பாமரனின் வேதாந்தம் - 9 - நம்பிக்கை நெஞ்சில் வை; தித்திக்கும் உன் வாழ்க்கை
சிரத்தை - Shraddhaa - श्रद्धा
முகவுரை
சமுக வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்று (ஐம்பெரும் வேள்விகள் புரிதல்), அதன்வழியாய் ஆன்மீக வாழ்வில் நன்மை பயக்க வைத்து முன்னேறி, அவர்தம் தனிப்பட்ட மற்றும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்க்கை வாழ்ந்திட பக்தியும் சிரத்தையும் இன்றியமையாதவை என்று நமது மறைகள் உரைக்கின்றன என்று முந்தைய பதிவில் கண்டோம். இந்த சொற்களின் பொருளை ஆய்வோம்.
அதற்கு முன், இந்த திரைப்பட இசையை ஆழ்ந்து கேட்போம்.
“இன்று நட்ட விதை நாளை நல்ல மரமாகி, ஆயிரம் பூ பூக்கும்” - இந்த நம்பிக்கைதான் இந்தப் பாடலின் உட்கருத்து. அந்த நம்பிக்கையால்தான் நம் வாழ்வு தொடர்கிறது.
திருஞானசம்பந்தர் திருவாடுதுறையில் எழுதிய தேவாரம் நினைவுக்கு வருகிறது.
“இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்…….
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உன்கழல் விடுவேன்அல்லேன்
என இறையின் மீதான ஆழ்ந்த அறிவுடன் கூடிய அசைக்க முடியாத நம்பிக்கை. சரி, இது நம்பிக்கை; சிரத்தை என்றால் என்ன? ஷ்ரத்தா என்ற வடமொழிச் சொல்லின் மொழி பெயர்ப்பு என்ன?
வாருங்கள், சுவாமி விவேகானந்தர் என்ன சொல்கிறார் என்று அறிவோம்.
சிரத்தை - Shraddhaa - श्रद्धा என்றால் என்ன?
அதன் மொழிபெயர்ப்பு என்ன? Is it trust, belief, faith ?
சுவாமிவிவேகானந்தர், கடோபநிஷத்தில் நசிகேதாவின் கதையை விவரிக்கும் போது கூறுகிறார்:
“இந்த சிரத்தை என்ற சொல்லை நான் உங்களுக்கு மொழி பெயர்க்கவில்லை, அது தவறாகிவிடும்; இது புரிந்து கொள்ள ஒருஅற்புதமான வார்த்தை, மற்றும் நாம் புரிந்து கொள்வதை சார்ந்துள்ளது இந்த புனிதமான சொல்”.
நச்சிகேதனுக்கு தன் மீது நம்பிக்கை மற்றும் தைரியம் இரண்டும் இருந்தன. எனவே சிரத்தை என்பது நம்பிக்கை மற்றும் தைரியத்தை குறிக்கிறது. அதுமட்டும் அல்ல. சிரத்தை என்ற சொல், பல அர்த்தங்களையும் மற்றும் பல 'உயர்ந்த கொள்கைகளையும' உள்ளடக்கியது. இது இந்திய பாரம்பரியத்தில் ஒரு முக்கிய நல்லொழுக்கமாக கருதப்படுகிறது.
சிரத்தையின் பரிமாணங்கள்:
இக்கருத்தினை விளக்குகையில் ராமகிருஷ்ண மடத்துறவிகளில் ஒருவர் கூறுகிறார்:
“சிரத்தை என்பது நோக்கத்தின் நேர்மை, பணிவு, பயபக்தி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு மன அணுகுமுறையாகும்.
நோக்கம் (Purpose)
பணிவு, (Humility)
பயபக்தி (Reverence) மற்றும்
நம்பிக்கை (Faith) - இவை அனைத்தும் சேர்ந்து சிரத்தையை உருவாக்குகின்றன”.
மேலே கூறப்பட்ட நான்கு அம்சங்களைப் பற்றி இப்பொழுது சிந்திப்போம்.
முதலில் இந்த நான்கு அம்சங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்வோம்.
நோக்கம் (Purpose):
இதை பிரயோஜனம் என்றும் சமஸ்கிருதத்தில் கூறுவர். நோக்கம் என்பது ஒரு செயல் புரிய நம்மிடம் உள்ள உந்து .
“நமது எந்த செயலும், எண்ணமும் மூன்று வகையான சக்திகளின் செல்வாக்கினாலேதான் தோன்றுகின்றன.” - பகவத்கீதை [17.3]
சத்வம், ரஜஸ், தமஸ் என்று அழைக்கப்படும், இந்த சக்திகள் பிரபஞ்சத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள். எனவே, ஒருவரின் நோக்கம் சத்வம் அல்லது ரஜஸ் அல்லது தமஸ் குணத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். சாத்வீக எண்ணம் கொண்டஒருவர் வாழ்க்கையில் தூய்மையான மற்றும் உயர்ந்த விஷயங்களை நோக்கிச்செல்வார். மேலும் ரஜ அல்லது தாமச குணமுடையோர் , உலகவிஷயங்களை அல்லது தீய நோக்கங்களை நோக்கி தங்கள் சிரத்தையைக் கொண்டிருப்பார்கள். நோக்கமில்லையேல் சிரத்தை இல்லை.
பணிவு (Humility):
இது ஒரு ஏற்புத்திறன். அதாவது, வாழ்வில் நாம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற இசைவு, அப்படியான கற்றலில் ஈடுபட்டு, அதனால் விளையும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஆகும் திறன். பணிவு என்பது அடிமை மனப்பான்மை அல்ல, ஆனால் அது ஒருவரின் தன்முனைவை (ego) விட்டுவிட்டு, எதையாவது பெறுவதற்கு தன்னை வளைக்கும் திறன். மழை நீர் எப்போதும் கீழ்நோக்கிப் பாய்கிறது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார். அதுபோலவே அறிவும், வாழ்வில் உள்ள அனைத்து உயர்வான விஷயங்களும் பணிவுடன் திறக்கப்பட்ட ஒரு பெறுநரை நோக்கிச் செல்கின்றன. ஏற்கனவே நிரப்பப்பட்ட கோப்பையில் பால் ஊற்ற முடியாது! தனக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்ற பெருமித உணர்வில் நிரம்பியவனுக்கு அறிவை வழங்க முடியாது. ஆகவே பணிவு சிரத்தையின் ஒரு இன்றியமையாத பகுதி.
பெருமதிப்பு (மரியாதை - Reverence):
சிரத்தையும் மரியாதையும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தே செல்லும். தற்செயற்பாங்கு (casualness) மற்றும் கவனக்குறைவு (carelessness) இல்லாமல் மாறாக ஒருவருக்கு மரியாதை மற்றும் மதிப்புணர்வு இருக்க வேண்டும். உணர்வுப்பூர்வமான இந்த இயல்பை, பாவனை என்று கூறுவர் வடமொழியில். இதனால்தான் ஒருவர் தொடர்ச்சியான ஸ்திரத்தன்மை (நிலைத் தொடர்ச்சி) பெறுவர். பதஞ்சலி முனிவர், மனதைக்கட்டுப்படுத்தும் பயிற்சிக்கான முக்கிய கூறுகளில் ஒன்று மரியாதை (சத்காரம்) என்று கூறுகிறார்.
நம்பிக்கை (Faith):
நம்பிக்கையே இயல்பான வாழ்க்கையின் அடிப்படை. எல்லாவற்றையும் சந்தேகித்தால் வாழ்வது கடினம். நம்பிக்கை என்பது ஏதோவொன்றின் முன்னிலையில் உறுதியாக வேரூன்றுவதைக் குறிக்கிறது. உண்மையில், சிரத்தை என்ற சொல் முதன்மையாக நம்பிக்கை என்ற கருத்தைதெரிவிக்கிறது. அதாவது புலன்களுக்கு அகப்படாத ஒன்றை உண்டு என்று உணர்வது. அந்த உண்டு என்ற உணர்வை, உண்மையென காண்பதே அந்த உணர்வின் வெகுமதி.
சிரத்தை - ஒரு ஆன்மீக கண்ணோட்டம்:
சொற்பிறப்பியலின்படி (etymology) ஷ்ரத்தா (श्रद्धा - சிரத்தை) என்ற வடமொழிச்சொல், உண்மையை வைத்திருக்கும் நமது உள்ளார்ந்த திறனிலிருந்து வந்தது (श्रद् धारणे - ஷ்ரத் தாரனே). உண்மையில் அப்படித்தான். இது உண்மை என்று எண்ணி நாம் உறுதியாக அக்கருத்தை பிடித்துக் கொண்டிருக்கும் அந்த பிடிப்புதான் ஷ்ரத்தா என்று அழைக்கப்படுகிறது. உணவை ஜீரணிக்கும் உள்ளார்ந்த சக்தியைப் போல இது ஒரு உள்ளார்ந்த சக்தி, அது இல்லாமல் நாம் வாழ முடியாது.
ஆதி சங்கரர் விவேக சூடாமணியில்,
शास्त्रस्य गुरुवाक्यस्य सत्यबुद्ध्यवधारणम् ।
सा श्रद्धा कथिता सद्भिर्यया वस्तूपलभ्यते ॥ २५ ॥śāstrasya guruvākyasya satyabuddhyavadhāraṇam |
sā śraddhā kathitā sadbhiryayā vastūpalabhyate || 25 ||“வேதங்களும் குருவும் அறிவுறுத்துவதை உண்மையென உறுதியான தீர்ப்பின்மூலம் ஏற்றுக்கொள்வது, முனிவர்களால் ஷ்ரத்தா அல்லது நம்பிக்கை என அழைக்கப்படுகிறது. இந்த சிரத்தையின் மூலமே உண்மை (யதார்த்தம்) உணரப்படுகிறது”
என்று நமக்கு எடுத்துரைக்கிறார்.
“பொதுவாக நாம் நம்பிக்கை என்று புரிந்துகொள்வது வெறும் ஆழ்உணர்விலா நம்பிக்கை (விஸ்வாசம்). அத்தகைய விசுவாசி மற்றவர்கள் சொல்வதைஅப்படியே நம்புகிறார். அவர், அதை ஆதார சோதனைகளுக்கு உட்படுத்துவதில்லை. ஆனால் சிரத்தா என்பது இங்கே சொல்லப்பட்டவற்றின்உண்மையை ஆராயும் நோக்குடன் கூடிய நம்பிக்கை என்று பொருள்படும். ஆழ்ந்த பகுத்தறிவு, சிந்தனை அத்தகைய நம்பிக்கையின் அடிப்படையை உருவாக்குகிறது. சத்ய-புத்தி-அவதாரணம் என்பது கற்பிக்கப்பட்டவற்றின் உண்மையை பகுத்தறிவின் மூலம் கண்டறிதல். இது நம்மை நம்பிக்கை எனும் மட்டத்தில் இருந்து உண்மை எனும் உணர்வு நிலைக்கு முன்னேறச் செய்கிறது”.
என்று, ராமகிருஷ்ண 13வது மடாதிபதி சுவாமி ரங்கநாதானந்தா விளக்குகிறார்.
ஆக, அது பௌதீக அறிவியலாக இருந்தாலும் சரி, ஆன்மீக அறிவியலாகஇருந்தாலும் சரி, அறிவியலாக அவை அந்தந்த உண்மைகளை நமக்குச் சொல்கின்றன. இந்த அறிவியலின் ஆசிரியர்கள் உண்மையைச் சொல்கிறார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும், இது வெறுமனே நம்புவது மட்டும் அல்ல, ஆனால் வேதத்தின் போதனைகள் மற்றும் குருவின் வார்த்தைகள் உண்மை என்று நம்புவதும், அந்த உண்மை நிலையை அடைய போராடுவதும் ஆகும். சிரத்தை என்பது சத்தியத்தை உணர்த்துவது (ஸ ஷ்ரத்தாகதிதா ஸத்பிர்-யாய வஸ்து-பலப்யதே).
ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு அழகான உதாரணம் தருகிறார். ஒரு ஏரியில் மீன் பிடிக்கச் செல்லும் போது, தூண்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு மீன்பிடி குச்சியை எடுத்து, ஏரியில் போட்டு பொறுமையாக காத்திருக்கிறோம். அந்த ஏரியில் மீன்களை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அங்கு மீன் பிடித்த மற்றவர்களிடம் மட்டுமே கேள்விப்பட்டுள்ளோம். அவர்களின் வார்த்தைகளில் உள்ள நமது சிரத்தைதான் நம்மை ஏரிக்குச் சென்று அவர்களின் கூற்றின் உண்மையை சரிபார்க்க வைக்கிறது. நாம் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தும் மீன் பிடிக்க முடியவில்லை. ஆனால் இதை மட்டும் வைத்து ஏரியில் மீன் இல்லை என்ற முடிவுக்கு வரவில்லை. மறுநாள் மீண்டும் வந்து பாடுபடுகிறோம். இந்த இடைவிடாத முயற்சியின் அடிப்படை என்ன? ஏரியில் மீன் இருக்கிறது என்ற ஆற்றல்மிக்க நம்பிக்கை. விஞ்ஞானம் மற்றும் மதம் ஆகிய துறைகளில் உள்ள அனைத்து பெரிய கண்டுபிடிப்புகளும் அத்தகைய நேர்மறையான அணுகுமுறை மற்றும் அத்தகைய அணுகுமுறையின் அடிப்படையிலான செயல்பாட்டின் விளைவாகும். இறுதியாக நாம் ஒரு மீனைப் பிடிக்கும்போது, நமது நம்பிக்கை சரிபார்க்கப்பட்ட நேரடி அனுபவமாக உண்மையாக மாறும்.
அதுபோலவே, நம் அனைவருக்குள்ளும் ஒரு தெய்வீக உண்மை ஒளிந்திருக்கிறது. நமது குரு இதைப் பற்றி நமக்குச் சொல்கிறார், அதுபோலவே வேதங்களும்.
நாம் பார்த்ததில்லை. ஆனால் நாம் அவர்களின் வார்த்தைகளை நம்புகிறோம், உணர்ந்து அந்த நம்பிக்கையை உண்மையாக்க போராடுகிறோம்.
‘நான் நம்புகிறேன்’ என்று சொன்னால் மட்டும் போதாது. எந்த முட்டாளும் அப்படிச் சொல்லலாம். ஆனால், ‘நான் இதனை உண்மை என்று உறுதியாகநம்புகிறேன்’ என்று சொல்லி, அந்த உண்மை நிலைக்குத் தன் வாழ்க்கையைக்கொண்டு செல்லும் மனிதனே தன் நம்பிக்கையை உண்மையாக மாற்றிக்கொள்வான். அவனுக்கு சிரத்தை இருக்கிறது. உறுதியான நம்பிக்கையை உண்மையாக மாற்றும் திறன் சிரத்தைக்கு உண்டு.
அறிவியலில் சிரத்தை என்றால் என்ன? இயற்கையெனும் இப்பிரபஞ்சம் என்ற உண்மையின் மீது ஒரு நம்பிக்கை. அதாவது, தனக்கு முன்னால் இருக்கும் கடலொப்ப புள்ளி விபரங்கள், குழப்பமான தகவல்கள், கண்டுபிடிப்புகள், கருத்துக்கள் இவை அனைத்திற்கும் பின்னால் ஏதோ ஒரு பொருள் உள்ளது என்றும், அந்தப் பொருள் ஆராயத் தக்கது என்ற உறுதியான முன் உணர்வுடனும் இருப்பதே அந்த நம்பிக்கை. அந்த முன் உணர்வு எனும் அசையாத நம்பிக்கை இல்லாமல், அவர் தனது விஞ்ஞான விசாரணையை மேற்கொள்ளும் உந்துதலைக் கூட பெற முடியாது.
இந்த உறுதியான முன் உணர்வைத்தான், ஆதி சங்கரர் மற்றுமோரிடத்தில் “आस्तिय भुद्धि ஆஸ்திக்ய புத்தி என்றும் அது தான் ஷ்ரத்தை” என்றும் வரையறுக்கிறார். இந்த உறுதி மனப்பான்மை தான், நேரடிஅனுபவத்தின் மூலம் உண்மையாகவும், திடநம்பிக்கையாகவும் மாறி உணரப்படுகிறது.
தெய்வத்தின் குரல்:
இந்தப் பதிவின் சுருக்கத்தை என் போன்ற பாமரனும் புரிந்து கொள்ள, தெய்வத்தின் குரலாய் ஒலிக்கும் காஞ்சிப் பெரியவரின் வாக்கினை நினைவு கூறுவோம்:
“முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார். மனஸு தளராமல், நம்மால் முடிந்த முயற்சியை விடாமல் பண்ணிக் கொண்டே போனால், எத்தனை காலமானாலும் சரி, முறையான முன்னேற்றம் காண ஆரம்பித்து முடிவிலே லட்சியத்தைச்சேர்ந்து விடலாம்.
நம்பிக்கை முக்கியம். சிரத்தை என்பது அதைத்தான். ‘ஸ்வாமி கைவிட மாட்டார். சாஸ்திரமும் குருவும் காட்டும் வழி வீணாய்ப் போகாது’ என்ற த்ருடமான நம்பிக்கைக்குத் தான் சிரத்தை என்று பெயர்”.
வாழ்க்கையில் மெய்ஞானமெனும் தூய்மை அடைந்து வீடுபேறு ( நிலையான வெற்றி, ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் ஆனந்தம் எனும் மகிழ்ச்சியை) அடைய அத்தியாவசியமான மூன்று காரணிகளை நமது பாரம்பரியம் அங்கீகரிக்கிறது. அவை சிரத்தை, பயம் மற்றும் பக்தி.
தர்மத்தின்மீது உறுதியான நம்பிக்கை, பாவ விளைவுகளைப் பற்றிய பயம், கடவுள் மீது அசைக்க முடியாத பக்தி ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இது தான் நமது இந்து மதத்தில், பாமரனாகிய நமக்கு உரைக்கப்பட்ட வாழ்வியல்.
2012ல், சிருங்கேரி மஹா ஸ்வாமிகள் சென்னையில் வழங்கிய அருளுரையின் இந்த ஒரு சிறு பகுதி, சிரத்தையின் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்து கொள்ள வழி வகுக்கும்.
முடிவுரை
சிரத்தையைப் பற்றிய கருத்துக்களை ஆய்ந்தோம். பக்தியோடு சேர்ந்தே வருவது சிரத்தை. பக்தி இல்லாமல் சிரத்தை வராது. சிரத்தை இல்லாத பக்தி பயன் தராது. எனவே, அடுத்து பக்தி என்ற சொல்லை ஆய்வோம் வரும் பதிவுகளில்.
அதுவரை………..