பாமரனின் வேதாந்தம் -7 - மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
கர்மம், வினை, கடமை - ஒரு கண்ணோக்கம்
முன்னுரை
முந்தைய பதிவுகளில், இறைவன் என்றால் யார், நான் யார், உலகம் என்றால் என்ன, எனக்கும் இறைவனுக்கும், உலகுக்கும் உள்ள தொடர்பென்ன என்றெல்லாம் கேட்ட நான், அப்பதிவுகளின் முடிவில், இப்பொழுது நான் எங்கேஇருக்கிறேன், எந்த அறிவு நிலையில் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். பாமரானாய், பயணத்தின் முதல் படிக்கட்டில் தான் இருக்கிறேன். பயணத்தை தொடர, மாயையால் விளையும் எனது அறியாமையை களைய வேண்டும். மாயை அகல முதலில் மனதில் உறுதியுடன் கடமைகளை புரிய வேண்டும். சந்தேகமே இல்லை.
ஆகவே, என் பயணத்தை தொடர நான் என்ன செய்ய வேண்டும், என் கடமைகள் என்ன என்ற வினாக்களை எழுப்பியிருந்தேன்.
விடைகளைக் காணும் முன், கவிஞர் வாலியின் இந்த திரை இசைப் பாடலைக் கேட்போம்.
பாதை தவறாமல், பண்பு குலையாமல் பணிவுடன், துணிவுடன் கடமை புரியவேண்டும் என்பதை கதாநாயகன் பாட்டிலே கூறுகிறான். செயலும் மூன்றெழுத்து; கடமையும் மூன்றெழுத்து. செயலுக்கும், கடமைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? என் கடமைகளை எங்கு அறிவது? எப்படி நான் கடமைகளைப் புரிய வேண்டும்?
நமது கேள்விகளுக்கான பதில்களை அறியும் முன், வாருங்கள், கடமை பற்றிய ஒரு சில யதார்த்தங்களை அறிய முற்படுவோம்.
சாதாரணமாக ஒருவன் தெருவில் சென்று மற்றொருவனைச் சுட்டுக்கொன்றுவிட்டால், தான் தவறு செய்துவிட்டதற்காக அவன் வருந்தவேண்டும், அது தான் சரி. அதே மனிதன் போர்வீரனாகப் படையில் சேர்ந்து ஒருவனை அல்ல, இருபது பேரைக் கொன்றாலும் தன் கடமையைச்சிறப்பாகச் செய்ததாகவே நிச்சயமாக மகிழ்வான். எனவே செயலைக்கொண்டு கடமை வரையறுக்கப் படுவதில்லை. அப்படியெனில், ஒரு செயலைக் கடமையாக்குவது எது?
தன் மதத்தின் மறை நூலில் கூறப்பட்ட விதிமுறைகள் தான் என் கடமை என ஒவ்வொருவரும் கூறுகின்றனர். எனவே பல்வேறு வாழ்க்கைநிலைகளுக்கும், பல்வேறு வரலாற்று கால கட்டங்களுக்கும், பல்வேறுநாடுகளுக்கும் ஏற்ப, கடமை என்ற கருத்தும் பல்வேறு விதமாகமாறுபடுவதை நாம் காண்கிறோம். ஆக, கடமை என்னும் சொல்லின் பொருளையும் முழுமையாக விளக்க முடியாது. அதன் செயல்பாட்டுமுறைகளையும் விளைவுகளையும் வைத்து ஓரளவுக்கு அதைப் புரிந்துகொள்ளலாம். அவ்வளவுதான். எல்லா இடங்களிலும் கடமையைப் பற்றிய பொதுவான கருத்து என்னவென்றால், நல்லவர்கள் ஒவ்வொருவரும் தங்கள்மனச்சாட்சிக்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள் என்பதே.
கடமை என்பதற்குப் புறச்சார்பான விளக்கம் தருவது என்பது இயலாத ஒன்று. ஆனால் அகச்சார்பான விளக்கம் இருக்கிறது. எந்தச் செயல் நம்மைக் கடவுளை நோக்கிச் செலுத்துகின்றதோ அது நற்செயல், நமதுகடமை. எது நம்மைக் கீழ் நிலைக்கு இழுத்துச் செல்கிறதோ அது தீயது. நமது கடமை அல்ல. அகச்சார்பான இந்தக் கோணத்தில் நாம் பார்த்தால் சில செயல்களில் நம்மை உயர்த்தவும் உன்னதமாக்குவதற்குமான போக்குஇருப்பதையும், மற்றும் சிலவற்றில் நம்மைச் சீரழித்து தீயவர்கள்ஆக்குகின்ற போக்கு இருப்பதையும் காணலாம்.
பிறப்பையும், வாழ்க்கை நிலையையும் அடிப்படையாகக் கொண்ட கடமைகளைப்பற்றி பகவத்கீதை பல இடங்களில் கூறுகிறது. பிறப்பும் வாழ்க்கையும் மற்றும் சமுதாயத்தில் ஒருவன் பெறுகின்ற இடமுமே அவனது வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளின் மீது அவன் கொள்கின்ற மனநிலையையும் தார்மீக நிலையையும் பெருமளவிற்கு நிர்ணயிக்கின்றன. எனவே நாம் எந்தச் சமூகத்தில் பிறந்துள்ளோமோ, அந்தச் சமுதாயத்தின் லட்சியங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப நம்மை உயர்த்தவும் உன்னதப்படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை ஆகிறது.
ஆக, இந்த முன்னுரையில் செயலுக்கும், கடமைக்கும் உள்ள வேறுபாடுகள் புரிந்தன. எனினும் என் கடமைகளை எங்கு அறிவது? எப்படி நான் கடமைகளைப் புரிய வேண்டும்? கேள்விகளுக்கான பதில் எங்கே என்ற கவலை இன்னமும்.
கவலை தவிர்க்க. நமது மறைநூல்களில் உள்ளது, நமது கேள்விகளுக்கான பதில்கள். வாருங்கள், பார்க்கலாம்.
கர்ம யோகா - கடமை
செயல் என்றால் நாம் நமது மன-உடல் வளாகம் கொண்டு புரியும்பணிகள். நமது விழிப்பு நிலையில், உடலால், வாக்கால், மனதால் புரியும் பணிகளே செயல்கள். கடமை என்றால் என்ன?
“என் கடன் பணி செய்திருப்பதே ” என்பதுதான் நம் வாழ்க்கையின்குறிக்கோளாக (Motto) இருக்க வேண்டும். கடன் என்றால், ‘கடனே என்று செய்தேன்’, ‘கடனிழவே என்று செய்தேன்’ என்றெல்லாம் சொல்லுகிறோமே, அந்த மாதிரி வேண்டா வெறுப்பாகச் செய்வது என்று அர்த்தமில்லை. கடன் என்றால் கடமை, Duty.அதை அன்போடு, ஆர்வத்தோடு ஹ்ருதய பூர்வமாகச்செய்ய வேண்டும்”. இதைத்தான் “பாதை தவறாமல், பண்பு குலையாமல் பணிவுடன், துணிவுடன்” என்று கவிஞர் வாலி அந்த திரையிசைப் பாடலில் எழுதியிருந்தார்.
இந்து தர்மத்தில் இதனை கர்ம யோகா என்பர். நமது சனாதன தர்மத்தில் உள்ள தத்துவங்களில், மிகவும் விசாரிக்கப்பட்ட, பேசப்பட்ட, போதிக்கப்பட்ட, எழுதப்பட்ட விஷயம் கர்மா மற்றும் கர்ம யோகம் என்றால் அது மிகையாகாது. கர்ம யோகம் என்பதில் இரு சொற்கள் உள்ளன; கர்மம் மற்றும் யோகம்.
அதாவது சரியான வினைகள் அல்லது நடவடிக்கைகளை சரியான அல்லது பொருத்தமான மனப்பான்மை/அணுகுமுறையுடன் புரிவதுஎன்று பொருள்.
இப்போது எழும் கேள்வி "சரியானது என்ன? எதுபொருத்தமானது?
இதற்கு பதிலாக “தெய்வத்தின் குரல்”தனைக் கேட்போம். காஞ்சிப் பெரியவர் கூறுகிறார்:
தெய்வத்தின் குரல்
“ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவை தான். ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களுக்கிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடுஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். ஆசையும் துவேஷமும் போய்விட்டால், எந்தக் காரியத்தையும் அன்போடு செய்துகொண்டு ஆனந்தமாக இருக்க முடியும். இதுதான் கீதை தருகிற பதில்.
சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், ‘இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், ‘இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப்போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும்நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார்.
“தஸ்மாத் சாஸ்த்ரம்ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ” என்கிறார். “எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவுபண்ணாமல், சாஸ்திரப்படியே கருமம் செய்ய வேண்டும் என்கிறார்.
‘நான் செய்கிறேன்; எனக்காகச் செய்து கொள்கிறேன்’ என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம். சொந்த விருப்பு வெறுப்பில்லாமல், லோக க்ஷேமார்த்தமாகக் காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறுகிற இந்தப் பண்பாடு, வேத காலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்துவந்திருக்கிறது”.
முடிவுரை
“இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான் என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப்பார்க்க வேண்டும். நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும்” என்ற தெய்வத்தின் குரல், நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
சமமான அன்புடன் இருந்து கொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கருமத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும்.
சமூகத்தில் நமது கடமைகள் என்ன? அத்தகைய கடமைகளப் புரிவதால் வரும் பலன் என்ன? பாமரனின் கேள்விகள் தொடர்கிறது. பதில்களும் தொடர்கிறது அடுத்த பதிவில். அதுவரை……..