முன்னுரை
முக்தி எனும் பேரின்பமுடன் அமைதியான வீடுபேறினை இப்பொழுதே பெற்றிட விழைந்தால், பொறிபுலனறி பொருள்தனை நஞ்சென ஒதுக்கிட்டு அனைத்தும் ஆத்மாவே என்று அறிந்துணர்ந்து, உடலை விடுவித்து, பற்றற்று சித்தெனும் உள்ளுணர்வில் உறைந்திட்டு, பொறி புலனால் நுகரும் அனுபவங்களுக்கப்பால், பந்தங்களேதுமில்லாமல், வடிவமிலா அண்டங்கள் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கும் பேரின்ப நிலையே என்பதை அறிந்து, அறுதி உண்மையெனும் அருட்பெரும் ஜோதியாம் ஒருமையெனும் அதி தூயஇருப்புணர்வு கொண்டு, மெய் அறியாமையெனும் அடர்வனத்தை எரித்திட்டு துன்பம் களைந்திட்டு பேரின்பநிலையில் இருந்திடு என்று அஷ்டாவக்ர முனிவர் அரசன் ஜனகனுக்கு இதுவரை அறிவுரை வழங்கினார்.
ஆன்மீகப் பயணத்தில் உயர்நிலையில் உள்ள ராஜரிஷி ஜனகருக்கு இந்த அறிவுரையை அறிந்துணர எந்தவித பிரச்சனையும் இருந்திருக்காது.
எனினும், அன்றாட செயல்முறை அனுபவத்தில், வாழ்வின் ஒவ்வொரு கணமும் புறநிலையில் உள்ள பொருட்கள் நிறைந்த உலகத்தை உணர்ந்து வாழும் சாதாரண மானிடராகிய நமக்கு,
இந்த உலகம் எங்கிருந்து வந்தது?
அகநிலை ரீதியாக, நமது மனம் மற்றும் அதன் உணர்வுகள் மற்றும் நமது புத்தி மற்றும் அதன் எண்ணங்கள் இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
தூய்மையான உணர்வு மட்டுமே ஒரே உண்மை என்றால், இந்த அனுபவங்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் உண்மையற்றதாக இருக்க வேண்டும் அல்லவா?
எங்கிருந்து உண்மையற்றது தோன்றியது?
சத்தியம் அசத்தியதை உருவாக்கமுடியுமா?
என்றெல்லாம் குழப்பம் நமக்கு.
பன்முகத்தன்மையின் இந்த மாயையான உலகத்தை, கயிற்றில் பாம்பு என்ற ஒரு அழகான ஒப்புமை மூலம் வேதாந்தம் விளக்குகிறது. அந்த விளக்கத்தை முந்தைய பதிவில் விவரமாக ஆராய்ந்தோம். அந்த உருவகத்தைக் கோடிட்டுக்காட்டி, முனிவர் தனது அறிவுரையை வழங்குகிறார் இந்த ஸ்லோகத்தில்.
ஸ்லோகம்
யத்ர விஸ்வமித3ம் பா4தி கல்பிதம் ரஜ்ஜுஸர்பவத்
ஆனந்த3பரமானந்த3 ஸ போ3த4ஸ்த்வம் ஸுக2ம் சர!!
தமிழாக்கம்
கயிற்றில் அரவு கற்பிக்கப்பட்டது போல
ஆனந்த பரமானந்த உணர்வாம் உன்னில்
உதிப்பது இவ்வுலகமென அறிந்து அப்
பேரின்பத் தூய உணர்வில் நிலைத்திடு !! 1.10
விளக்கம்
ஒளியிலே கயிறேதான், பாம்பல்ல என அறிந்து இடர் களைகிறோமே, அதுபோல ஆத்ம விசாரணை செய்து, அந்த தூய இருப்புணர்வே நீ என்று அறிந்து “ஆனந்த பரமானந்தமாய் சுகமாக இரு” என்கிறார் முனிவர்.
கயிற்றில் பாம்பைக் காண்பதன் வேதாந்த விளக்கத்தை முந்தைய பதிவில் விரிவாக ஆராய்ந்தோம்.
அது என்ன ஆனந்தம், பரமானந்தம்? ஏன் அந்த இரண்டு சொற்கள்? இதன் முக்கியத்துவம் என்ன என்று அறியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன் அடியேன்.
இந்த ஸ்லோகத்தை ஆழ்ந்து படிக்கும் நாளன்று, சுவாமி ஓம்காரானந்தாவின் “ஆதித்தய ஹ்ருதயம்” ஸ்தோத்திரத்தின் 17வது ஸ்லோகத்தின் ஒளி விளக்கவுரையை கேட்கும் பாக்கியம் கிட்டியது. அவரது “ஆத்ம வித்யா” எனும் கல்வித் திட்டத்தின் மாணவன் நான். பூஜ்ய ஶ்ரீ ஓம்காரானந்த சுவாமிகள் “ஜயபத்ராய” என்ற ஆதித்தனின் பெயருக்கு விளக்கமளிக்கயில் அந்த சொல்லில் அடங்கிய தாத்பர்யத்தை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். என்ன விசித்திரமான ஒற்றுமை! விளக்கம் முழுவதும் பரமானந்தத்தைப் பற்றியே. ஆனந்தத்தைப் பற்றிய அனைத்து குழப்பங்களும் கலைந்தது. பூர்வ ஜன்ம புண்ணியம் பெற்றேனோ என வியந்தேன்.
அவர் உரையிலிருந்து நான் அறிந்ததை இப்போது காணலாம்.
ஆனந்தம் என்பதை அளப்பது எப்படி? நமது உபநிடதங்கள் இதற்கு விடையளிக்கின்றன. மனுஷானந்தம் தொடங்கி பிரம்மானந்தம் வரை 12 நிலைகளில் ஆனந்தத்தை அடையலாம். மனுஷ, மனுஷ கந்தர்வ, தேவ, தேவகந்தர்வ, பித்ரு தேவ, ஆஜான ஜான தேவ, கர்ம தேவ, தேவ, இந்திர, பிரகஸ்பதி, பிரஜாபதி, பிரம்மா ஆகிய 12 நிலகளில் படிப்படியாக ஆனந்தத்தின் அளவு உயரும் (ஒவ்வோரு படியிலும் முந்தைய படியைவிட நூறு மடங்கு ஆனந்தம் அதிகம்). சரி, ஆரம்ப நிலையான மனுஷானந்தம் என்பது என்ன?
ஒரு யுவன் (20-30 வயதான இளைஞன்), நல்வாழ்வு வாழ ஆசை கொண்டு, ஒழுக்கமுடன், நல்ல சாஸ்த்திர அறிவுடன், உடல் பலமும், மன உறுதியுடன், இப்புவி முழுதும் ஆண்டு, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியானால் அவனுக்கு கிட்டும் ஆனந்தம் மனுஷானந்தம் எனப்படும் என உபநிஷத் ஒரு அளவு கூறுகிறது. அந்த அளவினை இன்பம் என்று கூறுகிறது. இப்போது புரிகிறதா நாம் அனைவரும் அன்றாடவாழ்வில் தேடுவது “வெறும் ஜுஜ்ஜுபி” என்று வழக்கு மொழியில் கூறுகிறோமே, வெறும் சிற்றின்பமே அனைத்தும்.
ஒரு படியிலிருந்து அடுத்த படிக்குப் போனால், முந்தைய படியில் கிட்டும்ஆனந்தம் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். ஆக, ஆனந்தம் என்பது பெற்று வருவதா, விட்டு வருவதா? சிந்திக்க வேண்டிய கேள்வி.
இந்த 12 நிலைகளிலுள்ள ஆனந்தம் எதுவுமே வேண்டாம் என்று யமதர்மராஜனிடம் அடம் பிடித்தானே குழந்தை நசிகேதன் (கடோபநிஷத்). அந்த விவேகத்துடன், ஜன்ம வைராக்கியம் கொண்டு பிரம்ம லோகம் முதலானவற்றை வென்று உணர்வதே பத்ரம். அதுவே ஆத்மானந்த ஞானம். அதுதான் ஆனந்தம் பரமானந்தம். “ இஹா முத்ரார்த்த பல போக விராகேனப்ராப்யம் ஆத்மானந்தஞானம், இதி பத்ரம்” என்று பத்ரம் என்ற சொல்லின் ஆழத்தை விவரிக்கிறார் சுவாமி ஓம்காரானந்தா . அந்த ஞானத்தற்கான யோக்யதை (தகுதி) “ஜயம்”, அந்த ஞானம் “பத்ரம்”.
அந்த ஞானமே தூய இருப்புணர்வு. அதனை நீ என அறிந்தால், அதுவே ஆனந்தம் பரமானந்தம். அந்த தூய இருப்புதனில் உதிப்பதே உலகம். அந்த தூய உணர்வதனில் நிலத்திடுவாய் நீ பேரின்பமுடனே என்கிறார் முனிவர்.
முடிவுரை
நமது உண்மையான இயல்பினை அறியாமையே, பிறவிப்பிணி எனும் சம்சாரத்திற்குக் காரணம் என்பதால், பிழையை நீக்குவதற்குத் தகுந்த விசாரனையே மெய்யறிவு எனும் ஆத்ம ஞானம்.
அத்தூய இருப்புணர்வே நீ என அறிந்து மகிழ்நிலையாம் அத்தூய இருப்பதனில் நிலத்திடுவாய் நீ பேரின்பமுடனே என உருவகத்தை கோடிட்டுக்காட்டி அறிவுறுத்துகிறார் முனிவர்.
உடல், மன வளாகத்திலிருந்து பின்வாங்கி, உள்நோக்கி, நமது உள்ளுணர்வை நிபந்தனையற்ற, சுதந்திரமான, அமைதியான, மனதுக்கும் புலன்களுக்கும் விழிப்புணர்வு எனும் ஒளியை வழங்கிடும் தூய இருப்புணர்வு என்று அறியும் முயற்சியை, அந்த ஒளியை (ஒளிரும் வடிவங்களை அல்ல) அறிந்துணரும் இந்தமுயற்சியை நிதித்யாசனம் என்பர். கர்ம யோகத்தைக் கடந்து, ஞான யோகத்தில் இருக்கும் ஞானியான ராஜரிஷி ஜனகருக்கு அஷ்டவக்ரர் “ஆத்ம ஸ்மரணம்” செய்ய உதவுகிறார் இந்த ஸ்லோகத்தில்.
அடுத்த பதிவில், அஷ்டாவக்ர முனிவரின் அறிவுரை தொடரும். அதுவரை…….
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!