மெய்றியவைப் பெறுவது எங்கனம்? முக்தியை அடைவது எவ்விதம்? பற்றின்மை பெறுவது எவ்வன்னம்? கற்பிக்க வேண்டும் ஆசானே என்று வேண்டிய ராஜரிஷி ஜனகருக்கு, முதல் அத்தியாயத்தில் அனைத்தும் நீ, அனைத்திலும் நீ, வரையிலா, மாறா, முழுமையான, நீக்கமற நிறைந்து, உனக்குள்ளும் உனைக்கடந்தும் அமைதியுடன் கலக்கமேதுமிலா தூய இருப்புணர்வே நீ என்ற பேரறிவுகொண்டு பேரின்பம் பெற்றிடுவாய் என் மகனே, அப்பனே என்றெல்லாம் பேரரசன் ஜனகனை அழைத்து, தந்தையின் இடத்திலிருந்து அறிவுரைகள் வழங்கினார் இளம் முனிவரான அஷ்டாவக்ரர்.
ஆஶ்ச1ர்யவத்1ப1ஶ்யதி1 கஶ்சி1தே3ன மாஶ்ச1ர்யவத்3வத3தி1த1தை2வ சா1ன்ய: |
ஆஶ்ச1ர்யவச்1சை1னமன்ய: ஶ்ருணோதி1 ஶ்ருத்1வாப்1யேனம் வேத3 நசை1வ க1ஶ்சி1த்1
||பகவத் கீதை 2.29||
“அரிதாகப் பெற்ற இம்மானிடப் பிறவியில் ஆத்ம தத்துவத்தைப் புரிந்துகொள்வது எளிதன்று. ஆத்ம தத்துவம் ஆச்சர்யமானது. யாரோ ஒரு மஹாபுருஷன்தான் ஆத்மாவை ஆச்சர்யமாக காண்கிறான். ஆத்ம ஸ்வரூபத்தை வர்ணிப்பது இயலாதது. யாரோ ஒரு மஹாபுருஷன்தான் இந்த தத்துவத்தை ஆச்சர்யமாக வர்ணிக்கின்றான். அதே போல் தகுதி பெற்ற வேறொருவன்தான் ஆத்மாவை ஆச்சர்யமாக கேட்கிறான். தகுதியற்ற ஒருவன் அப்படிக் கேட்டாலும் ஆத்மாவை அறியவே மாட்டான் என்கிறான் கண்ணன் கீதையில் (2.29)”.
இந்த இறைவாக்கின்படியே, அரிதானவர் ஆன்மீக விற்பன்னரான ராஜரிஷி ஜனகர். குருவின் அருளால் நித்ய-அநித்ய அவிவேகம் எனும் மோஹமான மருள் நீக்கி, அறியாமையெனும் அஞ்ஞானமாகிய இருள் நீக்கிய ராஜரிஷி ஐனகருக்கு, “ஸம்யுக்த தர்ஷன”மெனும் தெளிவான அறிவுப் பார்வையெனும் மாசறு காட்சி கிட்டியவுடன்,
“நானாக “நான்” இல்லை, “நான்” “அவனே”தான், “அவன்”தான் நான், நான்தான் உலகம், என்னைப்பற்றி எனக்கே தெரிந்திராத, என்னை மேன்மைப்படுத்தும் உண்மைகள். அடேயப்பா, ஆஹா, ஓஹோ” என்றெல்லாம் புதுமையான கருத்துகளின் ஊற்று அவர் உள்ளத்தில்.
ஆச்சர்யம் கலந்த பேரின்பத்தில் வர்ணிக்கின்றார் ஆத்மஞான அனுபவத்தை!
தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே ….. திருமந்திரம்
தெளிவான அறிவுப் பார்வையெனும் மாசறு காட்சி கிட்டியவுடன் நம் உள்ளத்தில் ஊற்றுப்பெருக்கெடுப்பது வியப்புடன் கூடிய ஆனந்தம், புத்துணர்வு, பொலிவு. அந்தப் புதுப்பொலிவுடன் ஐனகர் தனது உணர்வுகளை, வெள்ளப்பெருக்கென தன்னையே அர்சித்து வெளிப்படுத்துகிறார் ஜனகர், இரண்டாவது அத்தியாயத்தில்.
ஒரு பொருளை (subject) அறிந்து தெளிந்தபின் அதனை ஒரு கொள்கைபிடிப்பாய் அறுதியிட்டுக் கூறும் உறுதி அனைவரிடமும் அமைவதில்லை. அவ்வுறுதி பிடிவாதம் அன்று. அது சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு. ஆணித்தரமாய்க் கூறுகிறார் என்று சொல்வோமே, அதன் பொருள் என்ன? அடித்தபின், அடித்த இடத்தை ஆணி உறுதியாகப் பற்றிக்கொள்கிறது, அசைவு ஏதுமில்லாமல். அதுபோல, ஆய்ந்தறிந்த கருத்தினை ஆணித்தரமாய் உரைப்பது, அக்கருத்து பற்றியது மட்டுமன்று; தான் கொண்ட கொள்கையில் சமரசமில்லாத உறுதிப்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. திருக்குறளிலே, உண்டு இத்தகைய ஆணித்தரமான கருத்துக்கள்.
“ஆஹா! ஓஹோ! உடல் மன வளாகம் கடந்த, அமைதியான, தூய இருப்புணர்வே நான்! இதுவரையில் இத்தனை காலம் மருவினால் குழம்பியிருந்தேனே” என்று தன்னைப்பற்றி புதுமை கண்ட வியப்பில் இயம்பிய ஜனக மஹாராஜன், ஆணித்தரமாக பெரு மகிழ்வுடன் உணர்வுபூர்வமாக உரைக்கிறார்.
ஜனகரின் உரைகளை வரும் பதிவுகளில் காண்போம். அதுவரை…….
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும்.
https://notionpress.com/author/374389