முகவுரை
கர்நாடக இசையில் “நம்பிக் கெட்டவர் எவரையா” என்று ஹிந்தோள ராகத்தில், பாபநாசம் சிவன் அவர்களின் ஒரு பாடலில் வரும் அருமையான வரிகள்:
“ஒன்றுமே பயனில்லை என்று
உணர்ந்தபின் பலனுண்டேன்பார்
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார்
அன்று செயலழிந்தல மறு பொழுது
சிவன் பெயர் நாவில் வாறதே
ஆதலினால் மனமே இன்றே
சிவ நாமம் சொல்லிப்பழகு”
அதேபோல, ஒரு திரைஇசைப்பாடலில், கண்ணதாசன்,
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
என்று எழுதினார்.
தினமும் சிவனை நினையாத மனம், காலன் கயிறு விழும் தருணம் சிவனை நினைவது எங்கனம்? ஆதலினால் மனமே சிவநாமத்தைச் சொல்லிப் பழகு என்றும், மனத்தை பக்குவப்படுத்தினால் எந்த சுமையுயும் தாங்கலாம் என்றும் கூறுகின்றனர் இந்த இரு கவிஞர்களும்.
இந்த இரு பாடல்களின் வரிகளே இந்த ஸ்லோகத்தின் முன்னோட்டம்.
ஸ்லோகம்
முக்தாபி4மாநி முக்தோ ஹி ப3த்3தோ4 ப3த்3தா4பி4மாந்யபி
கிம் வத3ந்தீஹ ஸத்யேயம் யா மதி: ஸா கதி3ர்ப4வேத்!!
தமிழாக்கம்
முக்தனென எண்ணுவோன் முக்தனே ஆகிறான்
பந்தனென எண்ணுவோன் பந்தத்தில் மூழ்கிறான்
உன் மதி எப்படியோ உன் கதி அப்படியே!!
விளக்கவுரை
உன் மதி எப்படியோ, அப்படியே உன் கதி என்று அஷ்டாவக்ர முனிவர் ஜனகருக்கு எடுத்துரைக்கிறார் இந்த ஸ்லோகத்தில். ஏன் இப்டி கூறுகிறார்?
வேதாந்த விளக்கம்:
மனதில் தோன்றும் சிந்தனைகளே வார்த்தைகளாக வெளிப்படுகிறது.
வார்த்தைகளே செயல்பாடுகளாக வெளிப்படுகிறது.
செயல்பாடுகளே நாளடைவில் பழக்கவழக்கமாக மாறுகிறது.
பழக்கவழக்கங்களே ஒருவனது ஒழுக்கமாக வெளிப்படுகிறது.
ஒழுக்கமே தலைவிதியை நிர்ணயிக்கிறது.
நல்ல தெளிந்த சிந்தனைகளே ஒருவரை வாழ்வில் மேம்படுத்துகிறது, அறியாமை கலந்த, தீய சிந்தனைகள் வீழ்ச்சியடையச் செய்கிறது என தெளிவாக நமது வேதங்கள் இதன் மூலம் உரைக்கின்றன. நமது வெளிப்புறத்தை மற்றவர்களுக்கு மறைக்க முடியும். ஆனால், இறுதியில், நம் மனதில் புதைந்து கிடப்பவை நம்மை யார் என்பதை வெளிப்படுத்தும்.
அறிவியல் விளக்கம்
புதிதாக ஒன்றை அறியும்போது நம் மூளை நரம்பணுக்களுக்கிடையே (neurons) புதிய இணப்பை உருவாக்குகின்றன என நமது விஞ்ஞானிகள்கூறுகின்றனர்.
உலகத்தைப் பற்றிய நமது உணர்வை வடிவமைத்து வழிநடத்தும்'நரம்பியல் பாதை' இது. திரும்பத்திரும்ப அறியும்போது, இந்த இணைப்பு உறுதிப்படுத்தப்பட்டு ஒத்தையடிப் பாதையாகும்.
பின் இந்த ஒத்தையடிப்பாதையே நமக்கு வழி என்று மனம் முடிவெடுக்கும்.
இந்த மனப்பதிவுகள் பசுமரத்தில் ஆணி அடித்தாற்போல இளவயதில் பதியும்.
இதனை மாற்றுவது வயதாகியபின் எளிதல்ல. கணிசமான நேரமும் முயற்சியும் தேவைப்படுகிறது. புதிய நரம்பியல் பாதைகளை உருவாக்க முயற்சிப்பது, ஏற்கனவே இருக்கும் மற்றும் மிகவும் வலுவான பாதைகளுடன் போட்டியிடுவதாகும்.
வயல்வெளியின் குறுக்கே வெவ்வேறு பாதையில் தொடர்ந்து நடப்பது போல் இருக்கும்; “எதற்கிதலாம், ஒத்தையடிப்பாதைதான் இருக்கிறதே. அதிலேயே போகலாம். எதற்கு இந்த சிரமம்” என்ற எண்ணம் தலைவிரித்தாடும்.
காலப்போக்கில் இது கட்டமைக்கப்பட்ட எதிர்மறை மனப்பான்மையாக மாறி, முன்னேற்றத்திற்கு உண்மையான தடையாக இருக்கலாம்.
ஒரு பெரிய பெட்டியில் நகைகளை நாம் அடுக்கி வைத்தால் அது நகைப்பெட்டி; அதில் குப்பைகளை போட்டு வைத்தால் அது ஒரு குப்பைத் தொட்டி. நம் மனமும் அது போலவே. எனவே மனக்கட்டுப்பாடு நமது வாழ்க்கைப் பயணத்தில் ஒர் இன்றியமையாத அங்கம். இந்த பிரச்சனை புதிது ஒன்றும் இல்லை. இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்னே போர்க்களத்தில் அர்ஜுனன், கண்ணன் இவர்களுக்கிடையே நடந்த உரையாடலை நாம் அறிவோம்.
“கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே, வீசும் காற்றை அடக்குவதை விட மனதைஅடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.” - அர்ஜுனன் (பகவத்கீதை 6.34).
“மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும் மனதை வசப்படுத்தலாம்” - ஆண்டவன் கண்ணன் (பகவத் கீதை 6.35).
முடிவுரை
அனுதினமும் “காலை எழுந்தவுடன் நாளைய தேதி இன்று கையில் கிடைக்கவேண்டும்” என்று துடிக்காமல், மனதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மனக்கட்டுபாடுதான் நம்மை பேரின்பம் நோக்கி செல்ல நாம் எடுத்து வைக்கும் முதற்படி. இது கர்ம யோகத்தில் இருப்பவருக்கு இன்றியமையாதது.
ஞான யோகத்தில், மனக்கட்டுப்பாடுடன் இருப்பவர்கள் இதனை அடிப்படையாக வைத்து அறிந்துணர்ந்தால், இந்த ஸ்லோகம் நமது எண்ணங்களை இயக்கிட ஒரு பட்டியல் தருகிறது என்கிறார் சுவாமி பரமார்த்தானந்தா. மனதில் வளர்த்துக்கொள்ளள வேண்டிய எண்ணங்களின் பட்டியல்:
உடல், மன புத்தி வளாகத்தை கடந்த தூய இருப்புணர்வான ஆத்மாவே நான்.
விழிப்பு, கனவு நிலைகளில் நடக்கும் நிகழ்வுகளின், உணர்வுகளின் சாட்சியே நான். அவைகளில் என் பங்கு ஏதும் இல்லை.
நீக்கமற நிறைந்திருக்கும் என்னில் மட்டுமே எல்லாம் பிறக்கிறது, அனைத்தும் என்னை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது; எல்லாம் என்னுள் மட்டுமே தீர்க்கப்படுகிறது.
நான்தான் முழுமையான பிரம்மன் எனும் பரம்பொருள்.
நான் உலகில் உள்ள உயிரினங்களில் ஒருவனல்ல.
நான் எப்போதும் சுதந்திரமாக பேரின்ப நிலையில் இருக்கிறேன்,
இவற்றை மனதில் அனுதினமும் நினைவேற்றி, ஆத்ம ஞான தியானத்தை அனுசரிக்க வேண்டும்.
மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சாதகர், சுவாமி பராமார்தானந்தா விளக்கிய பட்டியலின்படி ஆத்ம ஞான தியானம் அனுதினமும் புரியவேண்டும்.
இதுதான் இந்த ஸ்லோகத்தின் சாரம்.
அடுத்த ஸ்லோகத்தை விரைவில் காண்போம். அதுவரை……
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!
God Bless