முகவுரை
பரம்பொருளின் படைப்பில், பதினான்கு உலகங்கள் உள்ளன என மறைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. நமது பூமி நமக்குக் கீழே ஏழு உலகங்களும் நமக்கு மேலே ஆறு உலகங்களும், பூமி மையத்திலும் உள்ளன. நமக்கு மேலே உள்ள உலகங்கள் சொர்க்கத்தின் வெவ்வேறு நிலைகள் என்றும், நமக்குக் கீழே உள்ளவை நரகத்திற்குரியவை என்றும் கூறலாம்.
இத்தகைய கட்டமைப்புகள், ஒழுக்கமான நடத்தை மற்றும் நற்பண்புமிக்க வாழ்க்கை முறையை வளர்ப்பதற்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவரை ஊக்குவிப்பதோடு, இந்த உலகங்கள் பொதுவாக மக்களிடையேயான மற்றும் சமூகங்களுக்கு இடையேயான தொடர்புகளை கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஒழுங்குபடுத்தும் வழிமுறைகளாக செயல்படுகின்றன.
நான் யார் என்று அறிந்துணர்ந்த ஞானி, இந்த உலகங்களை எவ்வாறு காண்கிறார் என்பதனை இந்த ஸ்லோகம் கோடிட்டு காட்டுகிறது.
ஸ்லோகம்
ஶரீரம்ʼ ஸ்வர்க³நரகௌ ப³ந்த⁴மோக்ஷௌ ப⁴யம்ʼ ததா² ।
கல்பநாமாத்ரமேவைதத் கிம்ʼ மே கார்யம்ʼ சிதா³த்மன꞉ ॥ 2-20 ॥
தமிழாக்கம்
உடலும் பயமும் சொர்கமும் நரகமும்
கற்பனை மட்டுமே இவை அனைத்தும்!
என்ன நோக்கம் இவைகளால், தூய
உணர்வெனும் ஆன்மாவான எனக்கு!! 2.20
விளக்கம்
நம்மை நாம் ஒரு தனிப்பட்ட நபராக (உடல் மன, புத்தி வளாகத்தில் உறையும் ஒரு ஜீவனாக, அதாவது அவைகளால் வரையறுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட இருப்பாக) உணரும் (எடுத்துக் கொள்ளும்) வரை, அந்த தனிப்பட்ட நபரின் வினைகள், வினைப் பலன்களின்படி இன்பம், துன்பம் இரண்டினையும் அனுபவிப்போம்.
இதில் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் கருதும் அந்த தனிப்பட்ட நபர் (“அந்த நான்” எனக்கூறுவோம் அவரை, நமது இந்த படிப்பிற்காக) உண்மையானவர் அல்ல. இதனை வேதங்களும், நமது சொந்த முன்ஆய்வு செய்யப்படாத - அல்லது தவறாகப் பகுப்பாய்வு செய்யப்பட்ட - அனுபவத்தைப் பற்றிய பாரபட்சமான சுய-விசாரணையும் உறுதிப்படுத்துகிறது.
அந்த சுய விசாரணையின் முடிவு, வேதங்கள் கூறிடும் ஒரே உண்மை.
“முழுமையான, வரம்பற்ற, செயலற்ற, பண்பு அற்ற, நித்திய, எப்போதும் இருக்கும், எல்லாவற்றிலும் நிறைந்த, இருமையிலா ஒருமையான விழிப்புணர்வே நான் எனும் அந்த தனிப்பட்ட நபர். இது தான் உண்மையான ஆத்ம ஸ்வரூபம் என்று கொள்ளலாம். இதனை அறிவதே ஆத்ம ஞானம். இதுவே இலக்கு”.
இந்த நானே சத்யம், நித்தியமானவன்; நேரம் மற்றும் இடம் இரண்டிற்கும் அப்பாற்பட்டவன். (இவரை “இந்த நான்” எனக்கூறுவோம், நமது இந்த படிப்பிற்காக)
“அந்த நான்” ஒரு மித்யா; அதாவது, குறித்த நேரத்தில் வருகிறேன், குறித்த நேரத்தில் செல்கிறேன், மறுபடியும் குறித்த நேரத்தில் வருவேன்; நிலையற்ற, மாறுகின்ற, குணங்கள் அடங்கி, நேரம் இடம் இவைகளுக்கு கட்டுப்பட்டு வினைகள் புரிந்து வினைப் பலன்களின்படி இன்பம், துன்பம் இரண்டினையும் அனுபவிக்கும் இருமையான மனிதன் (நர ஜன்மம்)
வந்து செல்லும் “அந்த நான்” எனும் தனிப்பட்ட நபரான என்னை, மேற்கூறிய இலக்கை (“இந்த நான்” எனும், ஆத்ம ஞானத்தை அறிந்துணர) அடைய சரியான மனநிலையை ஏற்படுத்தி, சரியான பாதையில் கொண்டு செல்லத்தான் வேதங்களின் கர்ம காண்டங்கள் எனும் முதல் பகுதிகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அங்கேதான் பிறப்பு, இறப்பு, வினை, வினைப் பலன்கள், மறுபிறப்பு, வினைப் பலன்களால் நான் எங்கு செல்கிறேன், எங்கிருந்து வருகிறேன் என்பதை உணர்த்த குறிப்பிடப்பட்ட இடங்களான சொர்க்கம், நரகம் என்றேல்லாம் கூறப்பட்டுள்ளது.
இவைகளனைத்தும் நிலையற்ற, மாறுகின்ற, குணங்கள் அடங்கி, நேரம் இடம் இவைகளுக்கு கட்டுப்பட்டு வினைகள் புரிந்து வினைப் பலன்களின்படி இன்பம், துன்பம் இரண்டினையும் அனுபவிக்கும் “அந்த நானுக்கு”த்தானே ஒழிய, முழுமையான, வரம்பற்ற, செயலற்ற, பண்பு அற்ற, நித்திய, எப்போதும் இருக்கும், எல்லாவற்றிலும் நிறைந்த, இருமையிலா ஒருமையான விழிப்புணர்வெனும் “இந்த நானுக்கு” இல்லை.
இதனைத்தான் ஜனகர் தன் நிலையாக உணரந்து, உடலும் பயமும் நற்கதியும் நரகமும் அனைத்தும் கற்பனையே, அவைகளால் ஒரு பயனுமில்லை. ஏனெனில் நானே தூய உணர்வாக இருக்கிறேன் என்கிறார், இந்த ஸ்லோகத்தஇல். அதாவது நான் வரையறுக்கப்பட்ட “அந்த நான்” அல்ல, வரையிலா நீக்கமற நிறை “இந்த நானே” நான்; எனவே உடலும் பயமும் சொர்கமும் நரகமும் கற்பனை மட்டுமே என்கிறார் ஜனகர்.
முடிவுரை
பகவத் கீதையில் (9.21) ஒருவர் ஸ்வர்கத்திற்குச் சென்றாலும், அவருடைய நல்வினை்பயன்களின் கணக்கு முடிந்தவுடன் அவர் திரும்பி வர வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் விசா என்கிறோம் இதனை. எனவே, ஸ்வர்கமோ, நரகமோ என்பது இறுதியானதல்ல, அவைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து அதைத் தவிர்த்துவிட்டு, ஆத்ம விசாரணையை மேற்கொண்டு நம்மை நாம் அறிவோம்.
மேலும், ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யா, ஸ்வர்கத்தை நாம் மனதில் அமைதி எனவும், நரகம் என்பது மனத்தில் உள்ள இதன் எதிர்மறையாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். வெளிப்புற ஸ்வர்கம் இருக்கிறதா இல்லையா என்பது பொருளற்றது; ‘மனதில் உள்ள எதிர்மறைகளை நீக்கி, இங்கேயும் இப்போதும் அமைதியை அடைய முயலுங்கள்’ என்பது செய்தி. அமைதிக்காக வேறொரு பயணத்திற்காக காத்திருக்க வேண்டாம். அதை இங்கேயும் இப்போதும் அறியலாம்.
இதுதான் இந்த ஸ்லோகத்தில் உள்ள அறிவுரை நமக்கு.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! This post is public so feel free to share it.
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !


