நிர்விகல்பம் - எண்ண அழிவு நிலை
ஆத்ம விசாரணையின் முடிவில் சுகம் நானே என்ற முடிவு கிடைக்கிறது. சரி! அந்த சுகத்தை எப்படி அடைவது? அதிலும் நிரந்தரமாக அதை அடைவது எப்படி என்று பார்ப்போம். எண்ணங்களற்ற நிலையே சுகம் என்பது சுகத்தின் இலக்கணம். ஆழ்ந்த உறக்க நிலையில் எண்ணங்கள் அற்று அந்த சுகத்தை அனுபவிக்கின்றோம். எனவே, எப்பொழுதும் இது போன்று ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்க முடியுமா? அதுவும் முடியாது? காரணம், நமக்கு விழிப்பு மற்றும் கனவு என்ற மற்ற இரு நிலைகளையும் அவ்வப்பொழுது அனுபவிக்கின்றோம்.
மனம் இரண்டு விதமாக ஒடுங்கும்.
அது தற்காலிகமாக ஒடுங்கும் நிலைக்கு “மனோலயம்” என்று பெயர். இலயமானால் தக்க காலத்தில் மீண்டும் வெளிக்கிளம்பும்.
இரண்டவது விதமானது “மனோ நாசம்” என்பதாகும். இந்த வகையில் மனம் நசிந்து விடும். பிறகு எக்காரணத்தை முன்னிட்டும் திரும்பாது. அது இறந்து விட்டது.
எனவே, இரண்டாவது முறையாகிய மனோ நாசத்தால் அடையும் சுகத்திற்கு அழிவில்லை. இதுவே குறையாத சுகம், அல்லது பேரின்பம் ஆகும்.
விழிப்புக்காலத்தில் பஞ்சேந்திரியங்களின் அனுபவத்தினால் மனம் மிக மிகச் சொற்ப காலமே லயப்படுகின்றது. தூக்கத்தில் அதைவிடச் சற்று அதிகமாக (அதிக நேரம்) லயமடைகின்றது. மரணத்திலும் மனம் இப்படி சில காலம் லயத்தை மட்டுமே பெறுகின்றது. இவை யாவும் மனோ லயமே! மனோ நாசமல்ல!. மனது லயித்தால் மட்டும் போதாது, துக்கம் (துயரம்) நாசமாக்கப்பட வேண்டும். சுகம் நிரந்தரமாக்கப்பட வேண்டும். அதாவது, மனதின் லயம் துக்கத்தின் லயம், மனதின் நாசம் துக்கத்தின் நாசம்.
ஆகவே மனதின் நாசத்திற்கு செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.
“எண்ணங்களே மனம்” என்று பகவான் ஸ்ரீரமணர் கூறுகின்றார். எண்ணங்களையெல்லாம் நீக்கி விட்டு மனம் எப்படி இருக்கின்றது என்று கவனித்தால் அங்கு 'மனம்' என்ற ஒன்று இல்லை என்பது தெரியவரும். மனதின் அழிவு, எண்ணங்களை களைவதே.
சாதாரண மனிதனின் மனம் பல்வேறு பொருள்களில் சிதறிக் கிடக்கிறது. தியான நேரத்திலும், மனம் முதலில் அலைந்திடும். ஆனால் மனதில் எந்த ஆசை எழுந்தாலும், என்ன மாதிரியான சிந்தனைகள் எழுகின்றன என்பதை அமைதியாக உட்கார்ந்து பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்பதன் மூலம், மனம் மெதுவாக அமைதியடைகிறது. இந்த அலைகள் மனதின் சிந்தனை - செயல்பாட்டைக் குறிக்கின்றன. நாம் முன்பு ஆழமாக சிந்தித்த விஷயங்கள், தங்களை ஒரு ஆழ்நிலை மின்னோட்டமாக மாற்றிக்கொண்டன; இவை தியானத்தில் மனதில் அலைகளாக தோன்றும். தியானத்தின் போது இந்த அலைகள் அல்லது எண்ணங்களின் எழுச்சி, நம் மனம் செறிவை நோக்கிச் செல்கிறது என்பதற்கான சான்றாகும். சில சமயங்களில் மனம் எண்ணங்களின் தொகுப்பில் குவிந்திருக்கும் - இது விகல்பா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மனமானது எல்லாச் செயல்களிலிருந்தும் கிட்டத்தட்ட விடுபடும்போது, அது எல்லையற்ற அறிவின் சாராம்சமான உள்ளான ஆன்மாவில் உருகிவிடும். சிந்தனை அலைகளனைத்தும் அடங்கும் மேலும் அதில் எண்ணங்கள் - அலைகள் இருக்காது. இப்படி சிந்திக்க முடியாததைச் சிந்திப்பதில்கூட ஏதோ ஒரு விதமான சிந்தனை அடங்கியிருக்கிறது. நான் இருக்கும் இடத்தில் நிலையாக உண்மையாக நிற்க, கடைசியாக எஞ்சியிருக்கும் சிந்தனை முறையையும் கைவிட வேண்டும். மனமெனும் சிந்தனைக்கூடம் சிதைந்து அழிந்துவிடும்.
