ஸ்லோகம்
யதா² ப்ரகாஶயாம்யேகோ தே³ஹமேனம்ʼ ததா² ஜக³த் ।
அதோ மம ஜக³த்ஸர்வமத²வா ந ச கிஞ்சன ॥ 2-2 ॥
தமிழாக்கம்
உடலும் உலகும் ஒளிர்வது என்னாலே
அதனால் உலகும் அனைத்தும் என்வசமே
அல்லது எதுவும் இல்லை என்னிடமே
ஜனகரின் முதல் கூற்று
உடலும் உலகும் ஒளிர்வது என்னாலே! அதனால் உலகும் அனைத்தும் என் வசமே என்கிறார் ஜனகர். இதற்கு ஸ்வாமி விராஜானந்தா (ராமகிருஷ்ணமடாதிபதி) அவர்கள் அருளிய விளக்கத்தைக் காண்போம்.
ஜனகரின் முதல் கூற்றினை புரிந்துகொள்ளும் முன், ஒரு சிறிய பரிசோதனையை நடத்துவோம்.
ஒரு இருண்ட அறைக்குள் சில பொருட்களை வைக்கவும். பிரகாசமான வெயில் நாளில் அறைக்கு வெளியே ஒரு கோணத்தில் ஒரு சிறிய நிலைக்கண்ணாடியை வைக்கவும். இருண்ட அறையின் ஜன்னலைத் திறந்து, கண்ணாடியின் கோணத்தைச் சரிசெய்வதன் மூலம் சூரிய ஒளியை ஜன்னல் வழியாக இருண்ட அறைக்குள் பிரதிபலிக்க முயற்சிக்கவும். அப்படி செய்தவுடன், அறையில் நாம் என்ன காண்கிறோம்? இருட்டறையில் கண்ணுக்கு தெரியாமல் இருந்த பொருள்கள், கண்ணாடி மற்றும் ஜன்னல் வழியாக இருண்ட அறைக்குள் நுழையும் சூரிய ஒளியின் இணைப்பு மூலம் ஒளிர்வதை நாம் காண்கிறோம் அல்லவா. இருண்ட அறையை யார் அல்லது எது ஒளிரச் செய்கிறது; கண்ணாடியா அல்லது சூரியனா?
இருண்ட அறையை ஒளிரச் செய்வது கண்ணாடி என்று வைத்துக்கொள்வோம், அதே பரிசோதனையை நள்ளிரவில் முயற்சிக்கலாமா? கண்ணாடியை அதே கோணத்தில் அல்லது வேறு எந்த கோணத்திலும் வைத்து ஒளிர முயற்சி செய்யுங்கள். கண்ணாடியால் வெளிச்சம் தர முடியாது. எனவே, கண்ணாடி மட்டுமே வெளிச்சம் தரும் என்று சொல்ல முடியாது. ஆக, சூரியன் தான், இருட்டு அறையை ஒளிரச்செய்கிறது.
இருட்டு அறை ஒளிர்வது கண்ணாடியால் அல்ல என்று சொன்னால், கண்ணாடியை அகற்றினால் என்ன நடக்கும்? மீண்டும், அறை தொடர்ந்து இருட்டாக இருக்கும், ஏனென்றால் கண்ணாடி இல்லை என்றால், சூரிய ஒளிநேரடியாக அறைக்குள் ஊடுருவி ஒளிர முடியாது. எனவே, வெறும் கண்ணாடியால் ஒளிர முடியாதது போல் வெறும் சூரியனால் மட்டும் அறைக்கு வெளிச்சம் தர முடியாது.
எனவே, இந்தப் பரிசோதனை மூலம் சூரியன் மற்றும் கண்ணாடி இரண்டும் சேர்ந்து, இருண்ட அறையின் பொருட்களை ஒளிரச் செய்கிறது என்பதை அறிகிறோம். இப்போது நாம் நடத்திய பரிசோதனையை நம்முள்ளே நடத்தி ஆராய்வோம்.
முதலில், சக்தி வாய்ந்த ஒளியின் மூலமான சூரியனை (மஹா தீபம்) நம் ஆத்மாவிற்கும், சிறிய நிலைக்கண்ணாடியை நம் மனத்திற்கும், இருண்டஅறையை இந்த பிரபஞ்சத்திற்கும் ஒப்பிடுவோம்.
ஆத்மா என்பது நித்ய அபரோக்ஷம் (என்றுமே அறியப்படாதது) என்கிறது மறை. பின் எப்படி ஆத்மாவை சூரியனுடன் ஒப்பிடலாம்? பதில் காண்பது கடினமல்ல. என் உடலில் என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரியாது. என் மனதில் என்ன நடக்கின்றது என்பதும் எனக்குத் தெரியாது. எனினும் நான் இருக்கிறேன் என்று இருட்டறையிலும், ஆழ் உறக்கத்திலும் கூட எனக்குத் தெரியும். என்னை அறிய, வெளி ஒளி எனக்கு தேவையில்லை. எங்கிருந்து வந்தது அந்த உள் ஒளி? அந்தஒளி என்ன சூரியனைப் போல மஹா தீபமா? ஆம், இல்லையெனில் நடு இரவில், கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நட்சத்திரங்களை எப்படி நாம் காண முடிகிறது? ஆக, அந்த உள் ஒளியே, சூரியனைப் போல, சுயமாக ஒளிர்விடக்கூடய ஆன்மா. ஸ்வயம் ப்ரகாஸம்.
இப்போது முழு உலகமும் இரண்டு காரணிகளால் பார்க்கப்படுகிறது. காரணிகள் என்ன? கண்ணாடி எனும் மனம் மற்றும் சூரியனைப் போன்ற ஆத்மா. ஆக, இந்த ஆத்மாவும் மனமும் தான் உலக அனுபவத்திற்குக் காரணம். இதை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்.
1. சூரியனால் ஆதரிக்கப்படும் கண்ணாடி, இருண்ட அறையை ஒளிரச்செய்கிறது என்று நாம் கூறலாம். அதேபோல, ஆத்மாவின் ஆதரவுடன் மனம் அனைத்தையும் அனுபவிக்கிறது என்று சொல்லலாம். கண்ணாடி சூரியனிடமிருந்து பிரகாசத்தை கடன் வாங்குவது போல, ஆத்மாவிலிருந்து மனம் ஒளியெனும் அறிவு (உணர்வை) கடன் வாங்கி உலகை ஒளிரச்செய்கிறது. எனவே இங்கு மனதுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படி உணர்வின் ஆதரவு பெற்ற மனதை அறிபவன் என்கிறோம். அறிபவன், ஆத்மாவால் ஆதரிக்கப்படும் உலகத்தை அறிகிறான்/அனுபவிக்கின்றான். இங்கே மனதுக்கு முக்கியத்துவம்கொடுக்கப்படுகிறது, ஏனென்றால் அது பொருளாக உள்ளது (subject).
2. இரண்டாவது கண்ணோட்டம், மனம் அல்ல உலகத்தை ஒளிரச் செய்வது, ஆத்மாவே என்பது. எனினும், கண்ணாடியின் பங்கை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கண்ணாடி மிகவும் முக்கியமானது, எனவே பிரதிபலிக்கும் ஊடகம் எனும் மனதின் மூலம், மனமெனும் கருவி மூலம், ஆத்மா மட்டுமே உலகை ஒளிரச் செய்கிறது என்று கூறவேண்டும். கருவிஅகற்றப்பட்டால், என்ன நடக்கும்? கண்ணாடியை அகற்றினால், சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கும்; ஆனால் அது இருண்ட அறையை ஒளிரச் செய்யமுடியாது; அறை மீண்டும் இருட்டாகிவிடும்; அதேபோல, மனக்கண்ணாடி இருக்கும் போது, ஆத்மா உலகத்தை ஒளிரச் செய்கிறது. மனக்கண்ணாடி மூடப்பட்டால், உலகம் இருட்டாக இருக்கிறது; ஆத்மா ஜடமாகிவிட்டதால்அல்ல. ஆத்மா எப்பொழுதுமே ஸ்வயம் பிரகாஸம் தான்.
மனமெனும் கண்ணாடியை எப்போது மூடுகிறோம்? தூக்கத்தின் போது. உறக்கத்தின் போது ஆத்மாவுக்கு என்ன நடக்கும்? ஆத்மா சூரியனைப் போன்றுதொடர்ந்து சுயமாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்; ஆனால் மனம் என்ற ஊடகம் மூடப்படுவதால் உலகம் இருண்டு போகிறது; பிரகாசமான பகலில் கூட, மனம் மூடிக்கொண்டால், அது இருட்டாக இருக்கும்.
ஆதலால், அனைத்தையும் விளக்குபவர் யார்? ஆத்மா, நித்திய ஒளி ஒன்றே. எனவே, எந்த ஒன்றையும் நாம் அறிந்திருக்கும் போதெல்லாம், அதாவது ஒவ்வொரு அறிவிலும், ஒவ்வொரு இந்திரிய ஞானத்திலும் (ஷப்த ஞானம், ஸ்பர்ஷ ஞானம், ரூப ஞானம்), ஒவ்வொரு பொருள் (object) பற்றிய கருத்திலும் ஆத்மாவின் இருப்பு முன்கூட்டியே வெளிப்படுத்துகிறது. ஆத்மா இருப்பதற்கு நமக்கு தனி ஆதாரம் தேவையில்லை. இருட்டு அறையில் நாம் காணும் ஒவ்வொரு பொருளும் சூரியன் போன்ற ஆத்மா இருப்பதனால்தான். அறையில் பொருட்கள் (objects) இல்லாவிட்டாலும், எதுவும் தெரியாது என்கிறோமே, அந்த எதுவும் தெரியவில்லை என்பதும் ஆத்மாவினால்தான் அறியப்படுகிறது. இது தான் ஆத்மாவின் ஸ்வயம் பிரகாசத்வம் என்று அழைக்கப்படுகிறது; ஆத்மாவின் சுய ஆதாரம்.
எனவே ஒவ்வொரு உணர்விலும், ஆத்மாவாகிய நான், சுயமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்; மற்ற அனைத்தும் ( அனாத்மா ) பொருள் சார்ந்து தெளிவாக உள்ளன; ஒவ்வொரு பார்வையிலும், நான் எனும் ஆத்மா, சூரியனைப் போல சுதந்திரமாகத் தெளிவாகத் தெரிகிறது, மேலும் அனாத்மா இருண்ட அறையைப் போலச் சார்ந்து இருக்கிறது.
இது தான் பரிசோதனையிலிருந்து நாம் கற்றுக்கொண்டது.
இதைத்தான் ஜனகர் “உடலை ஒளிரச் செய்து பிரபஞ்சத்தை வெளிப்படுத்தும் ஒரே ஒருவன் நான் தான். பிரபஞ்சம் மற்றும் உடல் இரண்டும் எனக்கு ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. உடல் என்னுடையது, பிரபஞ்சம் என்னுடையது அல்ல என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை. இரண்டும் என்னுடையவை, ஏனென்றால் இரண்டும் எனக்கு என்னிடமிருந்து வெளிப்பட்டவை” என்று கூறுகிறார்.
ஜனகரின் இரண்டாவது கூற்று
“உலகமே என்னுடையது, இல்லையெனில் எதுவுமே என்னுடையது அல்ல " என்கிறாரே, அதற்கென்ன பொருள்? என் ஒளியில் தெரியும் உலகம் உட்பட எதுவுமே எனதல்ல என்று கூறுவது, முதல் கூற்றிற்கு முரணாக இருக்கிறதே!
இதனை விளக்க மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
ஒரு ஓவிய அருங்காட்சியகத்திற்குள், ஒரு பாமரனும் ஒரு ஓவிய தொழில்நுட்ப கலைஞரும் நுழைகின்றனர். இருவரும் கலைப் படைப்புகளைப் பார்த்து, பாராட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள். யாரோ ஒரு ஓவியன் எவ்வளவு துல்லியமாகஒரு சூரிய உதயத்தை ஓவியமாக வரைந்துள்ளான் என்பதைப் பார்த்து பாமரன் உற்சாகமடையலாம். ஆனால் ஓவிய தொழில்நுட்ப கலைஞர் அதே ஓவியத்தின் மிகவும் நுட்பமான அம்சங்களில் மகிழ்ச்சியைக் காணலாம், உதாரணமாக சரியான தூரிகை, அளவான வண்ணக்கலவை, எந்தக் காலத்தில் ஓவியம் வரையப்பட்டது, அந்தக் காலக்கட்டத்தின் தாக்கங்கள் மற்றும் பல, பாமரன் காணாத பல அம்சங்களைக் கண்டு மகிழலாம்.
இருவருமே ஒரு பொருளை (ஓவியத்தை) நுகர்ந்து மகிழ்கின்றனர். எனினும் இங்கே இருதரப்பட்ட மனிதர்கள்; ஒருவரின் நோக்கு பருநிலை - வரையப்பட்டஓவியம்; இன்னொருவரின் நோக்கு நுண் நிலை - வரையப்பட்ட ஓவியத்தின் உள்ளே இருக்கும் விஷயங்கள்.
