முகவுரை
பகவான் ரமண மஹரிஷி கூறிய ஒரு சுவையான கதை.
ஒருவன் மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி வரும் பொழுது, அந்த மருத்துவர் இந்த மருந்தைக் ஒழுங்காகக் குடித்து வரவும் என்று கூறி மருந்தைக் கொடுக்காமல், இந்த மருந்தைக் குடிக்கும் பொழுது, கண்டிப்பாக குரங்கை மட்டும் நினைத்துக் கொள்ளக்கூடாது என்று ஆலோசனை வழங்கி மருந்தை தருகின்றார்.
ஆனால் பாவம் அந்த நோயாளி! மருந்தை குடிக்க கையில் எடுக்கும் பொழுதெல்லாம் அந்த குரங்கின் ஞாபகம் வந்து, அந்த மருந்தைக் குடிக்க முடியாமல் செய்கிறது. இப்பொழுது இந்த நிலைக்கு காரணம் யார் ? மருத்துவரா, குரங்கா, நோயாளியா?
விடை இந்த ஸ்லோகத்தை அறிந்த பின் நமக்கே கிடைக்கும்.
ஸ்லோகம்
போ³த⁴மாத்ரோ(அ)ஹமஜ்ஞாநாத்³ உபாதி⁴꞉ கல்பிதோ மயா ।
ஏவம்ʼ விம்ருʼஶதோ நித்யம்ʼ நிர்விகல்பே ஸ்தி²திர்மம ॥ 2-17 ॥
தமிழாக்கம்
அறிவெனும் தூய இருப்புணர்வே நான்!
அறியாமையால் எனை வரையறுத்தேன் !!
உள்ளாய்ந்து இவ்வண்ணம் இடைவிடாது,
எண்ண அலைகள் மனமதனில் ஏதுமின்றி
என்னுள்ளே நான் நிலைக்கிறேன் !!
விளக்கம்
போதம் (அறிவு),
அஞ்ஞானம் (அறியாமை),
உபாதி (கருவி),
விம்ருʼஶதோ” நித்யம் (இடைவிடா உள்ளாய்வு),
நிர்விகல்பம் (எண்ண அழிவு)
எனும் முக்கிய சொற்களை உபயோகித்து, தன் நிலையை விளக்குகிறார் ஜனகர்.
அறிவெனும் தூய உணர்வே நான் என்று கூறுகிறார் ஜனகர். இந்த “போ³த:” “அஹம்” - அறிவெனும் தூய உணர்வு, நான் என்ற இரண்டு சொற்களின் விளக்கத்தை முந்தைய பகுதிகளில் அறிந்தோம்.
அறியாமையால் எனை வரையறுத்தேன் என்று ஜனகர் கூறுகிறார். அஞ்ஞானம் - அறியாமை என்பதனைப் பற்றியும் முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டது.
உபாதி⁴꞉ கல்பிதோ மயா
உபாதி⁴ என்ற சொல் ஆன்மீகத்தில் வரையறுக்க உதவும் கருவி எனப்பொருள்படும். வேதாந்தத்தில், இது ஆன்மாவை இயற்கையால் (மாயையால்) சுற்றப்பட்ட ஒரு முன்கணிப்பு, மாற்றம், அல்லது மாற்று என்பதை குறிக்கும். உதாரணமாக, உடலும் மனமும் ஆன்மாவிற்கான உபாதிகள். பெயர், குடும்பப் பெயர், பட்டப்பெயர், பாலினப் பெயர், ஜாதிப் பெயர், தேசியம், தொழில் பெயர், தந்தை, தாய், சகோதரன் போன்ற உறவுகளிலிருந்து எழும் பெயர்கள் போன்ற பல பண்புகளை உடல் கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஆன்மாவின் உபாதிகள் மட்டுமே.
உபாதிகள் ஒரு உயிரினத்தின் தோற்றத்தை அல்லது அதன் இருப்பை உருவாக்குகின்றன. ஆன்மாவை உபாதிகள் வரையறுக்கின்றன; எனினும் ஆன்மா அவைகளால் தீண்டப்படாமல் உள்ளது. உபாதிகளுக்கென்று இருப்பு ஏதுமில்லை; அதனால் இந்த உபாதிகள் அனைத்தும் உண்மையற்றவை.
சரி, இந்த ஆன்மா, உபாதிகள் இருக்கட்டும். இவைகள் யாரால் ஏன் என்னை வரையறுத்தன? இந்த உபாதிகள் ஆன்மாவில் மாயையால் கற்பிக்கப்பட்டுள்ளன என்கிறது வேதாந்தம். “மாயாகல்பித தே3ஶகாலகலநா வைசித்ர்யசித்ரீக்ருதம்” என்கிறார் ஆதி சங்கரர் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில்.
ஆனால் இங்கே ஜனகர் “உபாதி⁴꞉ கல்பிதோ மயா” - “நான் உபாதியால் வரையறுத்தேன்” என்கிறார். மாயை பரம்பொருளைச் சார்ந்த சக்தி; அந்தப் “பரம்பொருளே ஆன்மா எனும் நான்”. இதனை அறியாதார் மாயையால் வரையறுக்கப்பட்டேன் என்பது சரி. அஷ்டாவக்ர முனிவரின் அருளுரையால் “நானே ஆன்மா எனும் பரம்பொருள்” என்பதை அறிந்துணர்ந்த ஜனகர், “நானே என்னை உபாதியால் வரையறுத்தேன்” என்று அனைத்தும் ஒருமையான நான் எனும் பரம்பொருளை அறிந்துணர்ந்தேன் என்பதனை சுட்டிக்காட்டுகிறார் போலும்.
இப்படி அறிந்த அந்த உணர்வினால் நிலைத்திடும் செயல்முறையை அடுத்த சொற்றொடரில் கூறுகிறார் ஜனகர்.
“விம்ருʼஶதோ” நித்யம் - இடைவிடாத ஆத்ம விசாரணை - இடைவிடாத “உள்ளாய்வு”
“ஏவம்ʼ விம்ருʼஶதோ நித்யம்ʼ நிர்விகல்பே ஸ்தி²திர்மம” என்ற இந்த சொற்றொடர் - “இவ்வண்ணம் இடைவிடாது உள்ளாய்ந்து, மனமதனில் எண்ண அலைகள் ஏதுமின்றி, என்னுள்ளே நான் நிலைப்பது; அதாவது இடைவிடாத ஆத்ம விசாரணையால், எண்ணங்களையெல்லாம் அழித்து நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வே நான் என்ற நிலையை அறிந்துணர்ந்து அந்நிலையில் நிலையாக இருக்கிறேன்” என்று ஜனகர் கூறுவதை குறிக்கும்.
இந்த சொற்றொடரில் “விம்ருʼஶதோ” - “உள்ளாய்வு” என்ற சொல்லினை ஆய்வோம். உள்ளாய்வு என்பது என்ன, யார், எதைப் பற்றிய உள்ளாய்வு செய்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு விம்ருʼஶதோ என்று ஜனகர் கூறுவது, அவருடைய ஆன்மாவைப்பற்றிய அவரின் உள்ளாய்வு. அதாவது ஆத்ம விசாரம், ஆத்மாவைப் பற்றிய விசாரணை.
சாதரணமாக ஆத்ம விசாரணை என்றவுடன், நம் உடலில் ஏதோ ஒன்று ஒளிமயமாகவோ அல்லது சக்திமயமாகவோ இருக்கிறது;அது எங்கே, எப்படி இருக்கிறது என்பதை அறிய நாம் எடுக்கும் முயற்சியே என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம் அல்லவா! அது விழலுக்கு நீர் பாய்ச்சும் முயற்சி. ஏனெனில், அப்படி அறியப் போகின்ற நமக்கு அறியப்படு பொருளாகவோ, நம் புலன்களுக்கு அறியக்கூடியதாகவோ ஆன்மா இல்லை என்பதை இதுவரை வந்த விளக்கங்களிலிருந்து அறிவோம்.
இரு விதமாக இந்த விசாரணையை மேற்கொள்ள முடியும்.
