முகவுரை - ஒரு குப்பனின் கதை
முந்தைய பதிவில், சிரத்தையைப் பற்றிய கருத்துக்களை ஆய்ந்தோம். பகுதியின் முடிவில், பக்தியோடு சேர்ந்தே வருவது சிரத்தை. பக்தி இல்லாமல் சிரத்தை வராது. சிரத்தை இல்லாத பக்தி பயன் தராது என்ற வாக்கியங்களைக் கண்டோம்.
பக்தி என்று சொல்கிறோமே, அந்த சொல்லின் பொருள் என்ன?
நான் ரசித்த ஒரு குட்டி கதையை சொல்கிறேன்.
ஒரு ஊரில் ஆற்றங்கரை ஓரம் ஆலமரத்தடியில் அமர்ந்து செருப்பு தைக்கும் குப்பனும் ஒரு பெரிய பணக்கார மிட்டாதார் முனுசாமி பிள்ளையும் வசித்தார்கள். குப்பன் செருப்புக்கடை என்பது ஒரு கிழிசல் கோணி. அதில் செருப்பு தைக்கும் இரும்பு உபகரணங்கள், ஒரு பழைய தோல் பையில் அநேக கிழிந்த செருப்புகள், நூல் கண்டு, ஊசி, கத்தி, சுத்தி, தோலை ஊறவைக்கும்அலுமினிய பாத்திரம், தண்ணீர் பானை, கத்தியை தீட்டி கூராக்கும் ஒரு தோல்வார். பிளாஸ்டிக் குவளை,கஸ்டமர் உட்கார மரப்பலகை. அதோடு மரத்தடியில்ஒரு சிறிய திருப்பதி வெங்கடாசலபதி படம். அதன் பக்கத்தில் ஒரு அகல் விளக்கு.
தினமும் குப்பன் அருகே இருந்த செடியில் ஒரு மஞ்சள் காட்டுப்பூ பறித்து அந்த படம் மேல் செருகி வைத்து கும்பிட்டு வேலை தொடங்குவான். நாள்முழுதும் அந்த படத்தை பார்த்துக்கொண்டே மனத்தில் மகிழ்ச்சி கொள்வான். எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும் கவலையில்லாத மனிதன்.
மிட்டாதார் பிள்ளைக்கும் பக்தி உண்டு. தினமும் ஆற்றில் விடி காலையில்குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை பாராயணம் எல்லாம் செய்வார். ஏதேனும்ஒரு கவலை, நிம்மதியின்மை அவரை துளைத்துக் கொண்டிருக்கும்.
இவர்கள் ரெண்டு பேரைப் பற்றி வைகுண்டத்தில் பேச்சு. நாரதர் விஷ்ணுவைப் பார்த்து ” நாராயணா, பார்த்தாயா, அந்த மிட்டாதாரை, எவ்வளவு பக்திமான், மணிக்கணக்காக பூஜை, பாராயணம் செய்கிறார். அவருக்கு மன நிம்மதியைக் கொடுக்கக் கூடாதா?
'' சரி நாரதா,உன் விருப்பப்படியே செய்கிறேன். நீ முதலில் பூலோகம் போ, பிள்ளைவாளிடம் முதலில் சென்று ‘நான், நீங்கள் வணங்கும் நாராயணனிடமிருந்து வருகிறேன்’ என்று சொல். நாரதர் மிட்டாதார்பிள்ளையைப் போய் பார்த்தார்
''பிள்ளைவாள் நான் நேராக நாராயணனிடமிருந்து உங்களிடம்வந்திருக்கிறேன்'' என்றார்.
''ஓஹோ அப்படியா, அவர் வரவில்லையா, இப்போது நாராயணன் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்?’
நாரதர் நாராயணன் சொல்லிக்கொடுத்தபடியே, ‘நாராயணன் இப்போது ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொன்னார்.
இதை கேலியாக எடுத்துக்கொண்டு மிட்டாதார் பிள்ளை ''ஹா ஹா என்று சிரித்தார். நல்ல தமாஷ் . இதெல்லாம் நடக்கிற காரியமா'' என்று சொல்லிவிட்டு உள்ளே போனார்.
நாரயணன் சொன்னபடி நாரதர் அடுத்து குப்பனிடம் சென்றார். மேலே சொன்னதை சொன்னார். அவனும் நாரயணன் என்ன பண்ணுகிறான் என்று கேட்டபோது பிள்ளைவாளுக்கு சொன்னதையே திரும்ப சொன்னார் நாரதர்.
குப்பன் வாயைப் பிளந்து நாரதர் சொன்னதையே சீரியசாக கேட்டுக்கொண்டிருந்த போது நாரதர் ''ஏனப்பா இது நம்பும்படியாக இல்லையா உனக்கு ?'' என்று கேட்டார்.
குப்பன், “ சாமி இதில் என்ன வேடிக்கை இருக்கு. ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னான் .
இந்த கதையின் தாத்பர்யம் பக்தி என்பது வெறும் பூஜை, புனஸ்காரங்கள் பாராயணம் மட்டுமில்லை. அவன் மீது பரிபூர்ண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று அவன் திருவடி பற்றுவதே ”உண்மையான பக்தி”. அதனால் தான் குப்பனால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
ஆக, பக்தி என்பது பொய்யற்ற, தூய்மையான நம்பிக்கையின் வெளிப்பாடு. பகவான் என்ற ஒரு சர்வ சக்தியிடம் சரணடைவது தான் பக்தி.
பக்தியின் இலக்கணம் (பக்தியின் ஸ்வரூபம்) - ஒரு சுருக்க விளக்கம்?
அது என்ன சுருக்க விளக்கம்? முரண்பாடான சொல் அமைப்பு. புரியவில்லையே!.
நாம் இருக்கும் காலம் கலி காலம். எதையும் விவரமாக எழுத, படிக்க நமக்கு காலம் கிட்டாது.
“நான் ரொம்ப பிசி (busy) . டைமே (time) இல்லை. பக்தின்னு லெக்சர் (lecture) அடிக்காம, குவிக்கா (quick) பக்தியைப்பத்தி தெரிஞ்சுக்க ஏதாவது பார்முலா (formula) இருக்கா சொல்லு”.
நம் போன்ற பாமரர்கள் இந்த கலி காலத்தில் இப்படி எல்லாம் கேட்பார்கள் என்று, தொலை நோக்குப்பார்வையால் அறிந்து, நமக்காகவே, பக்தியின் இலக்கணத்தை
“ சில்வகை எழுத்தின் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியின் செறித்து
இனிது விளக்கித் திட்ப நுட்பம் சிறந்த”
84 சூத்திரங்களில் (Formula) ஶ்ரீநாரத மஹரிஷி, பக்தியின் இலக்கணம், பக்தியின் அடையாளம், பக்தியின் மகிமை, பக்தரின் பெருமை என்று பக்தியினை நாம் அறிய அருளியுள்ளார். அவற்றிலிருந்து சிலவற்றை நாம் அறிய முயற்சிக்கலாம்.
ஒப்புயர்வற்ற பொருளின் (வஸ்து) மேல் ஒப்புயர்வற்ற பேரன்பு (परमप्रेमं- பரம ப்ரேமம்) வைப்பதே பக்தி.
அழியா, மாறா இறைவனிடத்தில் செலுத்தும் அந்த அன்பும் அப்படியே அழியாதது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.
நமக்கு நம் மேல் என்றுமே, எப்பொழுதுமே அழியாத அன்பு. அந்த அன்பே இன்பமெனும் உணர்வாக வெளிப்படுகிறது. இது மறுக்க முடியாத உண்மை. அல்லவா?
எப்படி என்னுள் அழியாமல் எனக்கு இருக்கும் பதப்படுத்தப்படாத அன்பு இயற்கையாக இன்பமாக(புன்னகையாக) வெளிப்படுகிறதோ, (“யத்ர யத்ர ஸுகம், தத்ர தத்ர ப்ரீதி) அப்படி இன்பத்தோடு உறையும் அன்பே இறைவன். அந்த அன்பு வெளிப்படுத்தப்படும்போது, இருமை வடிவம் (அன்பு, இன்பம்); வெளிப்படுத்தாவிடில் அந்த அன்பே இறைவன் எனும் இன்பம். அதுவே அன்பு; அதுவே சிவன். ஆக, யாதொரு ஆத்மாவில் இருக்கக்கூடிய ப்ரீதியே (அன்பு) பக்தி என்று கூறப்படுகிறது. அது யாண்டும் அழியாதது. அதை புரிந்து கொண்டால், அதை வெளியில் தேடமாட்டோம். இதுவே பக்தியின் ஞான ரூப விளக்கம்.
பக்தியின் இலக்கணத்தை பலர் பல விதங்களில் கூறுகின்றனர். பூசை முதலானவற்றில் ஆழ்ந்த ஈடுபாடே பக்தி என்பது ஶ்ரீ வியாஸரின்கருத்து. இறைவனைப் பற்றிய கதைகளையும், கீர்த்தனைகளையும் செவி குளிரக்கேட்டு மகிழ்வதே பக்தி என மஹரிஷி கர்கர் கூறுகிறார். தன்னையும் பிறரையும் நேசித்து, எவரிடத்திலும் வெறுப்பின்றி செலுத்தும் அன்பே பக்தி என்று சாண்டில்ய முனி கருதுகிறார். இறையால் மறைவழி விதிக்கப்பட்ட அறங்களைக் கடைப்பிடித்து அவைகளைஇறைவனுக்கே சமர்பித்தலும், அவைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் துன்பப்படுதலுமே பக்தி என்பது நாரத முனிவரின் கருத்து. பக்தி என்பது அவரவரின் அனுபவங்களின் மொழி வடிவு.
பெருந்துன்பமாக இருந்த போதிலும் பேரன்புக்குரிய பகவானுடைய, ஒப்புயர்வற்ற பெருமை , பெருந்தன்மை, குறைவற்ற பரந்த உள்ளம், இடைவிடாஅறிவு எனும் அருமை பெருமைகளை மறப்பதற்கு வாய்ப்பே இல்லாதது தான்பக்தி.
பக்திக்கு வேண்டிய நியமங்கள்/தகுதிகள்
தன்னையே இறைவனுக்கு அர்ப்பணித்து, ஆசைகள், எதிர்பார்ப்புகள்,வேண்டுதல்/ பிரார்த்தனைகள் ஆகியவை இல்லாதிருப்பது.
கண்ணுக்கு தெரிகின்ற பலன்களை உடைய உலகியல் செயல்களையும், கண்ணுக்குத் தெரியாத பலன்களைத் தருகின்ற ஆன்மீக சடங்குகளான வைதீக செயல்களையும் மனமுவந்து இறைவனுக்கு அர்ப்பணித்தல் என்று பொருள். “காயேன வாசா மனஸேம்த்ரி யைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்றுதேஃ ஸ்வபாவாத் கரோமி யத்யத்-ஸகலம் பரஸ்மை னாராயணாயேதி ஸமர்பயாமி” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்மில் வரும் வரிகளும் இதனையே குறிக்கும்.
ஆத்ம ஸ்வரூபமாக இருக்கும் பகவானிடத்தில் நான் வேறு இறைவன் வேறு என்ற இருமை களைந்து, எது இன்பத்தை கொடுக்காதோ, எது அன்பை வளர்க்காதோ அவைகளை சற்றும் மதியாமலிருப்பது (உதாசீன்படுத்துதல்).
உலகியல் வாழ்க்கை செயல்களிலும், வைதீக கர்மங்களிலும், ஈஸ்வர பக்தியை வளர்க்க அனுகூலமானவற்றை மட்டுமே செய்ய வேண்டும். ஈஸ்வர பக்தியை வளர்க்க அனுகூலமாக இல்லாதவற்றை பொருட்படுத்தக்கூடாது. இதனை வடமொழியில் நிஷ்காம தர்ம அனுஷ்டானம் என்பர்.
பக்தியின் பெயரில், நமது மறைகள் கூறும் கடமைகளை விட்டுவிடாதிருத்தல். அதுபோலவே , உடலைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவையான செயல்களையும் சேர்த்து (உணவு உட்கொள்ளுதல் போன்ற) , கண்ணுக்குதெரிகின்ற பலன்களை தரும் உலகியல் செயல்களை சிரத்தையுடன் புரிதல்.
ஆதி சங்கரர், சிவானந்த லகரியில் (அவரது படைப்பான சிவப் பேரின்ப வெள்ளம் எனும் 100 பண்களில்) இக்கருத்துக்களனைத்தையுமே அழகான உவமான, உவமேயங்களுடன் விளக்குகிறார்.
முடிவுரை
ஒப்புயர்வற்ற பொருளின் (வஸ்து) மேல் ஒப்புயர்வற்ற பேரன்பு (परमप्रेमं- பரம ப்ரேமம்) வைப்பதே பக்தி என்று அறிந்தோம்.
சரி, பக்தி என்றால் என்ன என்று புரிந்தது. அதனால் எனக்கு என்ன கிட்டும்? பக்தியினால் என்ன பயன்? பக்தியை அடைவதற்கு என்ன படிக்க வேண்டும்? ஞானம் வேண்டுமா? வேண்டுமென்றால், பக்திக்கும் ஞானத்திற்கும் என்ன உறவு?
அப்பப்பா! எத்தனை கேள்விகள், பாமரனின் மனதில். விடைகள் அடுத்த பதிவில். அதுவரை…….