முகவுரை
முந்தைய பகுதியில், இறையன்பு எனும் பக்திக்கு இறையறிவு வேண்டும். சிரத்தை வேண்டும். பக்தியைப் பெற பல நியமங்கள் உண்டு என்று எல்லாம் அறிந்தோம். இப்படி பல கடினங்கள் நிறைந்த பக்தியினால் என்ன பயன், பக்திக்கும் ஞானத்திற்கும் என்ன உறவு என்ற கேள்விகளுக்கு விடைகள இப்பகுதியில் ஆராய்வோம்.
பொருட் பற்றினையும், பற்றின்மையையும் கடந்து, உணர்ச்சிப்போராட்டங்களுக்கு ஆளாகாமல், அனுபவ ஆனந்தத்தில் ஈடில்லாமல், புறநோக்கு அற்றவனாக, செயலற்றவனாக, தன்னில் தான் இன்புற்று அழியா அன்பை உணர்கிறான் என ஶ்ரீநாரத மஹரிஷி எடுத்துரைக்கிறார்.
பக்தியின் பயன்கள்
ஞானயோகமும், கர்மயோகமும், மற்ற எல்லா வழிகளும் ஆண்டவனிடம் கொண்டு சேர்கின்றன. ஆனால் இவற்றை சரியாக அனுஷ்டிக்காமல் நடுவில் சில தவறு நடந்தாலும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான். மேலும் இவற்றை கடைபிடிக்க பல யம நியமங்களை அனுசரிக்க வேண்டும்.
பக்தி செய்ய எந்த தகுதியும் வேண்டியதில்லை.உதாரணமாக வால்மீகி முனிவர் ஒரு கொள்ளைக்காரராகஇருந்தார். கண்ணப்பநாயனார் ஒரு வேடுவனாக இருந்தார். இவர்கள் செய்த பக்தி, தவம் செய்த முனிவர்களையும் மிஞ்சக்கூடியது. துளசிதாசர் செய்த ராமபக்தியை விட, ராம நாமத்தை விட சிறந்தது எதுவும் இல்லை. பல காலம் சிரமப்பட்டு ஞானம் பெற வேண்டும்.
யாகம் செய்வதற்கு பொருள் செல்வம் வேண்டும். கடினமான யோக பயிற்சியில் வெற்றி பெற யோகாசனம், பிரணாயாமம் முதலியவற்றை சரியாக செய்யவேண்டும். பக்தி யோகத்தில் இவை எதுவும் தேவை இல்லை. அன்புடன் ஒரு பூவை சாற்றினால் போதும்,அல்லது தமக்கு கிடைத்த உணவை படைத்தாலேபோதும்,பிரார்த்தனை செய்தாலே போதும்.
“செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதையெய்தலாம் - வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை, அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு”
என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.
தூய்மையான எண்ணங்கள், அன்பான மனநிலை இருந்தால் இறையன்பை அடைவது எளிது. அத்தகைய அன்பினால் நமக்கு என்ன கிடைக்கும். கீழ்காணும் பாடலைக் கேட்போம்:
ஆக,
உணவுடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.!
பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.!
தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்.!
பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.!
இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.!
பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.!
செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.!
வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.!
பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.!
இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!
மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!
பக்தியும் ஞானமும்
பக்தி வளர்வதற்கு இறையறிவுதான் ஸாதனம் என் சில அறிஞர்கள் கூறுகின்றனர். பக்தி எப்படி ஏற்படுகிறது? அதற்கு காரணம் என்ன? உலகில் ஒருவர் மீது காரணமின்றி அன்பு உண்டாகிறது என்று கூறினாலும் அவசியம் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.
பக்திக்கு ஞானமே காரணமாகிறது என்று சில ஆச்சாரியர்கள் கூறுகிறார்கள். ஞானம் என்றால் என்ன? ஏட்டறிவை ஞானம் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? பக்திக்கும் ஞானத்திற்கும் உள்ள உறவென்ன? மூதறிஞர் ராஜாஜி ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுகிறார்:
“பக்தியின் வழி, அறிவு/ஞான வழியிலிருந்து வேறுபட்டதல்ல. புத்தி முதிர்ச்சியடைந்து மனதில் பத்திரமாக பதியும்போது அது ஞானமாகிறது. ஞானம் வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயலில் வெளிப்படும் போது, அது பக்தியாக மாறுகிறது. அறிவு முழுமையாக முதிர்ச்சியடையும் போது அது பக்தியாகும். அது பக்தியாக மாறவில்லையென்றால், அத்தகைய அறிவு பயனற்றது. ஞானமும் பக்தியும், அறிவும் பக்தியும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்று நம்புவது அறியாமை. உள்ளங்கையில் இருந்து நீரைப் பருகுவதைப் போல ஞானப் பெருங்கடலைக் குடித்த ஸ்ரீஆதி சங்கரரே, பக்தியை வளர்க்கத் தம் பிற்காலப் பாடல்களைப் பாடினார் என்றால் அது ஞானமும் பக்தியும் ஒன்றே என்பதைக் காட்டுவதற்குப் போதுமானது” என்றுரைக்கிறார் மூதறிஞர் ராஜாஜி.
மூர்த்தி வழிபாடும் முற்றிய ஞானமும் : தெய்வத்தின் குரல்
பக்தியைப் பற்றிய இந்த இரு பதிவுகளின் சாரத்தை, தெய்வத்தின் குரல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதோ எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வைத்திருக்கிறது. “இதைப் பார், இது மஞ்சளாக இருக்கிறது” என்று நான் சொன்னால் இது மஞ்சளாகத்தான்இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனஸில் அதைப்பற்றி எந்தப்பிரதி சிந்தனையும் ( reaction ) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக்காட்டி, “இதோ பார், இது சிவப்பாக் இருக்கிறது” என்று நான்சொல்லியிருந்தால், உடனே நீங்கள் மனஸில் ஒர் ஆட்சேப உணர்ச்சிஎழுந்திருக்கும். இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல், “இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னால் அப்போது உங்கள் மனஸில் ஒருவிதமான பிரதி உணர்ச்சிஉண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் உங்கள் மனஸில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனஸை ஒருமுகப்படுத்தினால் அப்படி பாவிக்கவும் முடிகிறது.
உபாஸனை என்பது இப்படிப்பட்டதுதான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாக பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளைக் காட்டிக் கொடுக்கிறது உபாஸனா மார்க்கம். வாழைப்பழம்உண்மையில் மஞ்சள் நிறம் என்பது போல் பரமாத்மாவின் உண்மையான குணம் என்ன? அது குணம் கடந்தது என்பதே. பரமாத்மா எல்லா குணமும் கடந்த வஸ்து என்று சொல்லி விட்டால், அப்புறம் ஜனங்களின் மனசு அதில் மேற்கொண்டு நிற்பதற்கு இடமே இல்லை. இது நமக்குப் புரிபடாத வஸ்து என்றுவிட்டு விடுவார்கள். வாழைப்பழத்தைச் சிவப்பு என்று சொன்னதை மனசு ஆட்சேபித்ததுபோல் ஒரு சிலையைக் காட்டி இதுதான் பரமாத்மா என்றாலும், அதை எவராலும் ஏற்க முடியாது. ‘இது ஒரு கல் பொம்மை அல்லவா? இது எப்படிஉலகத்தை நடத்துகிற பரமாத்ம சக்தி ஆகும்?’ என்று தோன்றும். ஆனால், ஒருசிலையைக் காட்டி, “இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்” என்றால் அப்படிபாவிக்க முடிவதாகத் தோன்றும்- வாழைப்பழத்தைச் சிவப்பாகக் கற்பனைசெய்வதுபோல். ஆனால் சிவப்பு என்றால் என்னவென்று மனசுக்குத்தெரிவதுபோல் பரமாத்ம லக்ஷணம் தெரியாதே! அதனால் விக்கிரகத்தை ‘ஏதோபெரிய வஸ்து என்று சிறிது எண்ணிப் பார்க்கலாமே தவிர, அதிலேயே ஆழஊன்றி நிற்க முடியாது. தெரிந்த விஷயங்களில்தான் மனசு பிடிமானத்தோடு நிற்கும். எனவே ஒரே காருண்யமும் சௌந்தரியமும் வழிகிற மாதிரி ஸ்திரீரூபத்தில் விக்கிரகம் செய்து, “இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு” என்றால், மனசு அதை நன்றாகக் கிரகித்துக்கொண்டுஅப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.
குணமற்ற பரமாத்ம வஸ்துவிலிருந்துதான் அனந்த கல்யாண குணங்களும்வந்திருக்கின்றன. ரூபமற்ற பரமாத்மாவிடமிருந்துதான் சகல உருவங்களும்தோன்றியிருக்கின்றன. அந்தந்த குணத்துக்கு அநுகூலமான ரூபம், முத்திரை, ஆயுதம் முதலியவற்றோடு திவ்விய மூர்த்திகளைக் காட்டினால் அவற்றில் மனசுஈடுபடுகிறது. புரியாத பரமாத்ம தத்துவத்தை நமக்குப் புரிகிற விதத்தில்உபாஸிக்க முடிகிறது.
சகலமும் ஆன பரமாத்மா, நாம் அவரை எந்த ரூபத்தில் உபாஸித்தாலும் அந்த ரூபத்தின் மூலம் அருள் புரிகிறார். படிப்படியாக நம் மனநிலையைஉயர்த்துகிறார். கடைசியில் மனஸே இல்லாத, மனஸைக் கடந்த நிலைஉண்டாகிறது. மனசு கடந்த அந்த நிலையிலேயே குணமும் ரூபமும் கடந்த பரமாத்மாவை உள்ளபடி அநுபவிக்க முடிகிறது. ஆரம்பத்தில் நமக்குப் பலவிதமனோ விகாரங்கள் இருக்கும்போது, “பரமாத்மா எல்லாம் கடந்தவர்” என்றால் அதில் பிடிப்புக் கொள்ள முடியவில்லை. ரூபத்தில், குணத்தில் அவரை உபாஸித்தால், அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமானபரமாத்மாவை உள்ளபடியே அநுபவிக்க முடிகிறது. மஞ்சள் பழத்தைமஞ்சளாகவே பார்க்கிறபோது மனஸுக்கு வேலை இல்லாமல் போகிறது. “உபாஸனையின்போது, பரமாத்மாவாகவே இப்படி இப்படி பாவனை செய்தால்அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும். இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்” என்று விதிகள் இருக்கின்றன. பாவனைபோய், அவரை உள்ளவாறு அறிகிறபோது எந்த விதியும் இல்லை, செயலும்இல்லை. சரீரம் மனசு இவற்றின் காரியமாகிற உபாஸனை இப்போதுதான்அநுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்து விடுகிறது.
இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்து விட்டதாக பாவனைசெய்துவிடக்கூடாது. உபாஸனையே பெரும்பாலான ஜனங்களுக்கு ஞானம்பெற உபாயமாகும், திவ்விய மூர்த்திகள் நாமாகச் செய்கிற கல்பிதமானபாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள், மந்திரங்கள், விதிகள் எல்லாவற்றையும் அநுக்கிரகித்திருக்கிறார். பரமாத்மா வாஸ்தவமாகவே இப்படிப்பட்ட மூர்த்திகளாகி, அவற்றை அடைகிற மந்திர, யந்திர, தந்திரங்களாகவும் ஆகியிருக்கிறார். எனவே, உபாஸனைமுறையை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பின்பற்றினால் நிச்சயம் ஞானத்துக்கு வழி உண்டாகும்.
ஞானம் வருவதும் வராததும் இருக்கட்டும். இப்போது உபாஸிக்கிறபோதுஅன்போடு அதைச் செய்யவேண்டும். இந்த அன்பே, பக்தியே நமக்கு பெரிய நிறைவைத் தரும். அதனால் பகவானின் எல்லையில்லாத அன்பையும் அனுபவிப்போம். அதுவே பெரிய ஆனந்தம். இதற்கப்புறம் அவர் இஷ்டப்பட்டு அத்வைத ஞானம் தரட்டும்; தராமல்தான் இருக்கட்டும். அதைப்பற்றி இப்போதுகவலைப்பட வேண்டாம். நாம் செய்யக்கூடியது பக்திதான். இதற்குப் பிரதியாகப் பெறக்கூடிய பகவதநுக்கிரக ஆனந்தமே நமக்குப் போதும்.
இதே கருத்தினை, சிருங்கேரி மஹா ஸ்வாமிகள் கன்னட மொழியில் அருளுகிறார்
பக்தியுடன் பாமரனின் வேதாந்தம் எனும் வலைதளப் பதிவுகளை நிறைவு செய்கிறேன்.
முடிவுரை அடுத்த பதிவில். அதுவரை…..