அஷ்டாவக்ர கீதை 1.13 - அசலும் நகலும்
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
ஜனகரின் குருவான அஷ்டாவக்ர முனிவர், மாறா ஒருமையான தூய இருப்புணர்வான பரமாத்மாவின் இலக்கணங்களே ஜீவாத்மாவின் இலக்கணம் என்பதால், ஆத்மாவின் இலக்கணங்களை அறிந்து தன்னுணர்வே மெய்யுணர்வு என்பதை அறிய, ஆத்மாவின் இலக்கணங்களைக் கோடிட்டுக் காட்டினார் முந்தைய ஸ்லோகத்தில்.
மருவினால் ஜீவாத்மா தன்னை பரமாத்மாவிடமிருந்து வேறு எனக்கருதுகிறது என்பதை உணர்ந்து, மன அமைதியுடன்ஆத்ம ஞான தியானத்தைப் புரிந்திடு என்று ராஜரிஷி ஜனகருக்கு உபதேசிக்கின்றார் இந்த ஸ்லோகத்தில். இதன் விளக்கத்தைக் காண்போம்.
ஸ்லோகம்
கூடஸ்த்த2ம் போ3த4ம் அத்3வைதம் ஆத்மாநம் பரிபா4வையே,
ஆபா4ஸோஹம் ப்4ரமம் முக்த்வா பா4வம் பா3ஹ்யந்தரம் !!
தமிழாக்கம்
பிரதிபிம்பத் தன்னுணர்வே நானெனும் மருவுடன்,
உள்ளும் வெளியும் பாயும் எண்ண அலைகளை விட்டு,
மாறா ஒருமையாம் ஆத்மாவை அறிந்திடுவாய்!! 1.13
விளக்கம்
ஜீவாத்ம, பரமாத்ம தத்துவங்கள் - ஒரு கண்ணோட்டம்
இந்த ஸ்லோகத்தில் இரண்டு முக்கிய சொற்றொடர்கள் உள்ளன.
கூடஸ்த்த2ம் போ3த4ம் அத்3வைதம்
ஆத்மாநம் ஆபா4ஸோஹம் ப்4ரமம்
முதல் சொற்றொடர் பரமாத்மா எனும் மாறாத (கூடஸ்த்த2ம்), ஒருமையான(அத்3வைதம்) உணர்வை (போ3த4ம்) குறிப்பது. இது “வ்யாபக, அநவச்சின்ன, பிம்ப, வாஸ்த்தவ, சுத்த, நிரபிமான, நிருபாதிக, பாரமாரத்திக சாமான்ய சைதன்யம்”, தூய உணர்வு, அறுதி உண்மை, சத்யம், மெய்யறிவு, சிவன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இரண்டாவது சொற்றொடர் ஜீவாத்மா எனும் மருவுடன் (ப்4ரமம்) கூடிய பிரதிபிம்பமான (ஆபா4ஸம்) தன்னுணர்வினை (அஹம் ஆத்மாநம்) குறிப்பது. இது “அவச்சின்ன (வரையறுக்கப்பட்ட) , பிரதிபிம்ப, ஆபாஸ(போலி), ஸ்வாபிமான, வ்யாவகாரிக, விஷேஷ சைதன்யம்”, தன்னுணர்வு , நிழலுணர்வு, சீவன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
ஆக, பரமாத்மா (சிவன்), ஜீவாத்மா (சீவன்) என்ற இரண்டு தத்துவங்களைக் கூறி, ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியத்தை அறிந்துணர வலியுறுத்துகிறார் அஷ்டாவக்ரமுனிவர். இந்த இரு தத்துவங்களை ஆராய்வோம்.
உடலில் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றன என்பதற்கான ப்ரமாணங்கள் என்ன என்று முதலில் ஆராய்வோம்.
யமதர்மராஜன், கடோபநிஷத்தில் நசிகேதனுக்கு ஆத்மஞான உபதேச துவக்கத்தில் (1.3.1),
“உடலில் உயர் இடமான ஹ்ருதயத்தில், ஜீவாத்மாவும், பரமாத்மாவும் தான் செய்த கர்ம பலன்களை (புண்யத்தின் பலனான இன்பத்தையும், பாபத்தின் பலனான துன்பத்தையும்), “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற திருக்குறளுக்கு இணங்க அனுபவிப்பவர்களாக (அருந்துபவர்களாக), கைவல்ய நவதீதம் - பாயிரம்- பாடல்3 கூறுவதற்கொப்ப சுவரிடை வெளிபோல் நுழைந்து, நிழலும் வெயிலும் போல் இருக்கின்றன”
என்று அறிவுரைக்கின்றான்.
முண்டக உபநிஷத்தும் இதனை ஒரு மரத்தில் இரு பறவைகள் (3.1.1, 3.1.2) போல இருக்கின்றன என்று வர்ணிக்கின்றது. இதனைத்தான்
“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்”
என்று மாணிக்கவாசகரும்,
“இரும்புநேர்வஞ்சகக் கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றதுண்டோ”
என்று தாயுமானவரும் கூறுகின்றனர்.
சரி, மறைகள் பொய்யாகாது. அவைகளே நமக்கு ப்ரமாணம். உடலில் பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்வோம்.
ஜீவாத்ம, பரமாத்ம உறவு - ஒரு கண்ணோட்டம்
இந்த பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவற்கும் சம்பந்தம் உண்டா? அப்படி சம்பந்தம் இருக்குமென்றால் நாம் ஏன் அதனை அறியவில்லை? ஆய்வோம்.
அஷ்டாவக்ர முனிவர், இதற்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார். “ஆபா4ஸஅஹம், ப்4ரமம்”, அதாவது பிரதிபம்பமான நான் எனும் தன்னுணர்வு மற்றும் மாயை எனும் மருவு. இவைகளை ஆய்வோம்.
ஆதி அந்தமிலாத, மாயையேதுமில்லாத, நீக்கமற நிறைந்த, எல்லையற்ற“நான்” (அஹம்) எனும் தூய இருப்புணர்வினை “ஸத்யம்-ஞானம்-அனந்தம்” என்றும் அதுவே பரமாத்மா, ப்ரம்மன் எனும் பரம்பொருள் என்றும் மறைகள் கூறுகின்றன. ஈடு இணையிலா இந்த ஒருமை நிலையை மாண்டுக்ய உபநிஷத் “தூரியா” என்கிறது. இதனை நமது படிப்பிற்காக “சுத்த சைதன்யம்” அல்லது “அசல் நான்” என்று அழைப்போம்.
இந்த பரமாத்மா எனும் “அசல் நான்”, அனைத்து அண்டங்களின், மொத்த (சமஷ்டி) நுண் நிலை கட்டமைப்புடன் (சமஷ்டி உடல்-மன-புத்தி வளாகத்துடன்) இணைந்திருக்கும் போது, ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் மாயையின் இருப்பிடமும் ஆகும். அனைத்தின் வெளிப்பாடும் ஈஸ்வரனின் படைப்பே (மாயையின் உதவியுடன்). ஆக, பாராமாரத்திக நிலையில், ஆதிஅந்தமிலாத, மாயையேதுமில்லாத, எல்லையற்ற “நான்” எனும் தூயஇருப்புணர்வான “ஸத்யம்-ஞானம்-அனந்தமான ப்ரம்மன் எனும் பரம்பொருள்தான், ஈஸ்வரனாகவும், மாயையாகவும், படைப்புகளாகவும் வெளிப்படுகிறது அதன் இச்சையாலே. படைப்பதற்கு முழுப் படைப்பைப்பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். ஈஸ்வரன் நிலையில், அவர் “ஸர்வஜ்ஞா” - அனைத்தையும் அறிந்தவர்; அறியாமை ஏதும் இல்லை இந்நிலையில்.
பரமாத்மாவான “அசல் நான்”, தனிப்பட்ட (வ்யஷ்டி) உடல்-மன-புத்திவளாகத்துடன் இணைந்திருக்கும் போது, எப்படி பிரதிபலிக்கும் தன்மையிலாத மூலப்பொருட்களைக் கொண்டு, செயல்முறைகளால் உருவாக்கப்பட்ட முகம் பார்க்கும் கண்ணாடி, பிரதிபலிக்கும் ஆற்றலைப் பெறுகின்றதோ, அப்படி உடலும், மனமும் ஜடமாக இருந்தாலும், உணர்வைப் பிரதிபிம்பிக்கின்ற ஆற்றல் பெற்ற மனதினால், பிரதிபலிக்கப்பட்டு, பிரதிபிம்ப சைதன்யம் அல்லது சிதாபாஷன்(சித்துப்போலி) அல்லது சீவன் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.
எப்படி ஒரு பொருளின் மீது எங்கும் இருக்கும் சூரிய ஒளியைவிட (சாமான்ய ப்ரகாஸம்), கண்ணாடியால் அப்பொருளின் மீது பிரதிபலிக்கப்பட்ட ஒளி (விஷேஷ ப்ரகாஸம்) ஆதிக்கம் செலுத்துகிறதோ, அப்படி விஷேஷ சைதன்யம் பிரதிபிம்பிப்பதால், சாமான்ய சைதன்யம் மீது ஆதிக்கம்செலுத்துகிறது.
ஆகையினால், நம்முடைய எண்ணங்கள் பெரும்பாலான நேரங்களில் உடல் மன வளாகத்தைச் சார்ந்த விஷேஷ சைதன்யத்தைத்தான் வ்யாபித்திருக்கிறது.
உபாதிகளுடன் கூடிய, அதாவது, உடல் மன வளாகத்துடன் கூடிய நிழலுணர்வு எனும் பிரதிபிம்ப விஷேஷ சைத்தன்யமான சீவன், சாமான்ய சைத்தன்யமான தூய உணர்வான சிவன் மீது ஆதிக்கம் செலுத்தி “நான்” என்று அடையாளம் கண்டுகொள்கிறது. இது “நகல் நான்”.
முக்தியை உணரவேண்டுமெனில், சாமான்ய சைதன்யமாகிய நிருபாதி சைதன்யத்துடன் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். அதாவது உண்மையில் நான் “அசல் நான்”, “நகல் நான்” அல்ல என்று புரிந்து கொள்ளவேண்டும்.
வ்யவகாரங்கள் (empirical) அனைத்திலும் ஈடுபடுவது சோபாதிக சைதன்யமாகிய விஷேஷ சைதன்யமே. நிழலின் அசைவால், நிஜம் அசைவது போல உள்ளது. தூய ஆத்மாவிற்கு போக்கு வரவு, சொர்க்க நரகம், இன்ப துன்பம் ஏதுமில்லை. இது அனைத்தும் விஷேஷ சைதன்யத்திற்கே. உலக ஆசைமிகுந்த பக்குவமில்லாத மக்களுக்கு இந்த தூய ஆத்மா விளங்காது.
நான் யார்?
எனவே, “நான்” என்பதில் மூன்று அம்சங்கள் உள்ளன.
நான் = தூய உணர்வு + உடல் மன வளாகம் + ப்ரதிபிம்பிக்கின்ற உணர்வு
அஹம் = ஸுத்த சைத்தன்யம் + அந்தகரணம் + சிதாபாஷன் (பிரதிபிம்ப சைதன்யம், சித்துப்போலி, நிழல் உணர்வு)
நான் என்பது எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. உடல் மன வளாகம் வெவ்வேறாக இருக்கின்றன.
இந்த மூன்று அம்சங்களில், சுத்த சைதன்யமான தூய உணர்வே நான் என்பதை அறிந்துணர்ந்து கொள்ள வேண்டும். மற்ற இரண்டினையும், அவைகளால் விளவுகளே ஏதுமில்லாதது போல் கையாள வேண்டும் என்று சாத்திரங்களும், மறைகளும் கூறுகின்றன.
நான் என்பது தூய உணர்வு என்று உணரந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆத்ம ஞானம் வரும்போதே, ஸர்வாத்மபாவமும் (ஸர்வாத்மஞானம்) சேர்ந்தே வருகிறது.
இதனைத்தான் திருமூலர், திருமந்திரத்தில்,
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தானிருந்தானே!!
திருமூலர்
என்றும், திருநாவுக்கரசர்,
தேடிக் கண்டு கொண்டேன் திருமாலோடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன் !!
திருநாவுக்கரசர்
என்றும் தமது படைப்புகளில் எடுத்துரைக்கின்றார்கள்.
நான் ‘இது’ அல்ல; 'இதெல்லாவற்றையும் பிரதிபலிக்கும் தூய உணர்வு நான் என்ற நிலையை உணரும்போது, உடல்-மன-புத்தியெனும் உபாதிகள் உதிர்ந்து விடுகின்றன. பிரதிபலிக்கும் ஊடகங்கள் இல்லையென்பதால் நகல் அசலாகிறது.
அண்டவெளியில் எந்தப் பிரிவும் இல்லாத மொத்த வெளியும் நான்தான்’ என்று பானை வெளி உணருவது போல, இந்த நான் “நகல் நான்தான்” என்று அறிந்து உணரும்போது, “அந்த நான்” (“அசல் நான்”) தான் நான் என்பதை அங்கீகரிப்பதாகும்.
இறைவனும் ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவை. எனவே இறைவனும் ஆத்மாவும் ஒன்றே. இறைவனது உபாதியும், ஆத்மாவின் உபாதியும் வேறு. இறைவன் காரண உபாதியை உடையவர், ஆத்மா காரிய உபாதியைஉடையது். காரணமும் காரியமும் மாயத் தோற்றங்களே. இருப்பது பரம்பொருள் ஒன்றே என்கிறது மறைகள்
“அனைத்து உயிர்களில் இருக்கும் ஆத்மா நானே” என்று அறிவுறுத்துகிறான் கண்ணன் பகவத்கீதையில் (10-20’.
மறைகளின் வாக்கினை அறிந்துணர்வாய் என்று ஜனகருக்கு அறிவுரைக்கிறார் அஷ்டாவக்ர முனிவர்.
முடிவுரை
முண்டக உபநிஷத் இந்த ஆத்ம ஞான தியானத்தை விளக்க ஒரு உருவகத்தை கையாளுகிறது (2-2-3 & 2-2-4).
வில்லில் அம்பினை ஏற்றி, இலக்கை ஒன்றையே நோக்கி உறுதியாக செலுத்தி, இலக்கினை அடையவேண்டும். அப்படி செலுத்தினால், உறுதியாக இலக்கில் பாய்ந்த அம்பின் உலோகமுனை இழுத்தாலும் வெளிவராதது; அம்பு மட்டும்வெளிவரும். அதுபோல,
உபநிஷத்துக்களில் விஷேஷமாக சொல்லப்பட்ட ஓம்காரம் எனும் வில்லில், உற்ற தேகத்தில் உறையும் தன்னுணர்வு (ஜீவாத்மா) எனும் அம்பினை ஏற்றி, பரமாத்மா எனும் இலக்கை நோக்கி ஒருமுக நோக்குடன் செலுத்தினால், இலக்கான பரமாத்மாவில் ஜீவாத்மா ஐக்கியமாகிடும். உடல, மன வளாகமெனும் அம்புமட்டும் வெளிவந்து அன்றாட வாழ்க்கையைத் தொடரும், ஜீவன் முக்தனாக.
இறையருள், விவேகம், சங்கல்பம், சத்சங்கம், குருவின் கல்வி, பிரார்த்தனை எனும் ஞானப் பிரசாதங்களே இந்த நிலையை அடைய உதவும்.
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!