அஷ்டாவக்ர கீதை 1.12 - ஆன்மாவின் இலக்கணம் - பகுதி 2
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
ஆத்மா சாக்ஷி விபூ4: பூர்ண: யேக: முக்த சித் அக்3ரிய: அஸங்க3: நிஸ்ப்ருஹ: ஷாந்த: - விளக்கம்
முதல் பகுதியில் ஸ்லோகத்தில் கூறப்பட்ட பிறவிப்பிணி என்ற நம்மைப் பற்றிய நமது அறியாமையைப் பற்றி அஷ்டாவக்ர முனிவர் கூறியதை அறிந்தோம். இப்போது ஆத்மாவின் இலக்கணங்களை முனிவர் கூறுகிறார். அதனை ஆய்வோம்.
சாட்சி,
நீக்கமற நிறைதல்,
முழுமை,
ஒருமை,
சுதந்திர நிலை,
தூய இருப்புணர்வு,
வினைகளேதுமில்லை,
பற்றின்மை,
இச்சைகளின்மை,
அமைதி
என பத்து இலக்கணங்களை கோடிட்டு காட்டுகிறார். இவைகளை இப்போது காணலாம்:
1. ஆன்மாவே சாட்சி
உபநிடதங்கள் ஒரு உருவகத்தை மேற்கோள்காட்டி இந்த தத்துவத்தை விளக்குகின்றன. நெருங்கிய நட்புடன் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட இரண்டு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருக்கின்றன. பறவைகளில் ஒன்று மரத்தின் பழங்களை மிகுந்த ரசனையுடன் உட்கொள்வதில் மும்முரமாக இருக்கும்போது, மற்றொன்று ஒன்றுமே செய்யாமல் மற்ற பறவையைப் பார்த்துப் பிரிந்து சமநிலையில் இருப்பது போல் தெரிகிறது.
இந்த எடுத்துக்காட்டில் உள்ள மரம் உடலைக் குறிக்கிறது. மரத்தால் வழங்கப்படும் பொருளின்பங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பறவை, உடலுடனும் மனதுடனும் பிரிக்க முடியாத அடையாளத்தைக் கொண்ட ‘ஜீவாத்மா’ (உற்ற தேகத்து உயிர் எனும் சீவன், தன்னுணர்வு) ஆகும். அத்தகைய அடையாளம் ஜீவாத்மாவை 'கர்த்தா' (செய்பவர்) மற்றும் 'போக்தா' (நுகர்பவர்/அனுபவிப்பவர்) ஆகிய இரண்டுமாக ஆக்குகிறது. மறுபுறம் கவனிக்கும் பறவை, 'பரமாத்மா'வை (உயர்ந்த தூய உணர்வு) குறிக்கிறது. பரமாத்மாவானவர் எந்தவிதமான பௌதிக இன்பங்கள் மற்றும் உடைமைகளாலும் பாதிக்கப்படாமல், கறைபடாதவராக இருக்கிறார் மேலும் அமைதியான சாட்சியாக இருக்கிறார்.
ஆதி சங்கராச்சாரியார் இந்த ஸ்லோகத்திற்கு தனது வர்ணனையில் கூறுகிறார்:
நன்கு அறியப்பட்ட இந்த மரத்தின் தலைகீழாக வேர் மேலே பிரம்மனிலும், அதன் கிளைகள் (பிராணன், முதலியன) கீழ்நோக்கியும் உள்ளது; இது நிலையற்றது மற்றும் அதன் மூலத்தை அவ்யக்தாவில் (மாயா) கொண்டுள்ளது. இது க்ஷேத்ரா என்ற பெயர். இந்த மரத்தில் அனைத்து உயிரினங்களின் கர்மபலன்கள் தொங்குகின்றன. அறியாமை, ஆசை, வினைகள் மற்றும் அவற்றின் வெளிப்படாத போக்குகளை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும் நுண் உடலால் பதப்படுத்தப்பட்ட ஆன்மா எனும் சீவனும் (க்ஷேத்ரஜ்ஞன்), ஈஸ்வரனும் (குணமிலா பரம்பொருளின் நற்குண வடிவம்) இரு பறவைகளாகஅமர்ந்திருப்பதும் இங்கே. இந்த இரண்டில் ஒன்று, அதாவது, நுண்ணுடலில் குடியிறுக்கும் க்ஷேத்ரஜ்ஞன் அறியாமையால் பலதரப்பட்ட முறைகளில் சுகம் மற்றும் துன்பம் என்று குறிக்கப்பட்ட கர்மாவின் பலன்களை சுவைக்கிறான்; மற்றவர், அதாவது ஈஸ்வரன் (மாயையினால் பதப்படுத்தப்பட்ட சகுண பிரம்மன்) உண்பதில்லை; ஏனெனில், அவர் உண்பவர் மற்றும் உண்ணும் பொருள் இரண்டிற்கும் இயக்குநராக இருக்கிறார், அவர் நித்திய சாட்சியாக (அனைவருக்கும்) இருப்பதன் மூலம்; சுவைக்கவில்லை, அவர் வெறுமனே பார்க்கிறார். அவரே அண்டங்கள் அனைத்துக்கும் சாட்சி.
எனவே, பழம் தின்னும் பறவை நீ அல்ல. சாட்சியாக பாரத்துக்கொண்டிருக்கும் பறவையே நீ எனும் ஆன்மா என்பதை அறிவாயாக என்கிறார் முனிவர்.
2. ஆன்மாவே விபூ (நீக்கமற நிறைதல்)
அசைவோடும் அசைவிலாமலும், நமைக் கடந்தும் நமதருகிலும், நமதுள்ளும் நீக்கமறவும் நிறை ஆன்மாவாம் நமை நாம் அறிவோம் என்று ஈசாவாஸ்ய உபநிஷத் இந்த நீக்கமற நிறையும் தன்மையை விளக்குகிறது.
வரையறுத்த மதியினும் அதி விரைவு, எனினும்
அவ்வரையிலா நிலைக்கு இலையேதும் அசைவு,
இலை இதற்கு வரையறுக்கும் ஐம்புலனும் ஈடு – எனினும்
நிலையாக நின்று அனைத்தும் கடந்திடும் இது!
இணைந்தோடி உயிரிழையாய்ப் பரவும் காற்றென –
எதனையும் துணையாய் காத்திட்டு
“ஈஸாவாஸ்ய உபநிஷத்”
3. ஆன்மாவே பூர்ணம் (முழுமை)
ஓம்! பூர்ணமத: பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமேவா வசிஷ்யதே ||
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
ஓம் முழுமை தான் அது, முழுமை தான் இது .
அம்முழுமையினில் இம்முழுமை உதயம்
அம்முழுமையில் இம்முழுமை கழியினும் முழுமை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
எனும் பிராரத்தனை நமக்கு நினைவுக்கு வரும். பூர்ணம் என்பது முழுமை அல்லது நிறைவைக் குறிக்கும். அது காலம், நேரம், பொருளால் வரையறுக்கப்படாதது. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைகின்ற பரிபூராணந்தம்; ஆதிஅந்தமிலா அருட் பெரும் ஆண்டவன்; இல்லாதது ஒன்றில்லை, எல்லாமே நானென்று சொல்லாமல் சொல்லி வைத்த பரம்பொருள். அக்கடல்தான் நீர், இவ்வலைதான் நீர், அக்கடலில் இவ்வலை தன் உதயம், அக்கடலில் இவ்வலைகழியினும் நீர் என்ற உருவகத்தின் மூலம் ஆன்மாவின் முழுமைத் தன்மையை அறியலாம்.
இப்பொழுது அனுதினமும் நாம் கானும் சில காட்சிகளை நினைவுக்கு கொண்டுவருவோம்:
1. ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்ற முடியும். இதனால் முதல் தீபத்தின் முழுமை கெடுவதில்லை. அதிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும்.
2. நாம் எத்தனையோ பேரை நேசிக்கிறோம்; முழுமையாக அவர்களிடம் அன்பு வைக்கிறோம். இதனால் நம்முடமுள்ள அன்பு குறைந்ததாகக் கூற முடியாது. நமது அன்பு முழுமையாக இருக்க, நாம் எத்தனையோ பேருக்கு அன்பை முழுமையாகக் கொடுக்க முடியும்.
3. ஒரு செடியில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன. ஒவ்வொரு மலரும் முழுமையாக உள்ளது. முழுமையான மலர்கள் பலவற்றைத் தருவதால் செடியின் முழுமை எந்த விதத்திலும் குறைவதில்லை. ஏனெனில் செடியின் முழுமை வேறு.
