அஷ்டாவக்ர கீதை 1.16 - பெரிய மனசு
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
என் வீட்டின் வாசல் படியிலிருந்து, தெருவில் நின்றிருக்கும் பேருந்தைப் பாரக்கிறேன். அப்பொழுது எனக்கு அந்த பேருந்தும் அதன் முன்னும் பின்னும் உள்ளவைகள் சில தெரியும்.
இப்போது நான் என் வீட்டின் நான்காவது மாடியிலிருந்து அதே காட்சியை காண்கிறேன். என் கண்களுக்கு இப்போது என்ன தெரிகிறது? கண்ணுக்கு எட்டும் தூரம் அதிகமாகிறது. குறிகிய பார்வை விரிவடைகிறது. வாசல்படியில் பார்த்ததைவிட அதிகமான காட்சி நமக்கு. தெருவின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை இருக்கும் அனைத்தும் காணமுடியும். பார்வை உயர்நிலையில் இருந்தால், பார்வை விரிவடைந்து, பார்க்கப்படுவது அதிகமாகும். பார்க்கப்படுவது அதிகமானால், நான் எடுக்கும் முடிவுகள் முழுமையை நோக்கி உயரும்.
அதுபோல மனதை விரிவாக்கி அனைத்தையும் கண்டால், குறுகிய மனதுடன் கண்ட நிகழ்வுகளைப்பற்றிய நம் முடிவுகளின் தரத்தை உயர்த்த முடியும். “அவருக்கு ரொம்ப பெரிய மனசுப்பா” என்று கூறுவதை கேட்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்! அந்த மனிதன் எடுக்கும் முடிவுகள் முழுமையில் உயர்நிலையாகவும் அதனால் சமநிலையாகவும் உள்ளது என்பதைக் குறிப்பதல்லவா!
அற்பத்தனத்தைவிட்டு விரிவான நோக்கத்துடன் உன்னை நீ அறிவாய் என்று அஷ்டாவக்ர முனிவர் ஜனகருக்கு அறிவுரை வழங்குகிறார் இந்த ஸ்லோகத்தில்.
ஸ்லோகம்
த்வயா வ்யாப்தமித2ம் விஸ்வம் த்வயி ப்ரோதம் யதா2ர்த2த:
ஸுத்த3புத்த4ஸ்வரூபஸ்த்வம் மா க3ம: ஷூத்3ர சித்ததாம்!!
தமிழாக்கம்
உண்மையில் நீக்கமறநிறை
உன்னிடமே நெசவு இவ்வுலகம்!
தூய இருப்புணர்வே உன் இயல்பு,
வேண்டாம் அற்பத்தனம்!! 1.16
விளக்கம்
நாம் காணும் அனைத்துப் பொருள்கள் முழுவதிலும் மூலப்பொருள் வியாபித்திருக்கும். ஒரு தங்க வளையல் முழுவதிலும் தங்கம் நிறைந்திருக்கும். ஒரு மண்பானை என்றால், அந்தப் பானை முழுவதிலும் மூலப்பொருளான களிமண் வியாபித்திருக்கும். களிமண்தான் பானைக்கு ஆதாரம். பானை என்ற பெயரும் வடிவமும், களிமண் என்ற பொருள் மீதுதான் பிண்ணப்பட்டுள்ளது. பானை இருந்தாலும், உடைந்தாலும் களிமண் எப்போதும் இருக்கும்.
அதுபோல நீக்கமற நிறைந்திருக்கும் ஆன்மா எனும் தூய இருப்புணர்வே அனைத்தின் மூலப்பொருள். அதன்மீதுதான் அண்டங்களனைத்தும் இழைகளென பிண்ணப்பட்டிருக்கும் என்று மறைகள் கூறுகின்றன.
“இப்படி, மாயையால், பெயர்கள், வடிவங்கள் என்ற போர்வைகளால் மூடிய பிரபஞ்சமெனும் அண்டத்தின் அடிப்படைக் கூறாய் மெய்யுணர்வாக இருக்கும் ஆன்மா எனும் நீ, உன்னையே தன்முனைப்பு/தன்னுணர்வு என்றெல்லாம் தவறான எண்ணங்களுடன் வரையறுத்துக்கொண்டு, அதனால் ஏற்படும் சுகதுக்கங்களைச் சுமக்காதே. அப்படி செய்வது அற்பத்தனம். அப்படி வரையறைப்புக்குள் இருப்பது, உன் தெய்வீக மற்றும் எல்லையற்ற உண்மையான இயல்புக்கு பொருந்தாது” என்று முனிவரின் “ஷூத்ர சித்ததாம்” என்ற சொற்றொடருக்கு விளக்கம் அளிக்கிறார் சுவாமி சின்மயானந்தா.
முடிவுரை
கனவு காணும் என் கனவுகள் அனைத்தும் என் மனதின்மீது பின்னப்பட்டவைகளே. அந்த கனவுகளில் காணும் உலகங்கள், நிகழ்வுகள், பொருட்கள் இவைகள் அனைத்தும் என்னுள் அடங்கியிருந்தும், அவைகள் எதுவுமே என்னை பாதிக்காது. திரையில் நடக்கும் நிகழ்வுகள் திரையை பாதிக்காது. அண்டங்களும் அதன் அனைத்து நிகழ்வுகளும் நிகழும் பெருந்திரை தான் இந்த நீக்கமற நிறைந்த ஆன்மா. இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!