அஷ்டாவக்ர கீதை 1.20 - ஆகாய குடம்
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
முந்தைய ஸ்லோகத்தில் கண்ணாடியை உருவகம் காட்டி, நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவதுதான் கடவுள் என அறிவுறுத்தி, இறையின் மாறா நீக்கமற நிறைத்தன்மையை விளக்கினார் முனிவர்.
இறையின் உள்ளுறைவியல்பினை ஒரு குடத்தை உருவகம் காட்டிவிளக்குகிறார் இந்த ஸ்லோகத்தில்.
ஸ்லோகம்
யேகம் ஸர்வகத3ம் வ்யோம ப4ஹிரந்தர்யதா2 க4டே
நித்யம் நிரந்தரம் ப்3ரம்ம ஸர்வபூ4தாக3ணே ததா2!! 1.20
தமிழாக்கம்
குடத்தின் உள்ளும்புறமும் பரவிநிற்பது ஒரேவெளி போல
மாறா நீக்கமற நிறை பரம்பொருள் உளது அனைத்திலும்!! 1.20
விளக்கம்
இந்த ஸ்லோகத்தில் ஓர் எல்லைக்கு உட்பட்டதற்கும் பரந்து விரிந்ததற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டி பிரம்மத்தின் தன்மையை விளக்குகிறார். ஆகாயம் என்று இங்கு கூறப்படுவது நம் தலை மேல் இருக்கும் வெறு வெளி என்று மட்டும் கொள்ளாது, நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் வெற்று இடத்தையும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.
நம் முன்னால் ஒரு குடத்தை எடுத்து வைப்போம். அந்த குடத்தைச் சுற்றிலும்உள்ள ஆகாயத்திற்கும், குடத்தின் உள்ளே உள்ள ஆகாயத்திற்கும் என்ன வித்தியாசம்? சுற்றிலும் உள்ளது பரந்து விரிந்திருக்க, பானையின் உள்ளே உள்ளது பானையின் உருவத்தில் இருக்கிறது என்று சொல்லலாமா? அதாவது ஆகாயம் துண்டாடப்பட்டு உள்ளிருப்பது அதன் ஒரு பின்னம் (மாறுபாடு) என்றுசொல்லலாமா? அப்படியென்றால் நாம் குடத்தை அப்போது உடைத்துவிட்டால், அதன் உள்ளே உள்ள ஆகாயம் வெளியே உள்ளதுடன் கலந்து ஒன்றாகிவிட்டது என்றா அர்த்தம்? பரந்து விரிந்து உள்ள ஆகாயம் இப்படி ஒரு குடத்தின் சேர்க்கையினால் துண்டாடப்பட்டது போலத் தெரிவது உண்மையில் என்ன என்று நாம் யோசிக்க வேண்டும்.
உண்மையில் ஆகாயம் எப்போதும் இருப்பதுபோல்தான் இருக்கிறது. குடத்தின்உள்ளும், வெளியும் இருப்பது அதே ஆகாயம்தான். அங்கு இரண்டு ஆகாயமாகத் தெரிவதும், குடம் உடைந்ததும் ஒன்றாகச் சேர்வதுபோல் தெரிவதும் நம்மனதில் ஏற்பட்டுள்ள தோற்றங்களே. குடமும் இருக்கிறது, அதற்கு உள்ளேயும் வெளியேயும் ஆகாயம் இருக்கிறது என்பது உண்மையானாலும், இவ்விரண்டு ஆகாயங்களும் வேறு வேறு என்பதோ, குடம் வந்ததால் ஆகாயம் இரண்டாகி, அது போனதால் பின்பு ஒன்றானது என்பனவோ உண்மையல்ல.
இந்த உபமானத்தை வைத்துக்கொண்டு ஜீவ-ஈஸ்வர ஐக்ய (வ்யஷ்டி ஸமஷ்டி ஐக்ய) தத்துவத்தை இங்கு விளக்குகிறார். ஈசனாகிய பிரம்மம் எப்போதும் இருக்கும்படியே இருக்கிறது, சீவராசிகளாகிய நாம்தான் அவ்வப்போது அவரிடத்தில் தோன்றி, வளர்ந்து அவரிடமே கடலின் அலைகள் போல் மறைகின்றோமே தவிர, ஈசனுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார். ஆனாலும் அப்படித் தோன்றும் நாம்தான் குடத்திற்கு உள்ளே இருக்கும் ஆகாயம் போல் ஒரு தனித்துவம் இருப்பதாக நினைக்கிறோமே தவிர, உண்மையில் அப்போதும் நாம் ஈசன்தான் என்று இங்கு அர்த்தம் கொள்ள முடிகிறது.
அதை உணர முடிந்தால் அந்தப் பரம்பொருளாகவே எப்போதும் இருப்போம், ஏதோ தனித்து விடப்பட்டவர்கள் போல் தவிக்கமாட்டோம். இதுவே முக்திநிலை. இது அறிவுபூர்வமாய் நின்று விடாது அனுபவத்தில் வரவேண்டும். தனித்துவிடப்பட்டதாக நினைக்கும் குட ஆகாசமாகிய ஒவ்வொருவரின் நிலையும் இதுதான் என்பதால், ஒருவனுக்குத் தன்னைச் சுற்றியுள்ளோரையும் ஈசனாக நினைக்கும் மனோ பாவம் வளர வளர தானும் ஈசன் என்ற அனுபவம் தன்னாலே வாய்க்கும் என்று ஆன்றோர்கள் அருளியிருக்கின்றனர்.
புலன்களின் வழிச் செல்பவன், அவை அளிக்கும் குறுகிய கண்ணோட்டத்திலேயே நின்று தனியன் ஆகிறான். புலன்களை அடக்கி ஆளும் பயிற்சிகள் எல்லாம் அவனது தனிமையை நீக்கி, எங்கும் நிறையச் செய்யும் வழிகளில் அவனைச் செலுத்தும்.
எப்போது அவன் தனிமை நீங்குகிறதோ அப்போதே அவன் பரிபூரணமாய் இருந்து, உள்ளொளி சுடர் விட்டு எரிய, யாதுமாகி நிற்கிறான். அதாவது ஒருவன்தன் ஐம்புலன்கள் காட்டும் வழியில் மட்டும் சென்று அதனால் விளையும் அகங்காரத்தினால் தான் தான் எல்லாம் என்று தன்னை பெரிதாக நினைத்துக்கொண்டு தன்னைக் குடம் அளவில் மட்டும் நிரப்பிக் கொள்ளலாம், அல்லது புலன்களை அடக்கி தன்னை குறுக்கிக்கொண்டு எல்லாமே தான் என்று அகன்று விரிந்து எல்லா இடத்திலும் நிறையலாம்.
பெயர்கள் வேறு, பொருள் ஒன்றே. வேற்றுமை மாயை, ஒற்றுமையே உண்மை. இது புரிந்தால் ஒற்றுமை என்ற சொல்லுக்கும் மதிப்பில்லை, மௌனம் ஒன்றே நிலை. அந்நிலையில் சிந்தை துடிப்பு நின்றுவிடும்.
சித்தம் மௌனம் செயல் வாக்கு எல்லாம் மௌனம்
சுத்தமௌனம் என்பால் தோன்றின் பராபரமே
என்ற தாயுமானவர் பாடல் நினைவிற்கு வரவேண்டும்
முடிவுரை
ஒரு குடத்தில் இருக்கும் வெளி, குடத்தால் பதப்படுத்தப்பட்டுள்ளது போலத்தோன்றும். குடத்தில் நிரப்பட்ட நீரின் அளவைப்பொருத்து, அந்த வெளி சிறியதாகவோ, பெரிதாகவோ தெரியும். அது போல குடத்தில் உள்ள மாசினைப் பொருத்து அந்த வெளி தூய்மையாகவோ அசுத்தமாகவோ உணரப்படும். உண்மை என்னவென்றால், அந்த வெளி, வெளியிலே உறையும் குடத்தால் ஒருபொழுதும் பாதிக்கப்படாது. அதுபோல நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளில் உறைந்திருக்கும் பொருட்களால் (நமது உடல் உட்பட) பரம்பொருள் மாற்றமடைந்து, பதப்படுத்தப்பட்டது போல காட்சியளிக்கும்.
ஒரு பொருள், வேறு ஒரு பொருளின் சேர்க்கையால் மாறாவிட்டாலும், வேறு மாதிரியாகக் காணப்படுவதை “உபாதி” என்பார்கள். அந்தச் சேர்க்கையால் மூலப் பொருள் வேறாகத் தோன்றுவதை (மித்ய அனுபவம்) தடுத்து அதை உள்ளபடியே பார்ப்பதற்கு (சத்ய அனுபவம்), அதனுடன் சேர்ந்திருக்கும் பொருளை நீக்க வேண்டும். கிளிஞ்சலில் வெள்ளி தோன்றியதை தடுக்க அதன் மேல் படும் ஒளியை அகற்றவேண்டும். சூரியனை மேகம் மறைத்துக் கொண்டிருந்தால் மேகம் விலகவேண்டும். அப்போது மூலப் பொருளின் உண்மை சொரூபத்தை அறிய முடியும்.
அறியாமை அகன்றால், அறிவோம் நம்மை.
சத்ய அனுபவமும், மித்ய அனுபவமும் ஸமகாலம். மெய்யை மெய் என்றும், பொய்யைப் பொய் என்றும் உறுதி செய்துகொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும்.
பாராதி பூதம் நீ அல்லை - உன்னிப் பார்
இந்திரியம் காரணம் நீ அல்லை - ஆராய்
உணர்வுநீ என்றான் - ஐயன் அன்பாய்
உரைத்தசொல் ஆனந்தம் தோழி
தாயுமானவர்
இந்த அறிவில் வாழ்வதுதான் ஜீவன் முக்தி. வாழ்ந்து கொண்டே விடுபட்டுஇருப்பது. இதனைப் புரிந்து கொள்ள புண்ணியமும் பக்குவம் வேண்டும்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!