நானே தூய உணர்வான இருப்பு
தெளிவான அறிவுப் பார்வையெனும் மாசறு காட்சி கிட்டியவுடன் நம் உள்ளத்தில் ஊற்றுப்பெருக்கெடுப்பது வியப்புடன் கூடிய ஆனந்தம், புத்துணர்வு, பொலிவு. அந்தப் புதுப்பொலிவுடன் தனது உணர்வுகளை, வெள்ளப்பெருக்கென தன்னையே அர்சித்து வெளிப்படுத்துகிறார் ஜனகர், இரண்டாவது அத்தியாயத்தில் என்று அத்தியாய முகவுரையில் கண்டோம் அல்லவா!
முதல் ஸ்லோகத்தில் ஜனகர் என்ன கூறுகிறார் என்று காண்போம்.
ஸ்லோகம்
அஹோ நிரஞ்ஜன꞉ ஶாந்தோ போ³தோ⁴(அ)ஹம்ʼ ப்ரக்ருʼதே꞉ பர꞉ ।
ஏதாவந்தமஹம்ʼ காலம்ʼ மோஹேனைவ விட³ம்பி³த꞉ ॥ 2-1 ॥
தமிழாக்கம்
ஆஹா! உடல் மன வளாகம் கடந்த,
அமைதியான, தூய இருப்புணர்வே நான்!
இதுவரையில் இத்தனை காலம்
மருவினால் குழம்பியிருந்தேனே!!
விளக்கம்
அஹோ நிரஞ்ஜன꞉ ஶாந்தோ போ³தோ⁴(அ)ஹம்ʼ ப்ரக்ருʼதே꞉ பர꞉ ।
இந்த சொற்றொடரில் “தான்” யார் என்பதை கூறுகிறார் ஜனகர். “அஹம்நிரஞ்ஜன꞉, ஶாந்த:, போ³த⁴: , ப்ரக்ருʼதே꞉ பர꞉ “ என்று வியந்துரைக்கிறார்.
போ³த⁴: என்ற சொல்லின் விரிவான விளக்கத்தை முந்தைய அத்தியாயத்தில் கண்டோம். அறுதி உண்மை எனும் தூய உணர்வான அறிவு என்பதே இதன் பொருள்.
ஸாந்த: என்பது அமைதியைக் குறிக்கும்.
நிரஞ்ஜன: என்பது மாசிலா அல்லது தூய என்ற பொருளாகும்..
ப்ரக்ருʼதே꞉ பர꞉ ‘என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட என்ற நேரடி பொருள். வேதாந்தத்தில் இயற்கை என்பது ஸாத்விக, ராஜ, தமஸ எனும் முக்குணங்களாலானது. இந்த முக்குணங்களும் வெளிப்படுவது நமது உடல்மன வளாகத்தின் வழியாக. ஆக, ப்ரக்ருʼதே꞉ பர꞉ என்றால் உடல் மனவளாகத்தைக் கடந்து என்று பொருள்.
“ஆஹா! நான் உடல் மன வளாகத்தைக் கடந்த, அமைதியான, தூயஇருப்புணர்வே” என்ற புத்துணர்வு பொலிக்கும் சொற்றொடரே இந்த முதல்சொற்றொடர்.
முனிவரின் அறிவுரையை கேட்டுணர்ந்த சீடன் ஜனகன், தன் உடலும் உள்ளமும்தான் நான் என்ற மாயையால், பல ஆண்டுகளாக வாழ்ந்த பரிதாபகரமான துயரங்களை நினைத்து வருந்துகிறான். குருவின் அறிவுரையை உணர்ந்தபின், பந்த பாசக் கடலிலிலே ஆசையெனும் அலைகளை வளர்த்திடும் மனதைக் கடந்ததால், அமைதியாக, சஞ்சலங்கள் ஏதுமின்றி, களங்கமேதுமில்லாமல், இயற்கைக்கு அப்பாற்பட்ட தூய உணர்வாக இப்போது அவன் தன்னைஅறிகிறான்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)