முகவுரை
இரவு உறக்கத்தில் ஒரு இன்பக் கனா கண்டேன். அழகான சொர்க்க தீவு ஒன்றில் எனது ஆட்சி. எனக்கென்று ஒரு தனி உலகம். என் மக்கள். என்சொந்தம். எல்லாம் இன்ப மயம். துன்பம், கவலை, சோகம் என்ற சொற்களுக்குஇடமே இல்லை. நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆளுமை…….அப்பப்பா! போதும், போதும் என வாரி வழங்கிட செலவங்கள்.
மறு நாள் காலை எழுந்தவுடன், “சார்! பால்! எவ்வளவு சார் வேணும். இன்னும் இரண்டு மாச பில் பாக்கி எப்ப கொடுப்பீங்க சார்!” பால்காரனின் குரலால் எழுப்பப்பட்ட நான், மீண்டும் பூலோகத்திற்கு வந்திறங்கினேன் கண் இமைக்கும் நேரத்தில்.
காலை எழுந்தவுடன் அடுத்த வேளை உணவிற்கு வழி தேடும் நான் கண்ட கனவு பொய்யா? இல்லை, நான் தான் கண்டேன். இந்த கனவு எனக்கு என்ன சொல்கிறது? “கனவில் காணும் வாழ்க்கையெல்லாம் கலைந்து போகும் கோலங்கள்” என்று கூறுகிறதா?
இந்த ஸ்லோகத்தின் விளக்கம் முடியும் வரை பொறுத்திருந்து பாரப்போம்.
ஸ்லோகம்
ஸஶரீரமித³ம்ʼ விஶ்வம்ʼ ந கிஞ்சிதி³தி நிஶ்சிதம் ।
ஶுத்³த⁴சின்மாத்ர ஆத்மா ச தத்கஸ்மின் கல்பனாது⁴னா ॥ 2-19 ॥
தமிழாக்கம்
உடலும் உலகமும் உண்மையல்ல
உறுதியுடன் உரைக்கின்றேன் !
களங்கமிலா இருப்புணர்வே நான்
கற்பனைக்கு இனி ஏது இடம் !
விளக்கம்
நான் இரவில் கண்ட கனவினை இப்போது ஆய்வோம்.
இது எனக்கு, என்னால் நடைபெற்ற பிரத்தியேகமாக தனிப்பட்ட காட்சி. இது யாருடனோ நடத்திய கூட்டு நிகழ்வாக இருக்க முடியாது.
இந்த கனவில், நான் எனக்குள் ஒரு உலகத்தை உருவாக்குகிறேன், மக்களையும் பொருட்களையும் உருவாக்குகிறேன். சுலபமாக சொல்லப்போனால், இந்த கனவில் நான் கடவுள். படைக்கும் தொழில் அவனுடையதல்லவா!
நான் கனவு கண்டேன் என்பதால் எனக்கு என் கனவு உண்மையானது; ஆனால் கனவில் வரும் நிகழ்வுகள் கற்பனையே.
நான் ஒரு கனவை உருவாக்கி அதில் நடிகனாகவோ அல்லது சாட்சியாகவோ நுழைகிறேன்.
கனவு என்பது எனக்குத் தெரிந்தவற்றுடன் தொடர்புடையது;
எல்லா கனவு பரிவர்த்தனைகளுக்கும் நான் அனுபவித்த உலகம் தேவை.
கனவுக்குள் நான் படைப்பாளி அல்ல; நான் ஒரு நடிகன் அல்லது சாட்சி.
கனவில், நான் யார் என்பது நான் யாருடன் என்னை இணைத்துக் கொள்ளவிரும்புகிறேனோ அதன் செயல்பாடு.
படைப்பாளியும், சாட்சியும், கனவு காண்பவர்களும் ஒன்றுதான்,
அதனுடன் தொடர்புடைய பாத்திரங்களைச் செய்வதில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.
இப்போது நான் கண்ட இந்த எனது கனவின் இரண்டு பண்புகளை சுருக்கமாககாணலாம்:
முழுக்கனவு மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் எனக்குள்/எனக்குள் தான்நடக்கும் - "நிஜ அந்தர்கதம்" மற்றும்
நடந்த முழு விஷயமும் வெளிப்புற காட்சி. "பஹிர்-இவ-உத்பூதம்"
எனவே, முழு கனவு உலகமும் விழித்தெழும் என்னில் வசிக்கிறது; துல்லியமாகச் சொல்வதானால், என் மனதில் அது ஓய்வெடுக்கிறது, ஆனால் மனம் விழிப்பவரின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதால், விழிப்பவனிடம் வசிக்கிறது என்று கூறுவதில் தவறில்லை. ஆக,
இங்கே நான் அதாவது விழிப்பவன், முழு கனவு உலகத்திற்கும் ஆதிஷ்டானம்/ஆதரவு/அடிப்படை. நான்தான் கனவின் இருப்பிடம். கனவுநேரம் என்பது நான் தூக்கத்தின் மூலம் ஆதரிக்கும் வரை, கனவு உலகம் தொடர்கிறது. விழிப்பவன் எனும் நான ஆதரவைத் திரும்பப் பெறும் தருணத்தில், கனவு உலகம் கலைந்து விடும்.
விழிப்பவன் எனும் நான்தான், நான் கண்ட கனவுலகத்திற்கு இருப்பை கொடுக்கிறேன். அதாவது நான் இல்லாமல், கனவு உலகம் இருக்கமுடியாது, அதேசமயம் கனவு உலகம் இல்லாமல், என்னால் இருக்க முடியும், இருக்கிறேன். அப்பாடா! கடவுளுக்கு நன்றி, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கனவு உலகில் என்ன நிகழ்வுகள் நடந்தாலும், விழிப்பவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த குறிப்பிட்ட கனவில், நான் என்ற விழிப்பாளனிடம் விசா மற்றும் பாஸ்போர்ட் கூட இல்லை. சிறிது நேரத்தில் விமானநிலையத்தை அடைந்தேன், சிறிது நேரத்தில் சொர்கத்தீவிற்கு பறந்தேன், நேரமும் இடமும் இல்லாமல் எல்லாம் முடிந்தது. சுருக்கமாக கனவு நிகழ்வு என்னைத் தொடவே இல்லை. நான் தேசம், காலம் கடந்தவன்.
கனவு பொருள் மற்றும் மக்கள்; எத்தனை? அல்லது அவர்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், அவர்கள் யாரையும் கணக்கிடமுடியாது் எண்ணக்கூடிய ஒரே ஒருவர் விழிப்பவர், எனவே, கனவில்இருப்பவர்கள் இருந்தும் இல்லாதவர்கள்.
கனவில் இருந்து விழித்தெழுந்திருக்கும் செயல்முறையைப் புரிந்துகொள்ளமுயல்வோம்.
உறங்கும்போது (நித்ரா), எனக்குள் உண்மையற்றதாக (மித்யா) இருக்கும் கனவு உலகம் எனக்கு வெளியே இருப்பதாகவும், உண்மையானதாகவும் தோன்றுகிறது. அதாவது உறக்கம் உள்ளிருக்கும் கனவுலகத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உண்மையற்றதை உண்மையாக்காட்டுகிறது.
உறக்கம் என்பது என்ன? விழிப்பினை அறியாத நிலை. விழிப்பே (விழிப்பவனே) ஆதிஷ்டானம், ஆதரவு, அடிப்படை என்று பார்த்தோம். ஆக, ஆதிஷ்டானத்தை அறியாத நிலையே நித்ரா எனும் உறக்கம். அதாவது“ஆதிஷ்டான அஞ்ஞானம் ஏவ நித்ரா, இதி உச்யதே”. அடிப்படைஆதாரத்தின் (விழிப்பு) அறியாமை (உறக்கம்), உள்ளிருக்கும் உலகத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உண்மையற்றதை உண்மையாக்காட்டுகிறது.
