பாமரனின் வேதாந்தம் - 8 - நான் ஏன் பிறந்தேன்? - வேள்வியும் பலனும்
முன்னுரை
சமுக வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்று, அதன்வழியாய் ஆன்மீக வாழ்வில் நன்மை பயக்க வைத்து முன்னேறி, அவர்தம் தனிப்பட்ட மற்றும் குடும்பதேவைகளையும் பூர்த்தி செய்யும் வாழ்க்கையே கர்ம யோகத்தின் கொள்கையாகும். சரியான பொருத்தமான வினை/ நடவடிக்கை என்பது இதுதான் என்று முந்தைய பதிவுகளில் தெய்வத்தின் குரலைக் கேட்டோம்.
ஒருவரின் தனிப்பட்ட, குடும்பம் மற்றும் ஆன்மீகத் தேவைகளை பூர்த்தி செய்வது என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. சமுக வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்பு என்பதை சிறிது ஆராய்வோம்.
வேதாந்த ரீதியில் ஆய்வதற்கு முன், இந்த திரையிசைப் பாடலை கேட்போம்.
நாடு என்ன செய்தது நமக்கு என்று கேள்வி கேட்கும் முன், நீ என்ன செய்தாய் அதற்கு என்று பதில் கொடுக்கும் கவிஞரின் இப்பாடலின் அடிப்படை நமது மறைநூல்களிலிருந்தே.
நாம் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை, நாம் புரியும் வேள்விகள் என்று கூறலாம். ஐம்பெரும் வேள்விகள் என்று அழைக்கப்படும், கடமை என்ற அந்த மூன்றெழுத்து மந்திரங்களே இப்பாடலின் அடிப்படை. அவைகள் என்னவென்று பாரக்கலாம்.
ஐம்பெரும் வேள்வி
சமஸ்க்ருத மொழியில் இதை, “பஞ்ச மஹா யக்னா” என்றழைப்பர். அதாவது ஐந்து பெரும் வேள்விகள் என அர்த்தம் கொள்ளலாம். வேள்வி என்றால் என்ன?
"வேள்வி" என்பது தமிழ்ச் சொல் தான். "வேள்" என்பதற்கு விழைவு, விருப்பம் என்று பொருள். எது ஒன்றை விரும்பிச் செய்கிறோமோ, அது தான் வேள்வி. சான்றாக, வேளாண்மை (வேள்+ஆண்மை). வேளாண்மை என்பது விரும்பிச்செய்யக் கூடிய தொழில். ஏனெனில் வேளாண்மை என்பதில் எவ்வளவோ கடினங்கள் உள்ளன. மற்ற தொழில்களைப் போன்றது இல்லை, ஆதாயமும் குறைவு தான். ஆனாலும் அதை மக்கள் விடாது விரும்பிச் செய்வதால் அது வேளாண்மை எனப் பெயர் பெற்றது. வேளாளர் (உழவர்) என்ற பெயரும் வந்தது. அன்று வேளாளர் என்பது சாதி கிடையாது. இன்று மாறி விட்டது. வேளாண்மை செய்பவரே வேளாளர்.
“வேட்டல்” என்ற சொல்லும் இதிலிருந்து வந்தது தான். "முருகன் அருள்வேட்டல்” என்ற திரு.வி.க நூலைக் காணவும். முருகன் அருளை விழைவது என்று பொருள்.
"அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று."
என்ற திருக்குறளை நினைவு கூறுக. பழங்காலத்தில் அரசர்கள் போருக்குச் செல்வதற்கு முன்பு, தான் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதை விழைந்து(வேட்டல்), போருக்குத் தன்னுடன் வராது, ஆனால் போர் உதவி செய்யும் மக்களுக்கு (படைக்கலன் வடித்துக் கொடுப்போர்கள், இன்ன பிற ஆன்றோர்) சில மங்கலப் பரிசுகளைத் தருவார்கள். படைக்கலன் செய்து தருபவரின்ஆயுதத்தை எடுத்துக் கொண்டு, தாங்கள் போருக்குச் செல்வதால், ஒரு நன்றிக்காக, அவர்களுக்குப் பரிசு கொடுக்கப்படும். அது தான் வேள்வி. விழைவதைக் கொடுப்பதே வேள்வி! “கபிலை கண்ணிய வேள்வி நிலையும்” என்பது தொல்காப்பியம், பாடாண் திணை இலக்கணம். “பண்ணி தைஇய பயம்கெழு வேள்வியின்” என்று அகநானூறும் வேள்வியைக் காட்டும்.
யக்ஞம் என்பது எந்தத் தேசத்திலும், எந்தக் காலத்திலும், எல்லா மக்களும் பரஸ்பரம் அன்புடனும், ஒற்றுமையுடனும், இயற்கை நியதிகளுக்கேற்ப வாழக் கற்றுத் தருகின்ற தத்துவமாகும். இயற்கையிடமிருந்து பெறுவதில் ஒரு அம்சத்தையாவது இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்க நாம் கடமைப்பட்டவர்கள் என்ற கருத்திலிருந்தே பஞ்ச யக்ஞங்கள் தோன்றின.
ஆக நாம் சமூக வளர்ச்சிப் பணிகளாக விழைந்து செய்யும் வேள்விகள் யாவை? வாருங்கள், நமது தர்மம் என்ன பதில் கூறுகின்றது என்று பார்ப்போம். கீழ்கானும் படத்தை கூர்ந்து காண்க.
இப்படத்தின் நடுவிலிருந்து ஆரம்பித்து வலமிருந்து இடமாக ஒன்றொன்றாகபாரக்கலாம்.
தெய்வ வேள்வி - தெய்வங்களை வழிபடுதல். - “தேவ யக்னா”
மூதாதையர் வேள்வி - மூதாதையரை வணங்குதல்.- “பித்ரு யக்னா”
உயிரின வேள்வி - உயிரினங்கள் வழிபடுதல் - “பூத யக்னா”
சக மனித வேள்வி - சக மனிதர்களை வணங்குதல் - “மனுஷ யக்னா
மெய்ப்பொருள் வேள்வி - மெய்யறிவை வணங்குதல் - “ப்ரம்ம யக்னா”.
இந்த வேள்விகளில் நாம் விழைந்து அளிப்பதன் விவரத்தை இப்போதுபார்க்கலாம்.
தெய்வ வேள்வியில் அழலுக்கு நெய், மூதாதையர் வேள்வியில் நீர், உயிரினவேள்வியில் உணவு, சகமனித வேள்வியில் விருந்தோம்பல், மேலும் மெய்ப்பொருள் வேள்வியில் கற்பித்தல் இவைகளை சமூகநலம் கருதி நாம் அளிக்கின்றோம்.
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை, யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை, யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி, யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
என்ற திருமந்திரமும்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
என்ற திருக்குறளும் இந்த ஐம்பெரும் வேள்விகளைப் பிரதிபலிக்கின்றன.
நமது வேதங்கள் இவ்வேள்விகளில் நாம் செய்யும் அளவைக் குறிப்பிடவில்லை. அது அவரவரால் இயல்வது.
அவ்வேள்விகளை இரண்டு வடிவங்களில் புரியலாம்.
பொருள், குடும்ப நலன் கருதி புரிவது (சக காம கர்மா)
ஆன்மீக வளரச்சி, சமூக நலன் கருதி புரிவது (நிஷ்காம கர்மா)
இந்த இரண்டினில் எது சரி, எது தவறு? நியாயமான இந்த கேள்விக்கு விடை இதோ:
கர்மா / வினை இவற்றில் சரியானது, தவறானது என்று எதுவுமில்லை; இவைகளால் வருவது விளைவுகள் மட்டுமே எனக் கூறப்படுகிறது. வினை விதைத்தவன் வினை அறுக்கின்றான் என்பது நம் வாழ்வில் நாம் அன்றாடம் கேட்கும் வாரத்தை. அறுவடை உண்டு. அது நல்லதா கெட்டதா என்பது நாம் விதைத்ததைப் பொறுத்து.
வினைகளின்றி வாழ்கை இல்லை. அன்றாடக் கடமைகள், ஜப தவங்கள், சேவைபோன்ற எவ்வளவோ செயல்களுடன் நமது வாழ்கை பிணைந்துள்ளது. உயர்நோக்கங்களுடன் இணைக்காமல் அவற்றை வெறுமனே பொருள், இன்பம்தேடி செய்துகொண்டே போவதால் இறை நெறியில் முன்னேற முடியாது, இறையுணர்வைப் பெற முடியாது.
அதேவேளையில், இறையுணர்வைப் பெறவேண்டும் என்பதற்காக, தகுதி வருமுன்னரே செயல்களை விட்டுவிட்டு தியானத்தில் ஈடுபடுவது ஒரு தவறான, போலி்த்தனமான முயர்சியாக இருக்கும். எனவே இரண்டும் வாழ்கையில் இணைந்து செல்ல வேண்டும்.
முடிவுரை
சரி, வேள்விகளை/கடமைகளை அறிந்தோம். அவைகளைப் புரிவதற்கான மனப்பக்குவத்தை எப்படி அடைவது ? இந்த கேள்வி நம் அனைவரிடத்திலும் இயல்பாக எழுவதே.
“எந்த வேலை செய்தாலும் பக்தி சிரத்தையாக செய்ய வேண்டும்” என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா. அந்த சொல்லில் தான், மனப்பக்குவத்தைப் பற்றிய நம் கேள்விக்கு பதில் உள்ளது.
இது என்ன பக்தி, சிரத்தை, புதிய புதிர்? விடைகள், வரும் பதிவுகளில். அதுவரை