அதுபோலவே, இறைவனிலிருந்து எத்தனையோ முழுமையான உலகங்களும் அண்ட சராசரங்களும் தோன்றலாம். ஆயினும் அவரது முழுமை ஒருபோதும் குறைவதில்லை. இறைவனின் முழுமை உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று; “அது தான் இது” என்பதால் சீவனும் முழுமையெனும் இறையம்சம் பொருந்தியதே,
4.ஆன்மாவே தூய இருப்புணர்வு
அனைத்து வேதங்களிலும் உபநிடதங்களிலும் விவரிக்கப்பட்டுள்ள ஆத்மாவின் இயல்புதான் அதி தூய இருப்புணர்வெனும் “விசுத்த போதா” - மெய்யுணர்வு அறிவு என்பதின் விளக்கத்தை ஸ்லோகம் 9ல் விவரமாக கண்டோம்.
5-10 ஆன்மாவே அனைத்தும்
“உடல், மன, புத்தி வளாகத்தை கடந்த ஆன்மா பிறவாது, மட்கி மறையாது. அதுவத்தியமும் (அந்தம், மரணம்) வித்துமிலாச் (ஆதியாலா) சித்து (அறிவு), நித்தியம், தத்திடுந் தத்துவத் தீ (பரவி நிற்கும் அருட்பெருஞ் ஜோதி). அலயம்புலப்படாத (தோற்றம், வடிவமில்லாத) ஆன்மாவிற்கு தளைகளேதுமில்லை, தடைகளுமேதுமில்லை”.
இப்படி, தன்னிச்சையாக, சுதந்திரமாக, “இடைநிலையாய் பாலன் இளையன் விருத்தனென உடலிருந்தும்”, அடையும் “அறுபாதி அவத்தையும் (விழிப்பு, கனவு, ஆழ் உறக்கம்) தொடர்விலாதெனினும்’, அதனுள் “இடையிலா தொடராய் சுயநேருணர்வாய் அனைத்து நிலைதனிலும் உள்ளுறை ஆதியும் அந்தமும் அருட்பரம்பொருளெனும்” (ஆதி சங்கரரின் தட்சிணாமூரத்திஸ்தோத்திரம் 7) ஆன்மாவிற்கு இச்சைகள், பற்று, புரிவதற்கு வினைகள் என்று ஏதுமில்லை.
நமது உள்ளும், நம்மைக் கடந்தும் நீக்கமற நிறைந்து, அனுபவிப்பனையும் அனுபவிக்கப்படுவதையும் அனுபவத்தால் ஒருங்கிணைத்த தூய இருப்பு, தூய உணர்வு, தூய பேரின்பமான ஒருமையான பரமாத்மா அல்லது பிரம்மன் என்கிற பரம்பொருளே ஆன்மா.
அதாவது எந்த தத்துவமானது அனைத்துக்குள்ளிருந்து, தன்னைத்தானே விளக்கிக்கொண்டு, மற்றவைகளையும் விளக்கிக்கொண்டிருக்கிறதோ, அந்த தத்துவமான “நான்” மருவுகள் ஏதுமின்றி அமைதியான உணர்வுநிலையில் “அஹம் ப்ரம்மாஸ்மி”, “நான் கடவுள்” என்று பரமாத்மாவுடன் ஐக்கியம்.
முடிவுரை
வள்ளுவனார் “பிறப்பெனும் பேதமை நீக்க சிறப்பெனும் செம்பொருளைக்காண்பது அறிவு” என்று கூறுவது ஆத்ம ஞானத்தைப்பற்றியே. திருமூலர் இதனையே “நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலைஎன்று உணர்வீர்காள்! எல்லா உயிர்க்கும் இறைவனே” என்கிறார்.
ஆன்மீகத்தில் “நான் கடவுள்” என்று கூறிக்கொண்டு, வெறும் ஏட்டறிவால் இந்த ஞானம் வராது. அஞ்ஞானியான நாம், நம்மிடமே “நான் யார்” என்று கேட்டால், எப்படி விடை கிடைக்கும்? இறைவன் அருள், நல்லார் இணக்கம், ஆசானின் உபதேசம் இவை இன்றியமையாதவை. ஆத்ம ஞானத்தை நாம் படிப்படியாக அறிந்துணரவேண்டும்.
தன்னையறிந்தால் தலைவன்மேற் பற்றல்லது
பின்னையொரு பற்றுமுண்டோ பேசாய் பராபரமே!
என்ற தாயுமானவர் வாக்கு பொய்யாகுமோ?
(குறிப்பு - இந்த ஆத்ம ஞான விளக்கம் சுவாமி ஓம்காரானந்தாவின் அருளுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டது).
அஷ்டாவக்ர முனிவரின் அடுத்த ஸ்லோகம் அடுத்த பதிவில். அதுவரை……
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!