முகவுரை
அன்றாட வாழ்வில் நாம் ஈஸ்வரன், ஜீவன் மற்றும் ஜகத் (பதி, பசு, பாசம்) என்ற மூன்று தத்துவங்களையும் அவைகளுக்கிடையே உள்ள உறவுகளை சரியாகப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குவதில்லை. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறிடும் நாம், அந்த “அவன் “ எவன் என்று அறிய முயல்வதில்லை.
“கண்ணுக்குத் தெரியாதது, நினைத்துப் பார்க்க முடியாதது, ஆதியும், அந்தமும் இல்லாதது. எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது. நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” - அனைத்து உயிரினங்களின் இருப்பு இதுதான் என ஞானியரும், பெருமுனிவர் பலரும் கூறுவர்”
என முண்டக உபநிடதம் (1.1.6) “அவனை” விவரிக்கிறது.
இது என்ன குழப்பமான விவரணம். உபநிடதம் நேரடியாக விவரிக்காமல், முரண்பாடான பயனிலைச் சொற்களை (contradictory predicates) பயன்படுத்துகிறதே. முதலில் முரண்பாடான பயனிலைச் சொற்களை உபயோகித்து பின்னர் அதனிலிருந்து கருத்துக்களை பிரித்தெடுக்க வேண்டும் - ஏன் இந்த சோதனை? எதற்கு இப்படி ஒரு போராட்டம்?
"முரணான பயனிலைகளே முழுமைக்குத் துணை. வாழ்வதனில் அர்த்தமேதுமில்லை என்று சொல்வதில் அர்த்தமேதுமில்லை என்பதே வாழ்வின்அர்த்தம்” என்று 1947 ஆம் ஆண்டு அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற நீல்ஸ் போர் பதில் கூறுகிறார்.
இறைவன் எனும் நீக்கமற நிறை, வடிவிலா, குணமிலா, நித்தியமான எல்லையிலா உணர்வின் விளக்கத்தை நாம் பெற முயற்சிக்கிறோம். அப்போது ஒரு கேள்வி எழுகிறது; ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் எல்லையற்ற தன்மையின் தரிசனத்தைப் பெற முடியுமா? நமது புத்தி/அறிவாற்றல் இந்த புதிரை ஒருபோதும் தீர்க்க முடியாது, ஏனென்றால் புத்தி என்று நாம் அழைப்பது முரணான இரட்டை பயனிலைகளின் விளைவு (அதாவது - நமக்கு புத்தி உள்ளது ஏனெனில் அதை உபயோகிக்கிறோம், அது இல்லை ஏனெனில் நம்மால் அதைப் பாரக்க இயலாது).
இத்தகைய முரண்பாடினை தீர்க இயலாத போது, நாம் அதைக் கடந்து செல்ல(transcend) முயலவேண்டும். அப்படி கடந்து செல்ல, நம் வசம் உள்ள உள்நோக்குத்திறன்கள் அனைத்தையும் நாம் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். "நான்ய பந்தா அயனாய வித்யாதே - வேறு எந்த வழியையும் தேட வேண்டிய அவசியமில்லை” என்று வேதங்களில் புருஷ ஷுக்தம் கூறுகிறது.
இந்த முன்னுரையை அறிந்துணர்ந்து, அஷ்டாவகர முனிவரின் அடுத்த உபதேசத்தை அறிய முற்படுவோம்.
ஸ்லோகம்
யேகோ விசுத்த4 போ4தோ3ஹமிதி நிஷ்ச்சயவாஹிநா
ப்ரஜ்வால்யாஞ்ஞான க3ஹனம் வீத சோக ஸுகீ2 ப4வ!!
தமிழாக்கம்
இறுதி உண்மையெனும் அருட்பெரும் ஜோதியாம்
ஒருமையெனும் அதி தூய இருப்புணர்வினை இட்டு - (மெய்)
அறியாமையெனும் அடர்வனத்தை எரித்திட்டு
துன்பம் களந்திட்டு பேரின்பநிலையில் இருந்திடு!!
விளக்கம்
விசுத்த போதா - அதி தூய இருப்புணர்வு அறிவு - வாலறிவு
இந்த ஸ்லோகத்தில் அறிவுரைக்கப்பட்ட முதல் தத்துவம் “விசுத்த போதா”.
ஓம் நம: ப்ரணவார்தா²ய ஶுத்³தஜ⁴ஞானைகமூர்தயே ।
நிர்மலாய ப்ரஶான்தாய த³க்ஷிணாமூர்தயே நம:ஓங்காரப் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாய்
மாசிலா தூய ஒருமை வாலறிவின் உள்வடிவாய்
கரையிலா சுத்த அமைதிநிறை ஆண்டவனாம்
தக்ஷிணாமூர்த்தி பொற்பாதம் பணிந்திடுவோம்!!
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின்.
என்று ஆதி சங்கரர் இயற்றிய தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் பிரார்த்தனைப்பாடலில் கூறப்படும் சுத்த ஞானமும், திருவள்ளுவர் கூறும் வாலறிவும் இந்த“விசுத்த போதா” தான்.
“விசுத்த போதா” என்றால் என்ன என்பதைப்பற்றிய ஒரு சிறு ஆய்வு இதோ:
நாலும் தெரிந்தவனை நாடி நாலும் அறிந்தால், எந்
நாளும் பிறவிப்பிணி இல்லை, அறிந்துணர்ந்தால்.
இந்த நான்கு எவைகளைக் குறிக்கிறது? எழுத்து, பேச்சு, சித்திரம், இசை எனவும், படிப்பறிவு, பட்டறிவு, கேள்வி, ஞானம் என நான்கு வகை அறிவுகளாகவும் நடைமுறையில் கூறுவது வழக்கம்.
சற்று ஆழமாக ஆராய்ந்தால், நாலும் தெரிந்தவன் என்றால் , நான்கு வேதங்களையும் கற்றறிந்த அறிவு என்றும், நாலும் அறிவது என்றால், அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய அறிவு என்பதும் விளங்கும் நமக்கு.
சரி, இன்னும் பரந்த, ஆழமான பொருளுண்டா? ஆராய்வோம்.
மனித வாழ்க்கை என்பது அறியாமையிலிருந்து அறிவுக்கான பயணம் என்பதை ஏற்போமானால், அறியாமையும் அறிவே அல்லது அறிவின் ஒரு நிலையே என்பதையும் ஏற்க வேண்டியிருக்கிறது. ஆக, அறியாமையிலிருந்து அறிவுக்கான நமது பயணத்தில் நான்கு நிறுத்தங்கள் என்று நால்வகை அறிவைக் காண முடியுமா? காண முடிந்தால், அறிவின் ஆழமும் அழகும் புலப்படும் என்று தோன்றுகிறது.
ஐம்புலன்களினாலும் உணர்ந்து பெறக்கூடியது புலனறிவு. இது பொதுவான, சாதாரண, அடிப்படை அறிவு. புலனுள்ளோர் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய அறிவு. புலனறிவு தேவை; எனினும், புலனறிவை மட்டுமே தக்கவைத்துக் கொண்டு வாழும் மனிதர்கள் விலங்கினத்திற்கு ஒப்பாவர். அறிவில் இது முதல் படி.
தன் உடலால், வாக்கால், மனதால் புரியும் மற்றும் பிறரின் செயல்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பகுத்து, இன்பம்/துன்பம், நன்மை/தீமை, சரி/தவறு, உண்மை/பொய்மை, விருப்பு/வெறுப்பு என்றெல்லாம் இருமைப்படுத்தி புரிந்து கொண்டு, அதன்படி வினைகளைப் புரிய வைப்பது பகுத்தறிவு. மனித எண்ணம் மற்றும் செயல்களில் இரு நிலைகள் உண்டு; ஒவ்வொரு நிலையும் தரக்கூடியப் பலனை ஆய்ந்தறிந்து அதற்கேற்ப நடக்கத் தூண்டுவது பகுத்தறிவாகும். புலனறிவிலிருந்து பகுத்தறிவுக்கு பயணிப்பது இரண்டாம் படி.
இந்த இரண்டு அறிவுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, வாழ்க்கையெனும் ஓடத்தில் பயணிக்கலாம். விளைவுகளை அனுபவிக்கின்றோம். சொல்லப்போனால், புலனறிவு-பகுத்தறிவு-புலனறிவு என்ற சுழலில் வாழ்வின் பெரும்பகுதியை அல்லது முழுவதையுமே கழிக்கிறோம். எனினும், இவை அறிவல்ல. அறிவைப் போன்ற உணர்வுகளே தவிர, அறிவல்ல.
வாழ்க்கை என்பது அறியாமைக் காட்டிலிருந்து அறிவு எனும் ஊரை (அறிவூர் என அழைப்போம் இதை) நோக்கிய பயணமென்றால், புலனறிவும் பகுத்தறிவும் அறியாமைக் காட்டின் பகுதிகள். புலனறிவும் பகுத்தறிவும் அறிவல்ல என்று உணர்ந்தவர்கள் அறியாமைக் காட்டைக் கடந்தவர்கள் எனலாம்.
அறிவூரின் ஆரம்ப எல்லை மெய்யறிவில் தொடங்குகிறது. மெய்ப்பொருள் காண்பதும் அறிவு. இருமைகளின் நிலையறிந்து, இருமைக்குள் ஒருமையும் ஒருமைக்குள் இருமையும் அடங்கியிருப்பதைப் புரிந்து கொண்டு, சீரான சிந்தையும் நடத்தையும் பெறச்செய்வது மெய்யறிவு. பொய்தீர் ஒழுக்கநெறியைப் புகட்டுவது மெய்யறிவு. 'இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி, ஒளியும் இருளும் வட்டத்தின் விட்டங்கள், பிறப்பும் இறப்பும் சுழலின் வேகம்' போன்ற எளிய, ஆழமான உண்மைகளின் ஆணிவேர் மெய்யறிவு. புலனாலும் பகுப்பாலும் புரிந்தவற்றை வாழ்வின் நடைமுறையாக்கி உணர்ந்து செயல்பட வைப்பது மெய்யறிவு. மெய்யறிவைப் பெற மனமில்லாதவருக்குப் புலனறிவினாலும் பகுத்தறிவினாலும் பயனில்லை எனலாம். மனிதருக்கு அப்பாற்பட்டது மெய்யறிவு என்று சொல்லப்படுகிறது. அதன் உட்பொருள், மெய்யறிவு மனிதரால் எளிதில் பெறமுடியாது என்பதல்ல; மெய்யறிவு பெற்ற மனிதர் கடவுள் போன்றவர் என்பதே.
மெய்யறிவுப் பாதையெனில் அது 'ஒருமைக்கானத் தீவிர யோகம்' என்று பொருளல்ல. தான் பிறந்த காரணத்தைப் புரிந்து, தன் வாழ்விற்கு ஒரு இலக்கைத் தீர்மானித்து, அதற்கேற்ப வாழ்வை அமைத்துக் கொள்ள முனைவதும் முயற்சியில் இறங்குவதும் மெய்யறிவே. அறியாமைக் காட்டிலிருந்து வெளிவந்ததும், மெய்யறிவு நிறுத்தத்தில் இளைப்பாறுவது இயல்பே. அங்கிருந்து பயணத்தைத் தொடரலாம், என்றாலும் மெய்யறிவைக் கண்டதே வாழ்வில் பெரும் நிறைவைக் கொடுக்கும் எனலாம். மெய்யறிவில், அறிவின் எல்லையில், காலடி வைத்து மீண்டும் அறியாமைக் காட்டுக்குள் அடைக்கலம் புகுவோர் எண்ணற்றோர். சிலரே தொடர்ந்து பயணித்து வாழ்வின் பொருளறிகிறார்கள்; இலக்கை அடைகிறார்கள்.
சொந்த பந்த இன்ப துன்ப கால இடையூறுகளுக்கு அப்பாற்பட்டு, தன்னையும் பிறரையும் மதித்து, எளிமையான நிலையிலும் தன் வாழ்வை, தன் விருப்பம்போல் வாழ்ந்தால் அதுவே கடவுளைக் கண்டதற்கு ஒப்பான நிறைவையும் நிம்மதியையும் கொடுப்பதால், மெய்யறிவு பெற்றவர்களைக் 'கடவுளைக்கண்டவர்' என்கிறோம்.
கடவுளைக் காணத் தூண்டுவது மெய்யறிவென்றால், கடவுளைக் கைக்குள் அடக்குவது வாலறிவு எனலாம். கடவுளைத் தேடி வெளியே போக வேண்டியதில்லை; உள்ளிருக்கும் கடவுளை உன்மனியால் உணர்வது வாலறிவு. 'கடவுளைக்கண்ட' நிலைக்கும் மேலானதொன்று உண்டென்றால், அது 'கடவுளைக்கொண்ட' நிலை எனலாம். இறையையும் தன்னையும் ஒன்றாக்கும் நிலை வாலறிவு. 'தானே இறைவன், தனக்கு இணையானவர் இல்லை, தன் சக்தியும் பெருமையும் எல்லையற்றது' என்று நினைப்பது வாலறிவு அல்ல; அது வாலறுந்த புலனறிவு. வாலறிவு என்பது, ஆணவம் கடந்த அமைதி நிலை. 'தானே இறைவன்' என்ற மகத்தான உண்மை அறிந்து ஆணவமொழித்த நிலை. வாலறிவுக்கு வழிபாடுகள் இல்லை.
இந்த வாலறிவுதான் அதி தூய மெய்ப்பொருளறிவு - விசுத்த போதா. முண்டக உபநிஷத்தை விளக்கும் ஶ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் தனது படைப்பானஅனுபூதி பிரகாஸாவில் (57வது ஸ்லோகம்) இந்த “போதா” என்ற சொல்லுக்கு
“ப்ரம்மாஸ்மிந் கல்பிதம் ஸர்வமிதி தீர்போத உச்யதே”
என்று இங்கணம் விளக்கமளிக்கிறார்:
“எது தானே (ஸ்வயம்) தன்னை விளக்கிக் கொள்கிறதோ, அதனால் தான்தோன்றியாக (தன்னைத்தானே வெளிப்படுத்துவது) இருக்கிறதோ, தன்ஸ்வரூபமாகமே இருப்பதனால் மிக நெருக்கமாக இருக்கிறதோ அதுவே பிரம்மன். இந்த பிரம்மனில் அனைத்தும் (ஸர்வம்) கற்பிக்கப்பட்டுள்ளது(கல்பிதம்) என்ற அறிவே “போதா” என கூறப்படுகிறது”.
அஞ்ஞான கஹனம் - அறியாமையெனும் அடர்வனம்
'அறியாமை' என்பது அறிவை மறைக்கும் ஒருவித கவசம் என்பதல்ல, ஒருஇருட்டு அறையில் உள்ள அனைத்துப் பொருட்களின் அறிவையும் மூடும் இருள்போன்றது. விளக்கின் துணை கொண்டு ஒளி கிடைத்தால் அந்த ஒளியால் ஒளிரும் அனைத்து பொருட்களையும் உடனடியாக அறிவோம்.
இருள் சூழ்ந்திருந்தாலும், அந்த அறையில் இரண்டு 'விஷயங்களை' என்னால்'பார்க்க' முடிந்தது! ஒன்று, நான் இருளைப் பார்க்க முடிந்தது, அதன்காரணமாக என்னால் வேறு எதையும் பார்க்க முடியவில்லை. இரண்டாவது, நான் எங்கிருந்தாலும், எனது சொந்த இருப்பை நான் அறிந்திருப்பதால் என்னை நானே அறிய முடியும்.
எதையும் பார்க்க எனக்கு ஒளி தேவை என்பதால், நான் எந்த ஒளியால் இருளைப் பார்க்கிறேன்? இருளின் இருப்பை நான் உணர்வதால், நான் இருளைப் பார்க்க முடியும் அல்லது இருளைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன் என்பதை இது குறிக்கிறது.
ஒளி இலாததை இருள் என்கிறோம். ஒளி இலாத இருளை அகற்ற ஒளி தேவை என்று நான் அறிகிறேன். அறியாமை எனும் இருள் என்பது என்ன? அதனை அகற்ற எந்த ஒளி தேவை? அதனை நான் அறியாவிட்டால் இருளை(அறியாமையை) அகற்றுவது இயலாதது.
ஒளியும் இருளும் உலகும் அலர்கண்
தெளிவு இல்எனில் என்செய
என்று திருவருட்பயன் எனும் நூலில் உமாபதி சிவாச்சார்யர் கூறியபடி தெளிவு வேண்டும். இந்த சொற்றொடரை எளிமையாக விளக்க வேண்டுமெனில்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
என்ற திருக்குறளே இதற்கு பொருத்தமாகிறது. பரிமேலழகர் தனது உரையில்
“குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலுமான மருள் கொண்டு, அவிச்சையால்(அஞ்ஞானத்தால்/அறியாமையால்/அவித்யாவால்) மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே, உளதாம் துன்பம் நிறை(பிறவிப்பிணி) நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகை பிறப்பு எனும் மாணாப் பிறப்பு”
என்று வேதாந்த தத்துவத்தை விளக்குகிறார்.
மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்ற விபரீத உணர்வான மருள் எனும் அஞ்ஞானம், எப்படி எல்லையற்ற, முழுமையான விசுத்த போதா எனும் மெய்ப்பெருள் அறிவினை, நான், உலகம் என்றெல்லாம் வரையறுக்கிறது? (How has ignorance limited the omnipresent omnipotent Ultimate Reality? How does the Absolute become Finite?) - காலம், இடம், காரணம் இவைகளால். இதுதான் அத்வைத தத்துவத்தின் மையக் கருத்து என சுவாமி விவேகானந்தர் எடுத்துரைக்கிறார்
இவை மூன்றினை இப்பொழுது சிறிது ஆராய்வோம்.
நேரம்/காலம் என்பது நம் மனதினால்/எண்ணத்தால் வரையறுக்கப்பட்டது. “ஒரு வருஷம்ன்னு நினச்சு நிதானமாக இருக்காதே; ஒரு நிமிஷத்ல பறந்து போயிடும், பரீட்சை வந்திடும். படி” நாம் அன்றாடம் கேட்கும் தந்தை-மகன் உரையாடல். ஒருவருக்கு ஒரு வருஷம்; இன்னொருவருக்கு ஒரு நிமிஷம்”.
இடம் என்பது பொறி/புலன்களால் வரையறுக்கப்பட்டது. “என்னோடஅறையும் 10’*12’ தான். ஆனால் அந்த அறையைப் பாரத்தால் இது ரொம்ப சின்னதா தெரியுதே”
ஏன் என்ற கேள்வியை நாம் கேட்காத நாளில்லை அல்லவா! இந்த கேள்வி, காரணமில்லாமல் எந்த காரியமும் இல்லை என்ற அடிப்படை அனுமானத்தால் எழுவது. ஏனென்றால் ஏன் என்று நாம் கேட்கும்போதெல்லாம், நடக்கும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும், அதாவது, அதற்கு முன்னால் செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேறு ஏதாவது ஒன்று அதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் எடுத்துக்கொள்கிறோம். ஆக, காரணம்-விளைவு எனும் சங்கிலிப்பிணைப்பினை காரண விதி (theory of causation) என்று அழைக்கிறோம். அதாவது, நம்மை சுற்றியுள்ள அனைத்தும் முன்பு வேறொன்றாகவும், பின்பு மற்றொன்றாகவும் இருக்கும் என்ற உட்கருத்தே ஏன் என்ற கேள்வியின் அடிப்படை.
இவை மூன்றையும் முலாமாக பூசிய கண்ணாடி வழியாக நாம் முழுமையான இறைவனைப் பார்க்க முயலும் போது நாம் காண்பது இந்த பிரபஞ்சம். அதாவது நம்முள்ளே உறை முழுமையான சுய ஒளியாம் (ஸ்வயம் பிரகாச) ஆன்மா, மூலாம்பூசிய கண்ணாடியில் பிரதிபலித்து, காட்சி கொடுக்கும் பிம்பங்களே இந்தபிரபஞ்சமும் அதனுள் உறை தாவர ஜங்கமும். இந்த முன்றின் கூட்டுத் தொகை, அதாவது அந்த முலாமின் மறு பெயர்தான், மாயை அல்லது மாயம் எனும் அஞ்ஞானம்.
அஞ்ஞானம் என்பதனை அடர்ந்த காட்டிற்கு ஒப்பிடுகிறார்கள். பகவத்கீதையில் கண்ணன் இதனை “மோஹகலிலம்” (2.52) என்கிறான். இது எதனைக் குறிக்கிறது?
இருளடைந்த, அடர்த்தியான பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்அடங்கிய அமைப்பினை காடு என்கிறோம். பொதுவாக, ஒரு காட்டின் கட்டமைப்பு பல அடுக்குகளாக காணப்படுகிறது. தளம், மூலிகை அடுக்கு, புதர்அடுக்கு, அடிவாரம், விதானம் மற்றும் வெளிப்படும் அடுக்குக்களை காணலாம்.