இந்த நிலைதான் நிர்விகல்ப நிலை எனப்படும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
சும்மா இருக்கச் சுகம் உதய மாகுமே, இம்மாயா யோகமினி ஏனடா? - தம்மறிவில் சுட்டாலே ஆகுமோ என்ற கேள்விக்கு,
தாயுமானவர். தேசோமயானந்தம், பாடல் எண்.8ல்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந்தமே.
என்றுரைக்கிறார்.
சிந்தனைகளை அடக்கி சும்மா இருப்பது அரிது. அப்படி அடக்கியவருக்கு சத்தாகி சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே நான் என்ற இறுதி உண்மை உறுதியுடன் புலப்படும்.
“அறியாமையால் எனை வரையறுத்தேன். அறிவெனும் தூய இருப்புணர்வே நான் என்று அறிந்து உணர்கிறேன். இந்த உணர்வினையே இடைவிடாது ஆத்ம விசாரணையில் நிறுத்தி எண்ணங்களையெல்லாம் அழித்து நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வே நான் என்ற நிலையில் நிலையாக இருக்கிறேன்”
என்று ஜனகர் கூறுகிறார் இந்த ஸ்லோகத்தில்.
முடிவுரை
“மனம் என்பது நம்மில் இருக்கும் அறியாமையின் வெளிப்பாடு. மனம் முடிந்தவுடன் அறியாமையும் நீங்கிவிடுகிறது. அறியாமையின் இருண்ட தாழ்வாரத்தின் முடிவில், அருட்பெரும் ஜோதி முழுமையான அறிவின் ஒளிமிகு முற்றங்கள் உள்ளன." என்கிறார் சுவாமி சின்மயானந்தா.
ஒரே மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களில் ஒன்று தீயினால் நன்கு சுடப்பட்டு வலிமையாக இருக்கும். இன்னொன்று சுடப்படாத பாத்திரம். இது மழை பெய்யும் போது கரைந்து மீண்டும் மண்ணாகிவிடும். சுடப்பட்ட பாத்திரம் மழையில் கரைந்துவிடாமல் வலிமையாக இருப்பது போல் ஆன்மீகத்தில் பக்குவப் பட்டவர்களுக்கு மீண்டும் பிறப்பு கிடையாது. மனதடக்கம் என்பதே புடம் போட்ட தங்கம்.
ஆன்மீகத்தில் புடம் போடுவது என்பதை கண்ணன் கீதையிலே அழகாக எடுத்துரைக்கிறான் பதினெட்டாவது அத்தியாயத்தில் (51-53). அமைதியில் நிலைத்திருக்கும் அத்தகைய புடம் போடப்பட்ட நபர், நான் எனும் முழுமையான உண்மையைப் பிரம்மமாக உணர்ந்துகொள்வதற்கு தகுதியானவர்.
ராஜரிஷி ஜனகர் அந்த தகுதி உடையவராகையால், தன்னைப் பற்றிய அறிவை தெளிவாக விளக்குகிறார் இந்த ஸ்லோகத்தில்.
மனதை அடக்க வழி அறிந்திலேன் நான் என்று நாம் கூறும்போதெல்லாம், முகவுரையில் பகவான் ரமணர் கூறிய கதை நினைவுக்கு வரவேண்டும்; மனதில் குரங்குக்கு இடமில்லை. நீக்கமறநிறை ஆன்மாவே நான் என்ற உணர்வு ஒன்றே இருக்கவேண்டும். ஆத்ம விசாரணைக்குப்பின் அந்த சிந்தனையும்கூட மனதுடன் அழியவேண்டும். அங்கணம் இருந்தால்
“ வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனாகி” நிலைத்திருக்கலாம்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !


