ஸ்லோகம்
மத்தோ விநிர்க³தம்ʼ விஶ்வம்ʼ மய்யேவ லயமேஷ்யதி ।
ம்ருʼதி³ கும்போ⁴ ஜலே வீசி꞉ கனகே கடகம்ʼ யதா² ॥ 2-10 ॥
தமிழாக்கம்
மண்ணுள் குடமும், நீரில் அலையும்,
பொன்னுள் தொடி*யும் லயம் போல
என்னுள் இருந்து விரியும் இவ்வுலகம்
என்னுள்ளேயே அடங்கிடும் அன்றோ !! 2.10
* தொடி = வளையல்
விளக்கம்
வியப்பினால் உறைந்த ஜனகர், அவருக்கு என்ன நடந்தது மற்றும் பிரபஞ்சத்தைப்பற்றிய அவரது பார்வை எப்படி முடிந்தது என்பதை தொடர்ந்து கூறுகிறார். விளைவு எவ்வாறு காரணத்துடன் இணைகிறதோ, அதுபோலவே தன்னால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த இருமை உலகைப் பற்றிய மருவுகலைந்து, அவ்வுலகு தன்னுடன் ஒன்றிவிட்டது என்று கூறுகிறார். விளைவு-காரண உறவினை (“கார்ய காரண சம்பந்த:”) விளக்க, மூன்று உருவகங்களை கையாளுகிறார் ஜனகர் இந்த ஸ்லோகத்தில். இவற்றை முந்தைய இரு பகுதிகளில் கண்டோம்.
இந்த உருவகங்கள் கூறுவது என்ன என்பதை இப்போது ஆய்வோம்.
மெய்யறிவு பெற்ற ஒருவரின் சிறப்பியல்பு என்னவெனில், அவரது கண்ணோக்கு அவரது உடல் மன வளாகம் தாண்டி எல்லையற்றதாகிவிடும். அத்தகையவரின் கண்ணோக்கில் நம் போன்ற மானிடர்கள் இவ்வுலகினைக் காண்பது என்பது இயலாத ஒன்று.
கண்ணனின் இறையருளால் போர்களத்தில் அர்ஜனனும், வியாஸமுனியின் யோக சக்தியால் சஞ்சயனும் பெற்ற கண்ணோக்கம் இது.
பரந்த அக்கண்ணோட்டத்தில், நாணயத்தின் இரு பக்கங்கள்போல இருவகைகள் உள்ளன:
அனைத்தையும் தன்னில் காண்பது
தன்னை அனைத்திலும் காண்பது.
எனவே, விரிவாக்கப்பட்ட “அப்பார்வை நாணயத்தின்” இரு பக்கங்களும் அனைத்து உயிரினங்களின் சமத்துவத்தை நமக்கு விளக்குகின்றன.
“பொய்யும் மெய்யும் பொன்னார் மேனியனே” என்பர் மெய்யணர்ந்தோர். உண்மையான சமத்துவம் என்பது உணரப்பட்ட அம்மெய்யுணர்ந்தோரின் கருவூலப் பெட்டகம் அது. மனஉடல் வளாகமதனில் கட்டுண்ட மானிடராம் நமக்கு அக்கருவூலத்திற்கு அனுமதி இல்லை.
மன உடல் வளாகமதில் கட்டுண்டதால் நாம் பலதரப்பட்ட கருத்துக் கண்ணோட்டங்களைக் கொள்கிறோம். நமது தனிப்பட்ட மனம் அல்லது உடல் ரீதியிலான விஷயங்களிலிருந்து மற்ற விஷயங்களை நாம் காணும்போது, அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளும் மேற்பரப்பில் தொடங்குகின்றன. “ இருமை வகையறிந்து ஈண்டறம்பூண்ட” அந்த ஞானியர் கண்ட அந்த இறையெனும் சமத்துவம் இப்பொழுது அஞ்ஞானியரான நம்மிடம் வேற்றுமையுடன் (நான், அவன், அவள், அது, இது, என், உன், பருமன், உயரம், வண்ணம்…..) காட்சி கொடுக்கிறது.
ஆக, உடல் மன வளாக தனித்துவத்திலிருந்து கொண்டு, கோட்பாட்டளவில் தவிர, மெய்யறிந்தோர் காணும் சமத்துவம் என்னவென்று என்பது மானிடரின் கற்பனைக்கு எட்டாதது. அதுபோல, மெய்யறிந்தோர் உளகளாவிய நிலையிலிருந்து சமத்துவமில்லாமல் வேற்றுமை என்னவென்பது தம் சொந்த அறியாமையின் நாட்களின் நினைவுகளை தவிர வேறென்னவென்று கற்பனைசெய்வது கடினம்.
அனைத்தும் ஆன்மாவில்; ஆன்மாவே அனைத்திலும் என்று ஈஸாவாஸ்யஉபநிடதம் கூறுகிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஆன்மாவை அறிந்துணர்ந்தால் அனைத்தும் நம்முள்ளிருந்து உதயம், அனைத்தும் நமக்குள்ளே அடங்கி அழியும்.
இத்தருணத்தில், கைவல்ய உபநிடத்திலிருந்து ஒரு மந்திரத்தைப் பார்க்கலாம்.
“மையேவ சகலம் ஜாதம் மயி சர்வம் ப்ரதிஷ்ட்டிதம்
மயி சர்வம் லயம் …….(கைவல்ய உபநிடதம் 19)
அனைத்து படைப்புகளும் என்னிடமிருந்தே, என்னுள்ளே அவை அடக்கம், என்னுள்ளே அவை அழியும். எப்படி கனவு உலகம் என்னிலிருந்து உருவாகி, என்னிடம் அடங்கி, அழிகிறதோ விழிப்புலகமும் அப்படியே. கனவுலகம் படைப்பது தூக்கம். விழிப்புலகம் படைப்பது மாயை. இரண்டுமே என் சக்திகள்தாம் என்று கைவல்ய உபநிடதம் கூறுகிறது. கண்ணனும் இதனையே அறிவுரைக்கிறான் கீதையில்.
நம்மை யார் என்று அறியாததனால், ஏதோ ஒரு குறைவினை நமக்கு. இதனை நமது பற்றாக்குறையாக உணர்கிறோம். இது நமது பாதுகாப்பின்மையின் அடையாளமாகிறது. இதனால் நிறைவைத் தேடி, ஏதோ ஒன்றின்பின் எப்பொழுதும் அலைந்த வண்ணம் இருக்கின்றோம், வேற்றுமைகள் கொண்ட பார்வையுடன்.
அஞ்ஞானிகளான நமது இந்த வேற்றுமை நிறைந்த பார்வை, நமக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே வருகிறது. படிப்படியாக அது உயர்ந்து, நம்மை பொருட்களின் பின்னே அலைய வைக்கிறது. பொன், பொருள், பதவி, புகழ் என்று அப்பொருட்களின் பட்டியல் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவற்றை விட்டு விட்டால் நம்மால் இருக்க முடியாது என்ற அச்சம் ஆழமாய் வேறூன்றுகிறது. இறுகப் பற்றுகின்றோம், விடமறுக்கிறோம். உடல் மன வளாகமே நாம் என்ற அறியாமை இருக்கும் வரைஇந்த பற்று இருக்கும். அந்த பற்றின் மேல் நமக்கு அவ்வளவு நம்பிக்கை!
நம்பிக்கை என்றால் நாமெல்லாம் நினைப்பது கைவிடாத தன்மையென்று. சற்று சிந்தித்துப் பாருங்கள். நாம் நீந்த முயலும் போது முதலில் மூழ்கி விடுவோம் என்ற அச்சம் வருகிறதல்லவா? அதற்காக நீரினைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள முடியமா? அப்படிச்செய்தால், மூழ்குவது உறுதி. மிதப்பதற்கு நாம் என்ன செய்கிறோம்? கை கால்களைத் தளர்த்தி அச்சம் தவிரத்து நீரை இறுகிப்பற்றாமல், மூச்சினை கட்டுப்படுத்தி நீரில் மிதக்க முயல்கிறோம் அல்லவா. ஆகையினால் நம்பிக்கை என்பது கைவிடாத தன்மையல்ல; அச்சம் தவிர்த்து, அநாவசியமான பற்றை கைவிடுவதே. பற்றின்மை என்றால் எதுவுமே உங்கள் சொந்தமில்லை என்று அர்த்தமில்லை; எதுவுமே உங்களைச் சொந்தம்கொண்டாடக் கூடாது என்பதே. இது புரிவதில்லை நமக்கு.
என்னை ஒரு பொருளாகப் (object) பார்த்தால், எனக்கு எப்பொழுதும் பாதுகாப்பின்மை என்ற அச்சம். என்னை ((subject) நான் அறிந்தால் (நீக்கமற நிறை இறையே நான் என்ற மெய்யறிவு) அச்சம் என்பது ஏதுமில்லை. என்னை அலையாக நான் பார்த்தால், எனக்கு தோற்றம், மறைவு என்பது உறுதி. என்னை நான் நீராகப் பாரத்தால் நான்தான் அலை, நான் தான் கடல், எனக்கு அழிவென்பதே இல்லை. என்னை உடல்மன வளாகத்தின் உறையும் ஒரு உணர்வென (ஜீவன்) நான் உணர்ந்தால் எனக்கு பிறப்பு இறப்பு சுழலெனும் பிறவிப் பிணி தவிர்க்க இயலாதது. என்னை நீக்கமற நிறைந்த மெய்ப்பொருளாம் இறையென, நான் உணர்ந்தால் பிறவிப்பிணியிலிருந்து நான் விடுபட்டவனாவேன்.
என்னை “அனாத்மா”வாக நான் உணர்ந்தால் பிறவிப்பிணி. என்னை ஆத்மாவாகநான் உணர்ந்தால் வீடுபேறு.
திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட ஒரு மந்திரத்தை நினைவு கூறுவோம்:
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்துள் மறைந்தது பார்முதற் பூதம்
நாம் பொம்மை யானையைப் பார்த்தால், பொம்மை செய்யப்பட்ட மரத்தைப் பார்ப்பதில்லை. கைவினைஞரின் திறமை அது ஒரு யானை என்று நம்பவைக்கிறது, மரத்தின் துண்டு அல்ல. அது ஒரு மரக்கட்டையைத் தவிர வேறில்லை என்பதை ஒருவர் உணரும்போது, யானை கண்ணில் படாமல் மறைந்துவிடும். கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை.
“மாயையால் பெற்ற காரிய உபாதியை உடையவன் ஜீவன்; மாயை எனும் உபாதியை உடைவன் ஈஸ்வரன். அறியாமையால்/மாயையால் தனக்குஆதாரமான பூரணத்துவத்தை விடாது பூரணத்துவத்தோடுடைய காரியத்தை உண்டு பண்ணுகிறது காரணம்” என பூஜ்யஶ்ரீ ஓம்காரனந்த சுவாமிகள் விளக்குகிறார். அதை அறிந்து கொண்டால் காரண-காரிய பேதம் விலகி, நம்மை நாம் அறிவோம்.
தான் கண்டுணர்ந்த அத்வைத வேதாந்த தத்துவம் இதுதான் என அஷ்டாவக்ர முனிவரிடம் ஜனகர் இந்த ஸ்லோகத்தில் கூறியது உணர்த்துகிறது.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !