முகவுரை
நான்கு முக்கிய சொற்களை அடங்கிய இந்த ஸ்லோகத்தில், முதற் சொல்லான தளை என்பதின் விரிவான விளக்கத்தை, தெய்வத்தின் குரலாய் முதல் பதிவில் கண்டோம். பின்னர், வீடு, மாயை எனும் மருட்சி, என்பதனை இரண்டாவது பதிவில் ஆய்ந்தோம். இறுதியாக உலகம் என்பதனை அறிந்திட்டு, ஜனகரின் உரைதனை அறிவோம் இப்பகுதியில்.
ஸ்லோகம்
ந மே ப³ந்தோ⁴(அ)ஸ்தி மோக்ஷோ வா ப்⁴ராந்தி꞉ ஶாந்தோ நிராஶ்ரயா ।
அஹோ மயி ஸ்தி²தம்ʼ விஶ்வம்ʼ வஸ்துதோ ந மயி ஸ்தி²தம் ॥ 2-18 ॥
தமிழாக்கம்
தளையென்றும் வீடென்னும் இல்லை எனக்கு!
ஆதாரம் ஏதுமின்றி மருட்சியும் கலைந்தது!
நிலைத்திருப்பது அன்றோ என்னில் உலகம்!
நிஜமாகவே என்னிடம் இல்லை அவ்வுலகம்!! 2.18
விளக்கம் - தொடர்ச்சி
உலகம்
உலகம் நம் கண் முன்னே காட்சி, நாம் அன்றாடும் உறவாடும் இடம். இதற்கு என்ன விளக்கம் தேவை ? ஆராய்வோம்
நாம் எதிர்கொள்வது எதுவும் நம்மின் ஒரு பகுதியாகக்கூட இருந்தாலும், நாம் அது இல்லை; என உணர்கிறோம் அல்லவா? ஆக நாம் எதிர்கொள்ளும் அனைத்தும் நமது அனுபவங்களேயன்றி நாம் அல்ல என்று உணர்கிறோம். அதாவது நம்மையும் நாம் எதிர்கொள்ளும் பொருட்களையும் இணைப்பது நம் அனுபவம் என்று அறிவோம். ஆக, “நான்”, என் உலகம் இரண்டும் என் அனுபவ நாணயத்தின் இரு பக்கங்கள்.
எனினும் என்னுடைய அனுபவம் வேறொரு பெரிய அனுபவத்தின் ஒரு பகுதியாக(அம்சம்) இருந்தால், அந்தப் பெரிய அனுபவத்தின் மறுபக்கமாக ஒரு “நான்” ஒரு “என் உலகம்” என்று இரண்டும் இருக்க வேண்டும்; அந்த பெரிய “நானில்” “என் “நான்”ஒரு அம்சம், அந்த பெரிய “உலகில்” என் “உலகம்” ஒரு அம்சம் என்பதில் மறுப்பில்லை.
இந்த வாதத்தை இப்படியே நீட்டிக்கொண்டு போனால், உலகமென்றால் நமது பூமி என்று அர்த்தமில்லை. பூமி உட்பட அண்டங்களனைத்துமடங்கிய இந்த வெளிப்பாடு என்ற உயர்நிலைப் பொருள். பூமி என்பது விரிவடையும் விண்மீன் மண்டலத் திரள்களில் (constellations of galaxies) ஒரு சிறிய விண்மீன் மண்டலத்தின் (galaxy) ஒரு அங்கமான ஒருகோள நெருப்பைச் (sun) சுற்றி சுழலும் ஒரு சிறிய பாறைப்பந்து (earth) மட்டுமே.
அதே சமயம், அந்த சிறிய பாறைப்பந்தின் மேலமர்ந்து , மகப்பேறு மனைதொடங்கி சுடுகாடு செல்லும் வரை இடையே உள்ள காலத்தை வாழ்க்கை என்றழைத்து, அவ்வாழ்க்கையில் தன் உடலின் ஒரு பகுதியில் உள்ள விசித்திரமான நரம்பியல் பொறியை (மூளை - brain) உபயோகித்து அந்தவிண்மீன் மண்டலத் திரள்கள் வரை விரைவில் சென்று அனைத்தையும் பொறிபுலன்களால் நுகரந்து அனுபவம் கொள்ளும் மனிதனும் ஒரு அசாதாரண விந்தையான படைப்பன்றோ!
