ஸ்லோகம்
மத்தோ விநிர்க³தம்ʼ விஶ்வம்ʼ மய்யேவ லயமேஷ்யதி ।
ம்ருʼதி³ கும்போ⁴ ஜலே வீசி꞉ கனகே கடகம்ʼ யதா² ॥ 2-10 ॥
தமிழாக்கம்
மண்ணுள் குடமும், நீரில் அலையும்,
பொன்னுள் தொடி*யும் லயம் போல
என்னுள் இருந்து விரியும் இவ்வுலகம்
என்னுள்ளேயே அடங்கிடும் அன்றோ !! 2.10
* தொடி = வளையல்
விளக்கம்
வியப்பினால் உறைந்த ஜனகர், அவருக்கு என்ன நடந்தது மற்றும் பிரபஞ்சத்தைப்பற்றிய அவரது பார்வை எப்படி முடிந்தது என்பதை தொடர்ந்து கூறுகிறார். விளைவு எவ்வாறு காரணத்துடன் இணைகிறதோ, அதுபோலவே தன்னால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த இருமை உலகைப் பற்றிய மருவுகலைந்து, அவ்வுலகு தன்னுடன் ஒன்றிவிட்டது என்று கூறுகிறார். விளைவு-காரண உறவினை (கார்ய காரண சம்பந்த:) விளக்க, மூன்று உருவகங்களை கையாளுகிறார் ஜனகர் இந்த ஸ்லோகத்தில்.
முதல் பகுதியில் முதல் உருவகத்தை ஆராய்வோம்.
உருவகம் 1 - மண்ணுள் குடம்
களிமண்ணால் உருவாக்கப்பட்ட ஒரு குடத்தை எடுத்துக் கொள்வோம். இந்த மண்குடம் உண்மையானதா என்று கேட்டால், உண்மைதான் என்கிறோம். ஏனென்றால் இது கொம்பு முளைத்த முயல் போலவோ அல்லது வட்டமாக இருக்கும் சதுரம் போலவோ அல்ல. இது நிஜமாக இருக்கும் மண்பானை.
சரி, இது களிமண்ணா என்று கேட்டால் உண்மைதான் என்றும் கூறுகிறோம். ஆக நிஜமாக நம் கண்முன் இருக்கும் ஒரு பொருளுக்கு, பானை என்றும் களிமண் என்றும் இரண்டு நிஜமான பொருட்கள் (objects). ஒரு பொருளின்(குடம்) இருப்புக்கு (existence, “ஸத்” என்பர் சமஸ்க்ருதத்தில்) எப்படி இரண்டு பொருட்கள் (குடம், களிமண்) உண்மையாக முடியும்? எனினும், இரண்டும் தவறென்றோ அல்லது இல்லையென்றோ கூறமுடியாது. இரண்டும் ஒரு பொருளையே (குடம்) குறிக்கிறது. இரண்டிற்கும் இருப்பு என்ற ஒன்று உண்டு. அப்படியென்றால் எது மிகப் பொருந்தும் உண்மை? மண் இல்லாமல் குடமில்லை; அதாவது குடத்திற்கு இருப்பு என்பது இல்லை. மண்தான் குடமாக இருக்கிறது; குடம் மண்ணாக இருக்கவில்லை. ஆக, குடமென்பது ஒருதனித்துவமான இருப்பு அல்ல; அந்த இருப்பு மண்ணைச் சார்ந்து இருப்பது. குடம் என்பது ஒரு வடிவத்தை குறிக்கும் பெயர் அவ்வளவு தான்.
இப்படி தனித்துவமான இருப்பினை (independent existence) “ஸத்யா” என்றும், சார்ந்த இருப்பினை (dependent existence) “மித்யா” என்று வேதாந்தம் கூறுகிறது. மித்யா என்பது பொய் அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். கொம்புள்ள முயல் என்பது பொய்; மண்குடம் என்பது மித்யா; களிமண் என்பது சத்யம்.
வேதாந்தம், மித்யா என்பதனை இரு வகைகளாகப் பார்க்கிறது.
ஒன்று சார்புநிலை உண்மை (dependent or empirical reality);
மற்றொன்று அக நிலைஉண்மை (subjective or personal reality).
சார்ந்த நிலை இருப்பு (dependent reality) - ஒரு ஆய்வு
நாம் இப்பொழுது கண்ட மண்குடத்தின் இருப்பு (existence) சார்புநிலை உண்மை, சார்புநிலை இருப்பு (dependent reality, dependent existence).
முந்தைய ஸ்லோகத்தில் கண்ட கயிற்றில் பாம்பு எனும் உருவகத்தில் பாம்பு அகநிலை உண்மை, அகநிலை இருப்பு (subjective reality, subjective existence).
இந்த இரண்டு இருப்புகளையும் இன்னும் சற்று ஆழமாக ஆராய்வோம்.
சார்பு நிலை இருப்பு உதாரணத்தில் நாம் உண்மையெனக் கண்ட களிமண் உண்மையிலேயே உண்மையா? களிமண் என்பது மண்ணும் நீரும் சேர்ந்த கலவை. ஆகவே களிமண்ணின் இருப்பு உண்மையல்ல. அதுவும் சார்பு நிலைஇருப்பே. சரி, மண்ணும், நீரும் உண்மையா? அவை இரண்டுமே மூலக்கூறுகளால் (molecules) ஆனவை அல்லவா. அப்படியென்றால் அவைகளும் சார்புநிலை இருப்பே. அதுபோல மூலக்கூறுகளும் (molecules) சார்புநிலைஇருப்பே, ஏனெனில் அவைகள் அணுக்களாலானவை (atoms). இப்படி ஆராய்ந்துகொண்டே போகலாம் முடிவில்லாமல். விஞ்ஞானம் இந்த உண்மையை அறியதொடர்ந்து இன்றும் முயன்று வருகிறது முடிவில்லாமல்.
இந்த ஆய்வினை உலகில் இருக்கும் அனைத்திற்கும் (உயிருடைய, உயிரற்ற ஜட பொருட்கள்) நடத்தலாம். விஞ்ஞான ரீதியில் இறுதி உண்மையை அறிய இயலாது. பௌதீக ஆராய்ச்சி, பொருளைப் (matter) பற்றியது.
இங்குதான் வேதாந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லா வடிவங்களும் “இருப்பு” (‘is’ness) எனும் தத்துவத்தைப் பொறுத்தது என்று அது கூறுகிறது. இருப்பு என்பது துகள், அணு, மூலக்கூறு, களிமண் மற்றும் பானை என எல்லா வடிவங்களிலும் இருக்கும் ‘இருப்பு’. எங்கெல்லாம் ரூபம், மித்யா இருக்கிறதோ அங்கெல்லாம் இருப்பு எனும் சத்யம் இருக்கிறது என்கிறது வேதாந்தம். இந்த“இருப்பே” சத்தியம். அனைத்தும் இந்த “இருப்பினைச் சார்ந்தே“இருக்கின்றன”.
இது மேசை, இது பானை, இது துகள், இது அணு …. என்றெல்லாம் நாம் கூறும்போது அந்தந்த பெயர்களில், அந்தந்த வடிவங்களில், அந்தந்த இடங்களில் இந்த “இருப்பு” உள்ளது. அதனைச் சார்ந்தே அத்தனையும் இருக்கின்றன.
அதனால்தான் வேதாந்தம், எங்கும், எதிலும், எந்நேரமும் இருக்கும் இந்த முழுமையான இறுதி உண்மையான “இருப்பு” என்பதனை பரம்பொருள், ப்ரம்மன் என்று கூறுகிறது.
ஆகவே குடம் மண்ணிலிருந்து வேறல்ல, மண்தான் குடமாக காட்சிஅளிக்கிறது என்பது போல், பரம்பொருளான ப்ரம்மனிலிருந்து அனைத்தும் வேறல்ல. பரம்பொருளே அனைத்துமாக காட்சியளிக்கிறது.
அகநிலை உண்மை (subjective reality) - ஒரு ஆய்வு
சரி, இப்போது மித்யாவின் இரண்டாவது வகையான அகநிலை உண்மையின்(subjective reality) களத்தையும் இதே வழியில் ஆராயலாம். அகநிலை யதார்த்தம் என்பது நமது கனவுகள் மற்றும் விழிப்பு நிலைகளை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல், யாரோ/எதனோ ஒருவர் மீது நாம் செய்யக்கூடிய புறத்தெறிவுகளையும் (projections) உள்ளடக்கியது என்பதும்கூட.
இல்லாத பாம்பினை இருக்கும் கயிற்றின்மீது புறத்தெறிவு செய்கிறோம் நாம். ஆக, பாம்பு அகநிலை மித்யா, கயிறு சத்யம். பாம்பின் இருப்பு அகநிலையில்; கயிறின் இருப்பு புறநிலையில். நம்முடைய முந்தைய ஆய்வின்படி புறநிலைப்பொருளான கயிறும், இழைகள், மூலக்கூறுகள், அணுக்கள் போன்றவற்றைச்சார்ந்திருப்பதால், கயிறு என்பதும் மித்யா. புறநிலை யதார்த்தமே மித்யாவாகக்காணப்படுகிறது, ஏனெனில் அது அதன் இருப்புக்கு வேறு எதையாவது சார்ந்துள்ளது.
இப்படி நம் ஆய்வின் இறுதியாக, நாம் ஒரே ஒரு யதார்த்தத்திற்குத்தான் வரமுடியும்; எங்கும், எதிலும், எந்நேரமும் இருக்கும் இந்த முழுமையான இறுதி உண்மையான “இருப்பு” எனும் பரம்பொருளான ப்ரம்மனிலிருந்தே, அனைத்தும் வேறல்ல என்ற ஒன்றுதான்.
உபநிடதங்கள் இந்த முழுமையான யதார்த்தத்தை நம்மிடமிருந்து விலகியதாக வெளிப்படுத்தவில்லை, எல்லாவற்றின் உண்மையும் நாம் தான் என்று கூறுகிறது.
இதற்கு என்ன அர்த்தம்? ஆன்மாவை அறிந்துணர்ந்தால் அனைத்தும் நம்முள்ளிருந்து உதயம், அனைத்தும் நமக்குள்ளே அடங்கி அழியும்.
அடுத்த இரு உருவகங்களை அடுத்த பதிவில் காண்போம்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !