அஷ்டாவக்ர கீதை 1.14 - குரங்கும் கடலையும்
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
நாம் அனைவரும் குரங்கும் கடலை கொட்டைகளும் என்ற கதையை சிறுவயதில் கேட்டிருப்போம். குரங்கு பிடிப்பவன் ஒரு குரங்கை எப்படி தன் தந்திரத்தால் மாட்டவைத்தான் என்பது பற்றிய கதை இது. ஒருமுறை ஒரு குரங்கு பிடிப்பவன் ஒரு மரத்தில் நிறைய குரங்குகளைப் பார்த்தான். அவற்றைப்பிடிப்பதற்கான யோசனையைச் செய்தான். பின்னர் நிறைய வேர்க்கடலைகளை வாங்கி, ஒரு நீண்ட குறுகிய கழுத்துடைய ஜாடியில் வைத்து, அந்த மரத்தின் கீழே வைத்தான். மரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்குகள், குரங்கு பிடிப்பவன் வெளியேறும் வரை காத்திருந்து, தங்களுக்குப் பிடித்தமான உணவுக்காக, குடுவைக்குள் கைகளை நனைக்க காத்திருந்தன.
அவர் சென்றவுடன், ஒரு குரங்கு கீழே குதித்து, வேர்க்கடலையைப் பிடிக்க ஜாடியின் வாய் வழியாக கையை விட்டது. பல கடலைக்கொட்டைகள் கையில் சிக்கின. அதன் கையில் பல கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்த குரங்கு, கடலையை உண்பதற்காக தன் கையை வேகமாக இழுக்க முயன்றது. இருப்பினும், பலமுறை முயற்சிகள் செய்தும், ஜாடியின் குறுகிய கழுத்தில் கை சிக்கியதால், கையை வெளியே எடுக்க முடியவில்லை.
கடலைகளை வைத்து மூடியிருந்த உள்ளங்கையை திறந்தால் போதும், மாட்டிக்கொண்ட கையினை வெளியே எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், தன்மூடிய உள்ளங்கையில் இருந்த வேர்க்கடலையின் மீது மிகுந்த பற்று வைத்திருந்ததால், வேர்க்கடலையை விட மனமில்லை. குரங்கின் பேராசையும் வேர்க்கடலை மீதான பற்றும் தனக்கு உதவியற்ற உறவென ஜாடியுடன் குரங்கைப் பிணைத்தது. வேர்க்கடலையின் மீது பற்று கொண்டதால், குரங்கு பிடிப்பவரைக் கண்காணிக்க அது மறந்துவிட்டது. இதையடுத்து, குரங்குபிடிப்பவன் அமைதியாக வந்து குரங்கைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
குரங்கு மட்டும் வேர்க்கடலையை விட்டிருந்தால் தப்பித்திருக்கலாம். ஆனால் வேர்க்கடலையின் மீதான பற்றுதலும் பேராசையும் அதனை அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக, அது சிக்கிக் கொண்டது.
சரி, இந்த கதை இப்பொழுது எதற்கு? அஷ்டாவக்ர முனியின் அடுத்த அறிவுரையை அறிந்தால், இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்.
ஸ்லோகம்
தே3ஹாபி4மாநபாஷேந சிரம் ப3த்3தோ4ஸிபுத்ரக!
போ3தோ4ஸ்ஹம் ஞானக2ட்3கே3ந தந்நிஷ்க்ருத்ய சுகீ2 ப4வ!!
தமிழாக்கம்
உடற்பற்றெனும் பாசக்கயிற்றால் கட்டுண்ட அருமை மகனே
மெய்யறிவெனும் வாள்கொண்டு துண்டித்து பேரின்பம் பெறு
விளக்கம்
வேதாந்தத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகளில் ஒன்று "சம்சாரம்". இதைப்பற்றி சமஸ்கிருதத்தில் ஒரு அற்புதமான கேள்வி-பதில் உள்ளது.
கே: ஸம்ஸாரே கிம்ஸாரம் ?
ப: ஸதா3 அனுசிந்தனேமேவ ஸாரம்
கே: உலக வாழ்க்கையின் சாராம்சம் என்ன?
ப: நீங்கள் எப்பொழுதும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதுதான் சாராம்சம்.
ஸ்வாமி தயானந்த சரஸ்வதி தனது சொற்பொழிவுகளில் “சம்சாரம்” என்ற சொல்லுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருப்பதாகச் சொல்வார். பிறப்பு-இறப்பு சம்சாரம்; சுகம்-துக்கம் என்பது சம்சாரம்; இல்லற வாழ்வு சம்சாரம்; மனைவியை தமிழ் நாட்டில் சம்சாரம் என்பார்கள்; "நான்" மற்றும் "நான் அல்ல" என்ற பிரிவு சம்சாரம்; ஆத்மா-அனாத்மா பிரிவினையே சம்சாரம். இவையனைத்தும் இரண்டுக்கும் இடையே ஒரு எல்லைக் கோட்டைக் குறிக்கிறது.
இந்தக் கோடு எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது? இதன் இயக்கம் எங்கெல்லாம்?
என்னுள் தொடங்கி “இதுதான் நான், இதற்குமேல் நானில்லை” என்று நான் அறிந்து உணரும் இடம் வரை இது இயங்குகிறது.
ஆகையினாலே, ஆத்மாவை (என்னை) அடையாளம் காணும் போது, என் கருத்தைப் பொறுத்தது இந்த இருமையெனும் சம்சாரம்.
முந்தைய ஸ்லோகங்களில் ஆத்மாவின் இலக்கணங்களை எடுத்துக்கூறி, ஆத்ம ஞான தியானத்தை முன்மொழிந்த அஷ்டாவக்ர முனிவர், இந்த ஸ்லோகத்தில் முனிவர், ஆன்மாவை உடலுடன் அடையாளம் காணும் தேஹாத்மவாதிகள் அதாவது உடல் (தேஹம்)தான் ஆத்மா என்று தவறாகப் புரிந்துகொள்பவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.
தேஹாத்மவாதிகள், உடல் மடிந்த பிறகு எஞ்சியிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு மரணம் என்பது தனிமனிதனின் மொத்த அழிவு, உயிர்வாழக்கூடிய ஒரு மனதை அவர்கள் நம்புவதில்லை; ஏனெனில் அவர்களுக்கு மனம் என்பது மூளையின் செயல்பாடு, உணர்ச்சிகள், மற்றும் நரம்பியல் போன்றவை மட்டுமே.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் 18 சித்தர்களில் ஒருவருமான திருமூலர் தனது முக்கியப் படைப்பில் இந்த முடிவுக்கு எதிராக தனது திருமந்திரம் மூலம் எச்சரித்து, இந்தக் கொள்கையை ஒருவர் ஏற்றுக்கொண்டால் இது "பற்றுதலை" விளைவிக்கும், அதில் இருந்து வெளியேவர முடியாது என்கிறார்.
கடலைக்கொட்டைகளுக்காக குடுவைக்குள் கைவிட்டுக்கொண்ட குரங்கைப்போல தவிக்க வேண்டும். ஆகையால் மறுபிறப்பைத் தவிர்க்க இயலாது என்று அறிவுறுத்துகிறார்.
ஆதலினால் உடற்பற்றெனும் பாசக்கயிற்றால் கட்டுண்ட அருமை மகனே ! மெய்யறிவெனும் வாள்கொண்டு துண்டித்து பேரின்பம் பெறுவாய்
என்று அஷ்டாவக்ர முனிவர் ராஜரிஷியாகிய ஜனக மஹாராஜனை மகனே என்றழைத்து தந்தை நிலையிலிருந்து அறிவுரை வழங்குகிறார்.
இங்கே, “மெய்யறிவு” (ஞானம்) என்று முனிவர் குறிப்பிடுவது புலன்களால் பெறும் அறிவினையோ (perceptual knowledge) அல்லது கருத்தியலால் பெறும் அறிவினையையோ (conceptual knowledge) அல்ல. ஆத்மா இப்படி அறியப்படும் பொருளல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். “ஆத்மாவே அறிவு; அந்த அறிவே நான்” என்ற நிலையை அடைந்து உடற்பற்றெனும் தன்னுணர்வினை துண்டித்துவிடு என்கிறார் முனிவர்.
முடிவுரை
“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மறுபடிப் பிறந்திருக்கும். மேனியைக்கொல்வாய். நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி சென்றுதான் தீரும் ஓர் நாள்”
என்று போர்க்களத்தில் அறிவுரை கூறினானே பார்த்தசாரதியான இறைவன் கண்ணன்.
ஆக உடலினுள் உயிர் ஒண்டுக் குடித்தனம். வாடகைதான் வாழ்வு. உடல்தான் மடிகிறது.
பதினொரு பொத்த லதிசய மித்தன்
பதியறும் பத்து முதிரும் - விதியறி
மூச்சறு முன்னரே பேச்சிலும் வீச்சிலும்
ஆச்சிய மாச்சறு ஆறு.
பதினொரு துளைகளைக் (உடல், 5 பொறி, 5 புலன்) கொண்ட அதிசயமாம் இவ்வுடலின் அரசனான (பதி) ஆன்மா (மூச்சு நிற்கும் பொழுது) விலகும். அப்பொழுது ஐம்புலன்களும் ஐந்துணர்வுகளும் அழியும். இந்த உண்மையை(விதி) அறிவீர். (அறிந்து) மூச்சு நிற்கும் முன்னரே உங்கள் சொல்லிலும் செயலிலும் கேவலத்தையும் குற்றத்தையும் (ஆச்சியம்) அகற்றி அடங்குவீர்(ஆறு) என்று நசிகேதனின் அறிவுரையை கடோபநிஷத்திலிருந்து நினைவு கூறுவோம்.
‘அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகள்,
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்,
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி,
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே’
என்ற திருமந்திரம் ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ எனும் மடமைமிகு கருத்தினை அழிக்க உதவும்.
மலமென் றுடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றுமிவ் வண்டத்தே.
“இந்த உடல் மலத்தால் ஆனது!” என்று எண்ணி அதை ஒதுக்கிவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அதையே நல்ல தலம் என்று எண்ணி இன்பத்துடன் உடலைத் தரித்துக் கொண்டால், மேலும் உடலில் விளையும் நன்மைகளையே நாடிக்கொண்டு இருந்தால், அந்தப் பற்றின் காரணமாக மீண்டும் மீண்டும் ஒருவனுக்குப் பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இதனையே திருவள்ளுவர்:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340)
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொரு உயிரிடை நட்பு (குறள் 338)
என்றும் கூறுகிறார்.
அஷ்டாவக்ர முனிவரின் அடுத்த அறிவுரை அடுத்த பதிவில். அதுவரை………
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!