முகவுரை
“சமுத்திரம் ஆடாமல் அசையாமல் இருக்கிறபோது ஒரு காற்று அடித்தால் உடனே அதில் ஜலத்துளிகள் குமிழ்களாகத் தோன்றுகின்றன. இன்னோரு காற்று அடிக்கிறபோது அந்தக் குமிழ்கள் உடைந்து போகின்றன. பரமாத்மா ஆடாத அசங்காத சமுத்திரம் மாதிரி. மாயை என்கிற காற்றினால் அதிலே ஜீவாத்மாக்கள் என்கிற நாமெல்லாம் குமிழ் மாதிரி தோன்றியிருக்கிறோம். ஆசாரியாருடைய கடாக்ஷம் என்கிற நல்ல காற்று நம்மேல் பட்டால் குமிழ் உடைந்து ஜலத்துளி சமுத்திரத்தோடு ஐக்கியமாகி விடுவதுபோல், நாமும் பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்து விடுவோம்”.
இது காஞ்சி ஆச்சார்ய மஹாஸ்வாமிகளின் தெய்வத்தின் குரல்.
அஷ்டாவக்ர மாமுனிவரின் அருளுரைக்கேட்டு, மஹா ஸ்வாமிகள் கூறிய அந்த இரண்டறக் கலந்த நிலையில் இருந்துகொண்டு, தான் அறிந்துணர்ந்த உண்மையை ராஜரிஷி ஜனகர், பல உருவகங்கள், உவமானங்களுடன் பேரின்பத்துடன் வர்ணிக்கின்றார்.
இந்த ஸ்லோகத்தில் மேலும் மூன்று உருவகங்களை எடுத்துக்காட்டி தன் பேரின்ப நிலையை விளக்குகிறார்.
ஸ்லோகம்
அஹோ விகல்பிதம்ʼ விஶ்வமஜ்ஞானான்மயி பா⁴ஸதே ।
ரூப்யம்ʼ ஶுக்தௌ ப²ணீ ரஜ்ஜௌ வாரி ஸூர்யகரே யதா² ॥ 2-9 ॥
தமிழாக்கம்
ஆஹா! அறியாமையால் என்னில் உதயம் உலகம்,
கயிற்றில் அரவையும், கிளிஞ்சலில் வெள்ளியையும்
கதிரொளியில் கானல் நீரினையும் காண்பது போல !! 2.9
விளக்கம்
இந்த ஸ்லோகத்தில் அறியாமை, மூன்று உருவகங்கள், அதன் படிப்பினை கூறப்பட்டுள்ளது. அவைகளை இப்போது அறிய முற்படுவோம்.
அறியாமை
இருள் தனக்குள் அகப்பட்ட எதையும் அறியவிடாது; எதுவாக இருந்தாலும் மறைத்து வைத்துக்கொள்ளும். அறியாமையும் அவ்வாறே; எதையும் அறியவிடாது. ஆகவே அறியாமை இருளோடு ஒப்பிடப்படுகிறது.
ஒருபொருளும் காட்டாது
இருள்உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது.
(திருவருட்பயன், இருள்மலநிலை, 3)
இருள், தான் மூடி வைத்திருப்பவற்றைத்தான் காட்டாது; தன்னைக் காட்டும். அதாவது, இருளுக்குள் இருக்கும் பொருள்தான் தெரியாதே ஒழிய, இருள் இருப்பது தெரியும். ஆனால் அறியாமையின் விவகாரம் வேறு: அறியாமை, தான்மூடி வைத்திருப்பவற்றையும் காட்டாது; தன்னையும் காட்டாது.
அறிவுஅறிவு என்றுஅங்கு அரற்றும் உலகம்;
அறிவுஅறி யாமை யாரும் அறிகிலர்;
அறிவுஅறி யாமை கடந்துஅறிவு ஆனால்,
அறிவுஅறி யாமை அழகிய வாறே.
(திருமந்திரம் 2362)
‘அறிவு எங்கே? அறிவு எங்கே? என்று தேடு; அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு’ என்று அரற்றிக்கொண்டே இருக்கிறது உலகம். ‘ஆம், ஆம்’ என்று அனைவரும் ஓடுகிறார்கள், தேடுகிறார்கள், சேகரிக்கிறார்கள். ஆனால் சேகரித்தது அறிவைத்தானா? அறியாமையை அல்லவா? அறிவு வாங்கப்போனவர்கள் அறியாமையை அல்லவா வாங்கி வந்திருக்கிறார்கள்? அந்த அறியாமையை அறிவு என்று தவறாக அல்லவா நினைத்துக் கொள்கிறார்கள்? இவர்கள் அறியாமையைக் கடந்து மெய்யாகவே அறிவைக் கண்டடையும்போது, இதுவரை அறிவு என்று எண்ணிக்கொண்டிருந்த எல்லாம் அறியாமை ஆவதையும் காண்பார்கள். ‘நம் அறிவின் அழகு இம்மட்டுத்தானா’ என்றும் வியப்பார்கள்.
பூஜ்யஶ்ரீசுவாமி ஓம்காரனந்தந்தா தனது விரிவுரைகளில் கூறுகிறார்
"ध्यान रहित उपासन रहित केवल कायिक वाचिक वेद विहत कर्मानि “
“தியானம், வழிபாடு இவை தவிர்த்து , உடலால், வாக்கால் புரியும், வேதங்கள் வகுத்த எந்த வெளிநோக்குடை கருமங்கள் அனைத்தும்கூட மெய்யறிவை மறைக்கும் அறியாமையே”. ஆக, நம்மை அறிய முயலாத எந்த முயற்சியும் அறியாமைதான்;
குரு என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு இருளை அகற்றுபவர் என்று பொருள். ஒரு குரு என்பவர் ஆன்மீக சாதகரின் அறியாமை எனும் இருளை அகற்றி, அவருக்குள் இருக்கும் படைத்தலின் மூலத்தை உணரச் செய்கிறார்.
மூன்று உருவகங்கள்
அப்படி, படைத்தலின் மூலத்தை அஷ்டாவக்ர முனிவரிடமிருந்து அறிந்துணர்ந்த ஜனகர் இந்த ஸ்லோகத்தில் எடுத்துக்கொண்ட மூன்று உருவகங்களில், கயிற்றில் பாம்பு என்ற உருவகத்தின் விளக்கத்தை நாம் முதல் அத்தியாயம், ஸ்லோகம் 1.10 ல் கண்டோம். இப்போது மீண்டும் காஞ்சிப் பெரியவரிடமே சரணடைந்தது, அந்த தெய்வத்தின் குரலை விளக்கமாக அறிவோம், இந்த ஸ்லோகத்திற்கு.
தெய்வத்தின் குரல்
கானல் நீர் கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதில் ஜலம் இல்லை. அதைக் குடித்து நாம் தாக சாந்தி செய்து கொள்ள முடியாது. கானல் நீர் உண்மையான ஜலம் இல்லை என்று அறிந்தவர்களுக்கும்கூடக் கானல் நீர் தெரியத்தான் செய்கிறது.
ஒரு பழுதையைப் பாம்பென்று தவறாக எண்ணுகிறோம். பழுதில் பாம்பு இல்லை என்பது உண்மை. இருந்தாலும்கூட அதைப் பாம்பாக எண்ணியமட்டும், வாஸ்தவத்தில் இல்லாத பாம்பே நிஜமான பாம்பு உண்டாக்குகிற அத்தனை பயத்தையும், பதற்றத்தையும் நம்மிடம் உண்டாக்கி விடுகிறது. பாம்பு மெய்யாக இல்லாத போதிலும் நமக்கு வியர்த்து விறுவிறுத்ததும், நாம் பயப்பிராந்தி அடைந்ததும் உண்மையே.
கிளிஞ்சலில் வெயில் வெள்ளி மாதிரி மினுமினுக்கிறது.
இந்த முன்றும், ஞானம் வருகிற வரையில் உள்ள தோற்றங்கள். அப்பட்டப் பொய்யாக இல்லாமல், என்னில் தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாகஉள்ளன இவை மூன்றும்.
படிப்பினை
அது போல, அடியோடு இல்லாத வஸ்துவல்ல உலகம். உண்மையில் நிரந்தர சத்தியமாக இல்லாத போதிலும் அதையே நாம் சத்தியமாக எண்ணுகிற மட்டில் இவ்விதமே சகல காரியங்களும் நடக்கின்றன. உலகை மாயம் என உணர்ந்த ஞானிகளுக்குக் கூட லோகம் தெரியத்தான் செய்கிறது என்று சொல்வதுண்டு.
கனவு காண்கிற வரையில் கனவு மெய்யாக இருந்து, நாம் விழித்துக்கொண்டபின் கனவு நசித்துப்போவது போல், நாம் அஞ்ஞானத்தில் தூங்கிக்கொண்டிருக்கிற வரையில் உலகம் மெய்யாக இருந்து, நாம் ஞான நிலையில்விழித்துக் கொண்டவுடன் மறைந்து போகிறது. இவ்வாறு, அப்பட்டப் பொய்யாகஇல்லாமல், தோன்றி மறைகிற தாற்காலிக உண்மையாக உள்ள உலகத்தை‘அத்யந்த அஸத்’ என்று சொல்லாமல், ‘பிராதி பாஸிக ஸத்தியம்’ என்பார்கள்.
“கிளிஞ்சல் வெள்ளியென, கண்ணாடித்துகள் மணிக்கல்லென
மாக்கலந்தநீர் பாலென, கானல்நீர் தண்ணீரென மருட்சிகொண்டு,
மக்களவர் மற்றனைத்து தெய்வம்தனை மதித்திடுவர் மாயையினால்
மறந்தனரே மகாதேவனவனவன் மகிமைதனை, அனைத்துயிர் நாயகனே!”
என்ற ஆதி சங்கரரின் சிவானந்த லகரி ஸ்தோத்திரம் (8) அறியாமையின் விளையாட்டை கூறுகிறது. அதனால் அந்த மகாதேவனைத் தேடி “இருக்கும்இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவர்” ஏதும் அறியார். அவர் போலிராமல், ஆத்மஞானத்தை அடைவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த ஸ்லோகம்.
பின் குறிப்பு
அஷ்டாவக்ர கீதையின் தமிழாக்கம் புத்தக வடிவிலும் உள்ளது. அதனைப் பெற கீழ்காணும் வலைதளப்பதிவுகளைக் காணவும். (Amazon, Notion Press)
Thanks for reading A common man’s Vedanta ; பாமரனின் வேதாந்தம்! Subscribe for free to receive new posts and support my work.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !