மகிழச்சியின் கதையை முந்தைய பதிவில் படித்த நாம், இப்பகுதியில் துயரின் அடிப்படை, துயர் நீக்கும் மருந்து என்பவற்றை அறிய முற்படுவோம்.
ஸ்லோகம்
த்³வைதமூலமஹோ து³꞉க²ம்ʼ நான்யத்தஸ்யா(அ)ஸ்தி பே⁴ஷஜம் ।
த்³ருʼஶ்யமேதன் ம்ருʼஷா ஸர்வமேகோ(அ)ஹம்ʼ சித்³ரஸோமல꞉ ॥ 2-16 ॥
தமிழாக்கம்
இருமையொன்றே துயரத்தின் மூலம்
தீர்வேதுமில்லை இதற்கு வேறொன்றும்!
நுகரும் பொருள் அத்தனையும் போலியென்றும்,
ஒருமையான தூய பேரின்ப உணர்வே நானென்றும்
அறிந்துணருதல் ஒன்றே இத்துயர் நீக்கும் மருந்தாகும் !! 2.16
விளக்கம்
த்வைதம் - இருமை
முதலில் த்வைதம் (இருமை) எனும் சொல்லினை ஆய்வோம். இருமை என்பது இரண்டு கூறுபாடுகளைக் குறிப்பது. இரண்டு கூறுபாடுகள் என்பதை இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகள் என்று விளக்குவர். உலக இயற்கையின் இருவேறு எதிரிடைத் தன்மைகளாக உள்ள இரண்டிரண்டானவைகளையே இருமை குறிக்கிறது என்பர் சிலர். என்-உன், அது-இது, விருப்பு-வெறுப்பு, பிறப்பு - இறப்பு, துன்பங்கள் - இன்பங்கள், நன்மை - தீமை, அறிவு - அறியாமை, உயர்வு - தாழ்வு, அறம் - மறம், ஆக்கம் - கேடு, தோற்றம் - அழிவு, உடல் - உயிர், நிலைப்பது -அழிவது, மெய்-பொய், உலகியல்-வீட்டுநெறி, இல்லறம் - துறவறம், இம்மை-மறுமை என்பன போல பல இருமைக் கூறுகளை உரையாசிரியர்கள் காட்டுகின்றனர்.
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச் செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது என்று வள்ளுவனார் கூறுகிறார்.
இருமை வகை தெரிந்து என்ற சொற்றொடருக்கு அருமையான ஆழமான விளக்கத்தை சுவாமி சின்மயானந்தா தருகிறார்.
“தன்னையே யாரும் வெறுக்க முடியாது. உடலின் ஒரு பகுதியில் புண் ஏற்பட்டு முடிவில்லாத வலியைக் கொடுத்தாலும், மருத்துவர் அப்பகுதியைத் துண்டிக்க அறிவுறுத்தினாலும், மனிதன் தயங்குகிறான். வலியால் என்னைக் கொல்லும் கால் என்னுடையது. என்னில் ஒன்று. எனினும் எனக்கு அதன் மேல் பகை இல்லை, பிரியமே அதிகம். அதை எடுத்துத்தான் ஆகவேண்டுமா டாக்டர் என கேட்கிறான்.
சந்தேகமில்லை, கால் என்னுடையது. ஆனால் எப்போதும் நான் வேண்டுமென்றே என் காலுடன் ஒரு நெருக்கமான தொடர்பையோ, சிறந்த நட்பினையோ வளர்க்கவில்லை. அதற்கு அவசியமுமில்லை. என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தருணங்களிலும் நான் வாழ்கிறேன். நானே முழுக்க முழுக்க என் கால்விரல் நுனி முதல் உச்சந்தலை வரை, எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் இருக்கிறேன். மற்ற உறுப்புகளை விட, என் உடலின் எந்தப் பகுதிக்கும் அதிக அன்பைக் கொடுப்பது என்பது அபத்தமானது. துரதிர்ஷ்டவசமாக என் பற்கள் என் நாக்கையே கடித்தால், அந்த பற்களை உடைப்பதால் நீதி கிடைக்காது. ஏனெனில், பற்கள் எந்த அளவிற்கு என்னுடையதாக இருக்கிறதோ அதே அளவு நாக்கும் என்னுடையது. தானாகவே, நான் பற்களுக்கு முழு மன்னிப்பை கொடுக்கின்றேன், மேலும் பற்களின் ஆழப்பதிவால் பாதிக்கப்பட்ட நாவுக்கு ஆறுதல் கூறுகிறேன். தனிப்பட்ட விருப்போ, வெறுப்போ இல்லை என் உறுப்புகளிடத்தில். அனைத்து மேலும் அன்பான நோக்கு, நடத்தை.
ஆனால், இன்னொருவன், எனக்கு மிகவும் பிரியமான சகோதரனாக இருந்தாலும்கூட, அவன் எனது மனதை சிறிது நோகடித்தாலும், நான் அவனையும், அவன் குடும்பத்தையும் வெறுக்கிறேன்! பகைவனுக்கும் அருள்வாய் என்பதை வெறும் பழமொழியாக மட்டும் பார்க்கிறேன். ஆக, வெறுக்கப்படும் விஷயத்தை, நம்மைத் தவிர வேறொன்றாகப் பார்க்கும்போது வெறுப்பு மட்டுமே வர முடியும்.”
தன் உடலைத் தாண்டிய எதுவும் நானல்ல; அது வேறு நான் வேறு எனும் இந்த வேற்றுமை உணர்வே, இருமையின் அடிப்படை் கூறு.
துன்பமதின் மூலம்
“தன்னைக் கட்டுதல் அறம்,
பிறர் துயர் தீர்த்தல் பொருள்,
பிறர் நலம் நாடுதல்இன்பம்,
உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு”
என்று பாரதியார் எளிமையாக நம் வாழ்வின் இலக்குகளான அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை விளக்கினார். அந்த வீட்டினை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும், அன்றாடம் இடைவிடாது முக்கியமான மூன்றுபெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம்(படைப்பு), இறைவன். இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில் “நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?” என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோமே. இது தானே நடப்பு. தாயுமானவர் இந்த நடப்பைத்தான்:
“ஆசைக்கோரளவல்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல்மீதிலே ஆனை செலவே நினைவர்,
அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நெடுநாளிருந்த பேரும் நிலையாகவேயினுங்
காயகல்பந்தேடி புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாகடியும் உள்ளதே போதும்
நான் நான் எனக்குளறியே ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றி
பாசக்கடற்குள்ளே வீழ…”
என அழகிய தமிழில் விளக்குகிறார். அப்படியென்றால், நமது வாழ்க்கைஅனுபவம், நம்மை, நமது வாழ்வின் பொருளை நோக்கிச் செலுத்தவில்லையே ஏன் என்ற கேள்வியைக் கேட்காதார் யாருமில்லை. கேள்விக்குப் பதில் பாரதியின் பாட்டிலேயே கிடைக்கிறது.
“நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில்செல்லுவோன் நான்,
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குதற் சோதி நான்”
என்று பாட்டுக்கொரு புலவன் பாரதிகூறிய “நான்” ஆக இல்லாமல்,
இன்பமாகிய நாம், நம்மை இன்பெமெனஅறியாமல், துன்பத்தில் இன்பம் இருக்கின்றதென்று இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடி அலைந்து, துன்பத்தின் பின்னால், வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இது தான் உலக யதார்த்தம். இதுதான் துன்பத்தின் மூலம்.
துயர் நீக்கும் பரிகாரம்
பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறை பரிபூரானந்தமே என்று தாயுமானவர் கூறும் தூய பேரின்ப இருப்பெனும் தூய உணர்வே பரம்பொருள்.
கைவல்ய உபநிடதத்தில் (ஸ்லோகம் 17) கூறும் எந்த ஒன்றால், விழித்தல்-கனவு காணுதல்-ஆழ்துயில் என்கிற மூன்று நிலைகளிளும் ஒளியூட்டி, நம்முள் சாட்சியாக, தூய்மையான தன்னிலை உணர்வாய் இருக்கும் ஆன்மா எனும் நான், பரம்பொருள் தவிர வேறொன்றும் இல்லை.
இந்த அறுதி உண்மையை அறிந்துணராமல் , அறியாமையின் விளைவாக, நமது உண்மை நிலை மறந்து, வேற்றுமையில் ஒற்றுமை காண மறந்து, உலகமும் உலக அனுபவங்களும் மட்டுமே உண்மையென, மருவுடன், நிலையிலா உலக மக்களிடமிருந்தும், பொருட்களிலிருந்தும் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். அப்படி அனுபவிக்கும் மகிழ்ச்சி அல்லது துக்கம், மனதின் விருப்பு வெறுப்புகளால் (இதனை இருமை நிலை என்கிறார் வள்ளுவர்) நிலை நிறுத்தப்படுகிறது. அதனால் பிணைப்புகள், பற்றுகள் விளைகின்றன.
சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
என்றார் திருவள்ளுவர். சார்பு என்றால் பற்று . எனவே “சார்புணர்ந்து” என்பது பற்றுகளின் தன்மை அறிந்து, அவைத் தரும் மயக்கத்தை அறிந்து, அவை எப்படி நிலையான வீடுபேறினை அடைவதற்கு தடையாக இருக்கும் என்பதை உணர்வது; அதாவது, பற்றுகள் எப்படி நம்மை நிலையில்லா பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் தள்ளிவிடுகிறது என்று உணருவது என்று பொருளாகும்.
ஆதலால் ஒருவர், பற்றுகளை முற்றும் அழித்து அவற்றைவிட்டு முழுவதுமாக நீங்கினால் அவர் மயக்கத்தில் இருந்து நீங்குகிறார். பற்றுகளை விட்டு நீங்குவதால் அதாவது பற்றுகளை சாராமல் இருப்பதால், பற்றுகள் தரும் துன்பங்கள் (பிறவிப்பிணி எனும் துன்பம்) அவரை விட்டு நீங்கும். பற்றுகளின் தன்மை அறிந்தால் மெய்யுணர்தல் சுலபம். அதன்படி நடந்தால் துன்பங்கள் நம்மை நீங்கும், வீடுபேற்றினை அடைய முடியும். இதுதான் ஜனக்ர் கூறும் இந்த ஸ்லோகத்தின் விளக்கம்.
முடிவுரை
பேரின்பம் என்பதே நம்முள் உறையும் தூய உணர்வு. இது நமது இயல்பு. அதுவே அன்பாக வெளிப்படுவது. ஆனால் ஒருவன் தன்னைப் பற்றிய அறியாமையின் காரணமாக உலகப் பொருட்களிலிருந்து மகிழ்ச்சியை விரும்புகிறான். புலன்களை நோக்கி வெளியே செல்வதே மனதின் இயல்பு. உலகப் பொருட்களால் கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது அல்ல, ஏனென்றால் உலகப் பொருள்கள் தற்காலிகமானவை. இதனால் தற்காலிகப் பொருள் நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது. உலகத்தின் இந்த தற்காலிகத் தன்மையை அறிந்து, மனதை உள்நோக்கி நிரந்தரமான சுயத்தை நோக்கித் திருப்ப வேண்டும். ஆகவே, எது உண்மையானது, உண்மையற்றது என்று பகுத்தறிந்து, உண்மைக்குப் புறம்பான விஷயங்களிலிருந்து விலகி, உண்மையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !


அருமையான விளக்கம்.அழகு தமிழ். எல்லா துன்பங்களுக்கும் காரணம் ' நான்' தான் என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்.