உறக்கம் (நித்ரா:) (அறியாமை) போய்விட்டால், அதாவது விழிக்கும் தருணத்தில் (“பிரபோத” சமயத்தில்) விழித்திருக்கும் நிலையை நான்அறிவேன். எனவே விழிப்பது என்பது விழிப்புணர்வைத் தவிர வேறில்லை. “பிரபோதா” என்பது ஆதிஷ்டான ஞானமேயன்றி வேறில்லை. மேலும் என்னை நான் விழிப்பவனாக உணர்ந்து கொண்டால், எனக்கு ஆதிஷ்டான ஞானம் இருக்கும்போது, வெளிப்புறக் கனவு வெளியில் இருக்காது, மேலும் உண்மையாக நான கண்ட கனவு உண்மையானது அல்ல; அது உண்மையற்றது என்று எனக்கு புலப்படுகிறது.
அதுபோலவே மாயையின் மறைப்பு சக்தியால் இவ்வுலகம் தனிப்பட்டபொருளாக உணரப்படுகிறது. அறியாமையின் மூலகாரணமான இந்த மறைப்பு நீங்கியவுடன், தூய உணர்வு (பிரம்மம்), தானே பிரகாசிக்கிறது. உண்மை மறைக்கப்படும் வரை மட்டுமே, இந்த சீவனின் படைப்பு எனும் உலகம்.
ஆக, பிரபஞ்சமெல்லாம் கனவுக்கு ஒப்பாகும் மாயைதான்; ஆனால் மாயைக்குஆதாரமாக பிரம்மம் என்பது இறுதி உண்மை. அந்த பிரம்மமே நான். மாயையேதுமில்லாத எல்லையற்ற “நான்” எனும் தூய இருப்புணர்வே “ஸத்யம்-ஞானம்-அனந்தம் என்பதால் எந்த வித கற்பனைகள், கனவுகள் இவைகளுக்கு இடமே இல்லை என்கிறார் ஜனகர்.
முடிவுரை
ஜீவன்முக்தா என்பவர், தன்னிடம் (சீவனிடத்தில்) இன்னும் உடல்-மன-புத்திவளாகமெனும் உபாதிகள் இருந்தாலும், தான் பிரதிபலிக்கப்பட்ட ஒளியான “நகல் நான்” தான், பிரதிபலிக்கும் ஊடகம் அல்ல என்பதை இப்போது சுயமாகஉணர்ந்து கொண்டவர். சூரியனில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியைப்பார்ப்பதன் மூலம் சூரியன் பிரகாசிக்கிறது என்பதை நாம் அறிவதுப்போல, நான்பிரதிபலிக்கப்பட்ட ஒளியாயினும், பரம்பொருளாகிய தூய இருப்புணர்வான“அசல் நான்” அதனின் பிரதிபலிப்பே “நகல் நான்” எனும் சீவன் என்பதை சுயமாக உணர்ந்து கொண்டவர்.
“நான் இது” என்பதில் இருந்து, 'நான்' என்று பிரதிபலிக்கும் உணர்வுக்கு தன் கவனத்தை மாற்றியவன்தான் ஞாநி. நான் ‘இது’ அல்ல; 'இதெல்லாவற்றையும் பிரதிபலிக்கும் அது (தூய உணர்வு) நான் என்ற நிலையை உணரும்போது, உடல்-மன-புத்தியெனும் உபாதிகள் உதிர்ந்து விடுகின்றன. பிரதிபலிக்கும் ஊடகங்கள் இல்லையென்பதால் நகல் அசலாகிறது.
அண்டவெளியில் எந்தப் பிரிவும் இல்லாத மொத்த வெளியும் நான்தான்’ என்று பானை வெளி உணருவது போல, நான் “நகல் நான்” என்று உணரும்போது எல்லாம், “அந்த நான்” (“அசல் நான்”) தான் நான் என்பதை அங்கீகரிப்பதாகும். இந்தப் புரிதல் ஒரு ஞானிக்கு தெளிவாக உள்ளது. இப்படி ‘விளையாடுவதை’ வெறுமனே ரசிப்பது “ஆத்ம கிரிடா” அல்லது “லீலா” என்றும், ஆழ்ந்த தியானத்தில் நகல், அசல் நான்களுடன் முழுமையாக அடையாளம் கண்டு கொள்வது. “ஆத்மா ரதி” என்று அழைக்கப்படுகிறது - தன்னில் தானே களிப்பது/மகிழ்வது.
அந்த மகிழ்வில் ஜனகர் உரைத்த உரைகளே இந்த ஸ்லோகம்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !



Nice explanations