அதுபோல அறியாமையெனும் அஞ்ஞானமும் இருளடைந்து, அடர்ந்து, பஞ்சகோஷங்கள், பொறிகள், புலன்கள், மனம், புத்தி என பல்வேறு தத்துவங்களெனும் அடுக்கமைப்புகளை கொண்டது.
எல்லையிலா என் மனமெனும் அடர் வனமதில்,கட்டேதுமின்றி அழுக்காறு அவா எனப்பல கொடியவல்விலங்குகள் திரியும்
என்கிறார் ஆதி சங்கரரின் சிவானந்த லகரி - ஸ்லோகம்43ல்.
இந்த அடர்வனத்தை கடப்பது எப்படி? கடக்க வேண்டும், கடந்தே தீருவேன் என்ற வைராக்கியம். அடுத்து நமக்கு தேவை ஒளி. ஒளியை தருவது நெருப்பெனும் அக்னி. இதனைப்பற்றிய விளக்கம அடுத்து.
நிஷ்ச்சய வாஹிந ப்ரஜ்வால்யம் - உறுதியான (உண்மையெனும்) அருட்பெரும் ஜோதி கொண்டு எரித்தல்
பத்து வருடங்களுக்கு முன்பு வலைதளத்தில் திரு. அப்பாதுரை என்பவர் எழுதிய கடோபனிஷத்தில் நசிகேதன் கதையான “ஆத்மா எனும் பேரோளி” என்ற தமிழாக்கத்தை இரண்டு வருடங்களுக்குமுன் நான் படித்தது நினைவுக்கு வருகிறது.
கதிருங் கணப்பொறியுங் கங்குல் கலையுங்
கதிர்க்குங் கணங்களுங் கங்குல் - கதிநாடிக்
கட்கிலியைக் கண்பெறுங் காலையிற் காரிரியக்
கிட்டுங் ககனக் கனல்.
கதிரவனும் மின்னலும் இருளே. நிலவும் ஒளிவீசும் விண்மீன்களும் இருளே. தன்னறிவைத் தேடி, எளிதில் புலப்படாத ஆன்மாவை அகத்தே அறியும் வேளையில் அண்டத்தின் இருளகற்றும் ஒளி பிறக்கும்.
ஒளிகளுக்கெல்லாம் ஒளியை வழங்கி ஒளிக்கப்பாற்பட்ட ஒளியாக விளங்கும்ஆன்மாவை அறிந்தக் கணத்தில் எந்த ஒளியுமே ஒரு பொருட்டில்லை. உயிர்பிரியும் அந்தக் கணத்தில் ஆன்மா ஒளிப்பிழம்பாக விளங்கும் வகையில் வாழ்வோம். இதுவே மெய்யறிவு. இதுவே சொர்க்கம். நாமே அந்த ஒளி. தன்னறிவே அந்த ஒளியின் சுடர். நாமே சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒளியைவழங்கும் சக்தி. மனித சக்தியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு ஒளிப்பிழம்பாக வாழ்வோம். இருள் படியாமல் வாழ்வோம்" என்றான் நசிகேதன்.
சோகம், துக்கம், கவலை, இன்பம், துன்பம், மகிழ்ச்சி போன்றவை அனைத்தும் மனநிலைகள். அறியாமையெனும் அடர்ந்த வனத்தை (இருளை) மெய்ப்பொருள் அறிவு எனும் ஒளியால் எரித்து பேரின்ப நிலையில் வாழ்வாயாக என அஷ்டாவகர முனிவர் ராஜரிஷியான ஜனகருக்கு அறிவுரை வழங்குகிறார் இந்த ஸ்லோகத்தில்.
ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கிய அருமையான ஸ்லோகம்.
முடிவுரை
அறிவு வழி உபதேசத்திடும் குரு அஷ்டாவக்ர முனிவரின் இந்த ஸ்லோகம், அறியாமையெனும் ஆழ்வனத்தில் எப்பொழுதும் திரிந்தலையும் என் போன்ற பிராணிகளுக்கு, ஒரு வரப்பிரஸாதம்.
முனிவரின் அடுத்த அறிவுரையை, வரும் பதிவுகளில் காண்போம். அதுவரை…….
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!