அஷ்டாவக்ர கீதை 1.18 - புதிருக்குப் புதிர்
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
முந்தைய ஸ்லோகங்களில் ஆன்மீகத்தின் மிக முக்கிய, மையக் கருத்தான ஆன்மா எனும் தூய உணர்வு தத்துவத்தை விளக்கிட, அந்த ஆன்மாவை அனுபவிக்கக்கூடிய நிலைகளை அடைச்சொற்களால் விளக்கினார் அஷ்டாவக்ர முனிவர்.
இந்த ஸ்லோகத்தை அறிந்திடும் முன்னே
வரையறுத்த மதியினும் அதி விரைவு – எனினும் அவ்
வரையிலா ஆன்மாவிற்கு இலையேதும் அசைவு !
இலை இதற்கு, வரையறுக்கும் ஐம்புலனும் ஈடு – எனினும்
நிலையாக நின்று அனைத்தும் கடந்திடும் இது!
இணைந்தோடி உயிரிழையாய்ப் பரவும் காற்றென – எதனையும்
துணையாய் காத்திடும் உன் ஆன்மாவை நீ அறிந்திடு !
என்று ஈஸாவாஸ்ய உபநிஷத் நான்காவது ஸ்லோகத்தில் ஆன்மாவைப் பற்றி எதிர்மறை வினைச் சொற்களை பயன்படுத்தி, நமக்கு அறிவுறுத்தியதை நினைவுகூறுவோம்.
ஸ்லோகம்
ஸாகாரமந்ருதம் வித்3தி4 நிராகாரம் து நிஷ்சலம்!
யேதத்தத்வோபதே3ஸேந ந புனர்ப4வஸம்ப4வ:!! 1.18
தமிழாக்கம்
வடிவமுள்ளவை பொய்மை,
வடிவமற்றவை மாறா !- இத்
தத்துவ உபதேசமறிந்து
தீர்த்திடு பிறவிப்பிணிதனை!! 1.18
விளக்கம்
“வரையிலா மாறா முழுமையான அமைதியுடன் பேரறிவு கொண்டு கலக்கமேதுமிலாததே ஆன்மா” என்று அறிவுரை வழங்கப்பட்டது முந்தைய ஸ்லோகத்தில்.
அந்த ஆத்ம ஞானத்தை பற்றிய தியானத்தின் ஒவ்வொரு தருணத்திலும் ஒரு இடையூறை நாம் சந்திக்க நேரிடும். சிந்தனை அலைகள் கவனத்தை தொந்தரவு செய்ய, தொடர்ந்து எழும்பும். கடந்த கால நினைவுகளில் இருந்து எடுக்கப்பட்ட அல்லது கற்பனைத் திறனால் கற்பனை செய்யப்பட்ட மனப் பிளவுகளின் தொடர்ச்சியான வெடிப்பை அடக்கி எப்படி மனதையும், புத்தியையும் அமைதிப்படுத்துவது? எது உண்மையானது, எது உண்மையற்றது என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது?
முனிவர் அஷ்டாவக்ரர் ஒரு நுட்பத்தை பரிந்துரைக்கிறார்.
“எதற்கெல்லாம் வடிவம் உள்ளதோ அது பொய்மை; எது வடிவமில்லாததோ அது மாறாது - “ஸாகாரம் அந்ருதம் நிராகாரம் நிஷ்சலம்”. இதனை நன்கு அறிந்துணருவாய். உன் மனம் கட்டுக்குள் வரும்”
என்று கூறுகிறார்.
அது என்ன உண்மை, பொய்மை? கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் நமக்கு சொல்லியது எதற்காக?
வேதாந்த தத்துவத்தில், உண்மையெனும் யதார்த்தம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: "சத்" (உண்மையானது) மற்றும் "அசத்" (உண்மையற்றது). "சத்" என்பது நித்தியமான, மாறாத மற்றும் முழுமையான யதார்த்தத்தைக்குறிக்கிறது, அதே சமயம் "அசத்" என்பது தற்காலிகமான, மாறும் மாயையைக் குறிக்கிறது.
உண்மையான (சத்) என்பது நமது கருத்து அல்லது எண்ணங்களைக் கடந்தது. இது மாறாதது மற்றும் நிரந்தரமானது, காலத்தையும் இடத்தையும் கடந்தது. இந்த அறுதி உண்மையே பெரும்பாலும் ஆத்மா, பிரம்மன், பரம்பொருள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
உண்மையற்றது (அசத்) என்பது தோற்றங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களின் உலகத்தை உள்ளடக்கியது. இது அதன் நிலையற்ற தன்மை மற்றும் அதன் இருப்புக்கு நமது புலன்கள் மற்றும் மனதை சார்ந்து இருப்பது ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த உண்மையற்ற உலகம் மாயையின் விளைவாகக் கருதப்படுகிறது. இது யதார்த்தத்தின் உண்மையான தன்மையை மறைக்கும் மாயையான சக்தி. இதனை அனாத்மா என்பர், ஆத்மா இல்லாத அனைத்தும் அனாத்மா.
முடிவுரை
வேதாந்தத்தின் கூற்றுப்படி, உண்மையற்ற உலகம் நம் மனம் மற்றும் புலன்களின் திட்டம்; அதே சமயம் உண்மையானது இந்த கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. வேதாந்தத்தில் ஆன்மீக பயிற்சியின் குறிக்கோள், உண்மையற்ற (அசத்) மாயைகளை கடந்து, பிரம்மத்துடன் அனைத்து இருப்புகளின் ஒருமைப்பாட்டையும் அங்கீகரிப்பதன் மூலம் அடிப்படை யதார்த்தத்தை (சத்) உணர்ந்துகொள்வதாகும்.
இதனை உணர்த்தவே, வடிவமுள்ளவை பொய்மை, வடிவமற்றவை மாறா என்று புதிராக அறிவுரை வழங்குகிறார் முனிவர்
அனைத்தையும் பொறிபுலன்களால் நுகர்ந்து அனுபவம் கொள்ளும் நமக்கு எதிர்மறைச் சொற்களால் விளக்கப்படும் ஆன்மா என்ற தத்துவம் இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. புதிருக்கு, புதிரான விடைகள் அஷ்டாவக்ர முனிவரின் ஸ்லோகங்களில் அடங்கியுள்ளன. விடைகளைக் காணுவது நம் கையில். விசாரம் புரிவோம். விளக்கத தை அறிவோம்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!