நேதி, நேதி முறை - சாஸ்திரங்களில் கூறியபடி “நேதி, நேதி” (இல்லை, இல்லை) என்ற முறை. “இவ்வுடல் நானல்ல', “பிராணன் நானல்ல', “மனம் நானல்ல', புத்தி நானல்ல, என்று அனைத்தையும் “நானல்ல, நானல்ல' என்று தள்ளுவது. அப்படியானால் இவைகளைத் தள்ளுகின்றவன் யார்? தள்ளுவது எப்படி? இந்த மனமே தள்ளுகின்றவனாக இருந்தால், அல்லது தன் புத்தியால் தள்ளுகின்றவனாக இருந்தால், ஒருவனுக்கு மனமும், புத்தியும் இல்லாது போனால், அவன் எதைக் கொண்டு, எதனால், எதைத் தள்ளுவது? அப்படியே, தள்ள நினைத்தாலும், தன் மனதிற்கும், புத்திக்கும் சம்பந்தம் இல்லாத பிராணன் நானல்ல, இந்த தேகம் நானல்ல என்று இவைகள் இரண்டை வேண்டுமானாலும் தள்ளலாம். இதற்கு மேலாக தன்னுடைய சூக்ஷம வடிவான மனத்தை (புத்தியை) மனமே எப்படித் தள்ளுவது? அதற்கு மேற்பட்ட விஞ்ஞானமய கோஷத்தையும், ஆனந்தமய கோஷத்தையும் இந்த மனம் எப்படித்தள்ள முடியும்? அதனால், இந்த விசாரணை முறையில் விசார காலத்தில் அவைகளைப் பற்றி தன்னுடைய நினைவால் சிந்தித்துக்கொண்டு மனோ விருத்தியை அதிகப்படுத்திக் கொண்டிருக்கலாமே தவிர, உண்மையில் வேறு என்ன செய்ய இயலும்? அதனால், விசாரம் என்ற இந்த சொல்லின் செய்முறை, ஒன்றை மற்றொன்று விசாரித்து அறிவது போன்ற காரியமாக இருக்காது என்பது புலனாகின்றது. எனினும், இந்த “நேதி நேதி” முறை, வழி பிசகாமல் தன்னை நாடுவதற்கு, மற்ற அனைத்தையும் அவை நாமல்ல' (நேதி, நேதி) என்ற தீர்மானத்திற்கு வருவதற்காகப் புத்தியால் செய்யப்பட வேண்டிய விவேகத்திற்கு ஊன்றுகோல். ஆகையினால் தான் பகவான் ரமண மஹரிஷி, ஆத்ம விசாரணை என்பதிற்கு பதிலாக “நான் யார்” என்ற விசாரணையை மேற்கொள்ளக்கூறுகிறார்.
நான் யார் விசாரணை - பகவான் ஸ்ரீரமணர் “நான் யார்?” என்று கூறும் விசாரம் என்பது தன்னைப் பற்றி தானே 'தற் கவனம்' அல்லது “தன் நாட்டம்' என்பது, இந்த “நான் யார்?” என்று தன் சுயத்தை அறிய தன்னை, தன் இருப்பை விசாரித்து நாடுவது ஒன்றே ஆத்மாவின் மீது மனம் திரும்பி, தன்னை ஆத்ம நிஷ்டனாக மாற்றிக் கொள்ள முடியும். ஆகவே, நம்முடைய இருப்பு (சத்) என்ற தன்னிருப்பின் மீது மட்டுமே நம் நாட்டத்தை வைத்து, சதாகாலமும் மனத்தை (நம் கவன சக்தியை) ஆத்மாவில் வைத்திருப்பதற்குத்தான் “ஆத்ம விசாரம்” என்று பெயர். இதனையே எளிய வழிமுறையாக பகவான் ஸ்ரீரமணர் தன்னை ஆராய்வதே சுகம் அடையும் வழி என்பதை “நான் யார்?” என்று தெளிவாகக் கூறுகின்றார்.
அடுத்த பதிவில் “நிர்விகல்பம்” எனும் எண்ண அழிவு நிலைதனை ஆராய்வோம்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !


