திரையிசையில் கேள்வியும் பதிலும்
முந்தய இரு பகுதிகளில் ஆத்மா, பிரம்மன் அதாவது மனிதன், இறைவன் என்ற இரு தத்துவங்களைப் படித்தோம். இரண்டும் ஒன்று என்று கண்டோம். மிகவும் தீவிரமான செறிவு (very intense concentration) வேண்டும், அந்த இரு தத்துவங்களைப் புரிந்து கொள்ள, அல்லவா!
எனினும் இறைவன் இருக்கிறானா, எங்கே இருக்கிறான், அதே சமயம் என்னிடம் என்ன பிரச்சனை, ஏன் எனக்கு அவனைத் தெரியவில்லை, புரியவில்லை என்றெல்லாம் ஒரே குழப்பம் முடிவில்.
இந்தக் குழப்ப நிலையை கவிஞர் கண்ணதாசன் இரண்டு கண்ணோட்டங்களில் அழகாக வர்ணிக்கிறார். வாருங்கள், முதலில் அந்த திரை இசைப் பாடல் வரிகளைக் காண்போம்.
பகுத்தறிவுடன், புத்திசாலித்தனமாக நாமே கேள்விகளை, கண்ணதாசன் வழியாக கேட்டு விட்டோம் என்று நாம் நம்பினால், அதற்கு அவரே அளிக்கும் பதில், மற்றொரு திரைப் படத்தில்.
திரையில் கூறும் கேள்வியும் பதிலும் நிஜமென நம்புகிறோம் அல்லவா! இப்படி நம்புவதன் பின்னே மாயை எனும் ஒரு பெரிய வேதாந்த தத்துவம் அடங்கியுள்ளது.
தெய்வத்தின் குரல்
இறைவன் இருக்கின்றானா என்ற கேள்விக்கு, நிஜமான நம் வாழ்வில், அனுபவ ரீதியாக, எளிமையாக யாரால் எடுத்துரைக்க முடியும்? அண்டியவருக்கு அன்னையாய், கண்டவர்க்கு கண்ணனைப்போல் ஆசானாய், அண்டம் புகழ் ஆண்டவனாய் வாழ்ந்த நம் காஞ்சி மஹா ஸ்வாமியவரின் அருளுரையை, தெய்வத்தின் குரலாய் கேட்டு அறிவோம்
முடிவு
பாமரனின் வேதாந்தத்தில் முதல் இரண்டு பதிவுகளும், இப்பதிவும் கூறுவது:
நமது உண்மையான இயல்பு தெய்வீகமானது: தூய்மையானது, பரிபூரணமானது, நித்திய சுதந்திரமானது.
பரம்பொருள் என்பது அழிவிலா, தூய நீக்கமற நிறை இருப்பான, தூய உணர்வெனும் தூய ஆனந்த நிலை (சத்யம் ஞானம் அனந்தம்).
நாம் அந்த பரம்பொருளாக/பிரம்மனாக ஆக வேண்டியதில்லை.
நாமே பிரம்மன். சத்சித்ஆனந்தம் எனும் தூய உள்ஒளி உணர்வே ஆத்மா எனப்படும் பரம்பொருள். ஆண்டவன் ஆழ்கடல் என்றால், நாம் அதனில் தோன்றி மறையும் அலை. இரண்டுமே நீர்.
இப்பொழுது அடுத்த கேள்வி. இயற்கையிலேயே நமது உண்மையான இயல்பு தெய்வீகமானது என்றால், நாம் ஏன் அதைப் பற்றி அறியாமல் இருக்கிறோம்?
நான் சற்று முன் கூறினேனே “திரையில் நடிப்பதை/கூறுவதை நிஜமென நம்புவதன் பின்னே ஒரு பெரிய வேதாந்த தத்துவம் அடங்கியுள்ளது” என்று. அந்த தத்துவம் தான் காரணம்.
அதாவது,
“உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ….”
என்ன? பதிலைக் கேட்டதும் மயக்கமா ? கலக்கமா ? மனதிலே குழப்பமா?
கவலை தவிர்கக. இக்கேள்விக்கு பதிலின் விளக்கம், அடுத்த பதிவில். அதுவரை……..