வரிகள், நிலையாத உடல்தான் நான் என்று உணரக்கூடாதென்பதை வலியுறுத்துகின்றன. “நாலு பேர் சுமப்பதை நான் சுமக்கிறேன்” என்றான் ஒரு ஞானி. பின் ஏன் தான் உடலை சுமக்க வேண்டும். உடலின் பயன்தான் என்ன? அன்னத்தால் ஆய உடம்பின் பயன் எல்லாம் முன்னோனாகிய உயிரைக் காட்டி விடும்என்கிறாள் அவ்வைப் பாட்டி.
உடலும் எனக்கல்ல
உடல் நானல்ல என்பதை அறிந்தோம். ஆனால் அந்த உடல் நமக்காகத்தானே என்ற ஐயம் அடுத்து. நான்தானே அந்த உடலை பராமரித்து, உடலை வருத்தி உழைக்கிறேன். எனவே அந்த உடல் என்னுடையது அல்லவா என்ற கேள்வி எழுவது நியாயம். ஒருவகையில் அன்றாட வாழ்வியல் நிலையில் இதில் தவறு ஏதுமில்லை. ஆனால் சற்று ஆழ்ந்து யோசித்தால், என் உடலை வருத்தி புரியும் உழைப்பு, அதனால் வரும் சம்பாதிப்பு என்றால், உடனடியாக நாம் பட்டிருக்கும் மூன்று கடன்கள் நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.
நம் உடல் எங்கிருந்து வந்தது - பெற்றோரிடமிருந்து.
நம் உழைப்பு திறன் எங்கிருந்து வந்தது - ஆசானிடமிருந்து
இவரிருவரின் மூலம் எது - பரம்பொருள் எனும் இறைவன்
ஆக, இந்த மூவரும் இலையேல் எங்கிருந்து வரும், நம் உடலும், கடின உழைப்பும், செல்வமும். எனவே தான், கடவுளுக்கும், முன்னோர்களுக்கும்/பெற்றோர்களுக்கும், நமக்கு ஆசானாக விளங்கிய ரிஷிகளுக்கும் நாம் நன்றி செலுத்தி, செலுத்த வேண்டிய கடன்களை (தேவ, பித்ரு, ரிஷி ருணம் என்று வடமொழியில் கூறுவர்) நிறைவேற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் தெளிவாகச் சொல்கின்றன.
உற்ற தேஹத்து உணர்வும் நானல்ல
சரி, உடல் நானல்ல, உடலும் எனக்கல்ல. அப்படியானால் இந்த உடலால் என்ன பயன்?இதற்கு அவ்வையார் எளிய தமிழில் விளக்குகிறார்.
உடம்பினைப் பெற்ற பயனாவதெல்லாம்
உடம்பினுள் உத்தமனைக் காண்
உடம்பினை நாம் பெற்றிருக்கிறோம். இதனைப் பெற்றிருக்கும் பயன் எல்லாமே நம் உடம்பில் இருக்கும் உத்தமனைக் காண்பதே. அந்த உத்தமன் யார்?
அந்த உத்தமன் என்பவர் செவிகளின் செவியாய், மனதின் மனமாய், வாக்கின் வாக்காய், மூச்சின் மூச்சாய், கண்ணின் கண்ணாய் நம்மைக் கடந்தும், நமக்குள்ளும் தூய உணர்வாய் மாறாமல் நிலையாக இருக்கும் பிரம்மன் எனும் பரம்பொருள் என்கிறது நமது மறைகள்.
அந்தப் பரம்பொருளை சுய அனுபவத்தின் மூலம் மட்டுமே அறிந்துணர முடியும். அதற்குத்தான் உடம்பு படைக்கப்பட்டுள்ளது என்கிறார் ஔவையார்.
உடலின் இயக்கத்திற்கு காரணம் உடலாக இருக்க முடியாது. ஏனெனில் அது ஒரு ஜடப்பொருள். இந்த உடலை உயிர் மேவியுள்ளது. அப்படியென்றால் அந்த உயிர்தானே நான்?
உடம்பினுள் இருக்கும் இந்த உயிரான உணர்வை, ஜீவன் (சீவன்) என்கிறோம். உணர்வுடையார் உத்தமனை உணரவேண்டும் என்றால் உத்தமனாக என்னுள் உறைந்திருக்கும் பிரம்மனை உணர்வதற்குத்தான் இந்த உயிரெனும் உணர்வு (ஜீவா) உடலில் (தேஹம்) உள்ளதோ?
அப்படி என்றால் நான் யாராக இருக்கிறேன்? ஜீவனாகவா அல்லது பிரம்மனாகவா; எதற்கு ஜீவன், பிரம்மன் என்ற இரண்டு உணர்வுகள் என்னுள்ளே? நான் இருக்கிறேன்; எனக்கு ஜீவன் இருக்கிறது. இதை நான் அறிகிறேன், உணர்கிறேன். ஆனால் பிரம்மனை நான் அறிந்ததில்லை, உணர்ந்ததில்லை. எனவே என் தன்னுணர்வே (ஜீவனே) நான் என்று ஏன் கொள்ளக்கூடாது?
ஏற்றுக் கொள்ளலாம். நம்மில் பெரும்பாலானோர் அப்படித்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அப்படி ஏற்றுக்கொண்டதனால்தான், நான்-எனது, நீ-உனது, அது-இது என்று இருமைப்படுத்தி இந்த உலகினை நுகர்ந்து, இன்ப-துன்பம், பிறப்பு-இறப்பு எனும் பிறவிப்பிணியில அல்லலுறுகிறோம். நமது வாழ்வின் குறிக்கோள் பரிபூரண நிலையான துன்பங்கள் இல்லாத மகிழ்வு என்பதனை நினைவு கூற வேண்டும்.
ஒவ்வொரு உடலிலும் ஜீவன், பிரம்மன் என்று இரண்டு இருப்பு தெரிகிறது;ஒன்றை உணர முடிகிறது. மற்றொன்றை உணர இயலவில்லை, அல்லவா. அனுபவத்தால் அறிந்துணரும் இறுதி உண்மை என்பது ஒன்றே, இரண்டு அல்ல என்று அத்வைத வேதாந்தம் மிகத்தெளிவாக கூறுகிறது.
ஆக, உற்ற தேஹத்திலிருக்கும் உயிரும் நானல்ல. பின், நான் யார்? இந்த கேள்வியை ஜனகர் எவ்வாறு கையாளுகிறார் என அடுத்த பகுதியில் காண்போம்.
அதுவரை…….
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)