என் போன்ற பெரும்பாலானோருக்கு பொருள் சார்ந்த உலகு, அதன் அனுபவம் மட்டுமே இறுதி இலக்காகிறது. அதுதான் அவர்கள் கண்களுக்கு (புலன்களுக்கு) தென்படுகிறது. அந்தப் பொருளின் நிலையான/நிலையற்ற சாரம் அவர்களுக்குபுலப்படுவதில்லை. ஆனால் நுன்நிலை நோக்குடையோருக்கு, பொருளும் பொருள் சார்ந்த உலகமும் அவைகளின் நுகர்வும் தெரிவதில்லை; அந்தப் பொருட்களின் நிலையான/நிலையற்ற நித்திய சாரம் மட்டுமே அவர்களுக்கு புலப்படுகிறது.
இந்தக் கருத்தினைத்தான் பகவத் கீதை 2-69ல்
யா நிஷா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி சம்யமி |
யஸ்யாம் ஜாக்ரதி பூதானி ஸா நிஷா பஷ்யதோ முனேஹ் || 2.69 ||
என்று கண்ணன் கூறுகிறான். அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவு போலஇருக்கிறதோ, அந்த நித்தியமான ஞானவடிவான பரமானந்தத்தை அடைவதில் ஞானி விழித்திருக்கிறான். எதில் அழியும் தன்மையுடைய உலகியல் இன்பங்களை அடைவதில் அனைத்து உயிரினங்களும் விழித்திருக்கின்றனவோ, பரமாத்மாவின் த்த்துவத்தை உணர்கின்ற ஞானிக்கு அது இரவு போல ஆகிறது என்கிறான் கண்ணன்.
அது போல கேனோபநிஷத்தின் இரண்டாவது கண்டம் 2.3 பரம்பொருளை விளக்குகையில்
“யாருக்கு அது அறியப்படாததோ, அவனுக்கு அது அறியப்பட்டது. யாருக்கு அதுஅறியப்பட்டதோ, அது அவனுக்கு அறியப்படாதது”
என்று கூறுகிறது.
அதனால்தான், அறிவையும் அறியாமையும் அறிகின்ற அறிவே நான் என்று குருவின் அருளால் அறிந்துணரந்த ராஜரிஷி ஜனகன், என் ஒளியினால் தான் இவ்வுலகம் ஒளிர்வதால் உலகமே என்னுடையது என்றும், உலகத்தின் சாரமே நான் தானே, அதனால் எதுவுமே என்னுடையது அல்ல என்றும் கூறுகிறான்.
ஆகையினால் ஆன்மா, தூய உணர்வினால் (சித்) பன்மைத்தன்மையை ஒளிரச்செய்கிறது; தூய இருப்புத்தன்மையால் (சத்) அனைத்திற்கும் அடிமூலக்கூறாய் ஆதாரமாக உள்ளது.
அறிபவனும் நானல்ல, அறியப்படும் பொருளும் நானல்ல, அந்த அறிவே நான்தான் என்ற வேத வாக்கியத்தை விளக்கும் அருமையான இந்த ஸ்லோகம் ஜனகரின் ஆழ்ந்த உணர்வை குறிக்கிறது.
இருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம்
பொருள்கள் இலதோ புவி.
என்ற உமாபதி சிவாச்சார்யர் கூறும் இருளடைந்த உலகத்தை ஒளிவிப்பதுநானே என்கிறார் ராஜரிஷி ஜனகர்.
“ஒளிபொருந்திய, உயர்வான இடத்தில் (புத்தியில்), எந்தவித மாசுகளும் அற்ற, உறுப்புகளற்ற பரம்பொருள் விளங்குகிறது. அது தூயது, ஒளிக்கெல்லாம் ஒளி. அப்பரம்பொருளைத் தன்னை அறிந்தவர்கள் அறிவர்”
என்று முண்டக உபநிஷத்கூறுகிறது.
“ஒளிகளுக்கெல்லாம் ஒளியை வழங்கி, ஒளிக்கப்பாற்பட்ட ஒளியாக விளங்கும்ஆன்மாவை அறிந்தக் கணத்தில் எந்த ஒளியுமே ஒரு பொருட்டில்லை. இதுவே மெய்யறிவு. நாமே அந்த ஒளி. தன்னறிவே அந்த ஒளியின் சுடர். நாமே சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளியை வழங்கும் சக்தி. மனித சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பிழம்பாக வாழ்வோம். இருள் படியாமல் வாழ்வோம்" என்று கடோபநிஷத்தில், நசிகேதன் அவையோருக்கு அறிவுரை வழங்கியதை அறிந்துணர்ந்த ஒருவர் எப்படி தனது நிலையை எடுத்துரைப்பாரோ, தனது அதே நிலையைத்தான் ராஜரிஷி ஜனகர் இந்த ஸ்லோகத்தின் வழியாக தன்நிலையென ஆனந்தத்துடன் ஆணித்தரமாககூறுகிறார்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)