ஆக, நான் எனும் பரந்த தன்மை, பரந்த உலகமெனும் வெளிப்பாடு இவை இரண்டுமே பரமாத்ம அனுபவம்தான்.
விழிப்பில் நாம் காணும் உலகம், ஆழுறக்கத்தில் இல்லையே! கனவில் எனக்கென்று ஓருலகம் படைக்கின்றேனே! ஆக, உலகம் என்று நான் காண்பது நனவா அல்லது கனவா?
இதனை அறிந்த ஞானிக்கு நாம் அனைவரும் காணும் உலகம், மித்யா; அதாவது இருப்போது போல இருக்கும், ஆனால் அது சத்தியமில்லை. உலகம் என்று அறிவிலிகளாகிய நாம் கூறும் உலகம் எனும் பெயர், வடிவம், வினை (“நாம ரூப கர்ம” - name, form and function) என்பவைகளால் “நான்” எனும் தூய உணர்வின்மீது அவைகள் கற்பிக்கப்பட்டுள்ளதே இவ்வுலகம் என்பதை அறிந்து அந்த உணர்வில் நிலைத்திருப்பவன் ஞானி. வேற்றுமைகள் என்றேதுமில்லை, அனைத்துமே இரண்டற்ற தூய உணர்வே என்ற ஞான நிஷ்டையில் இருப்பவன் ஞானி.
அத்தகைய ஞானியான ஜனகரின் கூற்றை அறிய முயல்வோம்.
ஜனகரின் கூற்று
மேற்கூறிய விளக்கங்களை ஆழ்ந்து அறிந்தால் ராஜரிஷி ஜனகரின்
தளையென்றும் வீடென்னும் இல்லை எனக்கு!
ஆதாரம் ஏதுமின்றி மருட்சியும் கலைந்தது!
நிலைத்திருப்பது அன்றோ என்னில் உலகம்!
நிஜமாகவே என்னிடம் இல்லை அவ்வுலகம்!!
என்ற இந்த ஸ்லோகத்தை நாம் சரியான கண்ணோட்டத்தில் அறியமுடியும்.
ஸம்ஸாரம் எனும் பந்தத்தால் கட்டு அல்லது எண்ணங்களற்ற நீக்கமற நிலை போன்ற எந்த நிகழ்வுகள்/உணர்வுகள் ஏதும் எனக்கில்லை. நான் அவைகளைக் கடந்தவன். பிரபஞ்சமெல்லாம் மாயைதான்; ஆனால் இதற்கு, ஆதாரமாக பிரம்மம் என்பது இறுதி உண்மை. அந்த பிரம்மமே நான் என்பதனால், என்னில் நிலைத்த உலகமேதும் என் வசம் இல்லை அன்றோ என பேரின்பமுடன் கூறுகிறார் ஜனகர்.
முடிவுரை
இந்த ஸ்லோகத்தில் இரண்டு முக்கியமான கோட்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன:
தூய்மையான இருப்புணர்வான ஆன்மாவிற்கு தளையோ, வீடுபேறோ என்று ஒன்றில்லை. பிறப்பு மற்றும் இறப்பு (சம்சாரம்) சுழற்சியில் சிக்கியிருக்கும் ஜீவாத்மாதான் இந்த நிலைகளுக்கு உட்பட்டது. இருப்பினும், அந்த நிலையில் கூட ஆன்மா தூய்மையாகவும் தீண்டப்படாமலும் இருக்கிறது. வீடுபேறினை உணர்ந்த ஜீவாத்மா (அதாவது தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆன்மா - முக்தா) என்றென்றும் சுதந்திரமானது, எனவே, தளை அல்லது வீடுபேறு பற்றிய கேள்வி எழவதில்லை.
தூய்மையான இருப்புணர்வான ஆன்மாவிற்கு எந்த ஆதரவும் அல்லது அடைக்கலமும் தேவையில்லை. உருவாக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் ஆதரவு தேவை. அந்த ஆதரவே பரம்பொருள். இயற்கை (பிரகிருதி) கூட ஒரு சார்பு உண்மை. அனைத்தும் பரம்பொருளை சா்ரந்தது.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

