அஷ்டாவக்ர கீதை - அலங்கலில் தோன்றும் பொய்மை - கயிற்றில் பாம்பு - (ஸ்லோகம் 1.10 அறிமுகம்)
முகவுரை
ஊருக்கு வெளியிலே, நீங்கள் தங்கியிருக்கும் அடர்ந்த மரங்களடங்கிய ஓய்வு விடுதிக்கு, சூரியன் மறையும் அந்தி வேளையில், காலையில் துவக்கிய மலைப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, சாலையில் ஏதோ ஒன்று வளைந்து, சுருண்டு கிடக்கிறது. உடனே உடலில் ஒரு மின்சாரத் தாக்கு, இதயத்தில் ரத்த ஓட்ட வெள்ளம், புத்தியிலிருந்து வாக்கிற்கும் கால்களுக்கும் ஒரு அவசர தந்தி. “அய்யோ பாம்பு! ஓடு”. ஓடி நின்றபின் உள்ளிருந்து ஒரு குரல் “சரியாகப் பார். உன் கையில்தான் சிறு ஒளி விளக்கு உள்ளதே”. மறுபடியும் அந்த இடத்திற்குச் சென்றால் அந்த “பாம்பு” அங்கேயே உள்ளது. விளக்கு ஒளியில் அது பாம்பு இல்லை, வெறும் கயிறு என்று தெரிகிறது.
“சரி, வெளிச்சம் போதாது. அறியவில்லை சரியாக. அவ்வளவுதான். இதில் என்ன பெரிய தத்துவம்” என நாம் கேட்கலாம்.
வேதாந்தத்தில், இது போல பல உருவகங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவைகளில் முக்கியமான உருவகங்கள் ஐந்து என்பர். அவைகள்:
சிலந்தியும், சிலந்தி வலையும்
ஒரு மரத்தில் இரு பறவைகள்
குடுவையில் நீர்
கயிறும் பாம்பும்
குடுவையில் வெளி
பொதுவாக, இந்த உருவகங்கள் மஹா வேத வாக்கியங்கள் எனப்படும் வேதசாரங்களை அறிய உதவும். இவைகளில், கயிறும் பாம்பும் என்ற உருவகத்தை அறிய முயலுவோம். இந்த உருவகத்தை அஷ்டாவக்ர முனிவர், முதல் அத்தியாயம் பத்தாவது ஸ்லோகத்தில் பயன்படுத்துகிறார்.
“உவமை எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே” என்கிறது தொல்காப்பியம். ஆக, உருவகம் என்பது, ஒரு உயர்ந்த கருத்தினைச் சாரந்தது. அதன் உபயோகம் அந்த கருத்தினை விளக்க மட்டும்தான். அந்த வரையறைக்குள் இருந்தால்தான் அந்த உருவகத்தின் பயன். எனவே கதிர்மறைக் கருத்துக் கண்ணோட்டத்துடனோ அல்லது உதாரணத்தையோ எடுத்துக் கொண்டு இந்த உருவகத்தின் பலனின்மையை நிலைநிறுத்தாமல், உருவகத்தின் வரையறைக்குள் இருந்து உருவகம் கூறுவிருக்கும் கருத்தினை ஆய வேண்டும். அந்த மனநிலையுடன் இந்த உருவகத்தை இப்போது ஆராய்வோம்.
விளக்கவுரை
இந்த உருவகத்தில்.
அரையிருளில் ஏதோ ஒன்று உள்ளது என்பதை அறிய போதுமான வெளிச்சம் உள்ளது,
ஆனால் அது என்ன என்பதை அறிய போதுமான வெளிச்சம் இல்லை. கயிற்றை பாம்பு என்று தவறாக எண்ணுவதற்கு இதுதான் சரியான சூழல்.
கயிற்றின் யதார்த்தம் மறைக்கப்பட்டு அதன் இடத்தை ஒரு பாம்பு கைப்பற்றுகிறது.
கயிறு மறைந்து போவது போல் கயிறு இருந்த இடத்தில் பாம்பு தோன்றும்.
பின்னர் விளக்கு இயக்கப்பட்டு "பாம்பு" இருந்த கயிறு பார்க்கப்படுகிறது.
கயிற்றின் மீது பாம்பு எவ்வ்வாறு கற்பிக்கப்பட்டு, இந்த மிகைப்படுத்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இப்போது விவரமாக காணலாம். இந்த உருவகத்தில்
கயிறு என்பது - நிலையான அறுதி உண்மையான பிரம்மன் எனும் தூய இருப்பு, தூய உணர்வு. இது பரமாத்மா எனப்படும் பரம்பொருளை குறிக்கும். நீக்கமற நிறைந்திருக்கும் இதுவே நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருக்கும் தூய உணர்வான ஆத்மா.
பாம்பு என்பது - உடல் மன வளகத்தில் உறையும் ஜீவாத்மாவை குறிக்கும்.
அரையிருட்டு என்பது - அறிவின்ஒரு பகுதியும் அறியாமையையும் குறிப்பது.
பிரகாசமான ஒளி என்பது - அறியாமையை நீக்கும் மெய்யறிவு எனும் ஆத்ம ஞானம். இது அறுதி உண்மையுடன் இணைந்த அறிவினை குறிக்கும்.
இந்த ஒப்புமையைப் புரிந்து கொள்ள, ஒரு பகுப்பாய்வு இதோ.
1. பாம்பின் தோற்றத்திற்கு கயிற்றின் இருப்பு முற்றிலும் அவசியம்.
கயிறு என்ற ஒன்று இருக்கிறது. கயிறு இல்லை என்றால், பாம்பு தோன்றி இருக்காது.
அதாவது பரம்பொருள்/ஆத்மா என்றெல்லாம் அழைக்கப்படும் தூய உணர்வு இருந்தால்தான், உலகம் என்ற ஒன்று தோன்றும். அதனால்தான் எந்த அனுபவமும் சாத்தியமாகிறது. காகிதம் இல்லாமல் எழுத்துக்களின் உலகம் இருக்க முடியுமா? இல்லை. அதேபோல, ஒப்பீட்டளவில் உலகம் இருந்தாலும் அதன் தோற்றத்திற்கு அடி மூலக்கூறு பரமபொருளான ஆத்மா. அதனைச் சார்ந்தே இவ்வுலகம்.
2: குறைந்தபட்சம் சிறிது வெளிச்சம் இருக்க வேண்டும்
அரையிருளில் ஏதோ ஒன்றைப் பார்க்கிறோம். ஒன்றுமே காணவில்லை என்று இல்லை. எதையாவது பார்க்க, குறைந்தபட்சம் சிறிது வெளிச்சம் இருக்க வேண்டும். அந்தி நேரத்தில் மங்கலான வெளிச்சம் இருந்தது, அதனால்தான் எதோ ஒன்றைப் பார்க்க முடிந்தது. வெளிச்சம் இல்லாவிட்டால், எதையும் பார்க்க இயலாது.
புற உலகமாக இருந்தாலும் அல்லது தனிப்பட்ட எண்ணங்களின் உள்உலகமாக இருந்தாலும் நாம் உண்மையில் எதையாவது பார்க்கிறோம்/தெரிந்துகொண்டிருக்கிறோம். எனவே நாம் முற்றிலும் அறியாதவர்கள் அல்ல. யதார்த்தம் நமக்கு முழுமையாக மறைக்கப்படவில்லை. ஓரளவு மட்டுமே. யதார்த்தம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தால், உலகத்தைப் பற்றிய எந்தப் பார்வையும் நமக்கு இருக்காது.
3: காணும் பாம்பு, பார்த்தவனுக்கு உண்மை
நீங்கள் உண்மையில் அங்கு ஒரு பாம்பை பார்க்கிறீர்கள். நிழற்படம் ஏதுமில்லை. கயிற்றை பாம்பாகப் பார்க்க முயல்கிறீர்கள் என்பதல்ல. பாம்பு உங்களுக்கு மிகவும் உண்மையானது; ஒரு உண்மையான பாம்பு இருப்பதைப் போன்ற பயம்! உண்மையில் அது ஒரு கயிறு என்ற விழிப்புணர்வு இல்லை. பாம்பு பாரத்தவனுக்கு ஒரு தனிப்பட்ட உண்மை (subjective reality); அது உண்மையானது (வெளிப்படையாக) இல்லாவிட்டாலும், பயத்தின்அனுபவம் உண்மையானது மற்றும் நியாயமானது.
அதுபோல, நாம் உலகைப் பார்க்கும்போது, உண்மையில் ஒரு உலகத்தை"வெளியே" பார்க்கிறோம் - அது, ஒதுக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் உத்தரவுகளால் செயல்படுகிறது. உலகின் செயல்பாடுகள், அவைகளின் அனுபவத்திற்கான நம் எதிர்வினைகள், நமது கவலைகள், துன்பங்கள், இன்பங்கள், விருப்பு வெறுப்புகள்... அனைத்தும் நியாயமானவை மற்றும் உண்மையானவை.
4: கயிறு முற்றிலும் உண்மையானது.
முற்றிலும் உண்மை என்றால் எப்போதும் உண்மையானது. நமது மருண்ட பார்வைக்கு முன்பும், மருண்ட பார்வையின்போதும், ஒளியினால் மருவு கலைந்தபின்னும் அந்த கயிறின் இருப்பு மறுக்கமுடியாத உண்மை. எந்திலையிலும் அது கயிறுதான். எனவே கயிறு எப்பொழுதும் அதன் கயிற்றின் தன்மையை தக்க வைத்துக் கொள்கிறது. நமது மருவு கயிறின் கயிற்றுத் தன்மையை மாற்ற இயலாது. கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நம் அனுபவங்களால் கயிறு பாதிக்கப்படாமல், நாம் காணும் பாம்பிற்கு ஆதாரமாக இருக்கிறது.
நிலையான, மாறாத, அழியாத நீக்கமற நிறை பரம்பொருளை பிரம்மத்தை, வரையறுக்கப்பட்ட நிலையிலா, மாறும், அழியக்கூடிய உலகம் என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டாலும் - அந்த பிரம்மம் எனும் பரம்பொருள் தீண்டப்படாமல் இருக்கிறது, உலகத்தின் பண்புகளை ஒருபோதும் அது பெறுவதில்லை. எனினும் உலகத்தின் ஆதாரமாக இருக்கிறது. அது தான் அறுதி உண்மை (ultimate reality).
5: ஒப்பீட்டளவில் பாம்பு வெளிப்படையான உண்மையானது.
பாம்பு முற்றிலும் உண்மையானது அல்ல, நிபந்தனைக்குட்பட்ட உண்மை. என்ன நிபந்தனை? மருவின் தொடர்ச்சி எனும் நிபந்தனை. மருவு தொடர்ந்து இருக்கும் வரை, பாம்பு உண்மை. பாம்பு முற்றிலும் உண்மையற்றது என்று நாம் கூற முடியாது - ஏனென்றால் மருவின் போது, நாம் பார்ப்பது ஒரு பாம்புதான். இது ஒருவித யதார்த்தத்தைக் கொண்டுள்ளது. ஆனால் பாம்பு முற்றிலும் உண்மையானது என்று நாம் கூற முடியாது - ஏனென்றால் அந்த மருவு நடந்த இடத்தில் - பாம்பு இல்லை, ஒரு கயிறு மட்டுமே உள்ளது! மேலும், அந்த மருவு நீங்கியதும், நாம் பாம்பைப் பார்க்க மாட்டோம். இன்னும் சொல்லப்போனால் பாம்பை நாம் பார்க்க முடியாது. அந்த பாம்பு வெளிப்படுத்திய பார்வை, ஒலி, ஸ்பரிச உணர்வு, வாசனை இவை அனைத்தும் போய்விட்டன. ஆக, பாம்பின் முழுமையான நிலையை சொற்களில் வெளிப்படுத்த முடியாது. இருப்பினும் தொடர்புநிலையில் சொற்களைப் பயன்படுத்தி - பாம்பு நிபந்தனையுடன் உண்மையானது என்று கூறப்படுகிறது. அதேசமயம் கயிறு முற்றிலும் உண்மையானது.
உலகம் ஒரு முழுமையான யதார்த்தம் இல்லை, ஆனால் அது தொடர்பு நிலையில், மாயாவின் நிபந்தனையின் கீழ் வெளிப்படையான உண்மையானது. உலகம் தற்போதைக்கு உண்மையானது, ஆனால் சுய அறிவு உதயமாகும்போது மறைந்துவிடும். ஆனால் பரம்பொருள் என்றுமே எந்நிலையிலுமே முற்றிலும் உண்மையானது.
6: கயிற்றின் இருப்பு (existence), தோன்றும் பாம்பின் இருப்பை பிரதிபலிக்கிறது.
பின்னர் பாம்பின் குணங்கள் (தோற்றத்தில்) அந்த இருப்பில் (சத்) அடுக்கப்பட்டது போல தோன்றுகின்றது. எனவே தோற்றம் என்பது கயிற்றின் இருப்பு மற்றும் பாம்பின் குணங்களின் கலவையாகும். கயிறு இல்லை என்றால், பாம்பு தோன்றாது. தொடங்குவதற்கு ஏதாவது இருப்பதால் மட்டுமே பாம்பின் தோற்றம் சாத்தியமாகும். எனவே பாம்பின் இருப்பு, உண்மையில், கயிற்றின் இருப்பு. அந்த மருவு மேவிய இடத்தில் பாம்பு இல்லை. இறுதியில் கயிறு மட்டுமே உள்ளது. இருப்பினும் ஒருவர் பாம்பைப் பார்க்கிறார், அதாவது கயிற்றின் சாரம் (கயிற்றுத்தன்மை) மறைக்கப்பட்டிருப்பதால், பாம்பின் குணங்களை அனுமானிக்க வழிசெய்கிறது. எனவே பாம்பின் குணங்கள் கயிற்றின் இருப்பில் கற்பிக்கப்படுகின்றன. இது மாயையை சாத்தியமாக்குகிறது.
உலகத்தின் இருப்பு கடன் வாங்கப்பட்ட இருப்பு, அது ஆத்மாவினுடையது (அதாவது பரம்பொருளுடையது). உலகத்தின் குணங்கள் (உலகம், மேகம், மரம், கல், மழை, நுண்குருத்து (இழைமணி) , எண்ணம் போன்றவை) பிரம்மனின் இருப்பில் கற்பிக்கப்படுகின்றன.
இந்த கண்ணோட்டம் நாம் பரிவர்த்தனை செய்யும் உலகின் வெளிப்படையான யதார்த்தத்தைக் (transactional reality) கொண்டுவருகிறது.
7: பாம்பைப் பார்த்தவுடன், பார்க்கும் வரை, ஏதாவது ஒரு வழியில் எதிர்வினையாற்றுவோம்.
பயம், கூவுதல், ஓடுவது…. எதைச் செய்தாலும் அனைத்துச் செயலும் பாம்பு இருப்பதை ஒப்புக்கொள்வதைக் குறிக்கிறது. பாம்பாட்டி.ஆக இருந்தாலும்கூட பாம்புகளைப் பற்றிய பரிச்சயத்தால், அலட்சியமாக நடந்து கொண்டாலும் அந்த அலட்சியம் கூட பாம்பின்உண்மையான அங்கீகாரத்தின் எதிர்வினையாகும்.
நாம் உலகத்தை நுகரும் வரை, நாம் உலகத்து வழிகளில் எதிர்வினையாற்றப்போகிறோம். வெவ்வேறு விஷயங்களுக்கான நமது எதிர்வினைகள், நிச்சயமாக, பரிநாமமாகலாம். ஆனால் பொறி புலன் (பார்வை, ஒலி, வாசனை, தொடுதல், சுவை) பற்றிய நமது நுகர்தல் செயல்படும் வரை - உலகியல் / மாயாவின் ஒரு குறிப்பிட்ட மயக்கம் இருக்கும்.
8: தவறை முடிவுக்குக் கொண்டுவர, தெளிவாகப் பார்ப்பது மட்டுமே அவசியம்.
வேறு எதையும் குறிப்பாகச் செய்வது தேவையற்றது: பார்ப்பதில் தெளிவு இல்லாததால் தவறு ஏற்படுகிறது. எனவே தவறை நீக்குவதற்குத் தேவையான ஒரே காரணி தெளிவாகப் பார்ப்பதுதான்.
வேறு எதையும் செய்வது, எப்படியாவது இன்னும் தெளிவாகப் பார்க்க உதவியாக இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, நிதானமாக ஆழ்ந்து சுவாசிப்பது, பகுத்தறிவுடன் சிந்திப்பது, பின்னர் ஒருவரின்அமைதியான உடல்-மனதைப் பயன்படுத்தி பாம்பின் உண்மை குறித்து கேள்வி எழுப்புவது போன்ற செயல்கள், நாம் கண்ட பாம்பிடமிருந்து தப்பி ஓட உதவாது. பார்வையின் தெளிவைக் கொண்டுவரும் அறிவு மட்டுமே வேலை செய்யும்.
மாயாவை அகற்ற, உடலால் புரியும் எந்த வினைகளும், செயல்களும், நடவடிக்கையும் தேவையில்லை. நம்மைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் நாம்கொண்டிருக்கும் மருவினை அகற்றுவது சொல்லாலோ, உடலாலோ அல்ல. ஆத்ம ஞானம் ஒன்றே தேவை. அதைப்பெற உதவிடும் எந்த வினைகளும், செயல்களும், நடவடிக்கையும் வரவேற்க வேண்டியது.
9: மருவினால் நமது தவறு தொடங்கும் போது, பாம்பின் அனைத்து தன்மைகளும் ஒரே நேரத்தில் தோன்றும்.
பாம்பின் வெவ்வேறு பண்புகள் படிப்படியாகத் தோன்றி, பின்னர் நாம் அதனை இணைப்பதில்லை. பாம்பின் அனைத்து வரையறுக்கும் குணங்கள், அனைத்து பொருத்தமான பண்புகள் கொண்ட முழு பாம்பு ஒரே நேரத்தில் தோன்றும். அதேபோல, தவறை உணர்ந்தால், உடனே கயிற்றை சிக்கென "பிடிப்போம ". அதாவது, பாம்பின் வெவ்வேறு பாகங்கள்/பண்புகளுடன் தொடர்புடைய நம்மருவு (தவறுகள்) ஒவ்வொன்றாகச் செல்வது அல்ல. பாம்பு முழுவதும் (அதன் எல்லையற்ற குணங்களுடன்) ஒரேயடியாக வெளியேறுகிறது.
உலகங்கள் மற்றும் உயிரினங்கள், அவற்றின் தனிப்பட்ட எல்லையற்ற பண்புகள் - அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.
முதலில் வந்தது நேரம், வெளி. தொடர்ந்து 5 மீதமுள்ள கூறுகள். பின்னர் நெபுலாக்கள், பின்னர் நட்சத்திரங்கள், பின்னர் கிரகங்கள் போன்றவை என்றெல்லாம் ஒருவர் சொல்லலாம். மனித மனதைத் தாண்டிய பரந்த தன்மையைப் புரிந்துகொள்ள வரையறுக்கப்பட்ட மனதுக்கு மட்டுமே இந்த விளக்கம் உதவும். உண்மையில், அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும். அது வெளிப்படையாக வராமல் இருக்கலாம். மாறாக அது விதையில் மறைந்த மரமென சாத்திய நிலையில் இருக்கும். காலப்போக்கில் அது வெளிப்படும். எனவே, அது வெளிப்படையாகவோ அல்லது வெளிப்படுத்தப்படாததாகவோ இருந்தாலும், ஆரம்பமில்லாத தொடக்கத்தில் இருந்து, அது ஒரே நேரத்தில் தோன்றியது.
ஆத்ம ஞானத்தால் மாயை மறையும்போது, அதன் பல படைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மறைந்துவிடும். ஒரு ஜீவன்முக்தாவிற்கு (இவ்வாழ்விலேயே விடுதலை பெற்றவர்) - உலகம் நிச்சயமாக உடல் ரீதியாக மறைந்துவிடாது. இருமையின் தோற்றம் இன்னும் தொடர்கிறது. இருப்பினும், உலகம் உறுதியாகவும் சந்தேகமின்றியும் ஒரே பிரம்மம் என்று புரிந்துகொள்ளப்படுகிறது.
10: பாம்பு கரைந்தவுடன் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
பிரகாசமான கை விளக்கு எரிந்ததும், பாம்பைப் பார்க்கும் உங்கள் பயம்-அனுபவம் உடனே போய்விடும் என்பது அல்ல. உண்மையில் பயம் சிறிது நேரம் நீடிக்கும் - உடலின் இரசாயன மாற்றங்கள் மற்றும் பாம்புப்பற்றிய எண்ணங்கள் மனதில் மறைந்துபோகும் போது சில பதிவுகளை விட்டுச்செல்லும். எனவே பாம்பு கரைந்து விடும் என்பதே சரியான சொற்றொடர். சிறிது நேரமெடுத்தாலும் கவலைகள் மறைகின்றன. இதானால்தான் பாம்பு மறைகிறது என்பதைவிட கரைகிறது என்கிறோம்.
அதேபோல், ஆத்ம ஞானத்தால் நாம் வீடுபேறு பெற்ற நிலையில் நமது ஆன்மீக அறியாமை அழிக்கப்படும்போது, உலகப் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படுவதில்லை. மாறாக உலகமே வெவ்வேறு உணர்வு/உணர்ச்சியற்றபொருள்களின் உலகமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. தவறான பார்வையின்அடிப்படையில் கண்ட உலகம் கரைந்துவிட்டது. எனவே உலகை முற்றிலும் முழு உண்மையாக காண்பதன் மூலம், இனி எந்தப் பிரச்சினையையும் தீர்க்கவேண்டிய அவசியமில்லை. வீடுபேறு அடைந்து தான், பிரச்சனைகளை விடுவிக்கின்றோம் என்று ஏதுமில்லை.அதற்குப் பதிலாக, விடுதலை பெற்றவர், தொடங்குவதற்கு எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை என்பதை புரிந்துகொள்கிறார்.
11: பாம்பையும் கயிற்றையும் ஒன்றாகப் பார்க்கவே முடியாது:
ஒன்று நாம் பாம்பைப் பார்க்கிறோம், அல்லது கயிற்றைப் பார்க்கிறோம். அவற்றை நாம் ஒருபோதும் சமமாக உண்மையாகப் பார்க்க முடியாது.
தவறு நீங்கிவிட்டால், பாம்பின் உண்மையும் போய்விடும்.கயிறு எப்படி பாம்பாக இருந்தது என்பதை ஒருவர் இன்னும் பார்க்க முயற்சி செய்யலாம். எனினும் விசாரணையில் எந்த மாற்றமும் இருக்காது. ஏனெனில் அடைந்த அறிவு முழுமையானது.
அதே போல, பிரம்மமும் உலகமும் ஒரே சமயத்தில் சமமாக இருக்க முடியாது. உலகக் கண்ணோட்டம் உண்மையானதாகத் தோன்றும் வரை, பிரம்மம் உண்மையானதாக இருக்க முடியாது. உலகம் தெரிந்தால், ஒருவர் உண்மையாக விடுதலை பெறவில்லை; புத்தியின்வழி, அறிவுபூர்வமாக மட்டுமே பெற்றுள்ளார். ஒரு ஜீவன் முக்திக்கு பிரம்மம் மட்டுமே உண்மையானது; உலகின் உறுதியான உண்மை, என்றென்றும் இல்லாமல் போய்விட்டது.
முடிவுரை
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவெனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடுற்ற வீக்கம்
கலங்குவதெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவில்லேந்தி
இலங்கையில் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.
கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் வருகிற ஒரு பாடல் இது. இந்தஉருவகத்தை தழுவியது. ஒரு பூமாலையைப் பார்த்தால் சட்டென்று பாம்பு போல் தோன்றிவிடுகிறது. அதே மாதிரிதான் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பிரபஞ்சம் என்னும் மாயத்தோற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. யாரைக் கண்டால் இந்தமாயை விலகும்? பாம்பல்ல, மாலையுமல்ல, பரம்பொருள் என்பதை எவன் உணரவைப்பானோ, அவனே வேதங்களின் சாரமான ராமன்.
இது என்ன? ஒருமையை விளக்கும் முடிவில், இருமையை ராமனாக எடுத்துக்காட்டுகிறாயே என வினவலாம்.
"நீங்கள் கயிற்றைப் பார்க்கும்போது, கயிறு உண்மையில் ஒரு மாயை அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும்? ஒருவேளை பாம்பு முழு உண்மையாகஇருக்கலாம். நீங்கள் நிஜத்தைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள், திடீரென்று கயிற்றின் மாயையைப் பார்க்க ஆரம்பித்தீர்கள். உங்கள் பயம் மறைந்துவிட்டது, மாறாக தவறாக.
இந்த சிந்தனையை எப்படி மறுக்க முடியும்?" இப்படியும் ஒருவர் இந்த உருவகத்தைப்பற்றி கேட்கலாம்.
பாம்பு-கயிறு உருவகம், ஆத்ம ஞான விசாரணைக்கான வழிமுறைகளில் ஒன்று. இது அறிவார்ந்த விவாதத்திற்காக அல்ல. இது ஒரு தனிப்பட்ட சுய விசாரணை.
மற்ற உருவகங்களப் போல இதுவும் ஒரு வரையறுக்கப்பட்ட குறிக்கோளைக் கொண்டது; எனவே கேள்விக்கு உட்பட்டது.
மேலே உள்ள சந்தேகங்கள் ஒவ்வொரு உதாரணத்தையும் எவ்வாறு நிராகரிக்கமுடியும் என்பதை நிரூபிக்கிறது. அதனால்தான், ஒரு தகுதிவாய்ந்த மாணவர், உருவகத்தைப் பற்றி விசாரிப்பதில் உள்ள நுட்பமான வித்தியாசத்தை அறிவர். உருவகத்தினால் அறிய உதவுகிறதா என்று விசாரிப்பர், உருவகத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் விசாரிப்புகளை தவிர்ப்பர்.
அஷ்டாவக்ர கீதையின் ஸ்லோகம் 1.10, இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறது.எனவே உருவகத்தின் உட்கருத்தை உணர்ந்தறிவது நம் கடன். உட்கருத்தினை அறிந்துணர்வோம். அந்த ஸ்லோகமும் அதன் விளக்கமும் அடுத்த பதிவில்.
அதுவரை…….
இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!