அஷ்டாவக்ர கீதை 1.19 - நிலைக் கண்ணாடி
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
ஒரு நாள் எனது நான்கு வயது பேத்தி என்னிடம் வந்து “தாத்தா, என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள். அனைத்தும் அறிந்த ஆன்மீகவாதியென என்னை நான் உயர்த்திக்கொண்டு “என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!” என்றேன். உடனே சிரித்துக்கொண்டே அவள் “தாத்தா. நீ இங்கேயதான் இருக்கின்றாய். இது கூட உனக்கு தெரியலையா? தெரியவில்லை என்றால், இதோ, இந்த கண்ணாடியில் பார்” என்று கூறினாள். அவள் கூறிய மழலைப் பேச்சை மகிழ்ந்த எனக்கு, அவளின் கபடமற்ற பேச்சில் ஒளிந்திருக்கும் வேதாந்த தத்துவம் உடனடியாக புரியவில்லை.
அடுத்த நாள் அஷ்டாவக்ர கீதையின் முதல் அத்தியாயத்தில் 19வதுஸ்லோகத்தை படிக்க ஆரம்பித்தவுடன், “டக்” என்று உடனடியாக தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகமும் நினைவிற்கு வந்தது. சிறுமி கூறிய மழலைப்பேச்சில் எத்தனை பெரிய வேதாந்த தத்துவம் அடங்கியுள்ளது.
அந்த ஆழமான தத்துவத்தை அரசன் ஜனகருக்கு அஷ்டாவக்ர முனிவர் கோடிட்டுகாட்டுகிறார் இந்த 19வது ஸ்லோகத்தில்.
ஸ்லோகம்
யதை2வாத3ர்ஷமத்4யஸ்த்தே2 ரூபேந்த: பரிதஸ்து ஸ:
ததைவாஸ்மிந் ஷரீரேsந்த: பரித: பரமேஷ்வர:!! 1.19
தமிழாக்கம்
உருவமதன் உள்ளும் புறமும் உறைந்திடும் கண்ணாடி போல
நமைக் கடந்தும் நமக்குள்ளும் உறைபவனே பரம்பொருள்!! 1.19
விளக்கம்
நிலைக்கண்ணாடியில் காணும் நமது உருவத்திற்கு பின், நான்கு தனித்துவமான அம்சங்களை நாம் பார்க்க முடியும்.
கண்ணாடியானது அடித்தளம்; அதுதான் அதனுள் காணப்படும் எனது உருவத்திற்கு ஆதரவு. பிரதிபலித்த உருவத்தின் உள்ளும் வெளியும் வியாபித்திருப்பது (பரவியிருப்பது).
இரண்டாவது அம்சம் என்னவென்றால், பிரதிபலித்த என் உருவத்திற்கு சொந்தமாக ஒரு இருப்பு இல்லை; அது எனக்கு ஒரு அனுபவம். பிரதிபலிக்கப்பட்ட என் உருவம், தன் இருப்பை, பிரதிபலித்த உருவத்தின் உள்ளும் வெளியும் வியாபித்திருக்கும் கண்ணாடியிலிருந்து கடன் வாங்கியது; கண்ணாடிக்கென்று அதன் சொந்த இருப்பு உள்ளது (அதாவது, பிரதிபலிக்கப்பட்ட என் உருவம் இருக்கிறதோ இல்லையோ, கண்ணாடி எப்பொழுதம் உள்ளது). கண்ணாடி இல்லாமல் பிரதிபலிப்பு இருக்க முடியாது. எனவே, கண்ணாடியானது சுயாதீனமான இருப்பைக் கொண்டுள்ளது (இதுதான் உண்மை, சத்யம்), அதே சமயம் பிரதிபலிப்பான என் உருவம், சார்பு இருப்பைக் கொண்டுள்ளது (மித்யம் - இருக்கும் போல இருக்கும்; ஆனால் இருக்காது).
பிரதிபலித்த என் உருவில் நடக்கும் எந்த நிகழ்வுகளும் கண்ணாடியை பாதிக்காது. பிரதிபலித்த என் கண்ணில் நீர் வழிந்தால் அது கண்ணாடியை நனைக்காது. எனவே கண்ணாடி என்பது அஸங்கத்வம். கண்ணாடியின் இந்த"பாதிப்பின்மை" கண்ணாடியின் மூன்றாவது அம்சமாகும்.
பிரதிபலித்த பொருள்கள் சார்புள்ள இருப்பை (மித்யா) கொண்டிருப்பதால் (அவற்றின் சொந்த இருப்பு இல்லாததால்), அவை இல்லாததைப் போலவே. இதன் பொருள், அவைகளை கண்ணாடியுடன் சேர்த்து கணக்கிட முடியாது; அவை கணக்கிட முடியாதவையாக இருக்க கூடும்; எனினும் கண்ணாடி ஒன்று மட்டுமே; நூற்றுக்கணக்கான பிரதிபலித்த பொருள்கள் இருந்தாலும், இந்த இருமை அல்லாத ஒருமை நிலை (அத்வைத்வம்) கண்ணாடியின் நான்காவது அம்சமாகும்.
பிரதிபலிக்கப்பட்ட உருவத்தின் உள்ளும் வெளியும் அடித்தளமாக, ஆதரவாக, பாதிப்பேதுமில்லாமல் ஒருமையாக இருக்கும் கண்ணாடி போலத்தான், என் உள்ளும் புரமும் உள்ள தூய இருப்புணர்வெனும் என் ஆன்மா. அது தான் நிஜம். அதுதான் பரம் பொருள். அதனால்தான், அதாவது நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவதானால் அந்த பரம்பொருளை கடவுள் என்றழைக்கிறோம் என்று புலவர் கீரன் தமது சொற்பொழிவுகளில் கூறுவது நினைவிற்கு வருகிறது.
அறியாமையெனும் மாயையால், உடல் மன வளாகத்தால் பிரதிபலிக்கப்பட்டு, தூய உணர்வாகிய ஆன்மா, “நான்” எனும் தன்னுணர்வாக, நிழலாக காணப்படுகிறது.
அறியாமை நிழலை நிஜமாக்குகிறது.
இப்பொழுது புரிந்தது என் பேத்தி சொன்ன சொற்களின் மெய்ப்பொருள்.
முடிவுரை
நித்தியமான, எல்லையற்ற மற்றும் நிபந்தனையற்ற ஆன்மா எல்லா இடங்களிலும் எப்போதும் உள்ளது, உள்ளேயும் வெளியேயும் உள்ளது. உண்மையில் “உள்ளேயும் வெளியேயும்” இருக்கும் என்ற உணர்வே, தியானம் செய்பவரின் உடல் விழிப்புணர்வைக் குறிக்கும். உண்மையில், ஆழ்ந்தஉறக்கத்தில் இருக்கும்போது நம் பரிமாணம் என்ன, இருப்பிடமும் எங்கே? உடலை உணராதபோது “உள்ளேயும் வெளியேயும்” போன்ற கருத்துக்கள் செல்லுபடியாகாது என்கிறார் சுவாமி சின்மயானந்தா.
உடலில் உயிர் ஒன்றாய், உடனாய், வேறாய் இருப்பது போல, உயிர்களில், உயிர்களுக்கு உயிரான இறைவன் ஒருவராக, உயிர்களில்நிறைந்தும், உயிர்களுக்கு வேறாகவும் இருக்கிறான் என்பது விஷிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம். இதனை பேதாபேதவாதம் என்பர். பசு (உயிர்) பதி (கடவுள்) பாசம் (உலகம்) எனும் முப்பொருள் உண்மை சைவசித்தாந்தம். உயிர்களுக்கு உயிரான இறைவனுக்கும், உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பது தூய உணர்வு ஒன்றே என்பது அத்வைதம்.
இறைவனுடைய அருள் இருந்தால்தான் நானும், இறைவனும், உலகமும் ஒன்று என்ற அறிவு ஏற்படும். எனவே, நடைமுறையில் (வ்யவஹாரத்தில்) தர்மம், பக்தி, த்வைதம் தேவை. இவைகள் மனதின் மாசுகளைக் களைந்து, ஒருமுகப்படுத்தி ஆத்ம ஞானத்தைப் பெற உதவும். ஞானம் கிடைத்தபின், மேலெழுந்தவாரியாக வேற்றுமை இருக்கும். ஆழமான மனதில் வேற்றுமைக்கு முக்கியத்துவம் இருக்காது. அத்வைதத்தில் வ்யவஹாரம் செய்ய முடியாது, செய்யக்கூடாது, செய்யத் தேவையும் இல்லை என்று விளக்குகிறார் ஸ்வாமி ஓம்காரானந்தா.
“ஈஸாவாஸ்யம் இதம் ஸர்வம் - அனைத்து அசைவிலும் அசைவிலாஅனைத்திலும் ஈசனே, அனைத்துக்கும் சொந்தம் அவன் ஒருவனே”
“அனைத்தை ஆன்மாவிலும், ஆன்மாவை அனைத்திலும் எவனொருவன் காண்பனோ, அவனே மும்மல பயமிலான்”
என்ற உபநிஷத்தின் அறிவுரைகளின் பிரதிபலிப்பே முனிவரின் இந்த அறிவுரை.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!