அஷ்டாவக்ர கீதை 1.12 - ஆன்மாவின் இலக்கணம் - பகுதி 1 - பிறவிப் பிணி
அஷ்டாவக்ர முனிவர்-ஐனகர் உரையாடல். அஷ்டாவக்ரரின் அறிவுரை
முகவுரை
ஒரு நாள் இரவு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் தனது சிறிய குடிசைக்கு வெளியே தெருவில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவருடைய சீடர் ஒருவர் தனது பணியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, அவர் அதைப் பார்த்து, ஆசிரியரிடம் ஆர்வத்துடன், “ஆச்சார்யா, இந்த நேரத்தில் இங்கே தெருவில் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு சங்கராச்சாரியார், “எனது ஊசியை இழந்துவிட்டேன், அதைத் தேடுகிறேன்” என்றார். மாணவர் அவருடன் தேடுதலில் சேர்ந்தார், ஆனால் சிறிது நேரம் தேடிய பிறகு, "நீங்கள் அதை எங்கே கீழே போட்டீர்கள் என்பதை நினைவுபடுத்திப் பார்க்கமுடியுமா?" என்று கேட்டார்.அதற்கு, ஆதி சங்கராச்சாரியார், “நிச்சயமாக எனக்கு நினைவிருக்கிறது. நான் அதை குடிசையில் படுக்கைக்கு அருகில் விழுந்ததைப் பாரத்தேன்.
அந்த வினோதமான பதிலைக் கண்டு வியந்த சீடன், “ஆச்சார்யா, அதை வீட்டுக்குள்ளே தொலைத்துவிட்டதாகச் சொல்கிறீர்களே, பிறகு ஏன் அதை வெளியில் தேடுகிறோம்?” என்றார்.
“விளக்கில் எண்ணெய் இல்லை, அதனால் வீட்டிற்குள் இருட்டாக இருக்கிறது. இங்கு போதுமான தெருவிளக்கு இருப்பதால் அதை வெளியில் தேட நினைத்தேன்” என சங்கராச்சாரியார் அப்பாவித்தனமாக பதிலளித்தார். அந்தமாணவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "உங்கள் ஊசியை வீட்டிற்குள் தொலைத்துவிட்டு, அதை வெளியில் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?" என்றார். ஆதி சங்கரர் சீடனைப் பார்த்து புன்னகைத்தார். சீடனுக்கு புரிந்து விட்டது.
சிந்தித்துப் பார்த்தால், அன்றாட வாழ்வில், நாம் அனைவருமே ஊசியைத்தானே தேடிக்கொண்டிருக்கிறோம். அதைத் தேடி தொலைவில் உள்ள கோவில்களுக்கு ஓடுகிறோம், மலைகளில் ஏறி நடக்கிறோம், உடலை வருத்தி வேண்டுகிறோம்; இன்னும் என்னென்னவோ விசித்திரமான வினைகளைப் புரிகிறோம், அல்லவா! நாம் அனைவரும் நமக்குள் இருக்கும் ஒன்றை இழந்து வெளியே தேடுகிறோம்.எதைத் தேடுகிறோம்? நம்மைத்தான் தேடுகிறோம். “நான்” யார் என்ற கேள்விக்கான விடை.
வேதங்கள் “அது தான் இது, இந்த ஆத்மாவே பிரம்மம், நானே பிரம்மம், தூய அறிவே பிரம்மம்” என்றெல்லாம் விடைகளை அளிக்கின்றன. ஆனால், அந்த பிரம்மம் எனும் பரம்பொருளான இறுதி யதார்த்தம், எல்லையற்றது மற்றும் நித்தியமானது; வரையறுக்கப்பட்ட சொற்களால் அதனை வரையறுக்க முடியாது என்றும் வேதங்கள் கூறுகின்றன. அப்படியென்றால் “நான்” தான் பிரம்மம் என்பதை எப்படி அறிவது?
அதற்குத்தான், நமது ரிஷிகளும், ஞானிகளும், முனிவரும் இந்த விவரிக்கஇயலாத உண்மையை வெளிப்படுத்தும் ஒரு நுட்பத்தை உருவாக்கினர். இணையிலா உயர் பரம்பொருளை, வளமான கோடிட்டுக்காட்டும் சொற்களால் சாமர்த்தியமாக குறிப்பதன் மூலம் உண்மையை வரையறுப்பதில் வெற்றிபெற்றனர். இதுபோன்ற சொற்களால் பரம்பொருளின் இலக்கணங்களை நேரடியாக வரையறுக்க இயலாது, வரையறுக்கவுமில்லை; எனினும் அவைகளின் பிரதிபலிப்பாக அச்சொற்கள் அமைகிறது. அச்சொற்கள், உள்நோக்கிய சிந்தனை புரியும் நம் மனதினை, நேரடி அனுபவத்திற்கு உயர்த்தும் சக்தி உடையவை.
அத்தகயை உயர்தர சொற்களை இந்த ஸ்லோகத்தில் உபயோகித்து, முந்தைய பதினொன்று ஸ்லோகங்களில் மிகவும் விவரிக்கப்பட்ட "தத் த்வம் அசி" என்ற வேத மஹா வாக்கியத்தின் உட்கருத்தை எடுத்துரைக்கிறார் அஷ்டாவக்ர முனிவர் இந்த ஸ்லோகத்தில்.
ஸ்லோகம்
ஆத்மா சாக்ஷி விபூ4 பூர்ண யேகோ முக்தாஸ்சிதக்3ரிய:
அஸங்கோ3 நிஸ்ப்ருஹ ஷாந்தோ ப்4ரமாத் ஸம்ஸாரவாநிவ!!
ஆத்மா சாக்ஷி விபூ4: பூர்ண: யேக: முக்த சித் அக்3ரிய:
அஸங்க3: நிஸ்ப்ருஹ: ஷாந்த: ப்4ரமாத் ஸம்ஸாரவாந் இவ!!
தமிழாக்கம்
சாட்சியென நீக்கமற நிறைந்து, முழுமையாக, ஒருமையாக,
சுதந்திர அறிவுணர்வாய், வினைகளேதுமின்றி, பற்றின்றி, இச்சைகளின்றி, அமைதி காக்கும் ஆன்மா, மருட்சியால்
பிறவிப்பிணியுற்று உலகதனில் ஊறியதெனக் காட்சி.
விளக்கம்
இந்த ஸ்லோகத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள், நம்மை யார் என்றுணர்த்தும் “ஆத்மஞானம்”. இதில் “நான்” எனும் ஆத்மாவின் பத்து இலக்கணங்களை, இச்சொற்கள் கூறுகின்றன.
அவற்றை ஆய்வோம்.
ப்4ரமாத் ஸம்ஸாரவாந் இவ - விளக்கம்
“பிறவிப்பிணியுற்று உலகதனில் ஊறியதெனக் காட்சி” என்பது இந்த சொற்றொடரின் தமிழாக்கம். இதனைப் புரிந்து கொள்வதற்கு, நமக்கு உதவுவது திருக்குறள்.
பிறப்பெனும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு
பிறப்பெனும் பேதமை என்ற வள்ளளுவர் கூற்றினையே, திருமூலர் திருமந்திரத்தில் (314) “பொல்லா வினைத் துயர் போகம்” என்று கூறுகிறார்.
ஸம்ஸாரம் அல்லது பிறவிப்பிணி என்றால் என்ன? இந்த தத்துவத்தை அறிய ஒரு வினாடிவினா (கேள்வியும் விடையும்).
“உண்டதும் தீரும், உரிய காலத்தில் திரும்பி வரும்”. அது என்ன?
ஒன்று பசி; இன்னொன்று பிறப்பு. மணிமேகலை, பசியை பிணி என்றே கூறுகிறது. பசிப்பிணி தீர்க்க அட்சயபாத்திரம் பெற்றாள் மணிமேகலை என்பது இலக்கியம். பசியானது உணவு உண்டதும் போய்விடும், ஆனால் சிறிது கால இடைவெளியில் திரும்ப வந்துவிடும்;அது போலவே பிறவியும் ஒருவகையில் பிணியே; ஏனெனில் நாமனைவரும் இப்போது இருப்போம்-இறப்போம், மீண்டும் பிறப்போம்-மீண்டும் இறப்போம். அதனால் தான் பெரியவர்கள் பிறவியை பிணி என்றனர். பிணி என்ற சொல்லுக்கு உரைநடையில் நோய், வியாதி என்ற பொருள் சொல்வோம். ஆனால் ஆன்மீகத்தில் உள்ள பிணி என்பதன் பொருள் வேறு. எப்படி? வியாதி, நோய் போன்றவை மருந்து சாப்பிட்டால் தீரக்கூடியவை. ஆனால் பிணி என்பது தீராதது. சம்சாரம் ஒரு பிணியே.
சம்சாரம் என்றால் என்ன?
‘ஸம்யக் சரதி அஸ்மிந் இதி ஸம்ஸாரஹ’ என்று கூறுவர் வடமொழியில். சம்சாரம் என்ற சொல் சம் மற்றும் சாரத்தால் ஆனது. சர என்ற மூலவார்த்தையிலிருந்து உருவானது. சர என்றால் அசைவு, இயக்கம் என்று பொருள். சம்ய என்றால் மாறா அல்லது இடைவிடா என்று பொருள். அதாவது இடைவிடா இயக்கம் எனப்பொருள். இது என்ன வகையான இயக்கம்? பிறப்பு-இறப்பு-பிறப்பு எனும் இயக்கமே. இதனைத்தான் சம்சாரம் என்றுகூறுகிறது மறைகள்.
“சம்சாரத்தின் அடிப்படை பிரச்சனை என்னையே நான் அறியாமல் இருக்கும் ஒரு நிலையான நீரோட்டம்தான். நான் இப்போது இருக்கும் விதத்தில் திருப்தி இல்லை. இந்த நிலையை, நான் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை, இதனைப் பொறுத்துக் கொள்ளவும் முடியாது. எனவே, நானே ஏற்றுக் கொள்ளக்கூடியவனாக மாறுவதற்கான உடனடி உந்துதல் அல்லது தூண்டுதல் என்னுள் உள்ளது. எனவே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆவதற்கான முயற்சி அல்லது நடவடிக்கை என்னில் எழுகிறது. ஒரு ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான், பலவீனமானவன், பலமாக மாற விரும்புகிறான், வலிமையற்றவன், வலிமையாக விரும்புகிறான், படிக்காதவன், கல்வி கற்க விரும்புகிறான், கிழக்கில் உள்ளவன் மேற்கு நோக்கிச் செல்ல விரும்புகிறான். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஏதோவொன்றாக மாற விரும்புகிறார்கள்; இந்தத் தேவை ஒருவரின் தற்போதைய நிலையில் உள்ள அதிருப்தியை பிரதிபலிக்கிறது. எனவே, மனிதனின் அடிப்படைப் பிரச்சினை, அவன் தன்மீது உள்ள நிலையான அதிருப்தியே. இந்த சிக்கல் ஏன் மனிதனில் எழுகிறது? இது தன்னை ஏற்றுக்கொள்ளாததன் விளைவாக எழுகிறது. நமக்குள் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருக்கிறது; இதுதான் சம்சாரம்” என்கிறார் சுவாமிவிதித்தாத்மானந்தா.
அது என்ன என்னைப்பற்றிய அறியாமை எனக்கு? நான் இருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேனே? உண்மை, “நான்” இருக்கிறேன் என்பதை நாம் அனைவருமே உணர்கிறோம். அது எப்படி? அனுதினமும் ஆழ்உறக்கத்திற்குப்பின் விழித்தெழுகையில் “நான் சுகமாக தூங்கினேன்” என்று நாம் கூறுகிறோம்; அதைப்போல, எதுவுமே தெரியாத கும்மிருட்டில்இருந்தால் கூட “நான் இங்குதான் இருக்கிறேன்” என்ற உணர்வு நமக்கு உண்டு அல்லவா. நம்மைக் கண்டுபிடிக்க அடுத்தவன் உதவி தேவையில்லை. ஆக, எவ்விடத்திலும், எந்நிலையிலும் (விழிப்பு, கனவு, உறக்கம்) “நான்” எனும் இருப்பாக (existence) என்னை உணர்வதில் எந்த சந்தேகமுமில்லை. பின், அறியாமை எதைப்பற்றியது? “நான் என்னவாக இருக்கிறேன்” என்பது தான்.
நான் என்னவாக இருக்கிறேன் என்பதை உணர்வதில், அடுத்த நிலை(இரண்டாம் படி) “நான் என்பது வடிவமும் பெயரும்” கொண்ட மனிதன் என்ற உணர்வு. என்னை நான், ரூபத்துடன் இணைப்பது - “ஐந்தடி ஆறு அங்குல உயரம், மா நிறம், வலது முட்டிக்கு கீழே ஒரு பெரிய மச்சத்தை அங்க அடையாளமாகக் கொண்ட, தமிழ் பேசும் ராமசாமியின் மகன் கண்ணன் நான்” என்று கூறும்போது, நமது தேகத்துடனும் பெயருடனும் அந்த “நான்” என்ற இருப்பை இணைக்கிறோம். அதாவது “அஹம் தேஹாஸ்மி” “நான் இவ்வுடல்” எனும் நிலை. இந்நிலையில்தான் பெரும்பாலாரோன நாம் இருக்கிறோம். நம் சரீரத்தின் வெளிப்பகுதிக்குமேல் இருக்கும் ஒரு அணுகூட நம்முடையது அல்ல; அதுவேறு நாம் வேறு, அவைகளுடன் தான் நம் உறவு என்றும் உணரும் நிலை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று உடலே நான், பொருளே இன்பம் என்று வாழும் நிலை. இதனை பட்டுப்பூச்சிக்கு ஒப்பிடலாம்; தனக்கென்று நூலைச்சுற்றி அதற்குள்ளேயே வாழ்ந்துழன்று மடிவது.
இதற்கு அடுத்த அறிவு நிலை மூன்றாவது நிலை. இந்நிலை “நான் உடல், பெயர், உறவு மட்டும் அல்ல; உடலில் நின்று இயங்கி, என்னை இயக்குகின்ற ஒன்றே நான்” என்ற அறிவு நிலை. இது “அஹம் ஜீவாஸ்மி” என்ற நிலை. நான் உடல்மட்டும் அல்ல; உடலில் இருக்கும் சீவனே நான் என்றறியும் நிலை. “உற்றதேகத்தில் உயிர்-உயிரை மேவிய உடல்” என்று வள்ளலார் கூறுவதை நினைவு கூறலாம். இது முந்தைய நிலையை விட உயர்ந்த நிலை.
இந்த நிலைகளனைத்திலும் என்னை நான் முழுமையாக உணரவில்லை; இதனைத்தான் ப்ராந்தம் அல்லது மருவு என்ற பார்வை என்கிறோம். ஆதலினால் பிறவிப்பிணியிலிருந்து விடுதலை இல்லை.
இதுதான் “ப்4ரமாத் ஸம்ஸாரவாந் இவ” என்ற சொற்றொடரின் விளக்கம்.
அடுத்த சொற்றொடரின் விளக்கத்தை இரண்டாம் பகுதியில் காண்போம்.
அதுவரை ………
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
Guru Kripakaram
Guru Sarana Keertanam