ஸ்லோகம்
மத்தோ விநிர்க³தம்ʼ விஶ்வம்ʼ மய்யேவ லயமேஷ்யதி ।
ம்ருʼதி³ கும்போ⁴ ஜலே வீசி꞉ கனகே கடகம்ʼ யதா² ॥ 2-10 ॥
தமிழாக்கம்
மண்ணுள் குடமும், நீரில் அலையும்,
பொன்னுள் தொடி*யும் லயம் போல
என்னுள் இருந்து விரியும் இவ்வுலகம்
என்னுள்ளேயே அடங்கிடும் அன்றோ !! 2.10
* தொடி = வளையல்
விளக்கம்
வியப்பினால் உறைந்த ஜனகர், அவருக்கு என்ன நடந்தது மற்றும் பிரபஞ்சத்தைப்பற்றிய அவரது பார்வை எப்படி முடிந்தது என்பதை தொடர்ந்து கூறுகிறார். விளைவு எவ்வாறு காரணத்துடன் இணைகிறதோ, அதுபோலவே தன்னால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த இருமை உலகைப் பற்றிய மருவுகலைந்து, அவ்வுலகு தன்னுடன் ஒன்றிவிட்டது என்று கூறுகிறார். விளைவு-காரண உறவினை (கார்ய காரண சம்பந்த:) விளக்க, மூன்று உருவகங்களை கையாளுகிறார் ஜனகர் இந்த ஸ்லோகத்தில்.
முதல் பகுதியில் முதல் உருவகத்தை ஆராய்ந்தோம். இப்பகுதியில் அடுத்த இரு உருவகங்களைக் காணலாம்.
உருவகம் 2 - நீரில் அலை
ஓம் பூர்ணம்-ஆதஹ் பூர்ணம்-இதம் பூர்ணாத்-பூர்ணம்-உதச்யதே
பூர்ணஷ்ய பூர்ணம்-ஆதாய பூர்ணம்-ஏவ-அவசிஸ்யதே ||
ஓம் சாந்திஹ் சாந்திஹ் சாந்திஹ் ||
அக்கடல்தான் நீர், இவ்வலைதான் நீர்
அக்கடலில் இவ்வலை தன் உதயம்
அக்கடலில் இவ்வலை கழியினும் நீர்
என்று ஈஸாவாஸ்ய உபநிடத சாந்தி மந்திரம், முழுமைத்தன்மையை (பூர்ணத்வம்) கோடிட்டு காட்டியது.
கடலும் அலையும் அடிப்படையில் ஒன்றே. ஏன்? பெருங்கடலும் நீர்தான். அலையும் நீரே. இரண்டும் ஒன்றுதான். ஆனால் கடலில் இருந்து அலை உருவாகிறது என்றும் சொல்லலாம். கடலில் இருந்து அலை உருவாகிறது என்று கூறும்போது, நிலைப்பாடு என்ன? நீரின் நிலையிலிருந்து அல்ல, ஏனென்றால் இயற்கையால் (ஸ்வரூபத்தால்) அவை இரண்டும் நீர் மட்டுமே.
கடல் என்பது முழுமையான மொத்த (ஸமஷ்டி) நிலைப்பாட்டில் நீரின் ஒரு பெயரும் வடிவமும். அலை என்பது முழுமையான தனிப்பட்ட (வ்யஷ்டி) நிலைப்பாட்டில் நீரின் ஒரு பெயரும் வடிவமும். இந்த வேறுபாடு பெயர்-வடிவ கண்ணோட்டத்தில் பார்க்கும் போது. இரண்டிற்கும் இயல்பாக உள்ள நீரின் நிலைப்பாட்டில் (ஸ்வரூப) நாம் பார்த்தோமானால் இரண்டிற்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டும் ஒன்றேதான்.
தனிப்பட்ட நிலையில் அலை எனும் பெயர் வடிவம் கொண்ட நீர் எனும் முழுமை (வ்யஷ்டி நாம ரூப பூரணம்), மொத்த நிலையில் கடல் எனும் பெயர் வடிவம் கொண்ட நீர் எனும் முழுமையிலிருந்து (ஸமஷ்டி நாம ரூப பூரணம்) உதயம்; அந்த முழுமையிலேயே அடங்கி அழியும்.
அதுபோல் ஜீவாத்மா மற்றும் பரமாத்மாவிலிருந்து பூர்ண ஸ்வரூபம் பிரிக்கப்பட்டால், எஞ்சியிருப்பது என்ன? பூர்ண - ஸ்வரூபம் மட்டும் எஞ்சியுள்ளது. பூர்ண - ஸ்வரூபம் மட்டும் எஞ்சியிருக்கிறது என்று சொல்வதன் மூலம் என்ன அர்த்தம்? வேறுபடுத்தும் பெயர் மற்றும் வடிவம் உண்மையில் இல்லை என்று அர்த்தம். ஆக, ஜீவன், பரமன் என்பதெல்லாம் ஆத்மா எனும் தூய முழுமையான உணர்வின் மீது கற்பிக்கப்பட்டுள்ளன. இருப்பது பேரின்பமான தூய உணர்வான ஆத்மா ஒன்றே.
அதாவது, ஜனகரின் இந்த உரைக்கு என்ன அர்த்தம்? ஆன்மாவை அறிந்துணர்ந்தால் அனைத்தும் நம்முள்ளிருந்து உதயம், அனைத்தும் நமக்குள்ளே அடங்கி அழியும்.
உருவகம் 3 - பொன்னுள் தொடி
வாருங்கள், நாம் ஒரு பெரிய நகை கடைக்குச் சென்று அங்கு வியாபாரத்திற்கு வைக்கப்பட்ட பல்வேறு வகை தங்க ஆபரணங்களைப் பார்க்கலாம்.
நில்லுங்கள்! கடையில் நுழையும் முன் இத்தருணம் கிராமங்களில் விளையாட்டாகக் கூறும் ஒரு வார்த்தை எனக்கு ஞாபகம் வருகிறது. “கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்”.
இது என்ன ! நகைக் கடையில் வந்து நாய்-கல் என்று உளறல்! இதன் அர்த்தம் தான் என்ன என ஐயமா! கவலை வேண்டாம். அவையும் என்னவென்று பார்க்கலாம்.
வளையல்கள், கழுத்திலணியும் மாலைகள், ஒட்டியானங்கள், மோதிரங்கள, - அடேயப்பா வித விதமான ஆபரணங்கள். இவைகள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவை. தங்கம் காரணம், வளயைல் விளைவு (காரியம்). வளையல்களின் ஆதாரம் தங்கம். அந்தக்கடையில் இருக்கும் அனைத்து ஆபரணங்களுக்கும் (வளையல்கள், ஒட்டியானங்கள், கழுத்தனிகள், மோதிரங்கள்,….) ஆதாரம் தங்கம். வளையல்கள், ஒட்டியானங்கள், கழுத்தணிகள் … இவையனைத்தும் நாம் கொடுத்த பெயர்களும், வடிவங்களும் (நாம ருப பேதங்கள்) தான். தங்கத்தை ஆதாரமாக வைத்து பலவித ஆபரணங்களை நாம் காண்கிறோம். அதாவது, காரியங்களின் (விளைவுகளின்) ஆதாரம் காரணம். நீங்கள் வாங்குவது ஆபரணங்களை; தங்கத்தை அல்ல. இந்தக் கண்ணோட்டத்திற்கு சர்வ ஆதார நோக்கு என்று பெயர்.
இப்போது இந்த ஆபரணங்களை மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். தங்கம்தான் இந்த அனைத்து ஆபரணங்களில் இருக்கிறது. தங்கம்தான் பலவகை ஆபரணங்களாக உள்ளது. அதாவது வளையல், ஒட்டியானம், மாலை, மோதிரம் எனும் அந்த நாம ரூப பேதங்களை நீக்கிப் பார்த்தால் அவை வெறும் தங்கமே. நீங்கள் வாங்குவது தங்கத்தைதான்; ஆபரணங்களை அல்ல. இந்தக் கண்ணோட்டத்திற்கு சர்வ சார நோக்கு என்று பெயர்.
ஆபரணங்களைப் பாரத்தால் தங்கம் தெரிவதில்லை; தங்கத்தைப் பார்த்தால் ஆபரணங்கள் தெரிவதில்லை. பொன் எனும் நகையைக் கண்டால் அங்கு பொன் இல்லை. நகையினுள் உள்ள பொன்னைக் கண்டால் பொன் எனும் நகையில்லை. கல்லைக்கண்டால் நாயைக்காணோம; நாயைக் கண்டால் கல்லைக் காணோம். இப்பொழுது புரிகிறதா, எப்படி ஆழ்ந்த வேதாந்த தத்துவத்தை நம் கிராமத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் கூறுகிறார்கள் என்று. எதைத் தேடுகிறோமோ அது நமது பார்வையைப் பொருத்தது.
அடுத்த பதிவில் இம்மூன்று உருவகங்களைக் கூறி, ஜனகர் என்ன சொல்கிறார் என்பதை ஆராய்வோம். அதுவரை………
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)